நீண்ட காலமாக நூல் வாசிப்பில் ஒரு தேக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக நாவல், புனைவுகளை வாசிப்பதில் பக்கங்களைப் பார்த்து சோர்வு ஏற்பட்டு பின்னர் படிக்கலாம் என தவிர்ப்பது, அது அப்படியே முடியாமல் போவது (அன்றாட வாழ்வியல் தேவை ஓட்டத்தில்) வாடிக்கையாக இருந்தது. புறச்சூழலும் வாசிப்பதற்கான மனவோட்டத்தைத் தராத நிலை. ஆனாலும் எப்படியாவது தினமும் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதால் ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சிறு நூல்களை வாசிக்கத் துவங்கினேன். நடுவில் புத்தக தினத்தில் வாங்கிய சில புத்தகங்களை வாசித்தேன்…
ஒரு நாள் மாலை தொலைபேசி அழைப்பு..தோழர் சிராஜ் (பாரதி புத்தகாலயம் முகமது சிராஜுதீன்) மறுமுனையிலிருந்து வீட்டு முகவரி கேட்டார் ..எதுக்கு தோழர் என்றேன்… மூன்று நாவல்கள் வந்துள்ளன. எடுத்தால் உள்ளிழுக்கும்.. அற்புதமான படைப்புகள்.. தோழர், நாவல் கொஞ்சம் சிரமமாச்சே என இழுத்தேன். இல்ல தோழர், அனுப்புகிறேன்..படியுங்கள்… அதிலும் முதலில் சிவந்த காலடிகள் எனும் புத்தகம் அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு முடித்தார். அவர் (சிராஜ்) சொல்லை மீற முடியுமா?
அடுத்த நாள் கூரியரில் வந்தது. அன்று இரவே சிவந்த காலடிகள் என்னை இழுத்தது. தோழர் தமிழ்ச்செல்வனின் அறிமுகம் எனை மேலும் ஈர்த்தது. நூல் குறித்த படைப்பாளி சி.ஆர். தாசின் அறிமுகம், மொழிபெயர்ப்பாளர் தோழர் கே.சண்முகத்தின் உரையோடு பக்கங்களை நகர்த்த ஆரம்பித்தேன்.
துவக்கத்திலேயே இது ஒரு புனைவு, அதுவும் மறைந்த தோழர் சுசீலா கோபாலன் எழுதுவது போல் இந்தப் படைப்பு இருக்கும் என இந்நூலாசிரியர் சொன்னதை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு படிக்கத் துவங்கினேன்.. 416 பக்கங்கள் போனதே தெரியவில்லை.
கேரளத்தில் இன்று நிகழ்ந்திருக்கும் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருந்தது 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பல அரசியல் போராட்டங்கள், தியாகங்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வியலை துல்லியமாக அறிந்து அதற்கு ஏற்றாற்போல் தங்களின் அரசியல் கள வியூகங்களை உருவாக்கிய தனிப் பெருந்திறன் கொண்ட ஆளுமைகள், எதிரிகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைச் சமாளிக்கும், திறன், மாறி வரும் சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் அரசியல் புரிதல் என எல்லாமுமே இந்த நானூறு பக்கங்களில் நாம் கடப்போம். தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் மாபெரும் பணி, அதில் அரசு மற்றும் எதிர் தரப்பால் உருவாகும் பிரச்சனைகள், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, உழைப்பாளி மக்களிடத்தில் மேலோங்கி நிற்கும் அன்பு, வாஞ்சை, தோழமை, பகிர்வு, குடும்ப அன்பு என இந்த வர்க்கத்தின் தனிச் சிறப்புகள் எல்லாம் அழகுற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியே நின்று நூலாசிரியர் பதிவிட்டுள்ளார்.
தோழர் சுசீலா கோபாலனின் வழியில்;
இந்த நாவல் 1957ல் கேரளத்தில் வாக்கெடுப்பின் மூலம் உருவான முதல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு முன்னெடுக்கும் ஒரு திட்டம் (அரசு ரப்பர் தோட்டம்) உருவாக்குவது துவங்கி, அதன் 40 ஆண்டு கால போராட்ட அனுபவத்தை மகத்தான மக்கள் தலைவன் ஏ.கே.கோபாலன் எவ்வாறு வெற்றி பெற வைத்தார் என்பதை அவருடைய இணையர் தோழர் சுசீலா கோபாலன் எழுதுவதாக நாவல் துவங்குகிறது. இவருடைய இளவயதிலிருந்தே இந்நாவல் துவங்குகிறது. படிப்பு, அவரைச் சுற்றி நடக்கும் மக்களின் போராட்டங்கள், தோழர் ஏ.கே.கோபாலன் சந்திப்பு, மெல்லிய நூலிழையாக உருவாகும் காதல், அதையொட்டி நடைபெறும் திருமண முன்னெடுப்புகள், குடும்பத்தினரின் எதிர்ப்பு, அதற்கு எதிராக சுசீலாவின் உண்ணாவிரதம், பின்னர் சம்மதம் தெரிவிக்கும் உறவினர்கள், திருமணத்தன்றே மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு, என இது வேர் பரப்புகிறது.
அரசு துவக்க நினைக்கும் ரப்பர் விளைவிக்கும் நிறுவனம், அதை நிர்மாணிக்க ஒரு பெருங்காட்டை அழித்து அதில் மீண்டும் குழி தோண்டி ரப்பர் மரக்கன்றுகளை நடுவது, காட்டில் வாழும் விலங்கினங்கள் மனிதர்களுடன் மோதுவது, அடிப்படை வசதிகளே இல்லாமல் தொழிலாளிகள் வாழ்க்கைத் தேவைக்காக எவ்வாறெல்லாம் உழைப்பை செலுத்தி உருவாக்கினார்கள் என்பதை மிக அழகாக, யதார்த்தமாக மிகையில்லாமல் பதிவிட்டு உள்ளார்.
வாழ்ந்த கதை மாந்தர்கள்.
இந்நாவலில் வரும் கதை மாந்தர்கள் பெரும்பாலும் தொழிலாளர்களும் அவர் தம் குடும்பம், சில அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்வை அர்பணித்த மகத்தான தொழிற்சங்கத் தலைவர்கள், அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், என பலரும் நீங்கள் நாவல் படித்து முடித்த பிறகும் நீண்ட ஆண்டுகளுக்கு உங்கள் நினைவைவிட்டு மறையவே மாட்டார்கள்.
அப்படியான இந்த மாந்தர்கள் செய்த காரியம் தான் என்ன?
தங்கள் அன்றாட பொருளாதாரத் தேவைகளுக்காக, வாழ்க்கை நெருக்கடிகளுக்காக விலைமதிப்பற்ற உழைப்பைச் செலுத்தி, அதன்மூலம் சம்பாதித்து, தங்களின் குடும்ப நிலையை சற்று உயர்த்திட, குழந்தைகளின் கல்விக்காக, மருத்துவச் செலவினங்களை ஈடு கட்ட, என ஒவ்வொருவருக்கும் இருக்கும் தேவையே எந்த இடர் வந்தாலும் அதை அவர்களின் தேவைக்காக தாங்கிக் கொண்டு, தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம், உரிமைகளைப் பெற ஒன்றிணைவதும் அந்த வலி மிகுந்த நேரங்களில் உடனிருந்த தோழமைகள், வழிகாட்டும் தலைவர்கள், சுக துக்கத்தில் பங்கேற்கும் உறவுகள், என எல்லா அம்சங்களும் இந்த நாவலில் இருப்பதால் மேலும் அந்த தொழிலாளிகளோடு நாமும் பிரிக்க முடியாதவர்களாக மாறுகிறோம்.
பல கிலோமீட்டர் பயணம் செய்து வரும் தோமாச்சனிடமிருந்து நாவல் துவங்குகிறது. இடையே சந்திக்கும், உதவிடும் மக்கள், அக்காலத்தில் இருந்த போக்குவரத்து வசதிகள், அவரின் குடும்பப் பின்னணி, அதன்மீதான அவரின் அளவற்ற பாசம் இறுதிவரையிலும் தொடர்கிறது.
எவ்விதமான அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் 40-50 ஆண்டுகளுக்கு முன்னர் பல தொழில் நிறுவனங்கள் எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கு காலடி பிளாண்டேஷன் ஒரு சாட்சி. எவ்வித உழைப்புச் சுரண்டலுக்கு இவர்கள் எல்லோரும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதும், அதைத் தடுத்து, தொழிலாளிகளின் உரிமை, ஊதிய உயர்வு, அடிப்படை கட்டமைப்பு எவ்வாறு தொழிற்சங்கத்தால் பெறப்பட்டது, அதை சாதித்துக் காட்டிய தொழிற்சங்கம், அதன் தலைமை எல்லாமே இருப்பதால் நினைவிலிருந்து யாரும் நீங்க மாட்டார்கள்.
தொழிற்சங்கம்-நிதானமான போர்குணமிக்க தலைமை.
தொழிற்சங்கம் என்பது தொழிலாளிகளின் பொருளாதாரத் தேவைகளை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் ( அக மற்றும் புற தேவைகள்) கணக்கில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதற்கும், நிர்வாகம் , அரசு, இவைகளை எதிர்கொள்ளும் போது கடக்க வேண்டிய சவால்கள், நடைமுறை யுத்திகளை தேவைக்கேற்ப மாற்றிட வேண்டிய அவசியம் என்பது இந்நாவலில் பாங்குடன் சொல்லப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத் தலைவர்கள் ஏ.பி.குரியன், சி.கே உண்ணி…ஆஹா என்னே ஒரு நேர்த்தி..எத்துணை அனுபவ முதிர்ச்சி…காட்டாற்று வெள்ளமாகத் திரளும் தொழிலாளர்களை எவ்வாறு தேர்ந்தவர்களாக மாற்றுகிறார்கள். கோரிக்கைகளில் இருக்கும் நியாயம், அதை பெறுவதற்கான உத்தி.. பிரமிக்க வைக்கிறது.
தொழிற்சங்கம் ஒரு கம்யூன் என்பதை செயலால் நிரூபிக்கிறார்கள்…அவர்களின் வாதத் திறமை, ஆளும் வர்க்கத்தை, அரசு அதிகாரிகளை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ. ஏன் ரவுடிகள், குழப்பம் விளைவிக்கும் குண்டர்கள் என அனைவரையும் அணுகும் விதம், என எதுவுமே விடுபடாமல் சொல்லப்பட்டுள்ளது.
என்ன சிரமம் இருந்தாலும், சக தொழிலாளிக்கு சிரமம் எனும் போது எப்படியாவது கரம் கொடுத்து உதவ வேண்டும் எனும் உயரிய சிந்தனையை இந்நாவலின் பல நிகழ்வுகளில் தோழர் தாஸ் பதிவிட்டுக் கொண்டே போகிறார். எத்துணை நெகிழ்ச்சி.
இந்நாவலில் வரும் ஒரு முக்கிய மாந்தர்…அச்சுதன் மாஸ்டர்.. தான் ஏற்றுக் கொண்டக் கொள்கையை, தன்னிடத்தில் பயின்ற மாணவர்களுக்கு கடத்துவது, அப்படி உருவாகும் மாணவர்கள் சமூகத்தில் எங்ஙனம் நல்லவர்களாக பரிணமிக்கிறார்கள் என்பதை ”பாபு” பாத்திரம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படியான நல்லாசிரியர்கள் இக்காலத்திற்கு அவசியம் தேவை என்பதே நாவலின் நோக்கமும்கூட.
ஒரு நல்ல போராளி நல்ல திறமையுள்ள வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும். ஆம். அப்பட்டமான உண்மை. தான் செய்யும் தொழிலைத் திறம்படச் செய்து, நேர்மையாக இருப்பது, சக தொழிலாளிகள் பாராட்டும் விதம் பணியாற்றுவது என தொழிலாளிகள் குணாம்சம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நாவல் உணர்த்துகிறது. அப்படித் தான் இந்த நாவலில் ஒருவர் வருகிறார். அவர் அறிமுகம் ஆகும் இடத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மிகுந்த நல்லுள்ளம் கொண்டவராக, மனித நேயராக, உதவி செய்பவராக, தன் சொந்த ஊரில் இளைஞர்களை அணிதிரட்டி நூலகம் அமைத்து நற்பணி எண்ணம் கொண்டவராக அடையாளம் காணப்படுகிறார். என்னைப் பொறுத்தவரையில் அவரே இப்புதினத்தின் நாயகன். பாபு எனும் தொழிலாளி
உதாரணத் தோழனாக வாழ்ந்து காட்டியுள்ளார். காலடி பிளாண்டேசன் நிறுவனம் துவக்கப்படும் போது, தோசை,சப்பாத்தியை மண்வெட்டியில் சுட்டுத் தின்ற காலம் இருந்ததாக நாவல் சொல்கிறது.. எவ்வளவு துயரம் மிகுந்த காலம்?
யுக தலைவன்
நாவலில் தோழர் ஏ.கே கோபாலன் எனும் பன்முக ஆளுமையை நாம் உள்வாங்கிக் கொள்ளலாம்… கேரளம் இந்தியாவிற்கு அளித்த மாபெரும் கொடை… சுதந்திரப் போரில், நிலபிரபுக்களுக்கு எதிராக, முதல் நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, உழைப்பாளி மக்களின் உரிமைக்காக, ராஜ கர்ஜனையாக ஒலித்த குரல்.
காலடி தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடும்போது உடல் நலிவுற்றபோதிலும் கம்பீரமாக தலைமைத் தளபதியாக நின்று, உறுதியாக உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது நாவலில் அழுத்தமாகப் பதிவாகிறது. ஆளும் வர்க்கம் என்ன சாகசம் செய்யும் என்பதை தன் அனுபவத் திறனால் அறிந்து அதற்கெதிராக சமரசமில்லாமல் போரிடுவது எப்போதும் நினைவில் இருக்கும்.
இன்று ஜனநாயக பாதுகாப்பு பற்றி பேசும் அமைப்புகள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்தனர்.. அடக்குமுறைகளை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டனர் என்பதை நன்றாகவே நாவல் பதிவு செய்கிறது. இந்தப் போரில் தோழர் ஏ.கே.கோபாலனின் பங்களிப்பும் நேர்த்தியுடன் பதிவாகியுள்ளது.
நிறைவாக;
இன்றுள்ள உலகமய தாராளமயச் சூழலில் தொழிற்சங்கங்கள் செயல்படுவதே ஒரு பெரிய சவால். அந்தச் சவாலை எதிர் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உண்டு. அணிதிரட்டப்பட்ட தொழிலாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைவதும், நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உதிரி தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இந்நாவல் நமக்கு உத்வேகம் அளிக்கும் படைப்பாக வந்துள்ளது.
நிதி மூலதனம் எனும் சூறாவளி உழைப்புச் சுரண்டலைப் பிரதானமாக்குகிறது. இந்த இக்கட்டான சூழலில் அடையாள அரசியல் கொண்டு உழைப்பாளி வர்க்கத்தைப் பிளவு பட வைக்க பல சூழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால் காலடி பிளாண்டேஷன் தோழர்கள் இடதுசாரிகள் தலைமையிலான தொழிற்சங்கத்தில் எவ்வாறு வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட்டார்கள் என்பதை இப்புதினம் சொல்கிறது. ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பை வாசிக்கிறோம் எனும் எண்ணமே தோன்றவில்லை. காரணம் மொழிபெயர்ப்பாளரின் திறன். தோழர் கே.சண்முகம் இந்த நாவலின் அழகியல் தன்மை மாறாமல் வழங்கியுள்ளார். தெளிந்த, தடையில்லா மொழிநடை படைப்பில் தெரிகிறது. மேலும்பல மொழியாக்கங்களை தோழர் சண்முகம் படைக்கவேண்டும். ஒரு நல்ல நாவலை தமிழ் வாசகர்களுக்குத் தந்த பாரதி புத்தகாலயத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
l
previous post