நான் அறிந்த ஆர்.பி – ப.முருகன்
தோழர் ஆர். பி என்கிற தோழர்
ஆர். பெரியசாமி அண்மையில் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரது மறைவு இதழியல் துறைக்கு குறிப்பாக எழுத்துத்துறைக்கு அதிலும் குறிப்பாக மார்க்சிய எழுத்துத்துறைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. அவருடன் எனது தொடர்பும் பழக்கமும் சுமார் ஆறேழு ஆண்டுகள்தான். அது தீக்கதிர் நாளிதழில் அவர் பணிபுரிந்தவரையில்தான். ஆனாலும் அதன் பிறகும் அவருடன் தொலைபேசி வாயிலாகவும் எனது தொடர்பை தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர் சென்னையில் இருந்தாலும் என்னுடன் அவ்வப்போது அதாவது ஞாபகம் வரும்போதெல்லாம் என்னுடன் பேசுவார். நானும் வலைபேசியில் பேசிக்கொண்டேயிருந்தேன். அவர் காலமாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட தீக்கதிரில் பணியாற்றி ஓய்வுபெற்ற தோழர்கள் குறிப்பாக வி.பி (வி. பரமேஸ்வரன்),
வி.ஜெயராஜ் போன்றவர்கள் பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கிறார்களா? நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நான் ஓய்வுதியம்பெறுவதற்கான விண்ணப்பத்தை உங்களுக்கு கொரியரில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். அவரது தபாலை எதிர்பார்த்திருந்த எனக்கு அவர் மரணித்த செய்திதான் கிடைத்தது. அது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் என்னிடம் பேசியதை தோழர் ஜெயராஜிடம் பகிர்ந்து கொண்டேன். அவரும் விண்ணப்பம் வந்தால் கொடு முருகா நான் விண்ணப்பிக்கிறேன் என்று கூறினார். ஆனால் ஆர்.பியின் மறைவுச் செய்தியை ஜெயராஜிடம் கூறியதும் மிக வருத்தமடைந்தார். அவர் கூறிய தகவலை நான் வி.பியிடம் சொல்லாததற்கு காரணம் அவர் ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பதை மதுரை பி.ஆர்.ஓ அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தார் என்பதை ஆ.பி-யிடம் சொல்லிவிட்டிருந்தேன். பொதுவாகவே ஆர்.பி சக தோழர்களுக்கு உதவிடும் குணம் கொண்டவர். அதை நான் எனது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருந்தேன்.அவரது துணைவியாரும் அத்தகைய எண்ணம் கொண்டவரே! நான் 1987-ல் தீக்கதிர் நாளிதழில் பணிக்குச் சேர்ந்த பொழுது ஆ.பி. மற்றும் வீரா ஆகிய இருவரும் நான் மதுரையில் குடியேறவும் வாழ்க்கையை ஓட்டவும் உதவிகரமாக இருந்தார்கள்.நான் 1990ல் ஆசிரியர் கே.எம் (கே.முத்தையா) தலைமையில் திருமணம் முடித்தேன்.அதன் பிறகு அலுவலகத்துக்கு அருகிலேயே வீடு பார்த்து குடிவந்தேன். எனக்கு வீடு பார்த்துக்கொடுத்தது வீரா தான். ஒரு சில ஆண்டுகள் கழித்து தீக்கதிர் அலுவலகத்துக்கு நேரே பின்பக்கம் இருந்த வீட்டுக்கு குடிபுககாரணமாக இருந்தது ஆர்.பி.யும் அவரது துணைவியாரும் தான். அதன்பின் நான் வேறு வீட்டுக்கு மாறியது வரையில் நானும் எனது மனைவியும் குழந்தைகளுடன் ஆர்.பி.யின் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். ஏனெனில் அவரது வீடு தாண்டித்தான் நான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். எனது மகன்கள் இருவரையும் அவரது மகள்கள் இருவரும் படித்த பாலாஜி நர்சரி பள்ளியில்தான் சேர்த்தேன். அவரது இளைய மகள் பிரிதாதான் என் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு. சாதாரண விஷயங்கள் முதல் மருத்துவமனை உள்ளிட்ட பிரச்சனைகள் வரை அவரது குடும்பம் எனக்கு உதவியாகவே இருந்தது. இவை என் சொந்த விஷயங்கள். அதன் நீட்சியாகவே அவர் தீக்கதிர் அலுவலகத்தைவிட்டுச்சென்றபிறகும் மதுரையில் இருந்த அவரது சகோதரியின் கணவர் இறப்புக்குச் சென்றது, அவரது சகோதரிக்கு விதவை பென்ஷன் வாங்குவதற்கு உதவுவது என்றும் எனது தொடர்பு நீடித்திருந்தது. இனி அலுவலகத்தில் அவரது உறவு எனக்கும் அவருக்கும் எப்படி இருந்தது என்பது பற்றிக் கூறுகிறேன். நான் தீக்கதிருக்கு வந்த காலம் ஆப்செட் மிஷினில் தீக்கதிர் அச்சடிக்க ஆயத்தமான காலம். நான் 1987 மே 17 ல் தீக்கதிரில் இணைந்தேன். ஜூலை மாதத்தில் ஆப் செட் எந்திரத்தில் தீக்கதிர் அச்சடிக்கும் பணி துவங்கியது. தோழர் இ.கே.நாயனார் வந்து துவக்கிவைத்தார். அப்போது தீக்கதிரில் பணி செய்வதற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதையொட்டித்தான் அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் தோழர்கள் சி.செல்லச்சாமி, எஸ்.ஜி.ஜெயகோபி (பின்னாளில் குலமங்கலம் கோபி) ஆகியோர் பணியில் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு நான். செல்லச்சாமி பிரஸ்-ஐ கவனிக்கவும் கோபி ஆசிரியர் குழுவில் பணிபுரியவும் தொடங்கினர். நான் எனது விருப்பப்படியே செய்திக் களஞ்சியம் (நூலகம்) பிரிவில் பணியில் சேர்ந்தேன். அப்போது ஆசிரியர் குழுவில் வி.பரமேசுவரன், மா.பாண்டியன், ஆர். பெரியசாமி, அகுமரேசன் (அசாக்), கே.வி.செல்வராஜ், வி.ஜெயராஜ், இல.சீனிவாசன், இவர்களுடன் தோழர் ஐ.மா.பா (ஐ.மாயாண்டி பாரதி) ஆகியோரும் பணியில் இருந்தனர். பின்னர் புதுக்கோட்டை தோழர் எஸ்.ஆரோக்கியசாமி ஆசிரியர் குழுவில் இணைந்தார். இந்த காலத்தில் தீக்கதிர் இரண்டு பதிப்புகளானது. ஒரு பதிப்புக்கு வி.பியும் இன்னொரு பதிப்புக்கு எஸ்.ஆரோக்கியசாமியும் பொறுப்பாளர்களாக பணிபுரிந்தனர். அப்போது கட்டுரைகள், தலையங்கங்கள் முதல்நாளிலேயே தயாரிக்க வேண்டும். அதற்காக பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வரும் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ஆசிரியர் கே.எம், துணை ஆசிரியர்களுக்கு கட்டுரைகளை பிரித்துக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்வார்.தோழர் ஆர். பி உலகச்செய்திகள், அது தொடர்பான கட்டுரைகள், மற்றும் மார்க்சியம் தொடர்பான தத்துவார்த்தக்கட்டுரைகளை விரும்பிச் செய்து தருவார். ஏனெனில் அது அவருக்குப் பிடித்தமானதும் கூட. உலக அரசியல், பொருளாதார நிகழ்வுகளைக்கூர்மையாக கவனித்து வருபவர் ஆர். பி. அதில் அவருடைய ஈடுபாடு அலாதியானது. தோழர் கோபி ஆசிரியர் குழுவில் இணைந்த பிறகு அவருக்கு ஏற்ற ஜோடியாக அமைந்துவிட்டார். இருவரும் சர்வதேச நடப்புகள், உலகத்தின் முக்கியப் பிரச்சனையாக இருந்த அணு ஆயுத ஒழிப்பு, சமாதானம் போன்றவை குறித்து நிறைய கலந்துரையாடல்களை நிகழ்த்துவார்கள். இவையெல்லாம் வேலை நேரம் முடிந்தபிறகுதான். அல்லது வேலை துவங்கும் முன்புதான். வேலையை முடித்துவிட்டு செய்திக் களஞ்சியப் பிரிவுக்கு இப்போதைய நூலகத்துக்கு அவர்கள் இருவரும் அடிக்கடி வருவார்கள். தேவைப்படும் புத்தகங்களைக் கேட்பார்கள். சில நேரங்களில் என்னுடன் சேர்ந்து தேடுவார்கள். தோழர் ஆர்.பி பட்டதாரி என்றால் தோழர் கோபி அப்போதைய 11 ஆம் வகுப்புதான். ஆனால் அவரது தாத்தா பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தலைவர். அவரது பெயர் சிதம்பர பாரதி, அவர் செய்தித்தாள்களை படிப்பது கட்டாயம் என்று வைத்திருந்ததும் பின்னர் கோட்ஸ் மில் தொழிலாளியாகி சிஐடியுவில் இணைந்து அப்படியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததும் பீப்பிள்ஸ் டெமாக்ரசியை தொடர்ந்து படித்ததும் அவருக்கு இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது எனில் மிகையல்ல. அத்துடன் அந்தக் காலத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்ததும் எனக்கு உதவியாக இருந்தது என்று கோபி அடிக்கடி கூறுவதுண்டு. அந்தக் காலத்தில் வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்களும் ஹாலிவுட் திரைப்படங்களும் கம்யூனிச எதிர்ப்பு குறிப்பாக சோவியத் நாடு எதிர்ப்பு மற்றும் சோசலிச நாடுகள் எதிர்ப்பை கலாப்பூர்வமாக இட்டுக்கட்டிச் செய்துகொண்டிருந்ததை கோபி நுணுக்கமாக எடுத்துக் கூறுவார். இத்தகைய கட்சியின் தத்துவார்த்தப் புரிதல்தான் ஆர்.பியையும் கோபியையும் நெருங்கிவரச்செய்தது. தோழர் ஆர்.பி சர்வதேச செய்திகள் நடப்புகள் மட்டுமின்றி நமது பூமியின் உருவாக்கம் போன்ற அறிவியல் ரீதியான விஷயங்கள் பற்றியும் ஆர்வம். கொண்டிருந்தார் என்பதை அவரது கட்டுரை ஒன்றைப் படித்து தெரிந்துகொண்டேன். அந்தக் கட்டுரை எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி தீக்கதிர் சார்பில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் ஆர்.பி எழுதிய லெமுரியாக்கண்டம் பற்றிய கட்டுரையால்தான் எனக்கு அத்தகைய எண்ணம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. நாம் வெளியிட்ட மலரை முதல்வர் எம்ஜிஆர் பாராட்டிச்சொல்லியிருந்தார் என்பதுதான்.அவர்களால் எப்படி இதுபோல் செய்யமுடிகிறது என்று அவர் ஆச்சரியத்துடன் கூறினாராம். அந்த மலரின் அட்டைப்படமே அசத்தியிருக்கும் அப்படி ஒரு அட்டைப் படத்தை நமது தோழர் ஓவியர் மயன்மிக்க நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தீக்கதிர் சார்பில் வெளியிடப்பட்ட பல மலர்களில் ஆர்.பி கட்டுரை எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்ட் அகிலம் முதல் பல்வேறு தலைப்பு களில் அவை பிரசுரமாகியிருக்கின்றன. பொருளாதார விஷயங்களோ, சர்வதேச அரசியல் நிகழ்வுகளோ தமிழில் எழுதப்படும்போது எளிமையாகச் சொல்வது சிரமமாகவே இருக்கும். அதை முடிந்த வரை எளிமையாகக் கூறிட முயற்சித்திருப்பார். அந்தக் காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவில் கோர்ப்பசேவ் தலைமையில் பல்வேறு பரிட்சார்த்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. அதுபற்றி உலகம் முழுவதும் வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. அதுபற்றி ஆர்.பி மிகச் சரியாகவே யூகித்து, கோர்ப்பசேவ் செல்வது சரியான வழியல்ல என்று தமது கருத்தை கட்சிக் கிளைக் கூட்டங்களில் கூறினார். உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை தனக்கு சரியெனப்பட்டதை அழுத்தம் திருத்தமாகவே கூறுவார். வேண்டியவர்கள், நெருங்கியவர்கள், தலைவர்கள் என யாராக இருந்தாலும் தவறு எனப்பட்டால் தயங்காமல் கூறுவார். கறாராக இருப்பார். மற்ற நேரங்களில் தோழர்களிடம் கனிவாகவே நடந்துகொள்வார். எளிமையாக இருப்பது கம்யூனிஸ்ட்களின் இயல்பான குணம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் ஒரு கருத்தை உறுதியாக நம்பினால் அதில் பிடிவாதமாகவே இருப்பார். எனினும் அவரது அன்பான அணுகுமுறையை அவர் எந்நாளும் கைவிட்டதில்லை. இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். அவர் அமைதியை விரும்புகிற மென்மையான மனிதநேயர் என்பது அவரது இயல்பு. நான் அறிந்தவரையில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் ஓர் அரசியல் ஜீவிதான். ஆனால் ஆர்.பி மட்டும் அதில் விதிவிலக்கா என்ன? அதிர்ந்து பேசமாட்டார். எனினும் சரியல்லாதவற்றுக்கு அசைந்து கொடுக்க மாட்டார். ஆயினும் அனைவரையும் அரவணைத்துச் செல்லவே நினைப்பார். காட்சிக்கு எளியர். கருத்துக்கு இனியர். l