தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய பேசாத பேச்செல்லாம் என்ற கட்டுரைத் தொகுப்பை எனது பார்வையில் விவரிக்கிறேன்.என் வாழ்வில் நான் எழுதும் முதல் கட்டுரையே இதுதான். அவர் வாழ்க்கைப்பயணத்தில் பேசத் தவறிய வார்த்தைகளையும் மனிதர்களையும் பற்றியே இந்நூலில் குறிப்பிடுகிறார். இந்தப் புத்தகத்தை நான் வாசித்தபோது எனக்குத் தோன்றிய அல்லது பிடித்த கருத்துகளை முன்வைக்கிறேன். முதல் கட்டுரையான “வாய்மையும் வார்த்தையும்” என்ற தலைப்பில் தான் ஒரு பேச்சாளராகக் கடந்த பாதையையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தினார். ஒரு கல்லூரியில் பேசுவதற்குச் சென்று, அடுக்கு மொழியில் பேசக்கூடாது என்று சொன்னதால் பதட்டமடைந்து குழப்பத்தால் வயிறும் குழப்பமடைந்து பாத்ரூமுக்கு போய் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அங்கிருந்து தான் பேசாமலே மேடையைவிட்டு ஓடிவிட்டதாக கூறியிருந்தார். இந்த வரிகளை வாசிக்கும்போது எனது சிறுவயதில் நடந்த சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் புதூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அந்த ஊரில் மாரியப்பன் என்றொரு ஆசாரி இருந்தார். அவரிடம் ஊர் மக்கள் அனைவரும் தங்க நகைகளைச் செய்வது வழக்கம். அவர் நிறைய பேசுவார். அனைவரும் அவரின் பேச்சு திறமையை வியப்புடன் பார்த்தனர். அவருடன் எல்லோருமே அதிக நேரம் பேசுவார்கள் விருப்பத்துடன்.
ஒரு நாள் ஊரில் திருவிழா வந்தது. அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாவில் அரிச்சந்திரா நாடகம் போடவேண்டும் என்று முடிவு செய்தனர். அந்த வேடத்தில் வசனங்களைப் பேசி நடிக்க மாரியப்பன் ஆசாரியை தேர்வு செய்தனர். அவரிடம் சென்று, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவரும் ஒப்புக்கொண்டார். திருவிழாவும் வந்தது. அன்று அவர் அரிச்சந்திரனாக வேடமணிந்து ஒரு ராஜாவைப் போல் அழகாக வந்தார். ஊர் மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புகளோடு கூடியிருந்தனர். அவர் மேடை ஏறினார். இப்பொழுதுதான் கிளைமாக்ஸ். அவர் பேச்சைத் தொடங்கினார். அனைவரும் அவர் அரிச்சந்திரனாக வசனங்களைப் பேசி இன்று நம்மை மகிழ்விக்கப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர். அவர் பேச ஆரம்பித்தார். இங்கு கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். என்னால் இந்த வசனத்தை இன்று பேசி நடிக்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறிவிட்டு ஓடிவிட்டார்.
அடுத்ததாக பயணத்தின் பாதையில் என்ற கட்டுரையில் தான் பஸ் ஸ்டாண்டில் தங்கியதும் ஊர் ஊராக பயணம் செய்த அனுபவத்தையும் விவரித்துள்ளார்.அன்றைய பஸ் நிலையங்களின் அழகையும் நினைவுகளையும் பதிவுசெய்துள்ளார்.. பஸ் நிலையங்கள் இப்போது சீரழிந்து கிடக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார். தன் கல்லூரிக் காலத்தில் பஸ் நிலையம் ரம்யமாகத் தோன்றியது என்றும் தோழர்களோடு தத்துவ விசாரம் எல்லாம் பேசி முடிக்கும் இடமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். தான் உறங்கும் இடமாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். அவரது பள்ளிக்காலத்தில் கிராமத்துக்கு வந்த முதல் பஸ் ஜெயவிலாஸ் கம்பெனியாரின் பஸ். அதில் சாத்தூருக்கு பள்ளித் தோழர்களோடு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பியதை எழுதியிருந்தார். என்னுடைய வாழ்வில் ஜெயவிலாஸ் பஸ் ஞாபகம் வருகிறது. எங்கள் புதூரில் இருந்து அருப்புக்கோட்டை வரை செல்லும் ஜெயவிலாஸ் பஸ்சில் என் அம்மாவுடன் அருப்புக்கோட்டைக்குப் பயணம் செய்வேன். அந்தக்காலத்தில் அருப்புக்கோட்டைக்கு பல பஸ்கள் இருக்கும். இரண்டு பஸ்களைப் போக விட்டுவிட்டு, அடுத்துவரும் ஜெயவிலாஸ் பஸ்களில் ஏறிச் செல்வது அந்த ஊர் மக்களுக்கு வழக்கம். அந்த பஸ் மிக வேகமாக இயங்கும். அந்தச் சிறு வயதின் மகிழ்ச்சியின் பகுதியாக ஜெயவிலாஸ் பஸ் எனக்கும் இருந்தது. ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தபடி அம்மாவுடன் சந்தேகம் கேட்டுக் கொண்டே செல்வேன். அந்த பஸ்ஸில் மிகுந்த சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கும். மனதிற்கு ஒரு குஷி. சிறுவயதில் எனக்குப் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். இந்த பஸ் போய்க்கொண்டே இருக்க கூடாதா.. அதற்குள் ஊர் வந்து விட்டதே என்று கவலை தோன்றும். அதே கட்டுரையில் கரிசல்காட்டு பஸ் ஸ்டாண்டுகளில் கிடைக்கும் பலகாரம் பால்பன், முட்டைக்கோஸ் என்று நினைவைப் பதிந்துள்ளார். எனக்கும் அவை பரிச்சயமான ஒன்றுதான். தொண்ணூறுகளின் குழந்தைகள் நாங்கள் அதை உண்டு மகிழ்ந்த கடைசித் தலைமுறை என்றே நினைக்கிறேன். இன்று தள்ளுவண்டிகளில் பிரைட் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ் இவைதான் நம் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. அவர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது.
ஓடிய கால்கள் என்ற தலைப்பில் தன் தம்பி கோணங்கியைப்பற்றி எழுதியிருக்கிறார். கோணங்கி இரவு வீடு திரும்பவில்லை. எப்போது மே பள்ளிக்கூடம் விட்டதும் வீடு திரும்பும் ஆள் இல்லை. அவர் தாங்கள் வசித்த தெரு தெற்குத் தெரு என்று குறிப்பிட்டிருந்தார். மூன்று பிரிவுகளாக இருந்து அதில் கிழக்குத் தெரு என்று அழைக்கப்பட வேண்டிய தெரு பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார். திசைகளின் அடையாளத்தைக் கூடத் தலித் மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லாத கிராமம் என்று இப்போது புரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் வளரும் போது அவை இருந்தாலும் எங்கள் வீட்டில் என் பாட்டி தாத்தா அப்படிப் பிரித்துப் பார்த்தது இல்லை. இதில் நான் பெருமை கொள்கிறேன். நான் அப்படிப் பார்த்து வளர்ந்தவள். நாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். ஆனாலும் எல்லோரும் எங்கள் வீட்டில் உறவுகளாக வந்து செல்வர். இப்போதும் ஊரும் சேரியும் தனித் தனியாகத்தான் நிற்கிறது. மாற வேண்டும் என்று நினைக்கிறேன். தாத்தா வீட்டில் இருவரும் அதாவது தமிழ்ச்செல்வனும் கோணங்கியும் அம்மா அப்பாவை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். தாத்தா வீட்டில் இருக்க வேண்டிய சூழல். தம்பி கோணங்கி நண்பர்கள் வீட்டில் தங்கி விடுவார், அவரைத் தேடி தன் அத்தை கால்நோக அலைவார் என்று உருக்கமான வரிகள் ஆக இருந்தது. வீட்டில் விதவையாக, தன் தம்பிகளின் பிள்ளைகளை வளர்க்கும் தாயாக நின்றுவிட்டார் அத்தை என்கிற வரிகள் என்னை கொஞ்சம் துயரப் படுத்திய வரிகளாக உணர்கிறேன். கோணங்கியை கூப்பிடச் சென்றால் நீ போய் என் சட்டையையும் டவுசரையும் பையையும் எடுத்துவா இங்கிருந்து பள்ளிக்குச் செல்கிறேன் என்று சொல்வாராம். படித்துப் புன்னகைத்தேன். அவர் வீட்டிற்கு செல்லப் பிள்ளையாகவும் இருந்துள்ளார். அப்பா அம்மாவைத் தேடி அழக்கூடாது என்பதற்காக கோணங்கிக்கு நிறைய காசு கொடுப்பார்கள். தன்னை பெரியபிள்ளை அழ மாட்டான், காசு கேட்க மாட்டான் என்று பொறுப்பான பையனாக மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். ஆமாம். வீட்டுக்கு மூத்த பிள்ளையை அப்படிச் சொல்லிச்சொல்லி வளர்க்கிறது உண்மைதான். ஆனால் மூத்த பிள்ளைகள் அவனுக்கு மட்டும் கொடுக்கிறே அவனை மட்டும் உபசரிக்கிறே என்று சண்டை இடுவது வழக்கம். ஆனால் உண்மை வயதில் மூத்தவன் புரிந்து கொள்வான் என்ற எதிர்பார்ப்பு.
மரணத்தின் நிழலில் என்ற கட்டுரையில் அம்மாவின் மரணத்தில் கதாசிரியரின் மனவேதனையைக் கொட்டியிருந்தார். மரணம் எல்லோருக்கும் அப்படித்தான் வந்துசேரும் என்றாலும் நமக்கு என்று வரும்போது இப்படி வந்துவிட்டதே என்று பதைபதைக்கிறது.. அம்மா ஏழு பிள்ளைகளைப் பெற்று உருக்குலைந்த உடம்புடன் என் கண்முன்னே படுத்து இருக்கிறார் என்று அந்த வரிகளில் வலியை வெளிப்படுத்தியிருந்தார் உண்மையாகவே அந்த வரிகளைப் படிக்கும் போது கண்களில் நீரை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எனது மனக் குமுறலை அடக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு, அம்மாவிடம் நான் சரியாக பேச வில்லையே… நான் பேசியதை ஒரு தாளில் எழுதி விடலாமே.. என்று குறிப்பிடுகிறார். இதை நாம் எல்லோரும் சரி பார்த்துக் கொள்ளும் இடமாக நான் பார்க்கிறேன். நான் என்னை ஆறுதல் படித்துவிட்டு படிக்கத் தொடங்கினேன். தன் தாய் ஒரு வயது பெண் குழந்தையை பறிகொடுத்தவள் என்று எழுதியிருந்தார். நான் பிறக்கும்முன்னால் இறந்துபோன அக்கா என்று அடுத்து ஒரு வரியைக் கொடுத்தார். அக்கா இருந்திருந்தால் தப்பு பண்ணினால் என்னை இங்கே வாடா ராஸ்கல் என்று காதைப்பிடித்து திருகி இருப்பாள். அக்கா என்று ஒருத்தி இல்லையே. அக்காவைப் பெற்ற தம்பிகள் எல்லோரும் பெருமைக்குரியவர்கள் தான். பெண்களைப்பற்றி அவ்வளவு அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கதாசிரியர் தமிழ்ச்செல்வன்.
அக்ரஹாரத்தில் காஞ்சான் என்ற தலைப்பில் அக்கிரகார வீடுகளையும் அங்கு வசித்த மனிதர்களையும் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் தன்னை நடத்திய விதம் பற்றி விவரித்திருந்தார். அதைப் படிக்கும்போது தொட்டால் தீட்டு என்கிற அவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று எண்ணுகிறேன். துளியோ பெருவெள்ளமோ என்ற கட்டுரையில், காதல் மிகுந்த தம்பதிகளின் வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே மற்றொரு பெண் வருகிறாள். ஆனாலும் மனைவி கணவனிடம் சமாதானமாகி தங்கள் காதலை உணர்த்துகிறார்கள் என்று கதாசிரியர் எழுதியிருந்தார். சரி தவறு என்பதைவிட அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
இழுத்துச் சென்ற கவிதை என்ற தலைப்பில் தான் ஒரு கவி என்று நினைத்து, கவிதைகளை எழுதுகிறார் இசக்கிமுத்து. அதை ஆசிரியரிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். அந்தக் கவிதைகளை புத்தகமாக பதிப்பிக்குமாறு கேட்கிறார். அவர் எழுதிய கவிதைகள் பெரிதாக பேசும்படி இல்லை. அதேபோல் கதாசிரியரும் தானும் கவிதை எழுதினேன். ஆனால் நான் எழுதுவது கவிதை இல்லை என்று புரிந்துவிட்டது. நிறுத்திவிட்டேன் என்று கூறுகிறார் ஆனால் இசக்கிமுத்துவிற்கு அந்த விஷயம் புரியவில்லை. அவருக்கு யாரும் சொல்லவும் இல்லை. இசக்கிமுத்துவின் வாழ்க்கையில் அவர்கண்ட கவிதைக் கனவு பலிக்கவே இல்லை.
பெருவழியில் புதைகுழிகள் என்ற கட்டுரையில் வரும் கதாசிரியரின் நண்பரான ஜோதி விநாயகம் தத்துவ ஆசான்களுடைய புத்தகங்களைத் தேடித்தேடி படிப்பார். தீவிரமான வாசகன். அவருக்கு ஆனால் அவர் வறுமையின் காரணமாக சேலை வியாபாரம் செய்யலானார். இதைப் படிக்கும்போது வறுமை, மனிதனின் திறமைகளை விழுங்கி விடுகிறது என்று தோன்றுகிறது. அவர் புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்று அறிந்து அவரைப் பார்க்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் கதாசிரியர். சாரி மன்னிச்சிடுங்க என்று முடித்தா கதாசிரியரின் மனிதநேயம் மலைக்க வைத்தது.
கண்ணிலே நீர் எதற்கு என்ற தலைப்பில் காரணம் இன்றி மனம் துக்கமடைந்து கண்ணில் நீர் பெருகி வழிவதை எழுதியிருந்தார். எனக்கும் சிறு வயதில் எனது உறவினர்கள் என்னிடம் கேலியாகப் பேசினால் உடனே அழுது விடுவேன். எதனால் என்று அப்போது என்னால் உணர முடியவில்லை. மனதின் ஓரத்தில் இருக்கும் ஏக்கங்களின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன். இப்போதும் அது தொடர்கிறது. பித்தாகி பேதையாகி என்ற தலைப்பில் மனப்பிறழ்வுக்கு ஆளானவர்களின் பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பின்தொடர்வது எல்லோருக்குமே ஒரு அவசியம் இருக்கிறது. ஆனால் நமக்கு வேண்டியவர்கள் அப்படி ஆகும் போது எத்தனை வலியும் வேதனையும் உண்டாகும் என்று விவரித்துள்ளார் கதாசிரியர் தமிழ்ச்செல்வன். எனக்கு நடந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் எனது ஸ்கூட்டியில் எனது இரு பிள்ளைகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கிவிட்டேன். அப்பொழுது என் தலையில் பலமாக அடிபட்டு விட்டது. யாரோ ஒருவர் வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டார். மருத்துவமனையிலிருந்து எனது கணவருக்கு போன் செய்து இதுமாதிரி விபத்தில் சிக்கி விட்டேன் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று போன் செய்து சொன்னேன். அவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து இருவரும் வீடு திரும்பினோம்.
வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளை சரியாக பள்ளியில் சென்று சேர்த்துவிட்டேனா, பிள்ளைகள் நன்றாக, இருக்கிறார்களா, இந்த இரு வரியையும் அன்று முழுவதும் நான் அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன் என்று சொன்னார். அதன்பிறகு சிகிச்சை அளித்து நான் பழைய நிலைக்கு திரும்பினேன். திரும்பியபிறகு என்னிடம் அவர் கூறிய வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்துவிட்டது. ஒருவேளை சுய நினைவு திரும்பாமலே நீ இருந்து விட்டால் இந்தப் பிள்ளைகளை வைத்து நான் என்ன செய்வது? உன்னை எப்படி நான் காப்பாற்றுவது என்று அவர் கலங்கி விட்டார். அதை நினைக்கும்போது இப்போதும் பயமாக இருக்கிறது.
நினைவில் வழியும் கோப்பைகள் இந்தக் கட்டுரையில் கதாசிரியர் ராணுவத்தில் நடந்த அனுபவங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார். தன் வாழ்வில் தோழியாக வந்த மீரா ஆரம்பித்து வைத்த கோப்பை பழக்கத்தை மிகவும் சுவாரசியமாக படிக்க வைத்தது .நட்பும் பிரிவும் அங்கே பிரதிபலித்தது. நட்பால் தொடங்கிய இந்த மதுப்பழக்கத்தை மற்றொரு நட்பு அன்புக் கட்டளை விடுத்து முடித்து வைத்ததாக அதில் எழுதியிருப்பார். மிக அருமையான வரிகளாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இந்த கட்டுரையில் எனக்கு 1947-இல் தேசப்பிரிவினை கதை புலப்பட்டது. வட இந்தியப் பெண்களுக்கு நடந்த வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் கொலைகளும் பதிவு செய்து இருந்தார். எனக்கு அதைப் படித்தவுடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. தூங்காத கண்கள் என்ற கட்டுரையில் தூக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று என்றும் அதிலும் குழந்தைகள் தூங்கும் போது பேரழகு என்ற வரி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. கதாசிரியர் சொல்வது போல் எனக்கு அதை ரசிப்பது பிடிக்கும். அதேசமயம் குழந்தையை அடித்துவிட்டாலோ அல்லது முரண்டுசெய்து அழுதுவிட்டு தூங்கினாலும் பாவம் தூங்கி விட்டாள் என்று பார்த்துக்கொண்டேயிருப்பேன். கதாசிரியர் தான் திருப்பூரில் பஸ்ஸில் பயணம் செய்யும்போது இரண்டு பையன்கள் கையிலும் கால்களிலும் சாயக்கரைகளுடன் மடியில் பையை வைத்து அதன்மேல் தலைவைத்து தூங்குவதுபோல் விவரித்தார். காட்சியாக கண் முன்னே வருகிறது. யார் பெற்ற பிள்ளைகளோ இவர்கள் இந்த சிறு வயதில் உழைப்பாளிகளாக வந்து விட்டார்களே என்று வெளிப்படுத்தி இருந்தார். தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருந்தார். தன் மகனின் ஞாபகம் வந்ததுத் தலையை கோதிவிட்டு முதுகை தட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக எழுதியிருந்தார். கண்களில் அன்பும் பரிவும் தெரிந்தது.
நெருப்பின் வண்ணங்கள் என்ற தலைப்பில் தானும் தன் நண்பர் துளசிதாசனும் பயணம் செய்யும்போது மறைந்துகொண்டிருக்கும் பொருட்கள் பற்றி பேசியதை நினைவுபடுத்தினார். குறிப்பாக உளுந்து உடைக்கும் திருகைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனது பாட்டியுடன் திருகையில் உளுந்து போடுவது ஞாபகம் வருகிறது. எனது பாட்டி திருகையை மெதுவாகச் சுற்றுவார்.
நான் லாவகமாக உளுந்தைப் போட்டுக்கொண்டே இருப்பேன். அவர் கையை தட்டாத வண்ணம் போட வேண்டும். அது எனது வேலை. என்னை எப்போதும் பாட்டி பாராட்டுவார். அப்படி சொல்லிச் சொல்லியே என்னை அவர் வேலை வாங்கியிருக்கிறார். அப்படி அவர் என்னை என்ன சொன்னார்? உன்னை மாதிரி அழகாக லாவகமாக உளுந்து போடுவதற்கு இந்த ஊரில் ஆளே இல்லை என்று சொல்வார். அவர் அப்படிச் சொல்லும்போது அந்த வயதில் அது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. நானும் ஆர்வமாக அவருடன் வேலை செய்வேன்.
விதவிதமான அடுப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவை அனைத்தும் எனக்கு பரிச்சயமானதுதான். பெண்கள் முன்பு சமைக்கும் போது மனக்கலப்பு இருந்தது என்று குறிப்பிடுகிறார். உண்மைதான்! ஒரு பெண் தன் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சமைக்கும் போது, அவர்கள் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்றும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்றும், ஒரு எண்ணம் மேலோங்கி இருக்கிறது. பொதுவாக பெண்கள் சமைக்கும்போது காய்கறிகள், உப்பு, பருப்பு அனைத்தையும் போட்டு விட்டு கடைசியில் கொஞ்சம் அன்பையும் சேர்த்துப் போட்டுச் சமைக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது என்று எழுதுகிறார்.
பிணியின் கனல் இந்த கட்டுரையில் தான் மஞ்சள் காமாலை நோயினால் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றதையும் அவர் விவரித்த விதத்தையும் வாசித்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.தான் குணமாகி விட்டதால் மருத்துவருக்கு ஆள் இல்லாமல் போகுமே என்று கவலைப்பட்ட ஒரே நபர் இவராகத்தான் இருக்கும். நீள் துயில் நிலம் தேடி என்ற கட்டுரையில் சிமென்ட் ஜல்லி கொத்தனார் காண்ட்ராக்டர்களோடு மல்லுக்கட்டி கடனாகப் பணம் புரட்டி சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிப் பால் காய்ச்சி விடுகிறார்கள் சிலர் என்று குறிப்பிட்டார். இதைப் படிக்கும்போது நான் வீடு கட்டியது எனக்கு ஞாபகம் வந்தது.
மரணத்தைப் பற்றி அவர் விவரிக்கும் விதம் சாதாரணமாக ஒரு ஹோட்டலில் அமர்ந்துகொண்டு ரெண்டு இட்லி ஒரு வடை என்று நாம் ஆர்டர் செய்வது போல எளிமையாக இருக்கிறது. வாசித்துப் பாருங்கள் இன்னும் ஆழமான நம் மனசாட்சியை கிளறுகிற சில பகுதிகளும் இருக்கிறது. கதாசிரியரின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லா இடத்துக்கும் சென்று பார்த்துவிட்டு வந்து விட்ட உணர்வு நிலைக்கிறது. எளிமையான எழுத்து நடை.. இந்தக் கட்டுரைகளைப் படித்து முடித்ததும் எனக்கு ஒன்று தோன்றியது. அதை நான் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நான் சிறுவயதில் இருந்தே தகப்பன் இல்லாமல் வளர்ந்த குழந்தை.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது எனக்கு ஒரு தந்தை கிடைத்து விட்டதாகவே உணர்கிறேன். எனது தந்தை இந்தக் கட்டுரையில் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் அழ வைக்கிறார். நானும் எனது இணையரும் சில நேரங்களில் பேசிக்கொள்ளும் போது எனது இணையர் ஒரு விஷயத்தைச் சொல்வார். பொதுவாக உணர்ச்சிபூர்வமாக மிகவும் தத்துவார்த்தமாக பேசுபவர்கள் அனைவருக்கும் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு இருக்கும் என்று கூறுவார். அது இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் போது 100% உண்மை என்று எனக்குப் பட்டது. இனி எனது தமிழ்ச்செல்வன் அப்பாவோடு நிறையப் பேசுவேன் பேசாத பேச்செல்லாம் பேசுவேன்… நன்றி. l
previous post