கரு. கல். சொல்லோவியன்
‘Let there be India’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகி பரவலாக உலகின் பல நாடுகளின் கவனத்தைப் பெற்ற Dr. பாபு கரீம்குட்டிக்கல் வர்கீஸ் என்ற வரலாற்றாசிரியர் மற்றும் ஊடகவியலாளர் எழுதிய புத்தகம் சமீபத்தில், ஒரு சுருக்கமான பதிப்பாக சுமார் 268 பக்கங்களில் தமிழில் வெளியாகியிருக்கிறது. இவர் பல புத்தகங்களை எழுதியிருந்தாலும், ‘இன்குலாப்’ என்ற தலைப்பில் முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் மாணிக்கம் நாயர் அவர்கள் வாழ்க்கை வரலாறு எழுதி அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கோஜ்’ என்னும் திரைப்படம் 11 இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டது. அடிப்படையில் வரலாற்றாசிரியரான இவர் எழுதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம்தான் ‘இந்தியா உருவாகுவதாக.’
சிறந்த புத்தகங்களைக் கணக்கிடுங்கள் என்று உங்களிடம் யாரேனும் கூறினால் உங்களால் எத்தனை புத்தகங்களைக் கணக்கிட முடியும். அல்லது உங்களின் நினைவுக்கு எத்தனை புத்தகங்களைக் கொண்டு வர முடியும். சமீபத்தில் ஒரு ஒளித்தொகுப்பில் பேசியவர் இந்தியர்கள் ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 50 புத்தகங்களைக் கூட படித்து முடிப்பதில்லை என்றார். அதாவது இன்றைய நாள்களில் வாசிப்புத் திறன் மிக மிகக் குறைந்து கொண்டு வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் விரும்பிப் படிக்கும் நூல்கள் இன்னும் விற்பனையாகிக் கொண்டே தாம் இருக்கின்றன. வாங்கி வைத்த புத்தகங்களை நம்மில் எத்தனை பேர்கள் படிக்கிறோம். புத்தகங்களை வாங்கி அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் படிக்காமல் இருப்பதற்கு சுண்டோகு (tsundoku) என்று பெயர். நூல்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். மேடைப் பேச்சு போன்று அல்ல எழுத்து. பல மணி நேரம் பல்வேறு நூல்களை ஆராய்ந்து அவற்றை உள்வாங்கி கள ஆய்வு செய்து எழுதுவது என்பதே தனி கலை தான். அதிலும் கள ஆய்வு என்பது இன்னும் சற்று கூடுதலான பணிச்சுமை போல் காணப்பட்டாலும் அதிலிருந்து கிடைக்கும் தரவுகள் என்பது தங்கம் போன்றது. அப்படிப்பட்ட ஒரு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து, பொதுவெளியில் கவனிக்கப்படாமற் போனால் எப்படியிருக்கும். ஆம் அப்படி கவனிக்கப்படாமற் போனது தான் ‘Let there be India’ என்ற நூல். இதன் சுருக்கப்பதிப்பு தமிழில் வெளியாகியிருந்தாலும் பரவலான கவனத்தைப் பெறாமல் இந்த நூல் இருப்பது வருந்தத்தக்கதே.
இந்த நூல் குறித்து தெளிவாக்கும் முன் இந்த நூல் பொது வெளியில் கவனிக்கப்படாமற் போனதற்கான காரணத்தை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரிவில்லை. இந்த நூல் ஐரோப்பிய கிறிஸ்தவ மெஷினரிகள் இந்தியாவிற்கும் இந்திய மொழிகளுக்கும் என்னென்ன பங்களிப்புச் செய்தனர் என்று எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மெஷினரிகளின் பங்களிப்பைக் குறித்த நூல்கள் பிற மொழிகளைக்காட்டிலும் தமிழிலே மிக அதிகம். அதற்கு ரா.பி. சேதுப்பிள்ளை கால்டுவெல் நூலிலிருந்து இன்றுவரை பல எழுத்தாளர்கள் வரை கிறிஸ்தவ மெஷினரிகளின் பங்கினை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அந்த வரிசையில் பாபு கே. வர்கீஸ் அவர்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளராக உள்ளார். இவருடைய லெட் தியர் பி இண்டியா என்ற நூல் சுருக்க வடிவில் தமிழில் இந்தியா உருவாகுவதாக என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆங்கில நூலின் சுருக்க வடிவம் இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.
நம்மை ஆள வந்த ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் நமது தேசிய மொழிகளை அதன் மாபெரும் கருத்துகளை பரிமாற்றம் செய்து ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு ஒரு மாபெரும் தேசத்தை உருவாக்கும் சாதனங்களாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். புவியல்ரீதியாக மிகவும் பிரிந்து காணப்படும் இந்தியா ஒரு தேசமாக மொழிவாரி மாநிலங்களால் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பேச்சு மொழியை மாத்திரம் அறிந்திருந்த பாமர மக்கள், தங்களுக்குள் உறைந்துகிடந்துள்ள பேராற்றலை வளர்த்துக்கொள்ளும் விதத்தில் அவர்கள் மொழிகளுக்கு வடிவமைப்பும் இலக்கணமும் எழுதினர். கல்வி கற்பித்து இலக்கியங்கள் உருவாக உதவினர். இவர்களின் மகத்தான பணியைக் குறித்து வரலாற்றாசிரியர்கள் கூட முறையாக அங்கீகரிக்காத நிலையில், பல்வேறு ஆவணங்களைத் தேடி எடுத்து, ஆதாரங்களைத் திரட்டி இந்திய மொழிகளுக்கு ஒட்டுமொத்தமாக இவர்கள் ஆற்றிய அளப்பரிய பணி என்னென்ன என்பதை ஒரு வரலாறாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர். அந்த வகையில் ஆசிரியர், இந்திய மொழிகளுக்கு பெரும் வரலாற்றுக் கடமை ஆற்றியிருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் ஒருவகையில் சனாதனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். கல்கத்தாவிற்கு வந்த கிறிஸ்தவ மெஷினரியான வில்லியம் கேரி, இந்தியாவில் குறிப்பிடத்தக்க சமுதாய மாற்றம் நிகழக் காரணமாக இருந்தார். இவர் ராஜாராம் மோகன் ராயுடன் இணைந்து இந்தியாவிலிருந்த உடன்கட்டை ஏறும் கொடூரப் பழக்கத்தை எதிர்த்து அதை அறவே ஒழித்தார். அத்துடன், அஸ்ஸாமில் நீதிமன்றங்களில் அஸ்ஸாம் மொழி புறக்கணிக்கப்பட்டு, பெங்காலி மொழி புகுத்தப்பட்டது. இதை அஸ்ஸாமியர் கடுமையாக எதிர்த்தனர். அதற்கான காரணம் அஸ்ஸாமில் சரியான மொழி இலக்கணம், வரையறையற்ற வரிவடிவங்கள் போன்றவை காரணமாகச் சொல்லப்பட்டன. அப்போது அஸ்ஸாம் மொழியைக் கற்றுத் தேர்ந்து, ‘அஸ்ஸாமீஸ் மொழியின் இலக்கணம்’ என்ற நூலை W. ராபின்சன் என்பவர் எழுதி வெளியிட்டார். 1867 இல் பிரான்சன் அஸ்ஸாமிய அகராதியையும் எழுதி வெளியிட்டார். இதேபோல, குஜராத்தி மொழிக்கும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியதாகும். கி.பி. 1847 ஆம் ஆண்டில் க்ளார்க்சன் என்பவர் குஜராத்தி மொழியில் இலக்கணம்’ என்னும் நூலை வெளியிட்டார். JVS டெயிலர் குஜராத்தி பாஷானு வியாகரணம்’ என்ற நூலை எழுதியதால், குஜராத்தி இலக்கணத்தின் தந்தை என அழைக்கப்பட்டார். இதேபோல் ஹிந்தி, உருது ஆகிய மொழிகளின் செம்மைப் படுத்தலுக்கும் மெஷினரிகள் தமது பங்களிப்பைச் செய்தனர். ஆங்கிலேய வேதாகம மொழிபெயர்ப்பாளரான ஹென்றி மார்டின் (1781-1812) அப்போது பேசப்பட்டுவந்த பேச்சு மொழியை உருமாற்றம் செய்து இன்று வழங்கப்படும் உருது மொழியை உருவாக்கினார்.
கல்கத்தாவில் செராம்பூர் பல்கலைக் கழகத்தை நிறுவிய வில்லியம் கேரி என்ற கிறிஸ்தவ மிஷினரியால் எழுதப்பட்டு அச்சிடப்பட்ட முதல் கன்னட நூல் ‘கர்நாடக மொழியின் இலக்கணம்’ என்பதாகும். 1811இல் ஜான் ஹாண்ட்ஸ் என்பவர் ‘கன்னட மொழியில் இலக்கணமும் சொல்லகராதியும்’ என்ற நூலை வெளியிட்டார். அப்போதிருந்த புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியிலிருந்து ‘கர்னாடகா வியாகரணம்’ என்ற நூலையும் வெளியிட்டார். 1859இல் மைசூரிலுள்ள வெஸ்லியன் மிஷன் அச்சகத்தில், கன்னட மொழியின் இலக்கண அடிப்படைகள்’ என்னும் நூலை தாமஸ் ஹட்சன் என்பவர் எழுதி வெளியிட்டார். ஆனாலும் எக்காலத்திலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூலாகக் கருதப்படும், கால்ட்வெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூல் 1856இல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதியில் கொங்கணி மொழி இன்று பரவலாகப் பேசப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் கோவாவிற்கு வந்த ஐரோப்பிய கிறிஸ்தவ மெஷினரிகள் கொங்கணி மொழி வளர்ச்சிக்கும் தமது பங்களிப்பைச் செய்துள்ளனர். 1805 ஆம் ஆண்டில் வில்லியம் கேரி ‘மகராத்தா மொழியின் இலக்கணம்’ என்னும் விரிவான நூலை வெளியிட்டார். மராத்தி மொழியில் எழுதப்பட்ட முதல் தரமான நூல் என்று K.S. அர்ஜுன் வேக்கர் குறிப்பிடுகிறார். இவை அல்லாமல் 8000 வார்த்தைகளைக் கொண்ட மராத்திய மொழி அகராதி வில்லியம் கேரியின் மிகப் பெரும் பங்களிப்பு. இவற்றிற்கப்பால், மணிபுரி, நேபாளி, ஒரியா மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் ஐரோப்பிய மிஷனரிகள் ஆற்றிய தொண்டு வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்தியா உருவாகுவதாக என்ற சொற்றொடர் விவிலியத்தின் சொற்றொடர் போன்று அமைந்துள்ளதாலேயே இந்த நூல் பல அறிஞர்கள் கையில் சேருவதற்குத் தடையாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் சில தலைப்புகள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை தீவிரப்படுத்ததாமல் போய்விடக் கூடும். சில செய்திகளை அதனுடைய உக்கிரத்தின் தன்மையில் கூறினால் தான் அதனுடைய அழுத்தம் அதிகமாகும். உதாரணமாக என்ற தலைப்பிட்ட ஆவணப்படம் வெளியான போது பெரும் அதிர்வை இந்தச் சமூகம் சந்தித்தது. ஏன் ஒரு ஆவணப்படத்திற்கு இப்படியா பெயர் வைப்பார்கள்? என்ற கேள்வியும் எழுந்தது. நரகல், மலம் என்று சொன்னால் அந்த இயக்குநர் சொல்லவரும் அழுத்தம் அல்லது தீவிரம் குறைந்து போய்விடக்கூடும் என்பதால் அந்த தலைப்பை அவர் தெரிந்தெடுத்திருக்கலாம். இந்தியா உருவாகுவதாக என்ற தலைப்பும் அத்தகைய பாதிப்பைக் கொடுக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்தியா உருவாகுவதாக என்ற இந்த நூல் 16 அத்தியாயங்களாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 700 பக்கங்களில் விரிவடைந்துள்ளது. முதலாம் பிரிவில் இந்தியா, இந்தியாவில் கிறிஸ்தவம், தாய்மொழியின் சக்தி, விவிலியம், மொழிகள் என்று பரந்து விரிகிறது. இந்த தலைப்பின் கீழ் ஆசிரியர் செய்துள்ள ஆய்வுகள் மொழிகளை மையப்படுத்தியே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. காரணம் இந்நூலாசிரியர் மொழி இயல் வல்லுநர் என்பதாலும் இருக்கலாம். இவர் கையாண்டுள்ள மொழி நடை என்பது சாதாரணமாக அனைவராலும் புரிந்துகொள்ளும் அளவிற்கு தாம் கூறவரும் கருத்துகளை மக்கள் மொழியில் எழுதியுள்ளார் என்பதே இந்த நூலுக்கு கிடைத்த வரம் எனலாம். மேலும் ஒவ்வொரு அத்தியாயமும் முடிந்தவுடன் நூலடைவுகளும், அடிக்குறிப்புகளும் உள்ளன. இது மேற்கொண்டு ஆராய்வதற்கு வழி வகுக்கிறது. கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய பணிகள் இலக்கியம், அச்சு, கல்வி, பத்திரிக்கைதுறை ஆகியவற்றை இரண்டாம் அத்தியாயம் தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கிறது. பெங்கால் கெஸட் தான் இந்தியாவில் வந்த முதல் இதழ் என்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால் இதழ் நடத்திய பெருமை தமிழருக்கே சேரும். ஞானப்பிரகாசியார்தாம் இதழ் நடத்திய முதல் நபர் என்று காலஞ்சென்ற ராணி வார இதழ் முன்னாள் ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் கிறிஸ்தவ இதழ்கள் ஓர் ஆய்வு என்ற நூலில் முன்வைக்கிறார். இதே ஞானபிரகாசியார் தாம் திருக்குறளை 1812-இல் “திருக்குறள் மூலபாடம் என்ற பெயரில் அச்சிட்ட நூலே இன்று நமக்குக் கிடைத்துள்ள அச்சிடப்பட்ட திருக்குறள் நூல். இந்த நுணுக்க வரலாற்றை பலரும் தவறவிடுவது போல் இங்கும் அந்தப் பிழை மரபு ஏற்பட்டுள்ளது. அ.மா.சாமி அவர்களிடம் இதுகுறித்து தொலைபேசியில் பல ஆண்டுகளுக்குமுன் நான் பேசியபோது, அவர் கூறிய கருத்து தெற்கின் வரலாறு மறைக்கப்படுகிறது என்று தான் கூறினார். வரலாற்றிலும் தெற்கு தேய்ந்து வடக்கு வாழ்கிறது.
இந்தியா உருவாகுவதாக என்ற நூலில் மொழிகளின் சிறப்பு குறித்து தனித்தனியாக மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைக் கொடுத்துள்ளனர். இது போன்று சமஸ்கிருதம், பெங்காலி, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுகு, உருது, மற்றும் பழங்குடிகளின் மொழிகள் அனைத்திற்கும் அதன் வரலாற்றை உருவி எடுத்து, அதை எளிய வடிவில் எவரும் புரியும்வண்ணம் எழுதியிருப்பது, நூலின் வலிமையை நாம் நன்கு உணர முடிகிறது. சிறிய சிறிய நூல்களினால் எப்படி ஒரு துணி நெய்யப்படுகிறதோ, அது போன்று தகவல்களால் இந்த நூல் நிறைந்துள்ளது. தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு எப்படித் தப்பித்து, பொதுவெளிக்கு வராமல் சென்றுவிட்டதே என்று வருந்த வேண்டியுள்ளது. மேலும் இந்த நூல் வழியாக நூலாசிரியர் தரும் எச்சரிப்பு. இன்றைய செய்திகளை வரலாறாக ஆவணப்படுத்துங்கள் என்பதே! l