எஸ். வி. வேணுகோபாலன்
என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ‘யன் மே மாதா’ சிறுகதையைப் பற்றிய குறிப்புகள் எழுத வேண்டிய நேரத்தில், என் வாழ்க்கையின் மகத்தான மனிதரை அண்மையில் இழந்தேன். என் அன்புத் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள், ஜூன் 17 அன்று காலை மறைந்தார். வாசிப்பு, எழுத்து, ரசிப்பு, பகிர்வு இவற்றின் மிகச் சிறந்த உருவகமாகத் திகழ்ந்தவர் அவர். ‘அம்மான் ஆசீர்வாதம்’ எனும் அருமையான சிறுகதையை, 1950களில் அரசு ஊழியர்கள் அமைப்பின் விழா மலர் ஒன்றில் அவர் எழுதி இருந்தார்.
ஓர் அரசு ஊழியன், மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பவன் நடத்தும் வாழ்க்கை, கடும் போராட்டம் குறித்த கதை அம்மான் ஆசீர்வாதம். பேறுகால அவஸ்தையில் இருக்கும் மனைவியைத் தனது தாயின் பொறுப்பில் விட்டு, சகோதரி வீட்டு நிகழ்வு ஒன்றிற்கு வெளியே கடன் பட்டு வாங்கிய சீர் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போகிறவன், வேதனைகளோடு வீடு திரும்புகையில், அம்மா காத்திருப்பாள், ஓர் ஆனந்த செய்தியை அவனுக்குச் சொல்ல – பிரசவத்தில் அவன் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள்! ‘ஐந்து பிள்ளைகள் பெற்றால் அரசனே ஆண்டி என்பார்கள், அப்படியானால், நான்? பேராண்டி!’ என்று முடித்திருப்பார் என் தந்தை.
வருவாய்த் துறையில் மிகப் பெரும் பொறுப்புகளில் அப்பழுக்கற்ற சேவையாற்றி, டெபுடி கலெக்டராக பணி நிறைவு செய்த அவர், நேரம் காலமற்று அரசுப் பணியில் இராப்பகலாக உழைத்தவர், படைப்புலகில் பின்னர் அமர்ந்து எழுதியதே இல்லை ஒருபோதும். கணையாழி இதழில் ம.ந ராமசாமி அவர்களது ‘யன் மே மாதா’ சிறுகதையை முன் வைத்து மிகவும் காரசாரமாக நள்ளிரவையும் கடந்த தருணத்தில் வெகுநேரம் என் தந்தையோடு விவாதித்த நினைவு இப்போதும் இருக்கிறது. அவரோடு மட்டுமல்ல, வைதீக விஷயங்கள் அறிந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட பலரோடும் அந்நாட்களில் மோதல் ஏற்படக் காரணமாக இருந்தது அந்த வாசிப்பு. மிகவும் வித்தியாசமான கதைக்களம் அது.
கைக்குழந்தையோடு தன்னைத் தவிக்க விட்டுப் போய்விடுகிற கணவனை மனத்தால் வெறுப்பதில்லை அவள். மகனை வேத பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறாள். வேத வித்தாக வீடு திரும்புகிறான் மகன். காணாமல் போன கணவன் எங்கோ ஓரிடத்தில் மரித்துப் போன செய்தியைப் பின்னர் ஒரு கட்டத்தில் அறியவரும் அந்தப் பெண்மணி, மகனை அழைத்து, ‘உன் அப்பாவிற்கு நீ திதி கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்கிறாள். பிறந்தது முதல் பார்த்தறியாத ஒரு மனிதனுக்கு, அன்புத் தாயார் கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக, திதி கொடுக்க சாஸ்திரிகள் ஒருவரை வரவழைக்கிறான் மகன். மிகுந்த சீரிய முறையில், இறந்தோருக்கு செய்யப்படும் சிரார்த்தம் எனப்படும் அந்தக் காரியம் பழுதில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் சாஸ்திரிகள் சொல்லும் ‘யன் மே மாதா’ எனும் மந்திரத்தில் தாக்குண்டு நிற்கிறான் மகன்.
அதற்குப் பொருள் என்ன என்று தெரியுமா என்று அவரையே கேட்கையில், விழிக்கிறார் அவர். திதி கொடுக்கும்போது, தனது தந்தைக்கு, தந்தைக்கு என்றுதான் சொல்லிச் செய்யும் திதி. ஒரு வேளை தன்னைத் தனது தாய் வேறு யாரோ ஒருவருக்குப் பெற்றிருந்தால், அவருக்கானது அல்ல, இந்தத் திதி அவளது கணவனுக்கு என்று பொருளுரைக்கிறது இந்த மந்திரம் என்று அவன் விளக்குகிறான். என் தாயின் நடத்தையைக் கேள்விக்கு உள்ளாக்குவதை எப்படி நான் ஏற்பது என்று சீறுகிறான். சாஸ்திரிகள் அரண்டு போகிறார். வெடவெடத்துப் போகும் அவர், தமக்கு அத்தனை விஷய ஞானம் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார்.
இளவயது மனைவியை நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போன கணவனுக்குக் கூடத் திதி கொடுக்கத் துடிக்கும் பதிவிரதையான தனது தாயைத் தவறாகக் கற்பிதம் செய்யும் மந்திரத்தைத் தான் சொல்ல முடியாது என்று மறுக்கிறான் அவன். அந்த மந்திரத்தைத் தவிர்த்துவிட்டு சிரார்த்தம் தொடரக் கேட்கிறான். அவரோ, அது சாத்தியமில்லை என்கிறார், அப்படியானால் திதியைத் தான் தொடர இயலாது என்று சொல்லி அவருக்குத் தட்சிணை எடுத்து நீட்டுகிறான் மகன். நிறைவு பெறாத ஒரு காரியத்திற்குத் தான் தட்சணை பெற்றுக் கொள்ள சாஸ்திரத்தில் இடமில்லை என்று மறுத்து வெளியே போகிறார் அவர்.
அதிர்ச்சிக் கேள்விகளை உள்ளே விதைத்த சிறுகதை இது. ஆனால், இப்படியான மந்திரங்கள் ஏன் உருவாகி வந்தன என்பது மனித சமூக வளர்ச்சி குறித்த தத்துவப் பார்வைக்கான வாசிப்பில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்டது. ‘பெண் ஏன் அடிமையானாள்’ எனும் தமது சிறப்பான நூலின் இறுதியில், திதி மற்றும் திருமண மந்திரங்களுக்கான முக்கிய பொருள் விளக்கங்களை இணைத்திருப்பார் பெரியார். குடும்பத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திய பெண், எந்தக் கட்டத்தில், அடிமையாக மாற நேர்ந்தது என்ற பரந்த வாசிப்புக்கான தூண்டுதலை இந்தக் கதை செய்தது. ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களது வால்கா முதல் கங்கை வரை நூலை அதற்குப் பின்னர் வாசிக்கையில் மேலும் நுட்பமான அம்சங்கள் பிடிபடத் தொடங்கின.
சாதி மறுப்புக்கான முக்கிய விவாதங்களை என்னுள் வளர்த்தெடுத்ததில் இந்தச் சிறுகதைக்கு முக்கிய பங்கு உண்டு. அதற்கு முன்பும், பின்னரும் எனக்குள் நேர்ந்த மாற்றங்களின் தொடர்ச்சியில், காஞ்சிபுரத்தில் கோயிலருகே குடியிருந்து, கோயில் வளாகத்தினுள்ளே – பள்ளிக்கூட நேரம் போக, நாளின் பெரும்பகுதியை வாழ்ந்து, நாலாயிர திவ்விய பிரபந்த இலக்கியத்தின் தமிழைத் திகட்டாத சுவையாகக் கேள்வி ஞானத்தில் அருந்தி வளர்ந்த ஒருவன், நாத்திகனாகத் தன்னை உணர்ந்து விழிப்புற்றதில் வாசிப்புக்குப் பெரும்பங்கு இருந்தது. ஆனால், அந்த மாற்றம் ஓரிரவில் நிகழவில்லைதான் !
கோவை கல்லூரி நாட்களில், தருமபுரியில் இருந்த பெற்றோரைப் பார்க்கச் சென்ற ஒரு விடுமுறை நாளில், பேருந்து நிலையத்தின் அருகே கண்ணில் பட்ட நியூ செஞ்சுரி புத்தக நிலையம், ஏற்கெனவே நடக்கத் தொடங்கிய திசையில் இன்னும் இலக்கியங்கள் எடுத்து வழங்கக் காத்திருந்தது. உள்ளபடியே உள்ளே நுழைந்தது, கெமிஸ்ட்ரி புத்தகம் ஏதேனும் இருக்குமா என்று பார்க்கத்தான். ‘வேதியியல் பற்றி 107 கதைகள்’ என்ற ஆங்கிலப் புத்தகம் சட்டென்று கிடைத்தது, கூடவே, இரத்தச் சிவப்பில், அடர் நீல வண்ணத்தில் அட்டைகளிட்ட சில புத்தகங்களும் ஈர்த்தன, லெனின் அங்கே தான் முதன்முதலில் என் ஜோல்னாப் பைக்குள் குடியேறியது நிகழ்ந்தது. படிப்பு முடிந்து, வேலையிலும் சேர்ந்தாயிற்று.
வங்கிப் பணியில் சேர்ந்த வங்கனூர் எனும் சிற்றூரில் இரண்டு எளிய நெசவாளர்களோடு அருமையான நட்பு வாய்த்தது. கடப்பை சித்தர் 1905ல் அருளிச் செய்த ‘ஜீவ பிரும்ம ஐக்கிய வேதாந்தப் பரம ரகசியம்’ என்ற புத்தகத்தை முன் வைத்தே மிக அருமையான விவாதங்கள் நடத்தியவர்கள் அவர்கள். அத்வைதம் உயரிய தத்துவம் என்று விளக்கிப் பேசத் தொடங்கியவர்கள், கேள்விகள் அனைத்திற்கும் மாயா வாதத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள். ஒரு கட்டத்தில், கடவுள், சாதி, மத அடையாளச் சின்னங்களை முற்றாகத் துறந்த நாள், அவர்கள் மிகவும் திடுக்கிட்டுப் போய், நீண்ட நேரம் வருத்தம் தாளாது நடத்திய உரையாடல் மறக்க முடியாதது.
வங்கிக் கிளை மேலாளராக இருந்த திரு சீனிவாசமூர்த்தி அவர்களும் மிகவும் கலங்கிப் போயிருந்தார், அந்த வெள்ளிக்கிழமை மாலை கிளையினுள் வாராந்திர பூசையை ‘இந்த வாரம் மட்டும் வழக்கம்போல் தொடருங்கள், அடுத்த வாரம் பேசிக் கொள்ளலாம்’ என்று அழாத குறையாகக் கேட்டுக் கொண்டார். வார இறுதியில், குடும்பத்தில் ஒளிவு மறைவற்று மாற்றத்தைப் பகிர்ந்து கொண்டபோது வீடு ஒரு முறை குலுங்கி நின்றது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் என் தந்தை நேரடியாக என்னோடு பேசுவதைத் தவிர்த்தார். கொஞ்சமும் குறையாத அன்பை அள்ளி வழங்கியபடி அருகே இருந்தாலும், பாதை மாறி எங்கோ தொலைந்து போய்விட்டவனாக என்னைக் குறித்த கவலைகளில் அவர் ஆழ்ந்த காலமது. ஆனால், வெகு எளிதில், மிக இலகுவாக அவரும் ஏற்றுக் கொண்டாடும் சமூக வாழ்க்கையாக அவர் மதிக்கும் நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், இதைப் பற்றியெல்லாம் மிக நீண்ட உரையாடல் அவரோடு நடத்தும்போது பொறுமையாகக் கேட்டறியும் பாங்கு அவருக்கு வாய்த்திருந்தது, காலத்தின் கொடையன்றி வேறென்ன….
தமது வைதீகக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுதலும், பிடிமானமும் வாய்த்திருந்த அதே நேரத்தில், பரந்த நேயமும், விரிந்த சமூகப் பார்வையும், எல்லோரையும் அரவணைத்துப் பொழியும் அன்பின் பேரூற்றும் பொங்கிக் கொண்டிருந்தது அவரது வாழ்க்கையில். அதன் கம்பீர நோக்கில் என்னையும் ஆட்கொள்ள வாய்த்த அவரது உள்ளத்தின் பொழிவில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடிய வாழ்க்கை அனுபவம் எப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைப்பது. புத்தக வாசிப்பு மட்டுமல்ல, நேர்மையும், துணிவும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் மிகுந்த சுடரொளிப் பெரு வாழ்க்கையை வாசிக்கக் கொடுத்துச் சென்றிருக்கிறார் எஸ் ஆர் வி.
வாசிப்பு, தத்துவத் தேடலையும், தத்துவப் புரிதல்களையும் மட்டுமின்றி சக உயிர்களிடத்து அளப்பரிய அன்பைப் பெருக்கிக் கொள்ள எத்தனை பெருந்துணை புரிகிறது! இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் இழப்பது என்ற பேச்சே இன்றி ஐக்கியப்பட்டுக் கொண்டாட்டமான நடை நடந்த பெருமிதத்தோடு தான், அவரை வழியனுப்பி இருப்பது.
(தொடரும் ரசனை….)
l