சாதிக்குள், நூற்றுக்கும் மேற்பட்ட குல தெய்வங்களைக் கொண்ட பன்மைத்தன்மையே தமிழர் மரபு என்கிற வரலாற்று உண்மையை விரிவாக பேசுகிறது தோழர் எஸ் .ஜி . ரமேஷ் பாபுவின் “யார் கைகளில் இந்து ஆலயங்கள்? என்கிற நூல்
வேட்டி ஜெயராமன் என அனைவராலும் அறியப்படுகிற, இந்து அறநிலைய துறையின் முன்னாள் அதிகாரியின் அரசுப் பணி அனுபவங்களையும் அவரது சாதனைகளையும், இன்றைய சூழலின் அவசியம் கருதி கோயில்கள் குறித்த வரலாற்றோடு இணைத்து ஆவணப்படுத்தி உள்ளார் ரமேஷ்பாபு. . பொதுவாக கோவில்களுக்குப் போனால் , கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்ய வேண்டும் என்பார்கள் .
ஆனால், இந்த நூல் கோயில்களின் வரலாற்றை . அதன் அரசியலை கண் திறந்து பார்க்க வகை செய்கிறது என்கிற தோழர் . கே . பாலகிருஷ்ணன் அவர்களின் முன்னுரை, பெருந்திரளான உழைக்கும் மக்களோடு உறவாடும் வலிமையான சக்தியான கோவில்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
ஒற்றைத் தன்மையை பேசும் ஆரியம் , இயற்கையை அறிந்திட முனையும் தாந்த்ரீகம் ,கடவுள் மற்றும் வேதத்தை ஏற்றுக்கொள்ளாத லோகாயுதம், எதிலும் நியாயம் கோரும் நியாயத்துவம், இயற்கையும் பொருள்களுமே முதலில் தோன்றியது என பேசிய சாங்கியம் , சமணம் மற்றும் நம் நாட்டில் 1000 ஆண்டுகள் நீடித்த பௌத்தம் என துவங்கி மனு தர்மம் வரையிலான வரலாறு சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. கடவுள், கோவில், அரசன், அதிகாரம் ஆகியவற்றுக்கிடையே நூதனப் பிணைப்பு இருந்ததுள்ளது. மன்னர்கள் காலத்தில் கோவில்தான் அரசு அலுவலகமாகவும், நீதிமன்றமாகவும், கலையரங்கமாகவும் மற்றும் தானியக் கிடங்காகவும் இருந்துள்ளது . இந்த அடித்தளம் நிலப்பிரபுத்துவத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது .
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மாற்ற முடியாத உற்பத்தி உறவாக சாதி அமைப்பு உருவாக்கப்பட்டு, அவை புராணங்கள், கோவில்கள், சமயம் ஆகியவை மூலமாக புனித நிலைக்கு உயர்த்தப்பட்டு, சமூக ஒப்புதல் பெறப்பட்ட வரலாறும், இந்து அறநிலையத்துறையின் வரலாறும் முதல் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
தோழர் ஜெயராமனுடனான உரையாடலே இரண்டாம் பகுதி . உழைக்கும் மக்கள் மீதான பேரன்பும், அவர்களை வஞ்சிக்கும் அதிகாரத்திற்கெதிரான போர்க்குரலுமாகவே அவரது பணி அமைந்துள்ளது . அவரது மூன்றாவது மகள் பெயர் அஸ்ரத் பேகம் . அயோத்தியில் இந்து முஸ்லீமை ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீராங்கனையின் பெயரிது . இஸ்லாமிய மக்கள் மீதான இவரது இயல்பான அன்பு, அம்மக்களுக்கும் இந்து கோவில்களுக்கும் உள்ள பிணைப்பை பதிவு செய்திருப்பதில் வெளிப்பட்டுள்ளது. எட்டுக்குடி கோவில் வழிபாடு, சங்கரன்கோவில் யானைக்காக வழக்கு தொடுத்தது, திருவண்ணாமலை கோவில் வழிப்பாதை இரும்புக்காக ஏலம் எடுப்பதில் உதவி, என்பதோடு ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு கைலி சாத்துவது, துலுக்க நாச்சியார் சன்னதி மற்றும் வண்டிகாளியம்மன் சிலையை தூக்கும் உரிமை எனும் சம்பிரதாயங்கள் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை உணர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர் இழுப்பது, சுத்தம் செய்வது உட்பட பல்வேறு வேலைகளை செய்யும் தலித்துகள் தேர்மீது ஏறினால் என்ன தவறு ? என கேள்வி கேட்டு எட்டுக்குடி தேரில் தலித்துகளை ஏற செய்திருக்கிறார். கோபிநாத சாமி எங்கள் தெருவுக்கு வர வேண்டும் என்கிற உயர் சாதியினரின் கோரிக்கையைப் பயன்படுத்தி , ‘சக்கிலியத் தெரு’ எனப்படும் அருந்ததிய சமூக மக்கள் பகுதிக்குள் சாமியைக் கொண்டு சென்றுள்ளார். செருப்பைப் பாதுகாக்க ஏலம் எடுக்க வந்த வசதி படைத்தவரிடம், இப்படி சம்பாதிக்க வேண்டுமா என கேள்வி கேட்டு, கட்டணமில்லாமல் செருப்பைப் பாதுகாத்திட ஏற்பாடு செய்திருக்கிறார். தான் பணியாற்றிய கோவிலின் வருமானத்தை பல்வேறு வகையில் அதிகரிப்பது, செலவுகளை குறைப்பது, மற்றும் எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் வசதிகளை விரிவாக்குவது என்பதாகவே அவரது பணி அமைந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு, விவசாயம் செய்த லாபம் மூலம் டிராக்டர் வாங்கியுள்ளார். மகா மகத்தை சிறப்பாக நடத்தி, மிச்சப்படுத்திய பணத்தில் ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கச் செய்திருக்கிறார்.
பிரம்ம ரதம் என்கிற வழக்கப்படி, குறிப்பிட்ட குடும்பத்தினரை பல்லக்கில் சுமந்து வருவது வழக்கம். கல்வி அறிவு இல்லாத காலத்தில் மனப்பாடமாக கதை செல்பவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கும், இப்போது அது தேவை இல்லை என அப்பழக்கத்தை மறுத்துள்ளார். தான் வேலை செய்த மாவட்டத்திற்கு பக்கத்து மாவட்டத்திற்கு உயர் அதிகாரி வருகை தந்த நேரத்தில், அங்கு செல்லாததால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். விசாரணையின் போது, “ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அதிகாரிக்கு மொழி தெரியாததால் எல்லோரையும் வரச் சொல்லி உத்தரவு போட்டிருப்பார், இப்போதான் மொழி பிரச்சனை இல்லையே, இந்த உத்தரவு தேவையா? என கேள்வி கேட்டுள்ளார். கோவில்கள் பற்றிய பதிவுகளோடு, சுப்பன் என்கிற எளிய மனிதனின் அறிவும் ஆற்றலும் வணங்கத்தக்க வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அளவைக்காரராக அவரது துல்லியமான கணக்கு, ஏலத்திற்கு முன் குளத்தில் உள்ள மீன்களை கணிப்பது, பாம்பு குறித்த அறிவு மற்றும் இறந்து போன பெண்ணின் முகத்தை பார்த்து வயிற்றில் இன்னொரு உயிர் இருந்ததை கணித்தது பிரமிப்போடு பதிவுசெய்ப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்திற்கு இணையாக கணிக்கும் அறிவார்ந்த அந்த எளிய மனிதனின் குலசாமி கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதை படிக்கிற போது, கண்களில் கண்ணீர் திரள்கிறது. சட்டை கசங்காமல் சாமி கும்பிடுபவருக்கு உள்ள உரிமையை எளிய மனிதர்களுக்கு பெற்று தருவதே தன் கடமை என உழைத்துள்ளார் தோழர் ஜெயராமன். சிறு வயது முதல் பொதுவுடைமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, தான் கம்யூனிஸ்ட் என்கிற அடையாளத்துடன், இந்து அறநிலையத் துறை அதிகாரியாக தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி செயல்படுவார் என வாழ்ந்து காட்டி, தனது சக ஊழியர்களால் இன்றுவரை போற்றப்படுகின்ற அவரது அரசுப்பணி, கோவிலுக்கு வெளியே உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் தோழர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.
சிலைத் திருட்டுக்கள் அரசின் கைகளில் கோவில்கள் இருப்பதால்தான் நடக்கிறது. அதனால் இதனை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற வாதம் முன் வைக்கப்டுகிறது.
வெறும் கோவிலை மட்டுமல்லாமல், அதன் சொத்துக்கள், பக்தர்கள், அவர்களது நம்பிக்கைகள் என அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தவே இந்த வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், திருநள்ளாறு, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் என பயணம் செய்கிற தமிழர்களின் கலாச்சாரம் மதவாதிகளை அச்சுறுத்துகிறது. இந்த புரிதலோடு, வரலாற்று ரீதியாகவும், வறுமையிலும், அவ நம்பிக்கையிலும் வேறு போக்கிடம் இல்லாமல் ஆலயங்களை நம்பும் எளிய மக்ககளை, மூட நம்பிக்கையால் வீழ்த்தப்பட்டவர்கள் என்கிற புரிதலோடு மட்டுமே அணுகுவது சரிதானா என்கிற கேள்வியை முன் வைக்கிறது இறுதிப் பகுதி.
ஆலயங்கள் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிற இந்தப் புத்தகம், மதச்சார்பின்மைக்கு வலு சேர்க்க, தமிழ் மக்களின் மதம் கடந்த மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து கோவில்களுக்கும் உடனடியாக பயணம் செய்திடத் தூண்டுகிறது. l