சிப்பியின் வயிற்றில் முத்து என்னும் நாவல் முதலில் வங்க மொழியில் எழுதப்பட்ட தமிழ் மீனவர்கள் குறித்த புதினமாகும்.. மத்திய அரசில் உயரதிகாரியாகப் பணியாற்றிய போதிசத்வ மைத்ரேய தனது பணிக்காலத்தில் தான் பார்த்த, பழகிய, சந்தித்த மனிதர்களின் வாழ்வினை துல்லியமான உள்ளீடுகள் வழி இதனைப் பல பரிமாணங்களில் எழுதியுள்ளார். கவர்ச்சிகரமான அம்சங்கள் ஏதுமற்ற விளிம்புநிலையினரான மீனவர்களின் பாடுகளை எவர் வாசிக்க விரும்புவர். விற்பனைக்கான கச்சாப் பொருள் கொண்டு எழுதப்படும் பொழுதுபோக்கு உத்திகள் மலிந்த கதைகளே துரிதமாக மக்களைச் சென்றடைகின்றன.
தனி மனிதனின் வாழ்வில் அனுதினமும் பல நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அவற்றினை சொற்ப எண்ணிக்கையிலானோரே பதிவாக்குகின்றனர்.
தன் மனச்சான்றின் குரல் ஓங்கி ஒலிப்பதன் காரணமாகவே அத்தகையோர் இத்தகையவற்றினை எழுதுகின்றனர். தங்கள் மனப் பொருமல்களை, ஆதங்கத்தினை அவர்கள் படைப்பாக்குகின்றனர். அவற்றின் வாயிலாக தங்களின் மனத்திற்கு எழுத்தின் வழி வடிகால் அமைத்துக் கொள்கின்றனர்.
இப்படைப்பு பல வரலாற்றுப் பதிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றிற்கு சந்தை மதிப்பு இல்லை. இலக்கியமாயினும் அது கவர்ச்சியுடன், சுவாரசியமிக்க புனைவாக இருக்க வேண்டும். எனவே, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இது கிணற்றில் இடப்பட்ட கல்லாக கிடந்தது. இறுதியாக, அவரது கல்லூரித் தோழரின் நவகல்லோல் என்னும் வங்க மொழி வார இதழில் 1978இல் தொடராக வெளிவரத் துவங்கியது. அதன் பின்னர் பிரசுரம் கண்டது.
1960 – 61இல் எழுதப்பெற்ற இதனை பத்து முறைக்கும் அதிகமாக போதிசத்வர் திருத்தித் திருத்திப் படைத்துள்ளார். அவர் விரும்பியிருப்பின் தனது மொழியிலேயே ஒரு படைப்பினை எழுதியிருக்கமுடியும். ஆயினும், கடற்கரையோரமாக அன்றாடம் அல்லலும் மக்களின் வாழ்வு அவரது மனதினை ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும். அதுவே சிப்பியின் வயிற்றில் முத்து என்ற படைப்பாக உருப்பெற்றது.
கடலோர மீனவர்களின் வாழ்வு நிலையினை அது காட்சிப் படிமாக்குகிறது. அவர்களது அன்றாட வாழ்க்கை, அல்லாடல்கள் குறித்து மட்டுமல்லாது, அப்பகுதி செல்வந்தர்கள், அவர்களது செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கை முறை இவற்றையும் பதிவாக்குகிறார். ஆங்கில அதிகாரிகளின் பளபளப்பு மிக்க ஆடம்பர வாழ்க்கை, அவர்களை மகிழ்விக்க நமது வசதி படைத்த பணக்காரர்களின் துடிப்பு, அனுசரித்துச் செல்லுதல் என படைப்பு பல தளங்களில் விரிகிறது. பல இடங்களில் அன்றைய அரசுக்கெதிரான காத்திரமான கருத்துக்களை பதிவிடுகிறார்.
அன்றைய அரசியல் சூழல் குறித்த பதிவுகள் முக்கியமாக உற்று நோக்கத்தக்கவை. நாடு விடுதலை அடைந்தபின்னர் எழுதப்பட்ட புதினமாகையால் அவை மிக்க முக்கியத்துவம் பெறுகின்றன. வாசகனுக்கு அவை நாட்டில் நிலவிய காட்சிகளை உயிரோட்டத்துடன் தருகின்றன. கூடுதலாக சமகாலச் சூழலுக்கும், அன்றைய சூழலுக்கும் எள்ளளவு மாறுபாடும் இல்லை என்பதே துவர்ப்புமிக்க எதார்த்தம்.
சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் எந்த வகையில் உயர்ந்துள்ளது. இலவசங்களை அள்ளி வீசி மக்களை சிந்திக்கவிடாது மாக்களாக மாற்றிவைத்துள்ள அவலம் இன்றுள்ள நடைமுறை. அன்று வெள்ளையன் ஆட்சி. இன்று இந்தியனின் ஆட்சி. இனத்திலும், வண்ணத்திலும் மட்டுமே மாறுபாடுடையது. கொள்கைகளும் நடைமுறைகளுக்கும் எள்ளளவும் மாற்றங்களில்லை. விளிம்புநிலை மக்கள், சாமானியர்கள் வாழ்வு நிலையில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏதுமில்லை.
நாட்டினை தங்கள் உழைப்பால் உயர்த்தும் உழைப்பாளியும், உலகிற்கு உணவளிக்கும் உழவனும் மனம் மகிழாத நிலை எவ்வாறு விடுதலையாக, சுதந்திரமாக இயலும்? மக்களின் தலைவனாக தலைவர்கள் இருக்கும்போதும், மாநிலத்தின் தலைவராக அவர்கள் மாறும்போதும் உள்ள மனநிலையின் மாறுபாட்டினை இக்கதையில் கீழ்க்காணும் வாக்கியங்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
அரிசிக்கடத்தல் அதிகமாகிவிட்டதென்று தன் பள்ளிப் பருவத் தோழரும், தற்போது அதிகார பீடத்தின் உச்சியிலிருப்பவரிடம் சென்று வெங்கி அய்யர் .கூறுகிறார். ஒரு வேளை கஞ்சிக்கு கூட நாதியற்ற நிலையில் எளியவர்கள் தவிக்கும் சூழலில் பெரிய அளவில் இது நடைபெறுகிறது. இதை உன்னால்தான் தடுக்க இயலும். நீ பார்த்து ஆவன செய் என்கிறார். அதற்கு அவர் அதனை காவல்துறை பார்த்துக் கொள்ளும்.
எனக்கு முக்கியமான கூட்டம் இருக்கிறது” என்று அலட்சியமாக வெங்கி அய்யரிடம் கூறியவாறே சென்றுவிடும் காட்சி வெங்கி அய்யருக்கு மட்டுமன்றி வாசகனுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. “உங்களுக்கும் வேணுமானா ஒரு ரேஷன் கடை லைசென்ஸ் வாங்கித் தர்றேன். பிழைக்கிற வழியப்பாரு என்று வெங்கி அய்யருக்கு அதிகாரத்தின் தரகரான இன்னொரு நண்பர் அதே இடத்தில் கூறுகிறார்.. பர்மிட் என்பது லைசென்ஸ் என பெயர் மாற்றம் கண்டது. அது பின்னர் தாராளமயமாக்கல் என உருமாறியது. இன்று உலகமயமாக்கல் என்னும் நவீனப் பெயர் கொண்டு உழைப்பினை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. காலனி ஆட்சி செய்தவற்றை இன்று பன்னாட்டு நிறுவனங்கள் செய்துவருகின்றன. மக்களுக்கான, மக்களுக்காக எவையும் மாற்றம் பெறவில்லை. மாற்றம் கண்டது பெயர்கள் மட்டுமே. விலை விகிதம் கட்டுக்கடங்காது உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஊதியம் உயர்ந்தும் பலனேதுமில்லை.
ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்படும் நிகழ்வு இக்கதையில் ஒரு சம்பவமாக இடம் பெறுகிறது. வெங்கி அய்யரும், வாஞ்சி நாதனும் நண்பர்களாக இத்திட்டத்தினை அரங்கேற்றத் திட்டமிடுகின்றனர். வாஞ்சிக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு சூழல்களால் தட்டிப்போனால் வெங்கி அய்யர் அதனை நிறைவேற்ற வேண்டுமென்பது மாற்றுத் திட்டமாகிறது. இருவரும் கதை மாந்தர்களாக இப்படைப்பில் தோற்றம் கொள்கின்றனர்.
பீட்டர், அல்போன்ஸ் உள்ளிட்ட பல கதை மாந்தர்களின் உணர்வுகளும், கொதிப்பும் ஆழமானவை. மனச்சான்றின் குரலை யாரும் கேட்காது வாழ்வினைக் கடந்துவிட இயலாது. ஆயினும், அதற்கு செவிமடுப்போர் சிலரே. அவ்வாறான பாத்திரத்தின் தன்மையினை படைப்பாளி உயர்வாக மேன்மையுடன் சித்தரிக்கிறார். இவ்வாறான கதை மாந்தர்களே வாசகனுக்கு நம்பிக்கையினையும், சமகாலச் சூழலில் ஆசுவாசத்தையும் அளிக்கின்றனர். விளிம்புநிலை மக்கள், ஏழைகள், தொழிலாள வர்கம் சுதந்திரம் என்பதன் பொருளை என்று பிறர் கூறாமல் தன்னிச்சையாக உணர்ந்து, அதன் பலனை அனுபவித்து மகிழ்ச்சி கொள்கின்றனரோ அன்றுதான் நாம் சுதந்திரம் பெற்றதாகக் கொண்டாடி மகிழ வேண்டும்.
வெளிநாட்டில் பணிபுரிந்து தாய்நாட்டிற்கு மீண்ட அல்போன்ஸின் மனமருட்சி குறிப்பிடத்தக்கது. “நீ உண்மையான மாற்றத்த கொண்டு வரணும்னா இந்தச் சேரியிலிருந்துதான் அதத் தொடங்கணும் என்று செபாஸ்டின் அவனிடம் கூறுகிறான். சேரியில் வாழும் மக்களையும், கழிவுநீரின் மத்தியில் புரண்டு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும், அவர்கள் உடம்பில் இருக்கும் சொறி சிரங்குகளையும் பார்க்கும் அல்போன்ஸிற்கு குமட்டல் உண்டாகிறது.
“இதைப் பார்த்தாலேயே நான் பைத்தியமாகி விடுவேன். இங்கு வாழ்வதென்பதை கற்பனையும் செய்ய முடியாது என செபாஸ்டினுக்கு பதில் கூறுகிறான். மேலும், செபாஸ்டின், நல்ல பொருளாதாரக் கொள்கையினா அதனால மனிதர்களுக்குள்ள அன்பு வளரணும். ஆனா, மக்களுக்குள்ள அவநம்பிகை ஜாஸ்தியாயிடுச்சி, பொறாமை பெருகிடுச்சி… .நாம கெட்டவங்களா ஆயிக்கிட்டிருக்கோம். எப்போதும் உண்மை பேசணும்ணு பாடப் புத்தகத்துல போட்டிருக்கும். ஆனா, சமூகம் பொய் சொல்லக் கத்துத் தருது….பொய் சொல்லலேன்னா வாழ முடியாது. அடுத்தவங்கள ஏமாத்தாதேன்னு புஸ்தகத்துல போட்டிருக்கு. நாம ஏமாத்தியே பிழைக்கிறோம், என அவனுடைய கருத்துகள் ஏட்டுச் சுரைக்காயின் பயனின்மையை உணர்த்துகிறன.
கன்னிகாஸ்திரீயான சோபியாவின் கருத்துகளும் புரட்சிகரமானவை. கடவுள் பேரால சமூகத்துல நடக்கற தில்லுமுல்லுகளைப் பார்த்தால் கடவுள் மேலே நம்பிக்கை வைக்கறது கஷ்டம்….உலகத்திலிருந்து மாதா கோவில், மசூதி, இந்துக் கோவில் எல்லாத்தையும் ஒழிச்சிடணும். அப்போது அந்தோணி கூறும் கருத்துகளும் இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறிருப்பது வியப்பினை அளிக்கிறது. மதங்களுக்குள்ள எவ்வளவு வேற்றுமைகள், எவ்வளவு சண்டைகள், நாடுமுழுவதும் மதங்களின் பேராலே பிளவுபட்டுப் போச்சே….
இதுபோன்ற கருத்துகளின் வெளிப்படைத்தன்மை இன்றுள்ள அரசியல் சூழலில் எவ்வாறு பொருள் கொள்ளப்படும். அதற்கான எதிர்வினைகளும், விளைவுகளும் இன்றுள்ள நிலையில் இவை ஒரு படைப்பாளியின், கதாபாத்திரங்களின் கருத்தாக, பார்வையாக எடுத்துக் கொள்ளப்படுமா? என்னும் கேள்வி எழுவது தவிர்க்கவியலாததாகிறது.
புனைவின் பல இடங்களில் நடைபெறும் வன்முறையும், மோதல்களும் இன்றுவரை மாறா இயல்புடையவையாக உள்ளன. அன்று கல்வியறிவு வளர்ச்சியற்ற நிலையில், தங்கள் இருப்பினை உறுதி செய்துகொள்ள உணர்வு வயப்பட்ட நிலையில் மக்கள் புரிந்த வினைகளுக்கும், இன்று அன்றாடம் பல முகத்திரைகளை அணிந்துகொண்டு தங்கள் செயலுக்கு தக்க காரணத்தினைக் கூறிக்கொண்டு நடத்தும் நிகழ்வுகளுக்கும் எவ்வித மாறுபாடும் இல்லை.. அதுபோன்றே கதை மாந்தர்களின் பாலியல் உணர்வுகளும், நிகழ்வுகளும் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன. இவை நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் அரிதானவை. மேலும், கன்னியர் மடத்தில் வாழும் பெண்களின் உணர்வுகளையும், மன நிலையினையும் வெளிப்படையாகப் பதிவாக்கியுள்ள ஆசிரியர் துணிவுள்ளவராகிறார். இன்றுள்ள அரசியல் சூழலில் இத்தகைய எழுத்துகளும், பதிவுகளும் சாத்தியப்படுமா? என்னும் கேள்வி தோன்றுவது தவிர்க்கவியலாததாகிறது. லக்ஷ்மி சரவணகுமாரின் ஒரு புதினம் மட்டுமே மனதில் தட்டுப்படுகிறது.
தனது முன்னுரையில் நாவலாசிரியர், இந்த நாவலைப் பிரசுரிக்க செல்வாக்குள்ள ஒரு விமர்சகரிடம் சென்றேன். அவர் என்னை ஆறு முறை திருப்பியனுப்பிவிட்டு இறுதியில் ஒரு புத்திமதியும் கூறினார். “நாவல் எழுதிப் பொழுதை வீணாக்காதீர்கள். அப்போது காளிதாசனின் ஒரு கூற்று என் நினைவிற்கு வந்தது – அற்பனிடம் சென்று விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதைவிட சான்றோரை அண்டி விருப்பம் நிறைவேறாமல் போவது சாலச்சிறந்தது. இத்தகைய கசப்பான நிகழ்வுகளை அடையும் படைப்பாளிகள் விரைவில் புகழ் பெறுவதும் உண்மையாகிறது. அதுவே போதிசத்வ மைத்ரேயரின் வாழ்விலும் நிகழ்ந்தது.
ஆசிரியர் அரசு அதிகாரியாயிருப்பினும் இசை குறித்த ஆழ்ந்த பரிச்சயமுள்ளவராக இருப்பது பல தருணங்களில் வெளிப்படுகிறது. பல பாடல்கள் பற்றிய குறிப்புகளும், வடமொழி மேற்கோள்களும் படைப்பில் பல இடங்களில் எழுதப் பெற்றுள்ளன. நாவல் சில இடங்களில் தட்டையாக நீட்டப்பட்டிருப்பினும் நாம் அது எழுதப்பட்ட காலகட்டத்தினை கருத்தில் கொண்டு பார்த்திடும்பொழுது அக்குறை மறைந்திடும் சாத்தியம் உண்டு.
நிறைவாக்கிட, இந்த நாவலை அரசின் என்.பி.டி பதிப்பித்துள்ளது. பல வங்க மொழி இலக்கியங்களை நேரடியாக வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்துள்ள சு.கிருஷ்ணமூர்த்தி இப்படைப்பினையும் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
கதை நெடுகிலும் எவ்வித நெருடலுமின்றி தமிழ் நாவல் போன்றே கதை இலகுவாக பல வரலாற்றுப் பதிவுகளுடன் பயணிக்கிறது. உலகில் செல்வந்தர்களும், அரசும், ஆட்சி அதிகாரத்திலுருப்போரும் என்றுமே எத்தகையதொரு மாறா மனப்போக்கினைக் கொண்டோராக நிலை பெற்றுள்ளனர் என்று தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருப்பினும் சமகால அரசியல் நிகழ்வுகளை தெளிவாக உணர்த்திடும் படைப்பாகவும் சிப்பியின் வயிற்றில் முத்து உருவாகியுள்ளதால் இதனை வாசகர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.
l