பறவை என்று வௌவாலை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் அது பாலூட்டி வகையாகும். பறக்கும் ஒரே பாலூட்டி வௌவால் என்ற அறிவியல் செய்தியுடன் ஆரம்ப கட்டுரை தொடங்கினாலும் பல ஆச்சரியமான செய்திகள் உள்ளடக்கிய புத்தகம் ‘வாவுப் பறவை’.
மனித இரத்தத்தை வௌவால் குடிக்கும் என்பது உண்மையா என்றால்? சினிமா படத்தில் மட்டும் உண்மை. நிஜத்தில் எந்த வௌவாலும் இப்படிச் செய்வதில்லை. அப்படி ஒரு வௌவால் உலகிலேயே இல்லை. ஆனால் பறவை-கோழி ரத்தத்தை இரையாக உண்டு வாழும் வௌவால் உண்டு. அப்படி ரத்தத்தை தன் உடலில் இருந்து எடுப்பதுகூட அந்த பறவைகளுக்கு தெரியாது. அதனால் பறவைகள் இறப்பதும் இல்லை. ஆனால், அந்த வௌவால் வகை இந்தியாவில் இல்லை.
இன்று அனைவராலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், வௌவால் மூலம் பரவியதாக சொல்லப்படுவது உண்மையா என்ற கேள்விக்கும் புத்தகத்தில் பதில் உண்டு.
இப்படி வௌவால்கள் பற்றி எண்ணற்ற ஆச்சரியமான தகவல்கள் உள்ளடக்கிய புத்தகம்தான் ‘வாவுப் பறவை’. ஆதி வள்ளியப்பன் எழுதியுள்ள புதிய புத்தகம். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ‘சிட்டு-குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்’ புத்தகத்தில் சிட்டுக் குருவிகள் பற்றி முழுமையான தகவல்களைத் தந்திருந்ததுபோல், இந்த புத்தகத்தில் வௌவால்கள் பற்றி முழுமையாக எழுதியுள்ளார்.
தன் சிறு வயதில் பூச்சி உண்ணும் வௌவால்கள் வீட்டிற்குள் வருவதும், சிட்டுக் குருவிக்கு அடுத்து வௌவால்களுடன் தன் சிறு வயது வாழ்க்கை தொடங்கியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். திருச்சி மலைக்கோட்டை காற்றில் வௌவால் எச்சத்தின் வாசனை கலந்தே இருக்கும் என்ற சிறு வயது அனுபவ பதிவு வௌவால் பற்றி புத்தகம் எழுதும் அளவு அவரை கொண்டு வந்துள்ளது.
பறவை நோக்குதல், வண்ணத்துபூச்சி நோக்குதல் போல் வௌவால்களையும் பார்க்க தொடங்கலாம். சென்னை மாநகரில் மாலை நேரம் 6 மணி அளவில் அடையாறு பாலத்தில் சென்று நின்றுகொண்டால். ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால் பறந்து செல்வதை ஆனந்தமாக பார்க்கலாம். நிறைய தடவை நான் அங்கு சென்று பார்த்து உள்ளேன்.
அதேபோல் இரவு உயிரினங்களை பார்க்க திட்டமிடுங்கள். இரவு 10 மணி அளவில் புறப்பட்டு 12 அல்லது 1 மணி வரை சுற்றி வாருங்கள். நிறைய உயிரினங்கள் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படி உங்கள் முன் பறந்து கொண்டிருக்கும் ஒரு இரவாடி உயிரியான வௌவால் அசைவுகளை கவனிக்கத் தொடங்குங்கள். முடிந்தால் உங்கள் குறிப்பேட்டில் குறித்தும் கொள்ளலாம்.
நம் கண்களுக்கு அதிகம் புலப்படுபவை பழந்தின்னி வௌவால்கள். பழந்தின்னி வௌவால் உருவில் பெரியதாக இருப்பதால் சுலபமாகத் தெரிந்துவிடும். ஆனால் பூச்சியுண்ணும் சிறிய வௌவால் அங்கும் இங்கும் மிக வேகமாக எங்கும் மோதாமல் பறந்து கொண்டு இருப்பதையும் கவனிக்கத் தொடங்குங்கள். சில முறை உங்கள் வீட்டிற்கு உள்ளேயே வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
இரவுப் பூச்சிகளை இரையாக உண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவதில் வௌவால் மிகப் பெரும் பங்காற்றுக்கிறது. ஆனால் பழ மரங்கள், ஓய்வு எடுக்கும் மரங்கள் அழிப்பால் வௌவால் எண்ணிக்கை குறைந்து வருவதால். பூச்சிகள் எண்ணிக்கை உயர்ந்து அச்சுறுத்தலாக மாறுவதை நாம் உணர்வதில்லை. வௌவால் பற்றி மிக குறைந்த அளவு ஆராய்ச்சியே நடந்துவருகிறது. முழுமையான தகவல்களும் நம்மிடம் இல்லை. காரணம் ஆமை- ஆந்தை-வௌவால் போன்ற உயிரினங்கள் மனிதர்கள் இடம் நல்ல பெயரை வாங்குவது கடினம் என்ற வரி யோசிக்க வைக்கிறது. இந்த மூடநம்பிக்கைக்கு சினிமா-நாவல்கள் முதன்மையாக உள்ளன.
காடழிப்பால் காட்டில் உள்ள உயிரினங்கள் மட்டும் அங்கு அழியவில்லை. இன்று உலகம் முழுவதும் மக்கள் வைரஸுக்கு பயந்து கொண்டு இருப்பது முழுக்க முழுக்க காடழிப்பாலேதான். காடு தானே அழிகிறது என்று நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். ஆனால், அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு வருகிறது என்று யாரும் உணருவதில்லை என்று தோன்ற வைத்துவிடுகிறார்.
எந்த நோய் பரவினாலும் உடனே கோழி மேல் பழி விழும். மறுநாளே கோழி விலை சரிந்துவிடும். அதேபோல் புதிய வைரஸ் வந்தால் உடனே வௌவால்தான் அந்த வைரசை பரப்பியது என்று சொல்ல தொடங்கிவிடுகிறோம். வைரஸுக்கு முழு காரணம் வௌவால் இல்லை மனிதன்தான் என்ற உண்மையையும் எழுதியுள்ளார்.
ஒரு இடத்தில் கரோனா வைரஸ் என்பது ஒரு பெரிய குடும்பம். வௌவால்களில் ஆயிரக்கணக்கான கரோனோ வைரஸ் வகைகள் உள்ளன. இதுவரை அவற்றில் 6 வகையும், 1 துணை வகையும் மட்டும் மனிதர்களுக்கு தொற்றியுள்ளன. எந்த வௌவாலும், விலங்கும் நேரடியாக வந்து வைரஸை மனிதர்களுக்கு பரப்புவதில்லை. காடுகள் அழிப்பது, காட்டுயிரினங்களை உணவாக கொள்வது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதே புதிய புதிய வைரஸ் மனிதர்களுக்கு பரவதற்கு அடிப்படை காரணம்.
நாய்களுக்கு எவ்வளவு துல்லியமான மோப்பசக்தி உண்டோ அதேபோல் மிக துல்லியமான ஒலியை கேட்கும் திறன் உடையவை வௌவால். அவை எழுப்பும் மீயொலி மிக இருட்டான இடங்களிலும் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ண உதவுகின்றன. மிகப் பெரிய மூடநம்பிக்கையை உடைத்து, பதிவு செய்து உள்ளார். வௌவால்களுக்கு பார்வை திறன் கிடையாது என்று பல நூறு வருடங்களாக மக்கள் மனதில் பதிந்து உள்ளது. ஆனால் அனைத்து வௌவால்களுக்கும் பார்வை திறன் உண்டு.
வௌவால் தொங்கி கொண்டு இருக்கும்பொழுது எப்படி குட்டி போடும், அப்படி போட்டால் அவை கீழே விழுந்துவிடாதா என்ற கேள்வி தோன்றியது அதற்கான பதில் புத்தகத்தில் இல்லை. ஆனால் அதேநேரம் வௌவால் பற்றிய அதிகபடியான தகவல்கள் உள்ளடக்கியதாக வாவுப் பறவைகள் புத்தகம் உள்ளது.
நீண்ட வாழைப்பூவில் ஒரு வௌவால் தொங்கி, அதில் தேனை சாப்பிடும் காட்சி அட்டை படமாக இடம்பெற்றுள்ளது. புத்தகத்தில் வௌவால் படங்கள் வண்ணத்திலும் இடம்பெற்றுள்ளன. வௌவால்களை அருகில் பார்த்ததில்லை என்பதால், அவற்றின் முக அமைப்பு ஆச்சரியத்தை தருகிறது.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாக வாவுப் பறவை புத்தகத்தைக் கொடுக்க தொடங்கினால், வௌவால் மீது இருக்கும் மூடநம்பிக்கைகள் குறைய வாய்ப்பு உண்டு. குழந்தைகளிடம் படிக்கச் சொல்லுங்கள், சிறுவயதிலேயே சரியான புரிதல்களோடு வளர்வார்கள்.
l
previous post