கல்வியாளர் ச.ராஜகோபால்
கனவுகள் உறங்குவதில்லை… – கோவைசதாசிவம் சூழலியலாளர்
கனவுகளுக்கு பற்பல பரிமாணங்கள் இருக்கின்றன. அவை இலக்குகளை, நோக்கங்களை முன்னறிவிப்பவை! வாழ்வின் பெரும் பயணத்தில் வழித்துணையாக கைகளைப்பற்றிக்கொண்டு உடன் வருபவை கனவுகள். அத்தகைய கனவுகளை அடைகாத்த, தாயன்பு மிக்க ஓர் கல்வியாளனை உங்களுக்கு அறிமுகப் படுத்துகையில் வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் தாள் பட்டு தெறிக்கிறது!
கல்வியாளனுக்கான அடையாளம் எதுவென்று தெரியாமல் நாம் கலங்கிப்போகிறோம்! கல்வி குறித்த நவீனச் சிந்தனையும், செயலூக்கமும் கொண்ட ஒருவரே கல்வியாளராக இருக்க முடியும்! நர்சரி பள்ளிகளைத் தொடங்குவதாலோ, கல்வி நிறுவனங்களை கட்டமைப்பதாலோ, கல்வியியலில் முனைவர் பட்டம் பெறுவதாலோ ஒருவர் கல்வியாளர் ஆக முடியாது!
கல்விப் புலங்களுக்கு வெளியே சிந்தித்து சமத்துவமற்ற கல்வியில் நிலவும் சிக்கல்களை புரிந்து கொண்டு அதனை மாற்ற முனையும் ஓர் செயற்பாட்டாளனைத்தான் கல்வியாளர் என்று அடையாளப்படுத்த முடியும்!
அப்படியொரு கல்வியாளனை, கனவுகள் நிரம்பியவனை, குழந்தைகளின் மீதும், மனிதர்களின் மீதும் பேரன்பு கொண்டவனை காலத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டு… கையறுநிலையில் இருக்கிறேன்!
எண்பதுகளின் நடுவே திருப்பூரில் பனியன் தொழில் பிரபலமடைந்து அந்நிய செலாவணியை அள்ளிக்குவிக்கும் பெருமையை உலகமே வியந்து கொண்டிருக்கையில் அதன் மறுபக்கத்தில் ஏழைவீட்டுப்பிள்ளைகள் குழந்தை உழைப்பாளிகளாக மடைமாற்றப்பட்டிருந்தார்கள்!
பருவத்திற்குரிய கல்வியும், விளையாட்டும் கிடைக்கப்பெறாத குழந்தைகளை உருவாக்கும் சமூகம் வளர்ந்த சமூகம் ஆகாது! ஏழை வீட்டுக் குழந்தைகளின் கல்வியே அவர்களின் குடும்பத்திற்கு ஏற்றம் தரும் என்பதை உறுதியாக நம்பிய ஒருவர் அரசு பள்ளியிலும், கல்லூரியிலும் பயின்று ஏதேனுமொரு பனியன் நிறுவனத்தில் மேலாளராகப்பணியில் சேராமல்… திருப்பூர் தொழில் நிமித்தமாக கைவிடப்பட்ட வாடகை கட்டடத்தில் இயங்கும் ஒரு சின்னஞ்சிறு பள்ளியை நடத்த முன் வருகிறார் சாக்குத்தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ச. ராஜகோபால்.
“காசு, பணம். வரும் போகும். கல்வி வரும் போகாது” என்கிற உயிர்ப்பான முழகத்தோடு தொடங்கப்பட்ட யுனிவர்சல் நர்சரிப்பள்ளி… “தேசம் காக்க நேசம் வளர்க்கும்” கல்விப்பணியில் பயணித்தது!
பள்ளியைச்சுற்றிலும் வசித்த இடதுசாரி சிந்தனை கொண்ட தொழிலாளிகளின் பிள்ளைகள் பனியன் ஆலைகளுக்குப்போகாமல் பள்ளிக்குப் போனார்கள்! வெறும் பாடநூல்களிலுள்ள எழுத்துக்களை மனனம் செய்து எதிரொலிக்கும் கல்விக்கிடையே… தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தில் வெளியாகும் சிறுபிரசுரங்களை அறிமுகம் செய்து, அறிவியல் மனப்பான்மையை, மனிதகுல வரலாற்றை குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்ததில் ராஜகோபாலின் பங்கு அளப்பரியது!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல் பட்ட பல தோழர்களும் ராஜகோபாலுக்கு நண்பர்களாக இருந்தார்கள்! தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்தியா முழுமைக்கும் எழுத்தறிவிக்கும் “அறிவொளி” இயக்கம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலமையில் இயங்கியது. கோவை மாவட்டத்தில் தமது சின்னஞ்சிறு பள்ளியில் பயிலும் குழந்தைகளை எழுத்தறிவு விழிப்புணர்வுப் பயணங்களில் பங்கேற்கச் செய்து கலை, இலக்கிய நிகழ்வுகளிலும் ஈடுபடச் செய்தார்!
எழுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பாடல்களை, நாடகங்களை எழுத்தாளர் சங்கத்தோழர்கள் உருவாக்கித் தந்தார்கள். மாவட்டத்தில் கவனிக்கத்தக்க பள்ளியாக யுனிவர்சல் பள்ளி திகழ்ந்தது!
மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்ததும் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று எழுத்தறிவின் மறுமலர்ச்சியை பாடியும், நடித்தும் விளக்கினார்கள்! பெரிய கல்லூரிகளும், பள்ளிகளும் செய்யத்தயங்கும் சமூகப்பணியை துணிவுடன் செய்ய துணை நின்றார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள்! அறிவியல் இயக்கத்திற்கும், அறிவொளி இயக்கத்திற்கும் யுனிவர்சல் பள்ளி மாணவர்களும் அதன் தாளாளர் ராஜகோபாலும் ஆற்றிய அரும்பணியை காலம் தனது நினைவுப் பெட்டகத்தில் சேமித்துள்ளது!
இருபது குழந்தைகளுடன் பயிலும் நர்சரியாகத்தொடங்கி இன்று இரண்டாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் பயிலும் மெட்ரிக் மேனிலைப்பள்ளியாக உயர்த்த அவர் சந்தித்த இன்னல்களை எழுதித்தீர்க்க முடியாது! ராஜகோபால் தோல்விகளைக்கண்டு துவண்டு போவதை நான் கண்டதில்லை! துரோகத்தை மன்னிக்கும் பக்குவத்தை பலமணிநேரம் பேசுவார்!
பதினைந்து ஆண்டுகள் கடந்து பயணிக்கும் திருப்பூர் புத்தக கண்காட்சியில் இப்பள்ளியின் பங்களிப்பை எளிதில் கடந்து போக முடியாது! திருப்பூர் மாவட்டம் முழுமையிலுமுள்ள பள்ளி, கல்லூரிமாணவர்கள் பங்கேற்கும் கலை, இலக்கியப்போட்டிகளைதிறன் பட நடத்தி, போட்டியாளர்களைத்தேர்வு செய்து, பரிசளிக்கும் வரை யுனிவர்சல் பள்ளியின் ஆசிரியர்கள் புத்தக கண்காட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள்!
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேன்படுத்த பள்ளியே புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வாசிப்பு இயக்கத்தை நிகழ்த்தும்! எனக்குத்தெரிய அறிவியல் இயக்கம் வெளியிடும் “துளிர்” மாதயிதழுக்கு 800- சந்தாக்கள் கொடுக்கும் பள்ளி இதுவாகத்தான் இருக்கும்! பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களின் பிறந்த நாளுக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பதை ராஜ கோபால் வழக்கமாகக் கொண்டிருந்தார்!
திருப்பூர் புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவரை தேர்வு செய்து தலைவரின் தனித்துவமான தன்மைக்கு நிர்வாகிகள் பெரும் மதிப்பளிப்பார்கள்! அப்படி ஒருமுறை ராஜகோபால் புத்தக கண்காட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது ஒரு புதுமையைச் செய்தார். நூறு தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து நூறு அரசு பள்ளி நூலகத்திற்கு தலா 5,000 – மதிப்புள்ள நூல்களை மேடை நிகழ்விற்கு வருகை தரும்சிறப்பு விருந்தினர் கையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளும் சிறப்பும், சிலிர்ப்பும் தான் அந்த புதுமை. அது புதுமை மட்டுமன்று! தமிழகத்தில்நடைபெறும் புத்தக கண்காட்சியில் காணக்கிடைக்காத முன்னெடுப்பாகவும் இருந்தது! புத்தக கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பிரபலமான பதிப்பகம் வெளியிட்ட நானூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை இளைஞர் ஒருவர் களவாடி வருகையில் புத்தக கண்காட்சி நிர்வாகிகளிடம் அகப்பட்டுக்கொண்டார்!
அடித்து துவைத்தெடுத்து விடுவார்கள் என்றுதான் பலரும் கருதியிருக்கக் கூடும்! ஆனால்… நடந்தது வேறு..! இளைஞனிடம் ராஜ கோபால் பேசினார். நண்பனின் தோளில் வாஞ்சையோடு கைகிடத்தும் ஒரு நண்பனாக எந்த சிடுசிடுப்பும், பாசாங்கும் அற்ற புன்னகையோடு ஆயிரம் ரூபாயை அந்த இளைஞன் கையில் திணித்தார்!
போ…..
எந்தக்கடையில் இருந்து இந்த புத்தகத்தை எடுத்து வந்தாயோ அந்தக்கடையில் புத்தகத்தைக்கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டுவா! மீதமாக இருக்கும் பணத்தில் உனக்குப்பிடித்த, நீ… வாசிக்க விரும்பும் புத்தகங்களை வாங்கிக்கொள் என்று இளைஞனை அனுப்பி வைத்தார். ஆயிரம் ரூபாயிக்கு புத்தகங்களை வாங்கி வந்து புத்தக கண்காட்சி நிர்வாகிகளிடம் காட்டி விட்டு… எப்படி உள்ளே வந்தாரோ அப்படி இல்லாமல் புதிய மனிதனாக வெளியே போனார்.
சில இளைஞர்கள் புத்தக கண்காட்சிகள் நடைபெறும் இடங்களில் புத்தகங்களை களவாடிப்போவதை ஒரு சாகசமாகப்பார்க்கிறார்கள்! அவர்களை வாசிக்க வைத்து விட்டால் இத்தகைய தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று புதிய தலை முறையினர் மீது நம்பிக்கை கொண்ட ராஜ கோபால் ஓர் பண்பட்ட சமூகத்தை உருவாக்கும் ஆளுமைகளின் ஒருவராகத்திகழ்ந்தார்!
பள்ளியின் ஆண்டு விழாவை தமிழர் திருநாளாக நடத்துவதை பெரிதும் விரும்புவார். “கும்மியடி! தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி” என்கிற மகாகவி பாரதியின் பெண் விடுதலைப்பாடலுக்கு பள்ளியின் ஆயிரம் பெண் குழந்தைகளை ஒரே சமயத்தில் கும்மியடிக்க வைத்து பள்ளி வளாகத்தை அதிரச்செய்வார். நூறு பெற்றோர்கள் சமத்துவ பொங்கல் வைத்து பெரிய பாத்திரத்தில் இட்டு எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பார்கள்! அன்று முழுதும் நாட்டுப்புற கலைகள், மரபு சார்ந்த விளையாட்டுக்கள்,இயற்கை உணவு, பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி புதுமையான நிகழ்வுகள் என்று பள்ளி ஆண்டு விழா முற்றிலும் கலை, இலக்கிய விழாவாகவே மிளிரும்.
வகுப்பறைக்கு வெளியே மிதக்கும் உலகத்தை பற்றி அறையில் பயிலும் மாணவர்களுக்குத் தெரியப்படுத்த சமூகப் பொதுவெளியில் களமாடும் கல்வியாளர்களை, அறிவியலாளர்களை, நல்ல ஆன்மீக வாதிகளை, கலைஇலக்கிய ஆர்வலர்களை, கதைசொல்லிகளை, நவீன நாடகவியலாளர்களை அழைத்து வந்து மாணவர்களிடம் உரையாட வைப்பார். சுற்றுச்சூழல், பசுமைப்பணி, காடறிதல் பயணம், வாசிப்பு இயக்கத்திலும் பங்கெடுக்க வைப்பார்!
நமது பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் விளிம்பு நிலையில் வாழும் தொழிலாளி வீட்டுப்பிள்ளைகள். அவர்களுக்கு உயர்தரமான பள்ளிகளில் கிடைக்கும் கல்வி சார்ந்த அறிவுகள் அத்தனையும் கட்டணம் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாகயிருப்பார்!
அவரின் கனவு மெய்பட கடந்த கல்வி ஆண்டில் குளிர்சாதன வசதியுடன் ஒரு நவீன அரங்கை வடிவமைத்துள்ளார் உலகில் நிகழும் ஒவ்வொரு அசைவையும் நமது குழந்தைகள் இங்கிருந்தே உள்வாங்கிக் கொள்வார்கள் என்று பெருமிதம் கொள்வார்!
அந்த அரங்கில் ஒரு நிகழ்வு கூட இன்னும் நடக்கவில்லை! ஊரடங்கு நாளில் மூடப்பட்ட பள்ளி திறக்கவுமில்லை!
வரும் எல்லோரையும் வரவேற்கும் அவரது அறையில் “தேடிச்சோறு …..பல வேடிக்கை மனிதர்களைப்போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ…?” என்ற மகாகவியின் கவிதை வரிகள் கண்ணில் படும். அந்த நம்பிக்கை வெளிச்சத்தில் நாளெல்லாம் வாழ்ந்த ராஜகோபால் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகி விட்டார்! நம்மிடம் அவர் இல்லை! அவர் இல்லை என்றாலும் அவரின் நம்பிக்கைகளை, கனவுகளை நிறைவேற்ற நாம் இருக்கிறோம்!
l