தமிழுக்கு அறிவியல் புதிதல்ல. இன்று இணையப்பயன்பாடு குழந்தைகளுக்கிடையே கல்வி உட்பட 69 சதவிகிதம் அதிகரித்துள்ள சூழலில், உலகிலேயே இணையவழி தகவல் தொடர்பு அதிகம் கொண்ட மொழிகளில் தமிழ் 13-ம் இடத்தில் உள்ளதாக சமீபத்திய – சுவீடிஷ் கல்வியகப் புள்ளி விபரம் கூறுகிறது. இந்தி மொழிக்கு அது 36-வது இடம் அளித்துள்ள நிலையில் நம் தமிழின் பாய்ச்சல் விளங்கும்.
சிலர் விமர்சிக்கிறார்கள்: கம்பன் இராமாயணத்தைத் (வால்மீகி) தமிழுக்குத் தந்தார். அவரைப்போல், ஆரியபாட்டியம் நூலை, ஓர் அர்த்தசாஸ்திரத்தை தமிழுக்கு எடுத்துவர ஏன் யாரும் முயற்சிக்கவில்லை, என்று கேட்கிறார்கள். சங்ககாலம் தொட்டே தமிழில் நாம் அறிவியலைத் தனியாக எழுதி அறிவியல் – தமிழ் என்று பிரித்தது கிடையாது. அரிஸ்டாட்டில் பற்றி, ஆர்க்கிமிடிஸ் பற்றி நம் இலக்கியத்தில் இல்லையே என்றால், அதைவிடக் கொம்பனெல்லாம் இங்கு சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். (இது குறித்து விபரமாகப் படிக்க: எனது அறிவியல் தேசம் நூல் – அறிவியல் வெளியீடு) அது ஒரு பெரிய கதை. ஓர் எடுத்துக்காட்டிற்குப் பட்டினப்பாலை நூலை எடுத்துக்கொள்ளலாம். காவிரிப்பூம்பட்டினம் எனும் ஊரின் – துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான கப்பல்களை துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிப்பதற்காகப் பிரித்து ஆய்வு செய்கிறார்கள். அக்கலன்களின் வகைப்பாடுகள் – தொழில்நுட்பங்கள் இவற்றை விவரிக்கும் இடம் ஆச்சரியமூட்டும் விஷயம்.
இதுபோல் அறிவியல், தொழில்நுட்பங்கள் எல்லாம் தமிழ் இலக்கிய மரபில் பின்னிப் பிணைந்து கலந்து கிடக்கின்றன. தனியே வானசாஸ்திரம், கணக்கதிகாரம் என்றும் கூட பிற்கால நூல்கள் விரிவடைவதையும் பார்க்கிறோம்.
உரைநடைக்காலம் வந்தபிறகுதான் தமிழில் அறிவியலைத் தனியாகப் படைக்கத் தொடங்கியது. அது காலனித்துவக் காலங்களில் ஆங்கிலேய ஐரோப்பிய முயற்சிகளுக்கு இணையாக இங்கே தொடங்கப்பட்டதை நாம் பார்க்கலாம். முழுமையாக வரலாற்றைப் புரட்டினால், தமிழ் அறிவியல் எழுத்து என்பது தொடக்கநிலையில் இதழ்களால் கட்டமைத்து எழுப்பப்பட்டதாக இருப்பதைக் காணலாம். கீழ்க்கண்ட முயற்சிகளை நான் முதலில் உங்களது கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும்:
1870 முதல் 1890 வரை இருபதாண்டுகள் வெளிவந்த ஓர் இதழ் ஜன – விநோதிநி – மும்மொழி இதழ். ஆங்கிலம், குஜராத்தி, தமிழ். சென்னை குஜராத்திகள் நடத்திய இதழ். க,நமச்சிவாய முதலியார் பிற்காலத்தில் 1940களில் ஜன – விநோதிநி கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார். இந்தப் பத்திரிகையில் நோய்த் தடுப்பு பற்றிய பல விஷயங்களைப் பார்க்கிறோம். மனிதஉடல் உறுப்புகளைக் குழந்தைகளுக்குப் படங்கள் மூலம் விளக்கம் அளித்திருப்பது வியக்க வைக்கிறது.
1903-ஆம் வருடம் தொடங்கப்பட்டது விவேக பாநு எனும் தமிழ்ப் பத்திரிகை. இதழில் பாதி கையெழுத்தில்; ஓரிரு பக்கங்கள் மட்டும் அச்சில் இதை நடத்தியவர் எம்.ஆர்.கந்தசாமிக் கவிராயர். இதழின் நோக்கமே அற்புதமானது : தச்சு முதல் தறி வரை’ என்று அச்சிட்டு இருக்கிறார்கள்.
1917-ல் வந்தது கல்பதரு எனும் அறிவியல் இதழ் . தூய்மை, வேளாண்மை, வணிகம், கைத்தொழில், அறிவுச் செய்தி என்று ஆறே பக்கம். இது வார இதழாக வந்திருப்பது தெரிகிறது. இரண்டு இதழ்கள் நம் தேவநேயப்பாவாணர் நூலகக் கண்காட்சியில் உள்ளன.
மேற்கண்ட முயற்சிகளை நாம் பதிவு செய்வதற்குக் காரணம் தமிழ் -அறிவியல் எழுத்து எத்தனையோ பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் முந்திக்கொண்ட பாய்ச்சலை உணரவைக்கத்தான். தமிழில் அறிவியலை குழந்தைகளுக்கு எழுதுவதைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி. பால பாரதி பத்திரிகையை குழந்தைகளுக்காகப் பாரதி தொடங்கினார். 1909 ல் விஜயா எனும் தினசரி கொண்டு வந்தார். இவற்றில் உரைநடை, கவிதை போல பஞ்சபூதங்கள் – காற்று, மழை, நெருப்பு, நிலம், ஆகாயம் பற்றி எழுதியதை தமிழ் மண் இன்றும் போற்றுகிறது. பாரதி அறிவியல் எழுத்தை நானாவித அறிவு என்று அழைக்கிறார். அதற்காகவே கொஞ்சகாலம் சூர்யோதயம் என்று ஒரு பத்திரிகையும் நடத்தினார்.
பாரதி கதைகளில் அறிவியல் இருந்தது. யானைக்கால் நோய் வந்தவர் நடத்தும் பட்சணக்கடை, வீட்டு நாயும் – வன நாயும் சந்தித்து உரையாடுவது என அறிவியல் விதைக்கவே கதை புனையும் பாணி அவரிடம் இருப்பதைக் காணலாம்.
பிறகு நாம் சிங்காரவேலர் காலத்திற்குள் வருகிறோம். தமிழில் அறிவியலை சமூக – அரசியல் புரிதலோடு எழுதிய புதியவகை எழுச்சியாக நான் அவரது எழுத்தைத் தரிசிக்கிறேன்.சிறியவையும், ஓரளவு பெரியவையுமாக அவர் 600 கட்டுரைகள் எழுதினார். ஏராளமான வாசிப்பு அனுபவம் உள்ளவர்.
ஒரு பைசா தமிழன் முதல் விடுதலை இதழ் வரை ஏறக்குறைய பத்து பத்திரிகைகளில் அவர் எழுதி வந்தார். மூன்றே பத்திகளைக் கொண்ட அறிவியல் படைப்புகள் மிக எளிய தமிழில்,ஓரளவு கல்வி கற்ற பாமரர்களுக்கும் புரியும் விதமாக மூடநம்பிக்கைக்கு எதிரான பதிவுகளாக உள்ளன. சார்லஸ் டார்வினை 7 சிறு கட்டுரைகளில் அவர் அறிமுகம் செய்தார். 1600-ல் தனது அறிவியல் கண்டுபிடிப்பிற்காக எரித்தே கொல்லப்பட்ட புரூனோவைப் பற்றி 1927-ல் எழுதினார். சயன்டிஸ்ட் என்ற புனைப்பெயரில் கூட எழுதி இருக்கிறார்.
உலகம் வறண்டு போகுமா கட்டுரை 1929ல் வந்தது. உலகமே அழியப்போகிறது எனும் அச்சுறுத்தலுக்கு எதிரான கட்டுரை. விஞ்ஞானக் குறிப்புகள் என்று தொடர்ந்து விடுதலையில் எழுதினார். ஹெச்.ஜி.வெல்ஸ் போன்ற அந்த காலகட்டத்தின் அறிவியல் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து தமிழில் அறிமுகம் செய்தவர் சிங்காரவேலர். பிரபஞ்சமும் – நாமும் எனும் கட்டுரையை இன்று வாசித்தாலும் நல்ல அறிவியல் அனுபவம் கிடைக்கிறது. அறிவியல் விழிப்புணர்வை தமிழ்ச் சமுதாயத்தில் விதைக்க அயராது எழுதிய மாமனிதர் அவர்.
பஞ்சாபின் அறிவியல் அறிஞர் ருச்சிராம் சஹானி பொதுமக்கள் முன் நேரடி அறிவியல் விளக்கம் – ஆய்வு என்று நிகழ்த்தியதைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார்,
சிங்காரவேலரின் தமிழ்-அறிவியல் எழுத்து மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டது. ஒன்று, நாம் அறிந்த ஒன்றிலிருந்து, நாம் அறியாத புதிய அறிவியல் செய்திகளை நோக்கிப் பயணிக்கும் பாணி யாவரையும் வாசிக்கத் தூண்டும். சில ஆங்கிலப் பிரயோகங்களைத் தமிழ்ப்படுத்த மெனக்கெடமாட்டார். ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்திவிட்டு அவற்றுக்கு விளக்கம் எழுதுவார். மூன்றாவது, அவர் எழுதும் சிறிய கட்டுரை வடிவம். உயிரி என்றால் என்ன? எனும் தலைப்பில் ரத்தினச் சுருக்கமாக ஆறே பத்திகளில் அறிவியல் எழுதிவிட முடியும் என்பது இன்றும் நாம் கற்க வேண்டிய பயிற்சியாக உள்ளது.
சிங்காரவேலருக்குப் பிறகும் பல்வேறு முயற்சிகள் இருந்தாலும் பிரதான –முயற்சியாக நான் விவேகபோதினி இதழைக் குறிப்பிடுவேன். 1908-ல் தொடங்கி 1932-வரை அந்த இதழ் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் வி.குப்புசாமி. அறிவியலாளர்களின் சரிதை என்று தனியே ஒவ்வோர் இதழிலும் சில பக்கங்களை ஒதுக்கி எழுதி இருக்கிறார்கள், உலகத்திலேயே மிகப்பெரிய பரிசு என்று அறிவியல் துறைகளுக்கான நோபல்பரிசை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்த பத்திரிகை விவேகபோதினிதான்.
அப்புறம் ‘சிந்தனைக் கல்வி’ இதழ். கல்வி கோபால –கிருஷ்ணன் அறிமுகம் ஆகிறார். 250 சிறு அறிவியல் – கல்வி சார்ந்த நூல்களை கல்வி கோபால கிருஷ்ணன் எழுதினார். பள்ளிக்கூட அறிவியல் என்று அவர் 1942ல் கொண்டுவந்த தொகுப்பு மிகச் சிறப்பானது. மூன்றாம் வகுப்பு முதல் 10-11 ஆம் வகுப்பு மாணவர் வரை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். கல்வி கோபால கிருஷ்ணனின் பறக்கும் பாப்பா தமிழின் ஆரம்ப ஃபேன்டசி அறிவியல் கதையாடலின் முன் உதாரணம். அதேபோல, ஏதோ மாத்திரையைச் சாப்பிட்டு விட்டு எறும்பு – அளவுக்கு சுருங்கிய சிறுவனும் அவரது கதைகளின் அறிவியல் அம்சத்தைக் காட்டும் முயற்சிகள்.
தமிழ் அறிவியல் எழுத்துகளில் தனக்கென்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் பிடித்தவர். பெ.நா. அப்புசாமி. உண்மையில் அவர் ஒரு வழக்கறிஞர். மாபெரும் முன்னோடி எழுத்தாளரான அ.மாதவையாவின் பெரியப்பாதான் பெ.நா.அப்புசாமி. இவர் தன்பெயரையே விஞ்ஞானி என்று புனைந்து கொண்டார். 1945 முதல் 1968 வரையில் எழுதினார். தான் இறந்துபோகும் அன்று கூட ஒரு தொடருக்குக் கட்டுரை எழுதி அதைத் தபாலில் போட்டவர். அவரது பெரும்பாலான புத்தகங்களின் விலை ஏழு ரூபாய். மின்சாரம், வானக்காட்சி இன்றைய விஞ்ஞானமும் நீங்களும், ரயிலின் கதை போன்றவை அற்புதமான அறிவியல் நூல்கள். அறிவியல் அறிஞர்களின் கதை என்கிற அவர் எழுதிய நூலை நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது வாசித்திருக்கிறேன். இப்போது தமிழ் அறிவியல் நூல்களுக்கு பெ.நா. அப்புசாமி விருது என்று தமிழ்ப் பேராயம் (எஸ். ஆர். எம் பல்கலைகழகம்) விருதுகளை வழங்குகிறது.
ஏ.என். சிவராமன் தினமணி ஆசிரியராக இருந்து கொண்டே அறிவியலும் எழுதியவர். நாசாவில் சேர்ந்தால் நிலாவுக்குப் போகலாம், அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்- போன்ற புகைப்படங்கள் நிறைந்த நூல்களைப் பத்து ரூபாய் விலையில் தினமணி வெளியீடுகளாக எழுதியவர்.
அடுத்து பெரியஅளவு அறிவியல் எழுத்து – தாக்கம் என்றால் அது அணில் பத்திரிகை தான். 1950-ல் சக்தி காரியாலயம் தொடங்கியது. புவிவேந்தன் தயாரிப்பாளர், தமிழ்வாணன் ஆசிரியர். பல அறிவியல் கட்டுரைகளுக்கு எழுதியவர் பெயரே இருக்காது. அணில் மாமா என்று இருக்கும். அமிர்தம் எது எனும் தலைப்பில் நோபல் அறிஞர் சி.வி. இராமன் அணிலில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அணில் அறிவியலுக்காகவே முழுக்கவும் வெளிவந்தது அல்ல. பிற அம்சங்களும் உண்டு.
ஆனால் தொடக்கத்தில் முழுக்க முழுக்க அறிவியலுக்காகவே வந்தது மஞ்சரி – டைஜஸ்ட். அந்தக் காலத்தில் (1950களில்) ஆறணாவுக்கு விற்றது. எஸ்.லட்சுமணன் ஆசிரியர். கி.வா.ஜ தான் பொறுப்பாசிரியர். பல ஆங்கில சர்வதேச ஏடுகளில் வந்த அறிவியல் வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றைத் தமிழில் கொடுத்தார்கள். பிற்பாடு தி.ஜ.ரங்கனாதன் (தி.ஜ.ர.) ஆசிரியராக இருந்த காலத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் நாவல்களின் சுருக்கங்கள், சிறுகதைகள், கவிதைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.’மாதத்தின் சுவையான மலர்க்கதம்பம்’ என்று இன்றளவும் அச்சிடுவார்கள்.நான் உட்பட பல தமிழின் அறிவியல் எழுத்தாளர்களின் படைப்புகளும் வரும். இன்றுவரை அறிவியலில் தமிழ்ப் பத்திரிகைகளில் தனி இடம் வகிப்பது மஞ்சரிதான்.
1948ல் கலைக்கதிர் தன் பயணத்தைத் தொடங்கினாலும் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் அறிவியல் இதழாக மிளிர்கிறது.
ஜி.ஆர்.டி அறக்கட்டளை வெளியீடு. முனைவர். நா. பத்மநாபன் அந்தக் காலத்தில் ஆசிரியர். ஒவ்வோர் இதழிலும் ஏழு அறிவியல் கட்டுரைகள் வெளிவரும். படம் போடுவார்கள் அட்டை மட்டும் வண்ணத்தில் இருக்கும். உலகப்பிரளயம் சாத்தியமா என்று விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணன் எழுதிய கட்டுரையை வாசித்திருக்கிறேன்.
பூந்தளிரில் வாண்டுமாமா – அறிவியலை இதே காலகட்டத்தில் சுவைபட எழுதியிருக்கிறார். பூந்தளிரின் கட்டுரைகளைத் தொகுத்து விண்-அறிவியல் நூல்கள் என சிறிய சிறிய நூல்கள் வந்தன மந்திரக் கம்பளம், காட்டுச் சிறுவன் கந்தன், இதெல்லாம் வாண்டுமாமாவின் சாகச அறிவியல் ஃபேண்டசி படைப்புகள். இந்த வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய அறிவியல் – பங்களிப்பாளர்களை நாம் அடுத்து நினைவு கூரலாம்.
முதலிடத்தை நாம் மணவை முஸ்தபா அவர்களுக்கே வழங்க வேண்டும். 40 வருடங்கள் கடுமையாக உழைத்தவர். தமிழிலும் அறிவியலை எழுதமுடியும் என்று கடைசிவரை போராடியவர் அவர். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்றே ஒன்றைத் தொடங்கினார். யுனெஸ்கோ கூரியர் இதழை அறிவியல் சார்ந்த தமிழ் இதழாக அவர் வெளியிட்டார். அறிவியல் தமிழ் இளையர், அறிவியல் களஞ்சியம், மற்றும் தமிழில் அறிவியல் அகராதிகளை வெளியிட்டவர். தொழில்நுட்பம், கணினி, மருத்துவம் சார்ந்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியவர் அவர். ஆறுக்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் அகராதிகள் அவரது பங்களிப்பு. அறிவியல் செய்தி பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு போன்ற 67 புத்தகங்கள் வந்துள்ளன.
அறிவியல் தமிழின் அடுதத ஜாம்பவான் என்றால் அது தனிநாயக அடிகள்தான். சேவியர் தனிநாயகம் எனும் இலங்கையைச் சேர்ந்த பாதிரியார். ஆங்கிலம், ஜப்பானிய மொழி, பிரெஞ்சு, கிரேக்கம், ரோமானியர் மொழி மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் புலமைமிக்கவர். எனவே இத்தனை மொழிகளில் அறிவியல் தொடர்பாக வெளியான பலவற்றைத் தமிழுக்கு வழங்கியவர். பிறந்தது இலங்கை என்றாலும் தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர். தமிழ்- கல்ச்சர் என்ற ஓர் ஆங்கில இதழை 1951 முதல் நடத்தினார். 1964ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தினார். வடக்கன்குளம் எனும் ஊரில் உதவித் தலைமை ஆசிரியராக இருந்த தனிநாயக அடிகள் கோலாலம்பூரில் (மலேசியா) – எட்டு உலகத் தமிழ்-அறிவியல் மாநாடுகளை நடத்தியவர்.
தமிழ்- அறிவியல் கலைச்சொற்கள் அகராதி (அவருடையது) இன்னும் வைத்திருக்கிறேன்.
மால்கம் ஆதிசேஷையாவையும் மறக்கமுடியாது. 1971ல் தன் சொந்தச் செலவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் எனும் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கி கிராம மருத்துவம், விவசாய அறிவியல் பற்றிய கலைக்களஞ்சியங்களைக் கொண்டுவந்தார். யுனெஸ்கோவின் இயக்குநராக இருந்தவர். மானிலங்களவை எம்.பியாக இருந்தபோது தமிழில் அறிவியல் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அறிவியல் தொழில் நுட்பவாதிகளாக உருவெடுக்கும்போது தமது துறைசார்ந்த அனுபவங்களை தமிழ்ப்படுத்தும்போது நமக்கு வேறுபட்ட புரிதல்கள் கிடைக்கின்றன. இதன்மூலம் புதிய பரிணாமம் – புதிய சமூக கலாச்சார நவீன அடையாளம் கிடைக்கிறது என்று அவர் எழுதினார்.
பிறகு சுஜாதா வருகிறார். மற்றவர்கள் எழுதியதற்கும் சுஜாதா எனும் ரங்கராஜன் எழுதியதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. சுஜாதா நிஜமாகவே விஞ்ஞானி. பெல் நிறுவன அறிவியல் ஆராய்ச்சியாளர். அவரே இரண்டு அறிவியல் கண்டுபிடிப்பு உரிமங்களின் உரிமையாளர். வெகுஜன இதழ்களில் அறிவியல் எழுத உடனேயே அவர் நுழைந்து விடவில்லை. எம்.ஐ.டி (Madras Institute of Technology) யில் ஏ.பி.ஜே அப்துல்கலாமுக்கு சீனியர். 1953 ல் சிவாஜி எனும் சிறுபத்திரிகையில் முதல் கதை வெளிவந்தது. 1962ல் கூட இடது ஓரத்தில் கதை குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரிலேயே வெளிவந்தது. ரா.கி. ரங்கராஜன் பெயரோடு தன் பெயரும் குழப்புமே என்று தன் மனைவி சுஜாதா பெயரை தன் புனைப்பெயர் ஆக்கினார். கணையாழியில் கடைசி பக்கம் ஆரம்பத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில்தான் எழுதினார். துப்பறியும் கதைகளே அதிகம். அறிவியல் கதைகளை முழுப் புரிதலோடு எழுதி அசத்தியவர். ‘ஏன் எதற்கு எப்படி’ மூலம் வெகுஜன அறிவியல் புரிதலுக்குப் பெரிய அளவில் பங்களித்தவர். தலைமைச் செயலகம், நானோ டெக்னாலஜி, ஜீனோம், சிலிக்கன் சில்லுப் புரட்சி என அவரது அறிவியல் நூல்களைப் பட்டியலிடலாம். கம்ப்யூட்டர் கிராமம் எனக்கு மிகவும் பிடித்தமான அவரது படைப்பு. நாலுவரி அறிவியல் இருக்கும் நாற்பது வரி அன்றாட வாழ்க்கை நக்கல், என்று விரிவடையும் சகட்டுமேனிக்கு நகைச்சுவை டச்களும் உண்டு. தமிழின் முதல் இணைய இதழையும் தொடங்கியவர் சுஜாதாதான்.
ஆனால் 1980களின் முற்பகுதிக்குப் பிறகு தமிழில் அறிவியல் மட்டுமல்ல, பொதுவாக தமிழின் எந்த எழுத்து வடிவமும் புதிய தலைமுறையிடம் எடுபடவில்லை. ராஜீவ் காந்தி அரசாங்கம் கொண்டுவந்த அன்றையக் கல்விக்கொள்கை – மருத்துவர்- இஞ்சினியர் என்ற இரண்டில் ஒரு துறைக்குப்போவது எனும் வெறியை குழந்தைகளிடம் விதைத்தது. அம்மா அப்பாக்கள், மம்மி டாடி ஆனார்கள்.வீதிகள்தோறும் ஆங்கிலப் பள்ளிகள் , வீட்டிற்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகள்.
அந்தக் காலகட்டத்தில் ‘கோகுலம்’ இதழ் ஓரளவு வாசிக்கப்பட்ட இதழாக இருந்தாலும் அழ.வள்ளியப்பா காலம் முடிந்து போயிருந்தது. நம் கல்வியில் ‘டியூஷன்’ எனும் மாலைநேரப் பயிற்சிக்கு இருந்த இடம் வாசிப்பிற்கு இருக்கவில்லை. வீதி விளையாட்டே கைவிடப்பட்டபோது பத்திரிகை, நியூஸ் பேப்பர் படிப்பது எல்லாம் வேஸ்ட். மார்க் (மதிப்பெண்) வாங்கித் தராது எனும் நிலை. பள்ளிப்பாடம் எனும் பெரும் சூழ்ச்சிச் சுழலில் குழந்தைகள் சிக்கினார்கள். சமூகமே ஆங்கிலம் பேசும் சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. புதிதாக உருவெடுத்த கணினி மென்-பொருள் துறைக்கு வேலைக்குப் போக மாணவர்கள் பதட்டத்தோடு – தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் அவலம்.
இந்தச் சூழலில் 1981ல் அறிவொளி இயக்க காலத்தின் ஊடாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கியது. புதுவை ஜெ. கிருஷ்ணமூர்த்தி போன்ற தோழர்கள் ஒன்றிணைந்து துளிர் எனும் அறிவியல் மாணவர் இதழைத் தொடங்கினார்கள். மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக்கும் பெரிய கனவு கையில் இருந்ததால், பள்ளிக்கூடங்களுக்குள் நுழைய முடிந்தது.துளிர் அறிவியல் இதழின் தமிழ் – அறிவியல் பங்களிப்புகள் ஏராளம். பல தமிழ் – அறிவியல் எழுத்தாளர்களை அது அறிமுகம் செய்தது. ராஜமாணிக்கம், ராமானுஜம், மோகனா, ஏற்காடு இளங்கோ, மாதவன், சுப்பிரமணி, தினகரன் என்று பலரையும் சொல்லலாம். விழியன், விஷ்ணுபுரம் சரவணன் போன்றோரின் அறிவியல் புனைவுகள் குறிப்பிடத்தக்கவை. ஆரம்பகால வள்ளிதாசன், சுஜாதா, சுட்டிகணேசன் என பலரை குறிப்பிடவேண்டும்.
துளிரில் எழுதி பிறகு சுட்டி விகடனில் ஏராளமான அறிவியல் தொடர் கட்டுரைகள், அறிவியல் கதைகள் எழுதிய, இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ஆயிஷா. இரா.நடராசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதி இருக்கிறார். சாகித்ய அகாடமி சிறார் இலக்கியத்திற்காக வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது இவரது அறிவியல் தமிழ் நூலான விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் நூலுக்கு 2014ல் வழங்கப்பட்டது அறிவியல் புனைகதைகள், ஐந்தே ரூபாயில் அறிவியல் நூல்கள் என இவரின் பயணம் தொடர்கிறது. அறிவியல் புனைக்கதைகள் எழுதுவதில் தனக்கென்று ஓர் இடம் பிடித்திருப்பவர்.
புதுதில்லியில் விக்யான் பிரசார் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றும் முனைவர். த.வி. வெங்கடேஸ்வரன் குறிப்பிடத்தகுந்த தமிழ் அறிவியல் எழுத்தாளர் ஆவார். தமிழின் எல்லா முன்னணி இதழ்களிலும் இவரது அறிவியல் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. விண்மீன்கள் – வகை வடிவம் வரலாறு, நவீன அறிவியலின் எழுச்சி, நேனா தொழில்நுட்பமும் மயிலிறகின் வர்ணஜாலமும், நிலாவுக்கு பயணம் போன்றவை இவரது முக்கிய அறிவியல் நூல்கள். விஞ்ஞானியாக இருந்து அறிவியல் எழுத்தாளராக இன்று மிளிர்பவர் பலர். அவர்களில் ஹேமப்பிரபா குறிப்பிடத்தக்கவர்.
தமிழில் அறிவியல் எழுதுபவர்களில் மோகன சுந்தரராஜன் வித்தியாசமானவர். 1971ல் நீல் ஆம்ஸ்ட்ராங்கை (நிலாவில் கால் பதித்த முதல் மனிதன்) நேரில் சந்தித்து பேட்டி எடுத்து தமிழில் வெளியிட்டவர். பல அறிவியல் நூல்களின் ஆசிரியர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போலவே தமிழில் அறிவியலைக் கொண்டுவர பல அறிவியல் அமைப்புகளும் தொடர்ந்து முயற்சி செய்தே வருகின்றன. 1984ல் குன்றக்குடி அடிகளார் சுதேசி அறிவியல் இயக்கம் தொடங்கினார். தமிழில் கைத்தொழில் அறிவியல் நூல்கள் வந்தன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக அறிவியல் தமிழ்த்துறை 1981ல் இருந்து தமிழ் அறிவியல் நூல்களைப் பதிப்பித்து வெளிக்கொண்டு வருகிறது.
தமிழக அரசே நடத்திவரும் அறிவியல் தமிழ் மன்றம் 1970களில் தொடங்கப்பட்டது. பேரா. மு.பி. பாலசுப்பிரமணியம், பேரா காந்தராஜ் போன்றவர்கள் தமிழ் அறிவியலுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள்.
பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் என்று 1984ல் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கப்பட்ட தொழில் நுட்ப தமிழ் மையம் பேராசிரியர் சி.எஸ் சுப்புராமனின் தலைமையில் அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த பல தமிழ் நூல்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதேபோல அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தமிழில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகிறது. ஆ. மணவழகன் வழி காட்டுதலில் கருத்தரங்குகள் பல நடக்கின்றன. கட்டுரைகளைத் தொகுக்கிறார்கள். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (INFIT) எனும் உலக அளவிலான இணைய அறிவியல் தமிழ் அமைப்பு 2000-மாவது ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை பதினான்கு தமிழ் இணைய மாநாடுகள் நடத்தி இருக்கிறார்கள். கனடா சீனிவாசன் முதல் முத்துநெடுமாறன் வரை பலரும் கணினித் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி புதிய உலகிற்கே வழிகோலினர். சோவியத் நாட்டில் இருந்து – ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் போன்றவை அச்சிட்டு வெளியிட்ட தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அறிவியல் நூல்களை நாம் மறக்க முடியாது. ஆதி. வள்ளியப்பனின் தமிழ்ச் சுற்றுச்சூழல் நூல்கள் தனித்துக் குறிப்பிடப்படவேண்டியவை.
பல பதிப்பகங்களின் தமிழ் அறிவியல் பங்களிப்புகளைத் தனியே குறிப்பிடவேண்டும். பாரதி புத்தகாலயம் (அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு, துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு, மனித உடலின் கதை உட்பட நூற்றுக் கணக்கான அறிவியல் நூல்கள்) எதிர் வெளியீடு (அறிவியல் வளர்ச்சி வன்முறை உட்பட பல நூல்கள்) சிக்ஸ்த் சென்ஸ் (கனவுகளின் விளக்கம் போன்றவை- சமீபத்தில் சாப்பியன்ஸ் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்) நூலைத் தமிழில் கொண்டுவந்த மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ் உட்பட பல பதிப்பகங்கள் அறிவியல் நூல்கள் பலவற்றைப் பதிப்பிக்கின்றன. பஞ்சு மிட்டாய், வானம், புக்ஸ் ஃபார் சில்ரன், அறிவியல் வெளியீடு போன்ற பதிப்பகங்களும் சிறார்களுக்கான சிறந்த தமிழ் அறிவியல் நூல்களை பதிப்பிக்கின்றன. மருதன், பத்ரி சேஷாத்திரி, என். சொக்கன், டாக்டர் கணேசன், இளந்தை ராமசாமி, இராமதுரை,
ஆத்மா கே இரவி, பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி, வளரும் தலைமுறையில் சு. நாராயணி, ஹேமபிரபா, கிருபா நந்தினி, டில்லிபாபு, சசிக்குமார் போன்றவர்களின் பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கவை. அதிலும் குறிப்பாக புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் 300 அறிவியல் நூல்களை வெளியிட்டு தனித்து நிற்கிறது.
தற்போது வெளிவரும் சில அறிவியல் தமிழ் இதழ்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. மிகக்கடினமான சூழல்கள், பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு நடுவே இந்த முயற்சிகள் தொடர்கின்றன. அறிவியக்கம் என்று சாலை இளந்திரையன் இதழும், அறிவுக் களஞ்சியம் என்று இலங்கை அறிவியல் தமிழ் எழுத்தாளர் விக்டர் தேவானந்தாவும் நடத்திய இதழ்கள் இப்போது எப்போதாவது வெளிவரும் முயற்சிகளாகி விட்டன.
துளிர், கலைக்கதிர் போன்றவை விடாமல் தொடர்ந்து வெளிவருகின்றன. நமக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் பல. எல்லாத் தினசரிகளுமே சிறார்களுக்காக தனியே வாரத்தில் ஒரு நாள் சிறப்புப் பக்கங்களை ஒதுக்குகின்றன. இந்து தமிழ் திசை (மாயா பஜார்) தினமணி (சிறுவர்மணி) தினமலர் (பட்டம்) இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் பலர் அறிவியலும் எழுதி வருகிறார்கள்.
இயற்பியல் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற நா.சு. சிதம்பரம் அவர்கள் நடத்தும் அறிவியல் ஒளி எனும் அறிவியல் இதழ் 13 ஆண்டுகளாக வெளிவருகிறது. சென்னை பெரியார் கோளரங்கின் இயக்குநர் முனைவர். சவுந்திரராஜ பெருமாள் சிறப்பாசிரியர். இந்த இதழில் மோகன சுந்தரராஜன் டாக்டர் அ.நரேந்திரன், டாக்டர் தங்க சக்திவேல், பை (π) மன்றம் சிவராமன், வேதியியல் பேராசிரியர் வள்ளியப்பன், பல அறிவியல் நூல்களின் ஆசிரியர் இஸ்ரோவின் மயில்சாமி அண்ணாதுரை, நெல்லை. சு. முத்து உட்பட பல அறிஞர்கள் எழுதிவருகிறார்கள்.
அதேபோல திருச்சி வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் முனைவர்.சேயோன் அவர்கள் அறிவியல் பூங்கா என்று ஓர் அறிவியல் இதழை நடத்தி வருகிறார். சென்னை பெரியார் கோளரங்கின் முன்னாள் இயக்குநர் அய்யம்பெருமாள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் சிறப்பாசிரியர்களாக உள்ளனர். இதில் பங்களித்து வருபவர்களில் அணுவியல் விஞ்ஞானி கோபாலன், வானியல் அறிஞர் கு.வை. பாலசுப்பிரமணியம், முனைவர் கோமதி நாயகம் உட்பட பலர் இவை நமக்கு அறியவரும் முயற்சிகள் நாம் அறியா பல முயற்சிகளும் இருக்கலாம். இது முழுமையான பட்டியல் அல்ல. பட்டியலிடுவது இக்கட்டுரையின் நோக்கமும் இல்லை.
புதுதில்லியின் விக்யான் பிரசார் தமிழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலோடு இணைந்து அறிவியல் பலகை எனும் அறிவியல் இணைய இதழை நடத்தி வருகிறார்கள். முனைவர் . த.வி. வெங்கடேஸ்வரன் அதன் ஆசிரியர் ஸ்ரீகுமார் மற்றும் கவிஞர் பாஸ்கர் ஆகியோர் ஆசிரியர்கள். அந்த இதழில் மருத்துவர். ஜெயஸ்ரீ கோபால், முனைவர் கார்த்திக் பாலசுப்ரமணியம், இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமார் உட்பட பலர் எழுதுகிறார்கள்.
மாணவர்களின் அறிவியல் தமிழ் படைப்புகளை – ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தல் மூலம் கடந்த முப்பதாண்டுகளாக – பட்டி தொட்டிகளில்கூட அறிவியல் ஆய்வு சமர்ப்பிக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகளை –தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த – நோய்ப்பேரிடர் காலத்திலும் விடாமல் நடத்திவருவது இன்னொரு குறிப்பிடத்தக்க நம்பிக்கை தரும் விஷயமாகும்.
இந்த இணைய யுகத்தில், கல்வியும் கூட ஆன்-லைன் கல்வி ஆகிவிட்ட நோய்ப் பேரிடர் காலத்தில் ஆன்-லைனில் பெரும்பாலான தமிழ் – அறிவியல் நூல்கள் கிடைப்பது ஆறுதலான செய்தி. நாம் குழந்தைகளை அறிவியல் வாசிப்பு எனும் அறிவுப்பாதையில் செலுத்தி மூடநம்பிக்கையும் மதவெறி – இன்னல்களும் இல்லாத – புவியை நேசிக்கும் புதிய மாந்தர்களாக வாழப் பழக்கவேண்டும். சுயசிந்தனை கொண்ட படைப்பாக்க அறிவியலாளர்களாக அவர்கள் வளர அறிவியல் எழுத்துகள் தமிழில் பெருகவேண்டும். பிற இந்திய அயல்மொழி அறிவியல் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழில் அறிவியல் இன்றும் ‘அறிவியல் வெல்லும்’ எனத் தொடர்வது ஆறுதலான அம்சம் ஆகும்.
l