ஜெ.பாலசரவணன்
போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூடநம்பிக்கை ஒரு விஞ்ஞான உரையாடல் என்ற நூலை மருத்துவர் சட்வா எழுதியுள்ளார். அதனை நிகர் மொழி பதிப்பகம் வெளியிட்டு யுள்ளது. 44 அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் ரத்தினச் சுருக்கமான முறையில் எழுதப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமின்றி இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தப்பாடான நூல்.எவ்வாறு எனில் உடல் நலம் – மருத்துவம் சார்ந்து நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாக மட்டுமல்லாமல் தெளிவு ஏற்படுத்துகின்ற ஒன்றாக உள்ளது. அறிவியல்-போலி அறிவியலுக்கும் உள்ள தொடர்பு, தொற்று – தொற்றாநோய்கள் பற்றிய நவீன மருத்துவத்தின் பார்வை, பொதுசுகாதாரத் துறையின் தேவை, தடுப்பூசி தேவைகளும் புரளிகளும், ஆயுஸ் எனும் கூட்டுக் கலவையுடன் சேர்ந்து செல்லவேண்டுமா? நவீன மருத்துவம். சுகப்பிரசவம் குறித்த நமது புரிதல்கள், இந்திய மருத்துவச் சட்டம், நவீன மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது, அதற்கு தீர்வு மாற்று மருத்துவமா? என்பதான விசயங்களை உள்ளடக்கிய சமகால சூழலுக்கு பொருத்தப் பாடுயுடைய சாட் வா நூலினை வாசிப்பது, விவாதிப்பது இன்றைய தேவைகளுள் ஒன்றாக கருதுகிறேன்.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களின் சராசரி ஆயுள்காலம் 30 முதல் 33,ஆனால் இன்று 65 முதல் 70 வயது வரை என்றாயிற்று. அது எப்படி சாத்தியமாயிற்று, பல தொற்றுநோய்கள் – பெரியம்மை, தட்டம்மை, காலரா, பிளேக், இன்புளூயன்சா போன்றவை தடுப்பூசிகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும், சிலவற்றை ஒழித்ததுமே காரணம்.ெபாது சுகாதாரத் துறை பரவலாக்கப்பட்டதுமே.
முதலில் அறிவியல் எப்படி இயங்குகிறது என்ற புரிதல் நமக்கு வேண்டும். கேள்வி எழுப்புதல், கருதுகோள் உருவாக்குதல், சோதனை செய்தல், முடிவுகளை அறிவித்தல், முடிவுகளை தொடர்ந்து கவனித்தல். நவீன மருத்துவத்தில் ஒரு மருந்து புதிதாக முன்மொழியப்படுமானால், அதனை உலகம் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். அது உண்மையில் வேலை செய்கிறதா? இல்லையா? அதன் பக்க விளைவுகள் பற்றிய வெளிப்படையான ஆய்வுகள் நடக்கும். நடக்கும் ஆய்வுகள் அறிவியல் உலகின் பொதுச் சமூகத்தின் முன் வைக்கப்படுகிறது.(Peer review) அதுகுறித்த விவாதம் நடக்கும், மருந்து ஏற்றுக்கொள்ளப்படும். மருந்து பயன்பாட்டுக்கு வந்தபிறகும் அதில் ஆய்வு நடத்தியும் பக்க விளைவுகள் உண்டானால் அது வெளிப்படையாகத் திரும்ப பெறப்படும். ேபாலி அறிவியல் என்பது அறிவியல் மாதிரியே இருக்கும் ஒரு போலி ஆகும். மேற்கூறிய இயங்குமுறை போலி அறிவியலுக்கு கிடையாது. எப்படியென்றால் முடிவுகளை முன்னரே எடுத்துவிட்டு பிறகு ஆய்வு நடத்தி அவர்கள் விரும்பும் முடிவுகளை வலிந்து கொண்டுவருதல். தொற்றுநோய் -தொற்றாநோய் பற்றியும் பொதுத் சுகாதாரத் சேவையும் மனிதகுலத்தைக் காப்பாற்றிய கதை மீக நீண்டது. காலரா, பிளேக், இன்புளூயன்சா, பெரியம்மை, தொழுநோய், காசநோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அடைப்பான் போன்ற பலவகை தொற்று நோய்கள் மனித இனத்தை வேட்டையாடின.
ஆனால் இன்று டெங்கு, மலேரியா, எபோலா,நிபா வைரஸ், இன்றைய கோவிட் 19 போன்ற நோய்கள் மனித இனத்துக்கு இன்னும் பெரும் சவாலாக உள்ளது. நமது ஆயுட்காலம் உயர்வால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயநோய், புற்று நோய், உடல் பருமன் போன்றவை அதன் பதிலாகும். இந்த இடங்களில்தான் பொதுசுகாதாரத் துறையின் தோற்றம் மற்றும் செயல்பாடு தேவையானது. ஒரு மனிதர் நோய்வாய்ப்படுகிறார், அவருக்கு ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்கின்றார். இது வேறு. நோய் மக்களிடையே பரவாமல் முன்னரே தடுப்பது. இது வேறு. இதில் பின்னே சொல்லப்பட்டதுதான் பொதுச் சுகாதாரத்துறை எனப்படுகிறது. டெங்கு, மலேரியா காய்ச்சல் வந்தால் அதற்கு அரசுதான் பொறுப்பு. இதயநோய்க்கு அரசை நாம் பொறுப்பாக்க இயலுமா? காய்ச்சலுக்கு கிருமிதான் காரணம் என்று தெரிந்தபிறகு அது பரவாமல் தடுப்பது தனிநபரால் முடியாது. அரசால்தான் செய்ய முடியும். பரவும் நோய் மட்டுமல்ல; பரவாத நோய்களையும் முன்னரே வராமல் தடுக்க பொதுச் சுகாதாரத் துறையின் திட்டங்களில் உள்ளது. இன்று மிகப்பெரிய விவாதப் பொருளாக உள்ளது தடுப்பூசி தான். தடுப்பூசி என்ற வார்த்தையின் அர்த்தமே இதன் விளக்கமாகும். வரலாற்றில் தடுப்பூசி ஆற்றிய பங்கு அளப்பரியது. அறிவியலின் அடிப்படையில் சொல்லப் போனால் நாம் உண்மையில் வைரஸ்களின், பாக்டீரியாக்களின் உலகில் தான் வாழ்கிறோம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் வகைகளும் மனித இனத்தே காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.
தடுப்பூசியை ஏதோ வெளிநாட்டு சதி என்ற அளவில் பேசுவதும், இயற்கை படைத்ததை இயற்கை காக்கும் என்பது போன்ற வெற்று கோஷங்கள் தடுப்பூசி பற்றிய அறியாமைதான் வெளிப்படுத்துகிறது. ஒரு குழந்தை நலமுடன் வளர்வதற்கான திட்டம் தாய் கருவுருவதிலிருந்து தொடங்கி விடுகிறது.டெட்டனஸ் போன்ற தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து விடுகிறோம். பெரியம்மை தாக்கினால் மரணம் என்று இருந்த நிலை 1798 யில் ஜென்னர் கண்டுபிடித்த தடுப்பு மருந்தால் 1980 யில் இந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. ஆக எந்த அடிப்படையும் இல்லாமல் எதிர்க்கும் கூட்டத்தை நாம் எவ்வாறு அழைப்பது? அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பனை செய்ய இயலாதவர்கள் என்றுதான் ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இன்றைய கோவிட் 19 தொ ற்று காலத்தில் அது முடியாது, தடுப்பூசி செலுத்தி கொள்வது எனது தனிமனித சுதந்திரம் என்று நினைத்தால் அது தவறானது. சமூக தடுப்பாற்றல் பெற்றால்தான் பரவ கூடிய நோய்யை நாம் வெல்ல முடியும். அதற்கு ஏறத்தாழ அனைவரும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும்.
அரசு அதனை உறுதிபடுத்த வேண்டும். அலோபதி அல்லது ஆங்கில மருத்துவம் அல்லது நவீன மருத்துவம் என்று இப்படி அழைக்கப்படுகின்ற நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறையும், ஆயுஷ் என்று அழைக்கப்படுகின்ற ஆயுர்வேதா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா, போன்ற நிரூபிக்கப்படாத மருத்துவ முறையும் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்ற கருத்து அதிகம் கேட்கிறது. அதற்கான அறிவியியல் வழிமுறைகள் இல்லை என்றே சொல்லலாம். ஒரு ஐேராப்பிய மூடநம்பிக்கை. பிரிட்டன் மருத்துவக் கவுன்சில் ஹோமியோபதி மருத்துவமுறை பில்லிசூனியம் போன்ற அமானுஷ்யத்துக்கு ஒப்பானது என்று கூறுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் ஹோமியோபதி ஒரு நிரூபிக்கப்படாத மருத்துவம் என்று மருந்துகளின் அட்டைகளில் அச்சிடுமாறு பணித்துள்ளது. placebo என்று சொல்லக்கூடிய ஆறுதல் மருந்து தத்துவத்தில் இயங்கக் கூடியது. மாற்று மருத்துவம் என்று சொல்லக்கூடிய நிரூபிக்கப்படாத மருத்துவத் துறையானது மருந்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நோய் அறிதல், வைராலாஜி, அறுவை சிகிச்சை, நவீன தொழில்நுட்ப வசதி எதையுமே கொண்டது அல்ல. வெறும் அனுபவ அறிவு, பாரம்பரிய அறிவை மட்டுமே கொண்டால் அது ஏதோ ஒரு வகையில் சாய்மானத்தில் சிக்கிக் கொள்ளும். நவீன மருத்துவர்கள் மாற்று மருத்துவர்களை மதியுங்கள். அவர்கள் கையாள்வதும் அறிவியல் என்றால் எப்படி?நவீன மருத்துவம் பல செலவும் பிடிக்கின்ற ஒன்று, பல்வேறு பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. வியாபாரமயமான மருத்துவம் என்றும் அதற்கு மாற்று மருத்துவமே சிறந்தது என்ற போக்கு உள்ளது.
அப்படி மாற்று மருத்துவம் எடுத்து கொண்டவர்கள் தீராத பல நோய்களைப் பெற்று விடுகின்றனர். கை, கால் முறிவுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து நிரந்தர ஊனம் ஆனவர்கள் அதிகம். அரசு பொதுச்சுகாதார துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை காலம் காலமாக குறைத்தது, காட்ஸ் ஒப்பந்தம் சாதாரண மக்களுக்கு கிடைக்க கூடிய பொது சுகாதாரத்தை பின்தள்ளியதே ஆகும். மக்களிடையே அறிவியல் மனப்பான்மை வளரச் செய்வதும், பொது சுகாதாரத் துறையை பரவலாக்குவது வழியேதான் உடல்நலம் சார்ந்த மூடநம்பிக்கைகளையும், இன்றைய பெருந்தொற்றுக் காலத்தையும், வருகின்ற காலத்தையும் கடக்க முடியும்.
l