குழந்தைகள் இலக்கிய உலகில் தொடர்ந்து பயணித்துவரும் கொ.மா.கோ. இளங்கோ அவர்களின் “பச்சை வைரம் என்னும் சிறுவர் புதினத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குச் சில திங்களுக்கு முன்னர்தான் அவருடைய சஞ்சீவி மாமாவைப் படித்திருந்தேன். குறும்புதினமாக அமைந்திருந்த அந்நூல் சஞ்சீவி மாமாவாகச் “சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய மகாகவி பாரதியைப் பார்க்கமுடிந்தது.
பச்சை வைரத்தில், மோதி மிதித்து விடு பாப்பா; அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாடிய பாரதியைத் தீயரை வீழ்த்தும் வீரச்சிறுமி பிளிகியாக, மீசையில்லாப் பாரதியாகக் பார்க்க முடிகிறது.
பகைவன்தான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் எனத் தீர்மானிக்கிறான்; பகைவன் எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ அதே ஆயுதத்தை நீயும் எடு என்பன போன்ற மாவோவின் போரியல் உரிமையியல் கோட்பாட்டை பிளிகி என்னும் சிறுமியைத் துப்பாக்கி ஏந்த வைத்து நிலைநாட்டுகிறார்.
அதன்மூலம், நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று தேவாரம் பாடிய திருநாவுக்கரசரின் எண்ணத்தைப் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகப் பதித்துவிடுகிறார். இதுவே இப்புதினத்தின் நோக்கமாகவும் அமைந்திருக்கிறது. நல்ல நோக்கத்திற்காக அவருக்குப் பாராட்டுகள்.
கதையின் தலைவி பிளிகி 13 அகவை நிறைந்தவள்; மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டில் கோலா காடுகள் அமைந்திருக்கும் பகுதியில் ஒட்டம்பா என்னும் சிற்றூரில் பிறந்தவள். எபோலா நோய்த்தொற்றினால் அவளின் பெற்றோர் இறந்துவிடுகின்றனர். அதனால், அந்நாட்டின் மசாகா நகரத்தில் மோராம்மாவினால் நடத்தப்பட்டுவரும் பட்டுக்கூடு என்னும் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறாள். நான்கு ஆண்டுகள் அந்தக் காப்பகத்தில் அவள் வாழ்கிறாள். அந்த நான்கு ஆண்டுகளில், ஆப்பிரிக்க மக்களின் துன்பம் மிகுந்த அடிமை வாழ்க்கையை கொஞ்சங்கொஞ்சமாக மோராம்மா வாயிலாக அறிந்துகொள்கிறாள்.பின்னர், அந்த நாட்டின் புன்ஸ் தீவில் சஹீது நாடகப் பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகின்ற சஹீது என்பவருக்குப் பிளிகி தத்துக்கொடுக்கப்படுகிறாள். அங்கே விடுதலைத் திருநகர் என்னும் நாடகத்தில் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க அடிமைகளுக்கு விடுதலைப் பெற்றுத் தருகிறன்ற மர்சூ என்னும் வீரப்பெண்ணாக நடிக்கிறாள். நாடகத்தைப் பார்த்த அமைச்சர் அடிமை விடுதலை நாளில் அந்த நாடகத்தை நடத்த விரும்புகிறார். அதன்படியே நடத்த முடிவெடுக்கப்படுகிறது.
இதற்கிடையில், அந்தத் தீவில் மருஎன்னும் சிறுவன் காணாமல் போகிறான். அதைப்போலவே, பிளிகியும் ஏமாற்றப்பட்டுக் கடத்தப்படுகிறாள். அந்தத் தீவில், தித்தி என்பவள் குழந்தைகளைக் கடத்தி அடிமைகளாகப் பிற நாடுகளுக்கு விற்கிறாள் என்பது பிறகுதான் தெரியவருகிறது.
பிளிகி தானும் தப்பித்து மருவையும் மீட்டுக் கடத்தலில் ஈடுபட்ட தித்தி கூட்டம் பிடிபட உதவுகிறாள். தப்பித்து வந்தவள் மீண்டும் நாடகத்தில் நடிக்கிறாள். நாடகம் இனிதே நிறைவுபெறுகிறது. விடுதலையின் அடையாளமாக விளங்கும் இலவ மரத்தைச் சுற்றிக் காப்பகக் குழந்தைகள் கைகோத்து நின்றும், அம்மரத்தை அணைத்தும், முத்தமிட்டும் மகிழ்கிறார்கள். இதுதான் கதை. இந்தக் கதையைச் சிறார்களுக்குச் சிலிர்ப்பூட்டும்வண்ணம் படைத்திருக்கிறார்.
இந்தக் கதையில், குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பிடித்தமான,
மரங்கள், காடுகள், ஆறுகள், மலைகள், மழை, திடீர் மழை என இயற்கை, சிறுவர்கள்போல் துள்ளி விளையாடுகிறது;
இறகுகளைத் தருகின்ற தேன்சிட்டு இருக்கிறது;
உயிர்பெற்று உயிர்மறையும் மரச்சிலையின் கதை இருக்கிறது;
தங்கப்பழம் காய்க்கின்ற ஒரு மரத்தின் கதை இருக்கிறது;
300 ஆண்டுகள் பழைமையான மரப்பட்டையிலான மரச்சட்டை இருக்கிறது;
துன்பம் நிறைந்த அடிமை வாழ்க்கையை நினைவுபடுத்தும் கல்குண்டு இருக்கிறது;
நம்நாட்டு முதுமக்கள் தாழிபோல் நிலவறை இருக்கிறது;
தப்பலப்பா என்னும் ஆப்பிரிக்க கோதுமை ரொட்டி இருக்கிறது;
புர்…புட்… பட்.. என்று ஒலியெழுப் பிக்கொண்டே செல்லும் தானியும் (ஆட்டோ), ஃபோடா ஃபோடா என்னும் சிற்றுந்தும் இருக்கின்றன;
ஆடு மேய்க்கும் சிறுவனின் வீரக் கதை இருக்கிறது;
விடுதலைத் திருநகர் என்னும் வீர நாடகம் இருக்கிறது;
வனத்தைக் காப்போம் என்ற குறும்படம் இருக்கிறது;
அழகான கவிதை இருக்கிறது;
பசிமா என்னும் மனிதக் குரங்கு இருக்கிறது;
மோம்கா, மரு, மெஸிஸி, சேசே போன்ற குட்டிப் பசங்க ஆட்டம் போடுகிறார்கள்;
கதைசொல்லிகோமாளி மாமா கதை சொல்கிறார்;
மோராம்மா, சஹீது, மங்காரா அத்தை போன்ற நல்லவர்கள் இருக்கிறார்கள்;
தித்தி என்னும் தீயவளும் இருக்கிறாள்;
மழையோடும் மரங்களோடும் பழகக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம் என்னும் முழக்கம் இருக்கிறது;
குழந்தைகள் மீதான அன்பும் அக்கறையும் இருக்கின்றன; இவற்றுடன் எண்பது அடி உயரமுள்ள இலவமரம் ஒன்று கதை நடுவமாகத் திகழ்கிறது; பச்சை வைரமாக ஒளிர்கிறது. அம்மரம் தன் காய்களை வெடித்துப் பஞ்சு வைரங்களைத் தூவி மரங்களோடும் மழையோடும் பழகி வாழக் குழந்தைகளை வாழ்த்தி மகிழ்கிறது.
இவ்வளவையும் இனிமையாகச் சேர்த்துப் புதினத்தைச் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் முன்நகர்த்திச் சென்று மகிழ்வாக முடிக்கிறார்.எந்தவொரு காட்சியைப் பார்க்கும்போதும், படிக்கும்போதும் இளங்கோ அவர்களின் கண்களுக்கு நல்லவை மட்டுமே தெரிகின்றன. எல்லாமும் நல்லவையாகவே தெரிகின்றன. குழந்தைகளின் கண்களுக்கு மட்டுமே இது சாத்தியம். தோழர் இளங்கோ அவர்களின் கண்கள் மட்டுமல்ல, அவருடைய உள்ளமும் குழந்தை உள்ளம்தான். அதனால்தான், அவரால் இதுபோன்ற இனிமையான நூல்களைத் தொடர்ந்து தர முடிகிறது.
பட்டுக்கூட்டில் ஒரு பச்சை வைரமாகப் பிளிகியைப் படைத்து இந்தச் சிறுவர் புதினத்தைப் படைத்த கொ.மா.கோ. இளங்கோ அவர்களுடைய தொடர்முயற்சிக்கும் வெற்றிக்கும் சிவப்பு மாணிக்க வாழ்த்துக்கள்.
previous post