எல்லா மனிதர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்கவே முடியாத ஒரு நிலை. எனவே, இவரும் மறைந்தது ஒரு வகையில் மனித வாழ்வின் அவலங்களுள் ஒன்று; ஆனால், தவிர்க்க இயலா அவலம். பிரச்சினை என்னவெனில், இந்த மரணம் இயற்கையானதல்ல என்பதுதான். கொரானா என்ற தீனுண்மியின் கோரத்தாண்டவத்தின் விளைவு இது.
சித்தலிங்கையாவின் கவிதைகள் உண்மையாகவே பெருந்திரளாகத் திரண்டு நின்ற கூட்டத்தை நோக்கி நேரடியாகவே முழங்கப்பட்டவை. அதனாலேயே உயிர் நிறைந்தவை. தம்மை நோக்கிச் சொல்லபட்ட அம்முழக்கங்களை உள்வாங்கிக் கொண்ட அக்கூட்டம் வேறு சில இடங்களில் வேறு கூட்டங்களை நோக்கி அவற்றை முழங்கியது. பிறகு வீடு, தெரு, கல்லூரி, சந்து முனைகள், பேருந்து நிலையங்கள், தேநீர்க்கடைகள் என நான்குபேர் கூடுகிற ஒவ்வோர் இடத்திலும் மாறி மாறி அவை முழங்கிக்கொண்டே இருந்தன. ஊர்வலங்கள் தோறும் அவை முழங்கப்பட்டன. ஒலி நாடாக்களில் அவை ஒலித்துப்பரவின. கூட்டங்கள், நாடக நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் என எல்லா வகையான மக்கள் கூட்டங்களிலும் முதன்மை நிகழ்ச்சிகள் தொடங்கு முன் குறைந்தது ஒரு மணி நேரம் வரை அவை பாடப்பட்டிருக்கின்றன.பாவண்ணன்.
previous post