அறிவியல் வளர்ந்த வரலாறு பற்றி ஏராளமான வரலாற்று நூல்கள் உண்டு அவற்றிலிருந்து வேறுபட்ட,தனித்த சிறப்பு பெற்ற நூலாக அறிவியல் அறிஞர் ஜெ.டி.பெர்னால் எழுதிய “வரலாற்றில் அறிவியல் “திகழ்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆண்டு வாரியாக வரிசையாகப் பட்டியலிட்டு விளக்குகிற வரலாறுகள் உள்ளன. குறிப்பிட்ட அறிவியல் கண்டுபிடிப்பு, படிப்படியாக எவ்வாறு வளர்ந்து இன்றுள்ள நிலைக்கு வந்தது என்று கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துக்களை மையமாகக் கொண்டு கூறப்படும் வரலாறு மற்றொரு வகை. இப்படிப்பட்ட வரலாறுகள் அனைத்தும் பயனுள்ளவை; எனினும் பெர்னால் நூல் சமூக வளர்ச்சி வரலாற்றுடன் இணைந்தாக நிகழ்ந்த அறிவியல் வளர்ச்சி வரலாற்றை விளக்குகிறது.
மார்க்ஸ் முதலாளித்துவத்தை ஆராய்ந்த வழிமுறையில் அறிவியல் நிகழ்வை பெர்னால் ஆராய்ந்துள்ளார். ஆதிகால சமுதாயத்திலிருந்து துவங்கி, அடிமை சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம் என நீண்ட கால வளர்ச்சிக்கு பிறகு தற்போதைய முதலாளித்துவ சமுதாயம் உருவெடுத்த வரலாற்றை மார்க்ஸ் விளக்குகிறார். இதேபோன்று சமுதாய வளர்ச்சிப் போக்கும் அத்துடன் இணைந்ததாக அறிவியல் வளர்ந்த விதத்தையும் ஆய்வு செய்து, ஒரு நிலைத்த படைப்பினை அளித்துள்ளார் பெர்னால்.
சமூகத்தின் தேவைகள் அறிவியல் வளர்ச்சியாக பரிணமித்த நிகழ்வுகளை நான்கு தொகுதிகளாக ஜெ.டி.பெர்னாலின் “வரலாற்றில் அறிவியல்” நூல் விரிவாக விளக்குகிறது. இதில் முதல் தொகுதியை மையமாக வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சோழிங்கநல்லூர் கிளை சார்பாக நடந்த வாசகர் வட்ட கூட்டங்களில் பேராசிரியர் வி. முருகன் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.அறிவியலின் அனைத்துப் பரிமாணங்களையும் அறிந்திட, ஜெ.டி.பெர்னால் கருத்துக்களை உள்வாங்கிட வேண்டும். அதற்கு இந்த நூல் பெரிதும் துணை புரிகிறது. தமிழக வாசகர்களுக்கு ஒரு பெரும் சேவையை பேராசிரியர் வி.முருகன் ஆற்றியுள்ளார்.
அறிவியலில் சிறந்து விளங்கிய மாமனிதர்கள் தங்களுடைய அறிவுத் திறமை காரணமாக அறிவியலில் பல முன்னேற்றங்களை சாதித்தனர். இயற்கையின் பல ரகசியங்களை வெளிக் கொணர்ந்தனர். மார்க்சியம் அறிவியலை வரலாற்று ரீதியாக உருவான ஒன்றாக பார்க்கிறது. அதாவது ஒவ்வொரு காலத்திலும் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற அறிவியல், மனிதர்களின் உற்ற தோழனாக பங்காற்றியுள்ளது.
ஏங்கல்ஸ் குறிப்பிட்டார் “ஒரு சமூகம் ஒரு தொழில்நுட்பத்தின் தேவையை உணர்கிற போது அந்தத் தேவை அறிவியலை முன்னெடுக்க உதவுகிறது”. சமூகம் உணர்கிற ஒரு தேவை, பத்து பல்கலைக்கழகங்களை விட அதிகமான அளவில் அறிவியலை முன்னெடுத்துச் செல்கிறது என்பது ஏங்கெல்ஸின் அற்புதமான சித்தரிப்பு.
எனவே, சமூகத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அறிவியல் வளர்ச்சியும் பயணித்து வந்துள்ளது.தொன்மைக்கால சமூகங்களில் விவசாயம் வளர்ந்த வளர்ச்சியை பெர்னால் விளக்குகிறார்.சமூகத்திற்கு உணவு தேவை அதிக அளவில் உணரப்பட்டது. இந்த உந்துதலால் விவசாயம் வளர்ச்சி கண்டது. இதன் தொடர்பாக, மனிதர்களுக்கு எப்போது விதை விதைக்க வேண்டும்? எப்போது அறுவடை செய்ய வேண்டும்? என்கிற கேள்விகள் எழுந்தன. இந்த தேவைகள் நாட்காட்டி கண்டுபிடிக்க இட்டுச்சென்றது. நாட்காட்டி கையாண்டதன் தொடர்ச்சியாக வானில் நிகழும் நிகழ்வுகளை ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக வானவியல் வளர்ந்தது. இப்படியாக சங்கிலித்தொடர் போன்று பல அறிவியல் வளர்ச்சிகள் ஏற்பட்டன. இந்த வளர்ச்சிப் போக்கினை ஆங்கில நூலில் பெர்னால் விவரித்துள்ளார். அதனை மிக எளிமையாக பேராசிரியர் வி. முருகன் இந்திய எடுத்துக்காட்டுகளுடன் சுவாரசியமாக விளக்குகிறார். பழைய கற்காலம், கிரேக்க-ரோமானிய நாகரிக காலங்களில் வளர்ந்த அறிவியல் அரிய ஆராயச்சித் தகவல்களுடன் விளக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவ காலம் வரை அறிவியல் வளர்ச்சியை இந்த முதல் தொகுதி விளக்குகிறது. தொன்மை கால தத்துவவியலாளர்கள் பிளாட்டோ ,அரிஸ்டாட்டில் போன்றவர்களின் பங்களிப்பு பற்றிய கடும் விமர்சனங்களை இந்த நூல் கொண்டுள்ளது.
மனித மேபாட்டிற்கு அறிவியல்
அணுகுண்டு தயாரிக்கவும் அறிவியல் பயன்பட்டுள்ளது; மக்களை பாதுகாக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கவும் அறிவியல் பயன்பட்டுள்ளது. அறிவியல் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு அறிவியல் பொறுப்பாக முடியாது என்று அறிவியல் அறிஞர் சி.வி.ராமன் குறிப்பிட்டார். சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அதனை மறுத்தார்.அறிவியல் நடைமுறை என்பது மனித சமூகத்தின் நலனுக்கும் மேம்பாட்டுக்கும்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். அறிவியல் நடைமுறை, அதன் கண்டுபிடிப்புகள், அவற்றின் இறுதிப் பயன்பாடுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது என்றார் சிங்காரவேலர்.
அறிவியல் நடைமுறைகள் அனைத்தும் மனித பயன் பாட்டிற்கும் மனித மேம்பாட்டுக்கும் உதவிட வேண்டும் என்றும் இயற்கை உலகம் மனித வாழ்க்கை பண்பாடு அடைய பயன் படுத்தப்பட வேண்டும் என்றும் அழுத்தமாக சிங்காரவேலர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், முதலாளித்துவ சமூகத்தில் அறிவியல், ஆளும்வர்க்கத்தின் தேவையையொட்டி பயன்படுத்தப்படுகிறது. சோசலிச சமூகத்தில்தான் அறிவியலின் முழு வல்லமையும் மனித சமூக மேம்பாட்டுக்கு பயன்படும் என்று பெர்னால் கருதினார்.
மக்களுக்கான அறிவியல்
இன்றைய சூழலில் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இன்று உலக அளவில் அறிவியலை ஆளுகிற வர்க்கங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகின்றனர். தேர்ந்தெடுத்த, குறிப்பிட்ட அறிவியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்ற அதிகாரம் முதலாளித்துவ அரசுகளுக்கு இருப்பதால், தங்களது மூலதனக் குவியலுக்கு அறிவியலை அவர்களால் பயன்படுத்த முடிகிறது. உற்பத்திக்கு அறிவியல், உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக உள்ளது. உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டுவதற்கும், தங்களது லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கும், நவீன அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அறிவியலைக் கொண்டு இயற்கை வளங்களும் சூறையாடப்படுகின்றன.
ஒரு புறம், அறிவியல் ஆளும் வர்க்க சுயநல தேவைகளை மையமாக வைத்து நிர்வகிக்கப்படுகிறது.மறுபுறம், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அறிவியல் புதிய சிகரங்களை எட்டுகிறது.இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் பலன் மனித சமூகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் அறிவியல் இருந்தால் அது சாத்தியமாகாது. சமூகத்தின் உடைமையாக அறிவியல் இருக்கும் நிலை ஏற்பட்டால்தான் சமூக மேம்பாட்டிற்கு அறிவியல் உதவிடும்.சோசலிச சமூக அமைப்பில் இது சாத்தியமாகும் என்பதற்கு, முந்தைய சோவியத் யூனியனும், இன்றைய சோஷலிச நாடுகளும் சமகால அனுபவங்களாக திகழ்கின்றன. எனவே மக்களுக்கான அறிவியல் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைந்தது.
அறிவியலுக்கு விரோதமான பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வகுப்புவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருகின்றன. அறிவியல் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, மூடநம்பிக்கைகள் பெருகிட திட்டமிட்ட சதிகள் அரங்கேறி வருகின்றன.பகுத்தறிவு சிந்தனையை அழித்தொழிக்கும் முயற்சி அனைத்தும் அறிவியலில் முதலாளித்துவத்தின் பிடி வலுப்படவே உதவிடும்.”மக்களுக்கான அறிவியல்”எனும் இலட்சியத்தை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. இதற்கு, ஜெ.டி.பெர்னாலின் “வரலாற்றில் அறிவியல்” பெரிதும் பயன்படும். l
previous post