‘தாய்ப்பால் எனும் ஜீவநதி’ மற்றும் ‘மசக்கை’ ஆகிய இரு மருத்துவப் புத்தகங்களை எழுதிய டாக்டர் இடங்கர் பாவலனின் மூன்றாவது மருத்துவ கட்டுரைத் தொகுப்பு, ‘பேசும் காச்சக்கார அம்மன்’. “As I am suffering from fever” என்ற வார்த்தைகள் இல்லாத லீவ் லெட்டர்களே இல்லையென்று கூறலாம். ஆனால் இன்றைய சூழலில் காய்ச்சல் என்கிற வார்த்தையைச் சொல்வதற்கே பயமாக இருக்கிறது. இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் பேசும் காச்சக்கார அம்மன் கட்டுரை நூல் மிகவும் முக்கியமானது எனக் கருதுகிறேன்.
காய்ச்சல் நமக்கு பரிச்சயமானது தான். ஆனால் காய்ச்சல் காலங்களில் நாம் செய்யும் தவறுகளைக் களைய இப்புத்தகம் உதவுகிறது. நமது உடலில் காய்ச்சல் நேரங்களில் உடல் வெப்பமானது எவ்வாறு கூடவோ, குறையவோ செய்கிறது என்பதையும், அவ்வாறு கூடுவதால் நம் உடலில் ஏற்படும் உபாதைகளையும், அதற்கு நாம் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய முதலுதவிகளையும் அறிவுறுத்துகிறது. கரிசல் காட்டுப் பூமியின் வெயில் மனிதர்களின் நாட்டார் தெய்வமான காச்சக்கார அம்மனுக்கு படையல் வைக்கும் எளிய உணவான குழைந்த கஞ்சியும், மிளகு ரசமும் சுண்டைக்காய் வற்றல் படையலும் எவ்வாறு காய்ச்சல் குணமாக உதவுகின்றன என்பதை இப்புத்தகம் வழியே நாம் அறியமுடிகிறது.
பிரளய வெடிப்பிலிருந்து சிதறிய வெப்பமான பூமி உருண்டை குளிர்ந்து பின்னர் அதிலிருந்து ஒரு செல் உயிரினம் உருவானது என்பது அறிவியல். நம் உடல் 32. 7 லட்சம் கோடி செல்களாலனது. ஒரு செல் உருவாவதற்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதேபோல நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் 75% -80% தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க செல்களுக்கு இடையே உள்ள இடைவெளியும் நீரால் நிறைந்துள்ளது. எனவே உடலிலுள்ள உறுப்புகள் சரியாக இயங்குவதற்குச் சீரான வெப்பமும், சரியான அளவு தண்ணீரும் தேவை. காய்ச்சல் காலங்களில் உடலின் வெப்பம் அதிகமாவதால் உடலில் நீர் வற்றிப் போகும் சூழல் ஏற்படுகிறது. எனவே நீராகாரங்களின் உதவி தேவைப்படுகிறது.
காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே! அப்படி இருக்க நோய்க்கிருமிகளின் மூலம்தான் உடல் வெப்பமாகும் என்றில்லாமல், காலம் காலமாக நமது அம்மாக்கள் சிறிய சமையல் அறைகளில் அடைபட்டு இருப்பதால் உடல் வெப்பம் அதிகரித்து, அதிக வியர்வை உண்டாகி, அந்த வியர்வை வழியாக உடம்பிற்கு தேவையான நீர் சத்துக்கள் வீணாகி, நாள்தோறும் எரிந்து விழும் அம்மாக்களாகவும், சக்தியற்ற அம்மாக்களாகவும் நம் முன்னே நிற்கிறார்கள். நாள் முழுவதும் ஏசி அறையில் வேலை செய்து உடல் வெப்பம் குறையும் பட்சத்தில் நமது அப்பாக்களின் மூளை சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க வைக்கிறது. சுகாதாரமில்லாத பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய்க்கிருமிகளின் தாக்கத்தால் உடலின் வெப்பநிலையில் மாறுதல்களை உண்டாக்குகிறது.
98.6 டிகிரி F என்கிற உடல் மைய வெப்ப நிலையிலிருந்து 105 டிகிரி F அதிக வெப்பநிலையாக அதிகரிக்க நமது மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலாமஸ் மற்ற உடலில் உள்ள செல்களுக்கு சிக்னல் அனுப்புகிறது. ஹைப்போதலாமஸ் உடலின் ஹைகோர்ட் என்றே கூறலாம். அது கட்டளையிட்டவுடன் செல்கள் உடலில் வெப்பம் அதிகரிக்கும் வேலையை தொடங்கிவிடுகின்றன.
பொதுவாக காய்ச்சல் எல்லோருக்கும் வருவதில்லை. மழைக்காலங்களில் நோய்க்கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களும், குழந்தைகளும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களாகிய நாம் காய்ச்சலைக் கண்டு பயப்படாமல் வீட்டிலேயே சின்ன சின்ன முதலுதவிகளை எடுத்துக்கொண்டு பின்னர் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். அதற்கு உதவியாக காய்ச்சல் காலங்களில் என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், என்ன மாதிரியான முதலுதவிகள் செய்து கொள்ளலாம் என்றும் விரிவாக பேசுகிறது இந்நூல்.
காய்ச்சலுக்கு குளியல் மிகவும் அவசியம். தண்ணீர் ஒத்தடம் குழந்தைகளுக்கு காய்ச்சல் காலங்களில் மிகவும் இதமாகவும், நீரை நம் உடலில் வற்ற விடாமலும் பார்த்துக் கொள்ளும். பாட்டியின் கை பக்குவமான கஞ்சி, மிளகு ரசம் மற்றும் பழரசங்கள் போன்ற நீராகாரங்களை எடுத்துக்கொண்டு ஓரளவிற்கு காய்ச்சலில் இருந்து தங்களின் குழந்தைகளை மீட்டுக்கொண்ட பின்னர் மருத்துவரை சிகிச்சைக்காக அணுகலாம். காய்ச்சல் என்றால் ஏதோ பயந்துகொண்டு குழந்தைக்கு முதலுதவி செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என வலியுறுத்துகிறார் டாக்டர் இ.பா.
குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகளையும், குளிர்பானங்களையும் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். இது காய்ச்சல் காலங்களில் குழந்தையின் உடல் நலத்திற்கு கேடானது. நம் பண்பாட்டின் எச்சமாக நாட்டார் தெய்வங்களுக்கு படைக்கின்ற குழைவான கஞ்சியும், மிளகு ரசமும் காய்ச்சலுக்கு ஏதுவான ஒன்று என இப்போதுள்ள அலோபதி டாக்டர்கள் மத்தியில் பரிந்துரைக்கிறார் டாக்டர் இடங்கர் பாவலன்.
பொதுவாக பெண்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மருத்துவமனைகளுக்குச் செல்லமாட்டார்கள். சென்றாலும், மருத்துவரிடம் தன் உடல் உபாதைகளை விளக்கிக் கூறுவதே இல்லை. அதில் என்னதான் அவர்களுக்கு கூச்சமோ! உதாரணத்திற்கு, குழந்தைக்கு காய்ச்சல் என்றவுடன், சில படித்த பெற்றோர்களே தொக்கம் எடுப்பது, கோவிலுக்கு சென்று தண்ணீர் எறிவது போன்ற செயல்களை செய்து குழந்தைகளின் காய்ச்சலை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். பின்னர் மருத்துவரிடம் பயந்து எதையும் சரிவர கூறாமல் தகுந்த சிகிச்சையை பெறாமல் குழந்தைகள் இறந்தும் போகிறார்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை வேர்க்கடலை போல அனைவரும் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறானது. டாக்டரின் பரிந்துரையின்படி என்ன அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இப்புத்தகம். டாக்டர் இடங்கர் பாவலன் தமது நேரங்களை ஒதுக்கி அளித்த சிறந்த மருத்துவ ஆலோசனை புத்தகம் தான் பேசும் காச்சக்கார அம்மன். l
previous post