வீட்டில் இரு! வாசித்திரு!
வீட்டில் இருக்குமாறு கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும் குழந்தைகளிடம் வெளி உலகை எடுத்துச் செல்வது எப்படி என்பது உலகெங்கும் எழுப்பப்பட்ட கேள்வி. ஒரு சந்ததியே வீணாகி விடுமோ எனும் பெருங்கவலை நோய் தொற்று குறித்த கவலையை விட அதிகமாக எதிரொலித்த நாட்களும் உண்டு. நாம் உலக சன்னல் ஒன்றை குழந்தைக்குத் திறந்து அவர்களின் அறிவை விசாலமாக்கி சிறைப்பட்ட எண்ணங்களைச் சிறகடித்துப் பறக்கவைக்க ஒரே வழி புத்தக வாசிப்பை அவர்களுக்கு அறிமுகம் செய்வது தான் என்பதை அறிஞர்களும் கல்வியாளர்களும் உளவியல் விஞ்ஞானிகளும் பலமுறை வற்புறுத்தி வலியுறுத்தி வந்தார்கள், வருகிறார்கள்.
· யுனிசெஃப் – சர்வதேச அளவில் ஒரு அற்புதமான முயற்சியை முன்னெடுத்தது. ரீட் தி வேர்ல்டு (Read The World) எனும் பிரமாண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி அந்த குழந்தைகள் நல ஐ.நா. சபை அமைப்பு உலகளாவிய புத்தக வெளியீட்டாளர்களோடு கைகோர்த்தது. உலக சுகாதார நிறுவனமும் இணைந்தது. சிறந்த எழுத்துச் சிற்பிகளைத் துணைக்கு அழைத்தது. அவரவர்களின் புத்தகத்தை அந்தந்த நூலாசிரியரே இணைய வழியே வீட்டிலிருக்கும் குழந்தைக்கு உரக்க வாசித்து ஒரு வாசிப்பு இயக்கத்தை கடந்த ஏப்ரல் 2 அன்று (சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்) தொடங்கினார்கள்.
· உலகப் பொருளாதார இயக்கம் (World Economic Forum) ஒரு புக் கிளப் நடத்தி வருகிறது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 100 நாடுகளை ஒருங்கிணைத்து ‘வாசிப்பே கல்வி’ (Reading Is Education) என்ற பிரமாண்ட இயக்கத்தை 2020 ஜூனில் தொடங்கியது. 20 மொழிகளில் – உரக்க வாசித்தல் எனும் குழுவில் குழந்தைகள் இணைந்ததால் விலையின்றி தாங்கள் விரும்பும் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
· அமெரிக்க சிறார் திரைப்பட நடிகர் அமி-ஆடம்ஸ் மற்றும் ஜெனிஃபர் கார்னர் இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் சேவ் வித் ஸ்டோரீஸ் (Save With Stories) எனும் புதிய முயற்சியை தொடங்கினார்கள். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பிரபலங்கள் குழந்தைகளுக்கு (குறிப்பாக ஆறு முதல் பதினோராவது) புத்தகம் வாசிப்பதுபற்றி தான் வாசித்த கதை சொல்வது, கதைசொல்ல வைத்து பதிவுசெய்வது என இறங்கினார்கள். நிகழ்வு செம ஹிட். இந்த நிகழ்வின் மூலம் ஈட்டப்பட்ட தொகை அமெரிக்க பள்ளிகளின் விலையற்ற மதிய உணவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
· அடுத்தது ஆபரேஷன் ஸ்டோரிடைம்; ராம்பர் என்று சர்வதேச டிஜிட்டல் தாய்மார்கள் அமைப்பு – நடத்தும் சூப்பர் வாசிப்பு முன்னெடுப்பு சிறார் கதை எழுத்தாளர் ஸ்காட் மகூன் (ஆஸ்திரேலியா) ஒரு கதையை வாசிக்க லட்சக்கணக்கான சிறார்கள் உடன் வாசிக்கிறார்கள். கூடவே ஓவியமும் வரைகிறார்கள். ஸ்காட் ஸ்டுடியோ ஸ்டோரிலைன் என்பது இன்று மிகப் பிரபலம்.
தமிழில் இதுபோன்ற முயற்சிகள் இல்லையா. பலரும் முயற்சி செய்வது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுக்கும் இணைய வழியில் சிறார்களுக்கு பஞ்சு மிட்டாய், புத்தக நண்பன் இவற்றோடு இணைந்து நடத்தும் ‘நான் வாசித்த புத்தகம்’ – நிகழ்வுகள்; த.மு.எ.க.சவின் அறம் கிளையின் முகிழ் வாசிப்பறை நடத்தும் சிறார் இணையக் கூடல்கள் என பலவற்றை சொல்லலாம்.
அந்த வரிசையில் நாம் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம் ஒன்றும் தனியே துவங்கப்பட்டுள்ளது.சங்கத்தை வாழ்த்தி வரவேற்கும் அதே சமயம் தமிழ் சிறார்களின் புத்தக வாசிப்பை அவர்கள் வீட்டிலிருந்தபடியே அரவணைக்க விரைந்து ஒரு திட்டத்தை அறிவித்துப் பயணிக்க வேண்டுமே எனும் கவலையும் எழுகிறது. எது எப்படியோ இன்றையறம் புதிய முழக்கம் இதுதான். – ஆசிரியர் குழு