உதயசங்கரின் ஐந்து குழந்தை இலக்கிய நூல்களை முன்வைத்து.
தமிழில் குழந்தை இலக்கியங்களின் வரவும்,வளர்ச்சியும் பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. பல புதிய எழுத்தாளர்கள் குழந்தைகளுக்காகவும், இளையோருக்காகவும் நிறைய புதிய கதைகளை எழுதத் தொடங்கியுள்ளனர். கதை சொல்லிகள் பலரும் ஆடிப்பாடி, கொண்டாட்டங்களுடன் இந்தக்கதைகளையும், ஏற்கெனவே மரபு வழி வந்திருக்கும் கதைகளையும் சிறார்களிடம் நேரடியாக அல்லது இணையவழி நிகழ்வுகளின் மூலம் சொல்லி வருகின்றனர்.
உதயசங்கரின் ஐந்து நூல்கள் மிக சமீபகாலத்தில் வெளியாகியுள்ளன. 2021, பிப்ரவரி மாதத்திலேயே ஆதனின் பொம்மை, அலாவுதீனின் சாகசங்கள், புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம் ஆகிய நான்கும், கடந்த 2020 அக்டோபரில் குட்டி இளவரசனின் குட்டிப்பூ என்ற இளையோர் நாவலும் வந்துள்ளன. பிரெஞ்சு மொழியில் அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரி எழுதிய ‘லிட்டில் ப்ரின்ஸ்’ என்ற நாவலைத் தமிழில்
வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்து ‘குட்டி இளவரசன்’ என்ற நாவலாகத் தந்திருக்கிறார். தமிழ் எழுத்தாளர்கள், தேர்ந்த வாசகர்கள் அனைவரின் மனங்களிலும் அவன் அழியாத இடம் பெற்று விட்டவன். இப்போது, உதயசங்கர் அந்தக் குட்டி இளவரசனைத் தேடி மீண்டும் சஹாரா பாலைவனத்திற்கு அந்துவானை அனுப்பி ஒரு தேடலை நிகழ்த்தியிருக்கிறார். அந்துவானையே ஒரு விண்கலமாக மாற்றி பால்வெளியின் கோள்கள் பலவற்றுக்கு குட்டி இளவரசனைப் பயணிக்கச் செய்திருக்கிறார்.
சிறந்த தமிழ்மொழிபெயர்ப்பாளரான முனைவர் கே. கணேஷ்ராம்,(சுழலும் சக்கரங்கள், காஃப்காவின் நுண்மொழிகள் உள்ளிட்ட பல மொழிபெயர்ப்புகளின் ஆசிரியர்) தன் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: குட்டி இளவரசனின் குட்டிப்பூ’ தமிழ்ச்சிறார் புனைவெழுத்தின் ஒரு மைல்கல். முதல் ஊடிழைப்பிரதி என்னும் பெருமையும் இதற்குண்டு. அதோடு, இந்தக் குறு நாவலில், “குட்டி இளவரசனைக் குழந்தைமை நிரம்பியவனாகவும், அதே சமயம் சமகால வாழ்வை வளரிளம் பருவத்தினருக்கும் விளக்கிச் சொல்லும் சமூக அரசியல் சூழலியல் கூரறிவு நிரம்பியவனாகவும் உதயசங்கர் படைத்திருக்கிறார் எனவும் கணேஷ்ராம் பாராட்டுகிறார். இந்த நூலை மிக அழகான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஓவியர் ராஜனின் அட்டைப்படமும், ஓவியங்களும் அருமை.
அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரிக்கு, தான் படைத்த, கி.பி.1942-இல் சஹாரா பாலைவனத்தில் சந்தித்துப் பிரிந்த குட்டி இளவரசனை மீண்டும் தேடிப் போய்ப் பார்த்தாக வேண்டும் என்ற தீரா விருப்பம். பழுதடைந்து கிடக்கும் தன் பழைய விமானத்தைச் சரி செய்துகொண்டு சஹாராவை நோக்கிப் பறக்கிறார். அதே இடத்தில், முன்பு போலவே விமானம் மணலில் மோதி இறங்குகிறது. கொஞ்ச தூரத்திலேயே, ஒரு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்கும் குட்டி இளவரசனையும் பார்த்து விடுகிறார். அவனை மறுபடிப் பிரிய மனமின்றி, தானே ஒரு விண்கலமாக மாறி, அவனுடனேயே பால்வெளியில் ஒவ்வொரு கோளாகப் பயணம் செய்யத் தொடங்குகிறார்.
குட்டி இளவரசனின் குட்டிக்கோளான பி-612 இல், அவனுடைய அன்புக்குரிய குட்டிப்பூவும் அவனும் மட்டுமே இருந்தார்கள்.அவர்களுக்கிடையே நிலவி வந்த எல்லையற்ற பேரன்பே பெரும் வெறுப்பாக மாறியதன் விளைவு, அவனே ஓர் ஆட்டை உருவாக்கி பூவை விழுங்கச் செய்து விடுகிறான். பூவோ தன் பங்குக்குத் தன்னைச் சுற்றி விஷ முள்களை வளர்த்திருக்கிறது. தான் நேசித்த பூவையே கொன்று விட்டோமே என்ற கழிவிரக்கம், மனதில் ஊறிய வெறுப்பின் விஷம் தலைக்கேறிய நிலையில் விழுந்து கிடக்கிறான்.
அந்துவான் விண்கலமாக மாறி இளவரசனுடன் பறக்கிறார். கோ கோளின் ராஜாவான கோரா அதிகாரக்கோமாளியாகக் கூத்தடித்துக் கொண்டிருக்கும் கொடுமையைக் கண்டு, “அதிகாரம் கோமாளித்தனத்தின் உச்சம் என்று அவனைத் துச்சமாக அலட்சியப்படுத்திப் பறக்கிறான் குட்டி இளவரசன். ஒரு காலத்தில் தண்ணீர், காற்று, மலை, கடல் ஆறு, ஏரி, மீன்கள் பறவைகள், உயிரினங்கள் எல்லாமும் இருந்த ஒரு கோளில் இன்று எதுவும் இல்லை. சுவாசிக்கக் காற்றும் இல்லாதவாறு அங்கே மனிதர்களின் நுகர்வுப் பேராசையின் கோர விளைவுகள் அரங்கேறியுள்ளன. மீண்டும் அங்கே எல்லாவற்றையும் உயிர்ப்பித்துத் தந்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்கிறான். தற்பெருமைத் தவளைகளின் கோள், அடிமைகளின் சங்கிலிகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் கோள், எண்கோணக்கோள் என அடுத்தடுத்துப் போகும் கோள்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே அலைபேசிகளின் திரையுடன் பிணைத்துக்கொண்டு செயலிகளின் கட்டளைகளுக்கேற்ப அடிமை வாழ்வை நடத்தும் கொடுமைகளைக் காண்கிறான். வாழ்க வாழ்க கோளில் கட் அவுட்டுகளில் வாழும் கதாநாயகர்களுக்குப் பாலபிஷேகம் செய்து கொண்டு வாழும் மனிதர்களைக் கான்கிறான்., குப்பை மலைகளின் நடுவே பெரும்பான்மை மக்களை வாழச் செய்துவிட்டு உயர்ந்தவர்கள்’ என அதிகாரம் செய்து கொண்டிருக்கும் மிபூ கோளின் நிலை கண்டு கொதித்துப்போய் அந்தக்கோளையே பால்வெளியில் இருந்த தடம் தெரியாமல் அழித்து விட்டுப்போகிறான் குட்டி இளவரசன்.
திரும்பும் வழியில், பி-867 கோளில், குட்டி இளவரசியைச் சந்தித்து, அவள் இழந்துவிட்ட புஸ்ஸி பூனையை வரைந்து மீட்டுத்தந்த குட்டி இளவரசன், அவளுடன் உரையாடுகிறான். “அன்பு,வற்றாமல் ஓடும் ஜீவநதி…இரு கரை தொட்டு எல்லா உயிர்களும் செழிக்க உயிர் தரும் அற்புதம். அது நமக்கானது மட்டுமல்ல…அழிவற்றது அது. பூத்துக்கொண்டேயிருக்கும் பூவைப்போன்றது. அன்பு நிபந்தனைகளற்றது…” என குட்டி இளவரசி தெளிவுபடுத்துகிறாள்.
“அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் அனுபவங்களிலிருந்தே ஒளி கிடைக்கும். அடுத்தவர் ஒளியில் நாம் நடக்க முடியாது என்ற அந்த இளவரசியின் வார்த்தைகளோடு குட்டி இளவரசன், தன் கோளான பி-612 இல் வந்து இறங்குகிறான். ஆட்டின் வயிற்றுக்குள் சிறைப்பட்டிருந்த தன் குட்டிப்பூவை விடுவிக்கிறான். “ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேன்…இனி நீயில்லாமல் என்னால் ஒரு கனமும் தனியே இருக்க முடியாது என்று பூவிடம் மன்னிப்புக் கோருகிறான். பூவின் முகம் மெல்ல மலரத் தொடங்குகிறது. அதன் நறுமணம் கோள் முழுவதும் பரவி, அதில் அன்பின் அமுதம் வழிந்தோடியது. அதன் தேன்சுவையில் கோள் மட்டுமன்றி பால் வெளியே நனைந்தது.
புலிக்குகை மர்மம்’ ஒரு சுவாரசியமான துப்பறியும் கதை போன்ற ஜாலியான கதை.வானம் பதிப்பக வெளியீடு இது. அட்டைப்படம் ஆவலைத்தூண்டும். சசி மாரீசின் கைவண்ணத்தை உள்ளோவியங்களிலும் காண்கிறோம். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்காகப் புலிக்குகை மைதானத்துக்குப் போகிறார்கள், பாலுவும் அவனுடைய குழுவினரும். சொர்ணமலையின் அடிவாரத்தில், மேற்குத்திசையைப் பார்த்து, பிரம்மாண்டமாக வாயைத் திறந்து ஒரு புலி உறுமுவதைப் போன்ற தோற்றம் தரும் குகை அது. அங்கே சில அயல் மனிதர்களின் நிழலான நடமாட்டம் பாலுவின் கவனத்தைக் கவர்கிறது. புலிக்குகைக்குள் போகவும் வரவுமாக அவர்கள் அங்கே தென்படும் காட்சிகள், அவன் கவனத்தில் பதிந்தாலும், கிரிக்கெட் மேட்சின் மும்முரத்தில் அந்தக் குழு ஈடுபட்டிருக்கிறது. மேட்ச் முடியும் நேரத்தில், மாதாங்கோயில் டீமில் நாகுவின் தம்பி மாரியைக் காணோம். இதை மிகத்தாமதமாகவே உணர்கிறார்கள் பாலுவும், குழுவினரும். பிறகு? தேடல் தொடங்குகிறது. கேப்டன் பாலுவும்,குழுவும் நிகழ்த்தும் வீரசாகசங்களால், மாரி கிடைப்பதோடு, செண்பகவல்லியம்மன் கோயிலின் மண்டபத்துக் கல்பலகைக்குக் கீழே இருக்கும் புதையலை எடுக்க சதிவேலை செய்யும் சமூகவிரோதிகளும் பிடிபடுகிறார்கள். ஒரே நாளில், இந்தக்குழு புகழ் பெற்று விடுகிறது.
கையடக்கமான வடிவில், அழகான அட்டை, உள்ளோவியங்களுடன் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ஆதனின் பொம்மை’ மற்றோர் இளையோர் நாவல். கேப்டன் பாலு, தன் மாமா வீட்டுக்கு விடுமுறையில் போகிறான். கீழடி என்ற அந்த குக்கிராமம், வைகைக்கரையில் இருக்கிறது. அங்கே கிடைக்கும் சுடுமண் ஓட்டில் வரையப்பட்டிருக்கும் பொம்மை, மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஆதனின் பொம்மையாக இருக்கறது. ஆதன், பாலுவைச் சந்தித்து தங்கள் பூர்வகுடி வரலாற்றைச் சொல்கிறான். சிந்துவெளியில் தொடங்கும் அந்தக் கதை, இங்கே கீழடி மண்ணில் புதையுண்ட ஓடுகளில், பொம்மைகளில் மீண்டும் உயிர்த்தெழுகிறது! வரலாற்றையும், புனைவையும் சமகால இளையோரின் விருப்பு வெறுப்புகளையும் கீழடி மண்ணோடு குழைத்துத் தந்திருக்கிறார் உதயசங்கர்.
ஆதி மதுரையம்பதி நகரில், வற்றாத வைகை நதி ஓடிக்கொண்டிருந்த காலம்…இன்றைய பாலுவின் மூதாதையருள் ஒருவனான ஆதன், தங்கை வெண்ணிலையுடன் ஓடி விளையாடிய தெருக்களில் மீண்டும் ஒரு பயணத்தை நிழ்த்துகிறான் கேப்டன் பாலு. கால ஊஞ்சலில் ஆதனும், பாலுவும் ஆடும் ஆட்டம், கடந்த கால வரலாற்றின் ஒளி மிகுந்த பக்கங் களையும், அதோடு அதிகார மையங்களின் போட்டிகளால் சிதைந்த சிந்து வெளியின் வண்ணமிகு வரலாற்றையும் நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்த நாவலில், மதுமிதா என்ற பெண், பாலுவின் மாமா மகள். இன்றைய சமகாலப்பெண்களின் முன்மாதிரியாகத் திகழக்கூடிய ஓர் ஆளுமை மிக்க கதாபாத்திரம்.
பாரதி புத்தகாலயம் சமீப காலமாக குழந்தைகளுக்கென நிறைய நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சார்பில் பாரதி வெளியிட்டுள்ள ‘அலாவுதீனின் சாகசங்கள்’ மற்றொரு புனைவு. ஓவியர் வாசனின் அழகான அட்டையும், உள்ளோவியங்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன. அற்புத விளக்கினுள் அடைபட்டிருந்த ஜீனி பூதத்தை விடுதலை செய்த முந்தைய அலாவுதீனைத் தேடி, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில், ஊத்துமலைக்குப் பக்கம் கான்சாபுரம் வந்து சேர்கிறதுஅந்த பூதம். இன்றைய அலாவுதீன், அந்த ஊரின் ஏழை டெய்லர் மகன். ஜீனி பூதம், அலாவுதீன், மாய மோதிரம் மூவரும் இணைந்த கூட்டணி சாகசப் பயணங்களை நிகழ்த்துகிறது. மணல்கோட்டையினுள் அடைபட்டுக்கிடக்கும் குழந்தைகளை விடுவிக்கிறது. கடவுளின் பெயரால் மூவாயிரம் ஆண்டுகளாகச் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் திசா நாட்டின் அவலத்துக்குக் காரணமான நெட்டை முனிகளை விரட்டியடிக்கிறார்கள். விசித்திரக்குள்ளர்களையும், குள்ளிகளையும் ஏமாற்றி அவர்களை மோதவிடும் சூனியக்கார மந்திரவாதிகளை வெல்கின்றனர். அழகுபுரம் நாட்டின் அழகுராஜா உலகெங்குமிருந்து அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு தன்னை அழகுபடுத்துவதையே முழு நேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார். ஆரோக்கியமே அழகு’ என்பதை அந்த நாட்டு மக்களுக்கு உணர்த்தும் அதே வேளையில் அலாவுதீன் – ஜீனி குழு, திருந்த மறுக்கும் அழகுராஜாவை வாலில்லாக் குரங்காக்கி விடுகிறது! குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் யாரும் யாரையும் பரஸ்பரம் சந்திக்க விடாமல் பெரும் சுவர்களால் பிரித்து வைத்திருக்கும் உத்தர் நாட்டு ராஜாவால் ஏற்படும் தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி காணும் அலாவுதீனும், ஜீனியும் சமகாலத்தில் கொரானா வைரசை ஒழிக்கப் போராடுவதுடன் இந்த நாவல் நிறைவடைகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அறிவியல் நூல்களை தமிழில் அறிவியல் வெளியீடு’கள் மூலம் வெளியிட்டு குழந்தைகளுக்கும், இளைய வாசகர்களுக்கும் சேவை செய்து வருகிறது. இப்போது இளையோருக்கான புனைவு இலக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ‘பொம்மைகளின் நகரம்’ நாவல் அந்த வகையில் ஒரு புது வரவு. சசி மாரீசின் ஓவியங்கள் வித்தியாசமானவை. பழங்கோட்டை என்ற ஊரின் எல்லைக்கப்பால், வெகுதூரத்தில் இருக்கும் கனவுக்காடு அந்த ஊர் மக்களின் கனவுகளில் மட்டுமே வருகிறது. அந்தக்கனவு காண்பவர்களை அதன்பிறகு ஊருக்குள் பார்க்கவும் முடிவதில்லை. அவர்களை எங்கே காண்பது? தன் அப்பா பாண்டியனை அதே போல் கனவுக்குப்பின் பார்க்க முடியாமல் தவிக்கும் தமிழ்ச்செல்வன், கனவுக்காட்டுக்குள் எப்படியேனும் நுழைந்தே தீருவது என முடிவு செய்கிறான். அவனும்,அவனுடைய பிரியத்துக்குரிய நண்பர்களான சியான் வெள்ளெலி, கருப்பன் எறும்பு, தேன் சிட்டுகளின் ராஜாவான தேசி ஆகியோருடன் புறப்பட்டுப்போகிறான்.
யாரும் நுழையாக் காட்டைச் சூழ்ந்து நீரும், நெருப்பும், மணலும், வானமும், காற்றும் காவலிருந்தன. அவற்றைத்தாண்டி காட்டுக்குள் நுழைய சியான் வெள்ளெலி தன் எலிப்படையையே திரட்டி வந்து உதவுகிறது.இப்படியே அடுத்தடுத்து எதிர்ப்படும் அண்டரண்டப்பட்சி,ஆமைச்சிங்கம், கழுகுராஜா போன்ற தடைகளை வென்று பொம்மைகளின் நகருக்குள் நுழைந்து விடுகிறார்கள் தமிழ்ச்செல்வனின் குழுவினர். பொம்மைராஜாவும், அவனுடைய படைகளும் அழிந்ததுமே பொம்மைகளாக்கப்பட்டிருந்த மனிதர்கள், தமிழ்ச்செல்வனின் அப்பா பாண்டியன் உள்பட அவ்வளவு பேரும் விடுதலையடைந்து விடுகிறார்கள். வீட்டுக்குப் போகும் தமிழ்ச் செல்வனையும்,குழுவையும் கண்டதும், “எங்கேடா போய்ட்டு வர்றே, இவ்வளவு நேரமா?” என்று கேட்கிறார் பாண்டியன். “சும்மா…” என்று சிரிக்கிறான் தமிழ்ச்செல்வன். சியானும், கருப்பனும், தேசிராஜாவும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.பாண்டியனும்தான்!
ஆக, குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள் இப்போது வந்து சேர்கிற காலம் ! இந்த நாள்களில் மனிதர்களின் பேராசையால் உலகமே அங்காடிக்கோள் ஆக்கப்பட்டிருக்கின்ற சூழல். ஆளும் அழகு ராஜாக்களின் கோட்டுகளும் சூட்டுகளும் இலட்சக்கணக்கில் விலையாகின்றன. கொரானா வைரசால் கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாகும் சூழலில், புதிய பாராளுமன்றக்கட்டடங்களும், ராஜமாளிகைகளும் கட்டும் பணிகளே முன்னுரிமை பெறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்தும், உலகமய வணிகச் சதிகள் சார்ந்தும், சாதி-மத மோதல்களை உருவாக்கி மனிதர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மோதவிட்டு இரத்தம் குடிக்கும் அதிகார வெறியர்கள் குறித்தும் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காரணம், நாளைய சமுதாயம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக எதை மீதம் வைத்திருக்கிறது என்ற கேள்வியை உரத்துக்கூவ வேண்டியவர்களாக அவர்கள் உள்ளனர். மாபெரும் எழுத்தாளர்களும், புகழ் பெற்ற பத்திரிகையாளர்களும் கூட, இன்றைக்கு நடக்கும் மேற்கண்ட அக்கிரமங்கள் குறித்து வாய்திறவாமல் கள்ளமவுனம் சாதிக்கும் சூழல். அதைவிட மோசம், இந்த மனிதவிரோதச்செயல்களை தமது சுயலாபங்களுக்காக ஆதரித்துப் பேசவும், எழுதவும் அவர்கள் தயாராகி வரும் நிலை.இவற்றையெல்லாம் குழந்தைகளும், இளையோரும் புரிந்து கொள்ள இந்த ஐந்து நாவல்களுமே பெரிதும் பயன்படக்கூடியவையாக உள்ளன. எதையும் வெளிப்படையாகப் பேசாமல், புனைவின் மொழியில் தந்திருக்கிறார் உதயசங்கர்! இவற்றை நல்ல முறையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம், வானம் பதிப்பகம், அறிவியல் வெளியீடுகள் ஆகிய வெளியீட்டாளர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
l
previous post