எஸ். வி. வேணுகோபாலன்
புத்தகங்களை, செய்தித் தாள்களை ஓரிடத்தில் அமர்ந்து படிப்பதில்லை பலரும். வேகவேகமான ஓட்டத்தில் வழியில் தட்டுப்படும் கடையில் நாளேட்டைக் கொத்தி எடுத்துக் கொண்டு பேருந்திலோ, ரயிலிலோ ஓடோடிப் போய் இடம்பிடித்து அமர்ந்து பிரிக்கிறோம் வாசிக்க. ஆனால், வாசிப்பு தொடங்கியதும், வேறு உலகிற்குப் போய்விடுகிறோம்.
முப்பது ஆண்டுகள் ஆகி இருக்கக் கூடும். மதுரையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் பேருந்தில் ஏறி அமர்ந்த அன்றிரவு நடத்துநர் கேட்ட கேள்வி மறக்காது. சென்னை போகவேண்டும் என்று சொல்லி ஏறிப்போய் அமர்ந்து, ஏதோ புத்தகத்திற்குள் நுழைந்தாயிற்று. அந்த மனிதர் குறுக்கும் நெடுக்கும் நடையாய் நடந்து மனிதர்கள் தலையைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துவிட்டு, தயக்கத்தோடு என்னிடம் வந்து நின்று, ‘டிக்கெட் எடுத்திட்டீங்களா?’ என்று கேட்டார். அப்போது தான் நினைவே வந்து, காசு எடுத்து நீட்டியதும், ‘ஏங்க, எத்தனை குரல் கொடுத்தேன், எத்தனை முறை கேட்டேன், யாராவது சீட்டு எடுக்கணுமான்னு…. நாலாப் பக்கம் என்ன நடக்குதுன்னு பார்க்கப் பழகிக்கணும். அப்புறம் படிக்கணும்” நாலாப் பக்கமும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கத் தான் படிக்கிறேன் என்று சொல்லி இருக்க முடியுமா அவரிடம், செய்ததே அநியாயம்! இப்படியான வாசிப்பு போதை, தான் பற்றிக் கொண்ட ஆளை விடுவதில்லை. சரி, எடுத்தோம், படித்தோம், அடுத்த வேலை பார்ப்போம் என்றாவது இருக்க முடிகிறதா, அதுவும் இல்லை. வார, மாத இதழோ, செய்தித் தாளோ, கதை புத்தகங்களோ படிக்கையில் ஏற்கெனவே அறிந்த செய்திகளுக்கு மாற்றான குரல் ஒலிக்கும்போது அகக்கண் விழித்துக் கொண்டு விடுகிறது. எது சரி, எது தவறு, எது உண்மை எது பொய் என்று தேடு தேடு என்று துரத்துகிறது.
சிறு வயதில் இருந்தே பக்தி மார்க்கத்தில் வளர்ந்த ஒருவன். பதினான்காம் வயதில் காஞ்சிபுரம் கோயில் நகரத்தில் தெற்கு மாட வீதியில் வாழ்க்கை. தமிழார்வத்தைத் தூண்டியதில் பக்தி இலக்கியத்திற்கு இருந்த பங்கு. லட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சத நாமம் என்று உருப்போட்டிருந்தவை ஒரு பக்கம். தாத்தாவைப் பறிகொடுத்த பிறகு, இறந்தோர் நினைவில் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் திதி மந்திரங்கள் அருகே இருந்து உற்று கவனித்துக் கேட்டுக் கேட்டு அடுத்தது என்ன என்று நினைவிலாடும் அளவு பழகிப் போயிருந்த இளவயது.
திதி அனுசரிக்கப்படும் வீட்டில் தீ மூட்டி முன்னோரை விளித்து உணவு படைக்கும் நேரத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் பலவும் அந்நாட்களில் மனப்பாடமாகவே ஆகி இருந்தது. முக்கிய காரணம், 1971 ஜூலை மாதம் தாத்தா மறைந்தபோது, முதல் ஆண்டில், மாதம் ஒரு முறை ‘மாஸ்யம்’ என்று சொல்லப்படும் திதி கொடுக்க எங்கள் மாமா காஞ்சிபுரம் வந்து செல்வார். பாட்டி வீட்டில் தங்கிப் படித்த நாட்கள் அவை. என் இளவயதில் மறைந்த தாய்க்கு ஆண்டு தோறும் திதி கொடுக்கும்போது பல ஆண்டுகளாகக் கவனிக்க நேர்ந்ததும் மந்திரங்களின் பரிச்சயத்திற்கு முக்கிய காரணம். பொருள் அதிகம் விளங்கி இராத மந்திரங்கள். அப்படியான திவச மந்திரங்கள் குறித்த பிடிமானத்தில் ஓங்கி ஓர் அடி அடித்த அந்தக் கதையைக் கணையாழியில் படிக்க நேர்ந்தது கூட ஏதோ ஒரு பயணத்தின் போது தான் இருக்க வேண்டும்.
கணையாழியை அறிமுகப் படுத்தியது நண்பர் சந்திரமௌலி எனும் அழகிய சிங்கர் தான். பின்னாளில், முது நிலை படிப்புக்கு, கோவை போன போது, டவுன் ஹால் கடந்து ஒரு சந்திப்பில் இருக்கும் புத்தகக் கடையில் மட்டும் தான் கிடைக்கும் கணையாழி. அதாவது, சைக்கிளில் தேடியலைந்து கண்டெடுத்த ஓரிடம் அது, ரயில் நிலையம் பக்கம் தேடியிருக்கவில்லை. கணையாழியில் முதலில் வாசிப்பது புதுக்கவிதைகளை. அப்புறம் சுஜாதா எழுதி வந்த கடைசி பக்கங்கள். அப்புறம் சிறுகதைகள்.
காஞ்சிபுரம் நூலக வாசிப்பில் படித்துவந்த மரபுக் கவிதைகளில் இருந்து, கல்லூரிக் காலத்தில் புதுக்கவிதை அறிமுகம் வாய்த்த மாற்றம் ஒரு நாளில் நிகழ்ந்தது அன்று. எஸ் எஸ் எல் சி விடுமுறை காலத்து வேலூர் விஜயம் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இலக்கிய அனுபவங்கள் சிறப்பாக வாய்ந்த நேரம். அதில் ஒன்று மரபுக் கவிதைகள் வாசிக்கப்பட்ட கவியரங்கம். கவிஞர்கள் சிலர் புதுக்கவிதைகள் பற்றி மிகவும் பதட்டமுற்று வாசித்தது போல் நினைவு. யார் யார் என்று பெயர்கள் நினைவில் இல்லை. அப்துல் ரகுமான் புதுக் கவிதை உலகிற்குப் போனது குறித்து வருத்தமுற யாரோ வாசித்த ஒரு வரி அரைகுறையாய் இன்னும் நினைவில் தைத்திருக்கிறது.
ரகு, மானைக்கானக பர்ணசாலையில் விட்டுவிட்டுப் பொன் மானை நிஜ மானாய் நம்பிப் பொய் மானின் பின்னோடி ஏமாந்த கதை ரகுமானே நீ அறிவாய். ஆனாலும், ஒரு கட்டத்தில், புதுக் கவிதைகளின் மேல் ஈர்ப்பு கூடி விட்டிருந்தது. கணையாழி வாங்கியதும் முதல் புரட்டல், கவிதை பக்கங்கள் தேடித்தான். தெருவில் காய்கறி வண்டிக்காரன் போவது பற்றிய கவிதை ஒன்று வந்திருந்தது. வாசலில் இன்னின்னார் தேர்வு செய்து வாங்கும் காய்கள் பற்றிப் பேசிச் செல்லும் கவிதை (இடையே கிளுகிளுப்புக்கு ஒரு வரி வேறு!), எல்லாம் பொறுக்கி எடுத்து வாங்கிப் போனதும்,
அழுகல், சொத்தை, புழுத்தல் எல்லாம் அம்பாரமாய்க் குவி ஒரு பக்கம் கண்ணன் சாப்பிடும் மெஸ்காரன் வருவான் அத்தனையும் அள்ளிக் கொண்டு போக. என்று முடியும். அந்நாட்களில் சென்னை மெஸ் சாப்பாடு வெறுத்துப் போன ஒருவரின் வாழ்வனுபவமாக வெடித்திருக்கக் கூடும் அந்தக் கவிதை.
கணையாழியின் கடைசி பக்கங்களில் எழுத்து நடையின் வேகம், வெவ்வேறு விஷயங்கள் குறித்த சுவாரசியமான மொழி நடையில் சுஜாதா வாசகரோடு நிகழ்த்தும் உரையாடல், புதிய புதிய விஷயங்களின் அறிமுகம் எல்லாம் ஈர்த்தது. தில்லியில் சாலையோரத்தில் லேகியம் விற்பவன் பற்றி (‘சாண்டே கா தேல் என்கிறான், உடும்புத் தைலம் என்று நினைக்கிறேன்’), அரசு ஊழியர்கள் பற்றி (‘மாநகர பேருந்தில் பயணம் செய்கையில் கொஞ்சம் உற்றுக் கேட்டால் போதும், அரசு ரகசியங்கள் முழுக்கத் தெரிந்து கொண்டுவிட முடியும்’), தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றி…..விதவிதமான பொருள்களைத் தொட்டுப் பெருகிய எழுத்து நதி. ஹைக்கூ அறிமுகம் மிக எளிதாக அந்தக் கடைசி பக்கங்களில் செய்திருந்தார் சுஜாதா. ஹைக்கூ என்றால் மொக்கு. சிறிய அளவில் கவிதை, ஒரு திடுக் கருத்தை வைத்து எழுதப்படுகிறது. முதல் வரி ஒரு செய்தியைச் சொல்கிறது. இரண்டாவது வரி அதை விவரிக்கிறது. மூன்றாம் வரி தொடர்பில்லாத வேறொரு விஷயத்தைப் பேசுகிறது. நான்காம் வரி இந்த மூன்றையும் இணைத்து விடுகிறது என்று விளக்கினார்.
கியோட்டாவைச் சார்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள். மூத்தவளுக்கு இருபது வயது இரண்டாமவளுக்கு பதினெட்டு. படைவீரன் ஒருவன் எதிரிகளைக் கத்தியால் கொல்கிறான். இந்தப் பெண்களோ தங்கள் பார்வையாலேயே கொன்று விடுகின்றனர் என்ற கவிதை குறிப்பிட்டிருந்தார் (இது நினைவிலிருந்து எழுதுவது, படை வீரன் ஊர்ப்பெயரும் கொடுத்திருந்தார்).
தமிழிலும் நாம் இப்படி எழுதலாம் என்று சொல்லி, ‘மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான், மணி பார்த்தான் உட்கார்ந்தான் படுத்துக் கொண்டான், சென்னை விட்டு திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ், சீக்கிரமே இவ்விடத்தைக் கடந்து செல்லும்’ என்று அவர் ஒரு சாம்பிள் கவிதை எழுதியிருந்தார். அந்த வரியில் ஒரு சிறுகதை இருப்பதை கவனிக்க முடியும். ஜப்பானிய ஹைக்கூவில் தாம் ரசித்த கவிதை என்று அவர் குறிப்பிட்டது அபாரமான ஒன்று, ‘தொலைந்தது வீட்டுச் சாவி, நிலவை ரசிக்கலாம், திண்ணையில் இருந்து’. கணையாழியில்தான் சுஜாதாவின் ‘குருபிரசாத்தின் கடைசி தினம்’ என்ற முக்கியமான குறுநாவல் வாசித்த நினைவு. இரா நடராசன் அவர்களது அசத்தல் புனைவுக் குறுநாவல் ‘ஆயிஷா’ வாசித்து அசந்து போய் உட்கார்ந்த அனுபவமும் கணையாழி தந்ததுதான். சிறுகதைகள் வரிசையில், ம ந ராமசாமி அவர்களது, ‘யன் மே மாதா’ எனும் சிறுகதைதான் இருப்பு கொள்ளாமல் தவிக்க வைத்தது. சிரார்த்தம் எனப்படும் திவசம் செய்தலைக் கேள்விக்கு உட்படுத்தியது. மிக விரிவாகப் பேச வேண்டிய கதை அது.
(தொடரும் ரசனை…. l