தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. ‘என்.எஸ்.’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சங்கரய்யா அவர்கள் 15.7.2021ல் 100வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.
அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வெளியிட்டால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு பேருதவியாக இருக்கும் என்று அவரிடம் கூறினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகே ஒப்புக்கொண்டார். அவரது சகோதரர் எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டு இந்த நூல் வெளியாகிறது.
தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனி மனிதரின் வரலாறு மட்டுமல்ல. தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஒரு பகுதி என்று சொன்னால் அது மிகையல்ல.
தோழர் என்.எஸ். ஒரு படித்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையார் 1911ல் பம்பாய் சென்று
கொதிகலன் பொறியியல் படிப்பை முடித்து மதுரையில் பொறியாளராக பணியாற்றியிருக்கிறார். கல்வியின் அருமை பெருமையை அன்றைக்கே அறிந்த குடும்பம் அது. தனது மகன் படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தந்தையின் கனவு. சங்கரய்யா பள்ளிப்படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.
அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டம்
வீறுகொண்டு எழுந்த காலம் அது. சுதந்திரப் போராட்ட போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில்
மதுரையும் ஒன்று. சங்கரய்யாவின் பாட்டனார், தந்தை ஆகியோர் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். குடும்பச் சூழல் காரணமாக இயல்பாகவே இளைஞரான சங்கரய்யாவிடம் முற்போக்கான சமூகப் பார்வை இருந்தது.
மதுரை மாநகரில் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திரப்போராட்ட பெரு நெருப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக மாணவர்களை திரட்டும் பணியில் சங்கரய்யா ஈடுபட்டார். இதனால்
ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து வெளியேற்ற முயற்சித்தது. வேலை நிறுத்தம் செய்வோம் என்று சங்கரய்யா உள்ளிட்ட மாணவத் தலைவர்கள் அறிவித்த காரணத்தினால் கல்லூரி நிர்வாகம் பின்வாங்கியது. மதுரையில் மாணவர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை அணி திரட்டியதோடு கம்யூனிஸ்ட் கட்சியிலும் தம்மை இணைத்துக்கொண்டார் அவர். பட்டப்படிப்பின் இறுதியாண்டு தேர்வை எழுதுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு 18 மாதங்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.
படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி இளைஞரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பைத் துறந்து நாட்டின் விடுதலைக்கான போராட்டப் பாதையை தனது வாழ்க்கைப்
பாதையாக தேர்வு செய்தார் அவர். அன்று முதல் இன்று வரை அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட்டாக, சமரசமற்ற போராளியாக அவரது வாழ்க்கைப் பாதை தொய்வின்றி தொடர்கிறது.
நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகள் கடந்தபின்பும் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமையும் சாதீய வேறுபாடுகளும் நிலவுவதை காணமுடிகிறது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்பே தோழர் சங்கரய்யா சாதி மறுப்பு-மத மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். அவரது துணைவியார் நவமணி பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதப்பிரிவைச் சேர்ந்தவர்.
சங்கரய்யாவின் குடும்பப் பெரியவர்களுக்கு இந்தத் திருமணத்தில் தயக்கம் இருந்தபோதும் கலப்புத் திருமணம்-காதல் திருமணம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சாதிய வேறுபாடு கூடாது என்பதை வார்த்தைகளால் அன்றி வாழ்க்கையாலும் நிரூபித்து சிறந்த முன்னுதாரணமாக அன்றைக்கே திகழ்ந்தவர். அவரைப் பின்பற்றி அவரது குடும்பத்தில் பலரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். அவரது குடும்பமே சமத்துவபுரமாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை மற்றும் 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர். மதுரை சதிவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் நாட்டுக்கு விடுதலை கிடைத்தபோதுதான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். சிறை வாசலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து வரவேற்றக்காட்சியை இன்றைக்கும் தோழர் சங்கரய்யா பசுமையாக நினைவு கூர்வார்.
1944ஆம் ஆண்டிலேயே ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தினுடைய இன்றைய மதுரை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்கள் கட்சி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெருமை அவருக்கு உண்டு. அதன் பிறகு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தனக்கு தரப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், மத்தியக்குழு உறுப்பினர், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர், அகில இந்திய செயலாளர் மற்றும் தலைவர் தீக்கதிர் ஆசிரியர் என கட்சி அளித்த அனைத்து பொறுப்புகளையும் அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றியவர் தோழர் சங்கரய்யா.
தமிழக சட்டப்பேரவைக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட அவர் முன்னுதாரணமான சட்டமன்ற உறுப்பினராக
பணியாற்றியவர். எந்த ஒரு பிரச்சனையையும் கட்சிக் கண்ணோட்டத்தில் எடுத்துரைக்கும் திறம்பெற்றவர். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே மெய்யுண்டாகும்”என்ற பாரதியாரின் வரியை தோழர் சங்கரய்யா அடிக்கடி கூறுவார். இதற்கேற்ப மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தனது கருத்துக்களை உண்மை ஒளியில் தீர்க்கமாக எடுத்துரைப்பார்.
உதாரணமாக, 1967ம் ஆண்டு அண்ணா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றிருந்த காலம் அது. சட்டப்பேரவையில் மொழிப் பிரச்சனை குறித்து விவாதம் நடந்தது. அண்ணா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது தோழர் சங்கரய்யா, கட்சிக் கண்ணோட்டத்தில் தனது கருத்துக்களை எடுத்துவைத்தார்.
தோழர் ஏ.பாலசுப்பிரமணியம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துவைத்தனர். இதைத் தொடர்ந்து அண்ணா அவர்கள், தாம் முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஒரு திருத்தத்தை கொண்டுவந்தார். தமிழகத்தில் தமிழ் பயிற்று மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லா கல்லூரிகளிலும் இருக்கவும், நிர்வாக மொழியாக பல்வேறு துறைகளில் தமிழ் ஐந்தாண்டு காலத்திற்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என இம் மன்றம் தீர்மானிக்கிறது” என்பது அண்ணா முன்மொழிந்த திருத்தம். இதை அவை ஏற்றுக்கொண்டது.
தோழர் சங்கரய்யா தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர் களில் ஒருவர். மேடையில் அவர் பேசுவது, சிங்கம் கர்ஜிப்பது போன்று இருக்கும். எந்த ஊருக்கு பேசச் சென்றாலும் அந்த ஊரின் பெருமையை எடுத்துச்சொல்வதோடு அந்த ஊரின் போராட்ட வரலாற்றையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட
தலைவர்களையும் நினைவு கூர்வார். இது கேட்கும் மக்களை
உடனடியாக ஈர்த்துவிடும். அதைத் தொடர்ந்து எந்தவிதமான பிசிறுமின்றி அரசியல் கருத்துக்களை முன்வைப்பார். கட்சி வட்டாரத்தை தாண்டியும் அவரது பேச்சைக்கேட்க பெருமளவில் மக்கள் கூடுவார்கள். முதுமையின் காரணமாக அவரது உடல்நலம் குன்றியபோதும், குரல் வளமும் கருத்து வளமும் ஒருபோதும் குன்றியதில்லை.
அதே போன்று எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள மூத்த தோழர்களை நினைவு கூர்ந்து அழைத்துப்பேசுவது அவரது வழக்கமாகும். கட்சியில் உள்ள அனைத்துத் தோழர்களின் குடும்ப நலன்களையும் ஒரு குடும்பத் தலைவர் என்ற நிலையிலிருந்து அவர் விசாரிப்பது நெகிழச்செய்வதாக இருக்கும்.
1940களில் மதுரையில் மக்களைத் திரட்ட கலை இசை வடிவங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தியது. கரகாட்டம், பாடல், ஆடல், நாடகம் என பல வடிவங்களில் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்தது. வங்கத்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட “வங்கப்பஞ்சம்” என்ற நாடகத்தில் கே.பி.ஜானகியம்மாள், அவரது கணவர் எஸ்.குருசாமி, கே.பாலதண்டாயுதம் ஆகியோருடன் இணைந்து தோழர் சங்கரய்யாவும் நடித்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கேற்ப மதுரை மணவாளன் எழுதிய பாடல்தான் “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா எம் தோழா”
இந்தப் பாடலுக்கு எம்.பி.சீனிவாசன் இசையமைத்தபோது ஜானகியம்மாள், குருசாமி, சங்கரய்யா ஆகியோர் பார்வையாளர்களாக உடனிருந்துள்ளனர். செம்மலர் இலக்கிய ஏட்டில் எழுதி வந்த எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாவதில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
கட்சியின் மாநில மையப்பணியில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருபவர் தோழர் சங்கரய்யா. தன்னை விட வயதில், அனுபவத்தில் குறைந்த தோழர்களைக்கூட சமமாகக் கருதி பழகுவதும், கருத்துக்களைக் கேட்பதும் அவரது அரிய குணங்களில் ஒன்றாகும்.
ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்வது அவரது வாழ்க்கை. அவர் அறிவுரையால் அல்ல. தனது அறவாழ்க்கையால் இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உத்வேகமாக திகழ்கிறார். மனித குல நன்மைக்காக அர்ப்பணிக்கப் படும்போது ஒருவரது வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது என்பது மாமேதை மார்க்சின் கூற்று. அர்ப்பணிப்பும் தியாகமும் தொண்டறமும் நிறைந்த பெருவாழ்க்கை தோழர் சங்கரய்யா அவர்களுடையது.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் பயில்வதும் அந்தப் பாதையில் நடைபோட பழகுவதும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
என். சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் புத்தகத்தின் முன்னுரையிலிருந்து l
previous post