பேரா. ராஜ்ஜா அவர்களின் வாழ்வு மேம்படக் காரணமாக இருந்த 16 ஆளுமைகள் குறித்த இனிமையான நினைவுகளின் பதிவே இந்நூல். நூலுக்கு மாந்தன் இதழாசிரியர் திரு.ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ அணிந்துரை வழங்கியுள்ளார். மூத்தோரை மதித்தல், கற்றோருடன் சேரல், நட்பு பாராட்டல், நன்றி கூர்தல் குறைந்து வரும் காலகட்டத்தில் ராஜ்ஜா ஒரு மாறுபட்ட மனிதராகவே காணப்படுகிறார் என்று சரியாகவே கணித்துள்ளார்
1.பீட்டர் சாமியார்:
காந்தி வீதியில் அமைந்துள்ள பெத்தி செமினேர் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர் பீட்டர் சாமியார் அவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களை தகுதியுள்ளவராக மாற்ற இவர் கையாண்டது இரண்டு தந்திரங்கள். ஒன்று பிகில் மற்றது பிரம்பு. ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே இவை இரண்டும் ஜோப்பைவிட்டு வெளியே வருமாம்.
பீட்டர் சாமியாரின் வகுப்பைக் கேட்பதற்காக இவர் படிக்கும் வகுப்பிலிருந்து ஆசிரியருக்குத் தெரியாமல் தவழ்ந்துசென்று அவர் பாடம் நடத்தும் பக்கத்து வகுப்பறைக்கு திருட்டுத்தனமாகப் போனதையும் ஒருநாள் மாட்டிக்கொண்டதையும், தன்னை “காட் பிளெஸ் யு மை சன்” என்று தட்டிக் கொடுத்துக் கொண்டே சொன்னது இன்று பலித்ததையும் சொல்லி ராஜ்ஜா புளகாங்கிதம் அடைகிறார்.
2.பேராசிரியர் சாந்தலிங்கம்:
பேரா சாந்தலிங்கம் வகுப்பு நடத்திய முறை கோடை காலத்தில் ஒரு கிளாஸ் நிறைய லஸ்ஸி குடித்தது போல குளுமையாக இருந்தது என்கிறார். நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இவரை அணுகிய போது பழைய புத்தகக் கடைக்கு சென்று வாங்கிப் படிக்கச் சொன்னவர் பின்னர் சிரித்துக் கொண்டே தனது நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொடுத்து மறக்காமல் திருப்பிக் கொடுக்கச் சொன்னதையும் நினைவு கூர்கிறார்.
3.எழுத்தாளர் கோதண்டராமன்:
புதுச்சேரி நகரின் அழகில் மயங்கி தெபாஸினே ரிஷ்மோன் வீதியில் இருந்த வீட்டின் நூலகத்தைப் பார்த்து மயங்கிநின்று பின் திரு.கோதண்டராமனுடன் தொடர்பு ஏற்பட்டதை அழகாக விவரிக்கிறார். திரு.கோதண்டராமன் தனது மரணத்திற்குப் பின்னர் ராஜ்ஜாவிடம் கொடுக்கச் சொல்லி ஒரு அன்புப் பரிசை மனைவியிடம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதுதான் ராஜ்ஜா உருவாக்கிய நூலகத்தின் ஒரு பகுதி.
4.போலீஸ் அதிகாரி ஜார்ஜ் மோசஸ்:
மாணவர் போராட்டத்தின் போது போலீஸ் அதிகாரி ஜார்ஜ் மோசஸ் அவர்களுடன் மோதலில் தொடங்குகிற நட்பு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்தாளனாக சந்திப்பதில் தொடர்கிறது. அப்போது ஜார்ஜ் அவர்கள் யூத் ஏஜ் எனும் மாத இதழை நடத்திக் கொண்டிருக்கிறார். இது புதுச்சேரியிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் இலக்கியச் சிற்றிதழாகும். இதற்கு வாசகர்களும் அதிகம். இந்தச் சிற்றிதழில் ராஜ்ஜா அவர்களின் முதல் படைப்பு மறு பதிப்பாகிறது. பின்னர் ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க ஆர்வம் கொண்டோரைக் கொண்டு தொடங்கப்பட்ட யூத் லிட்டரரி கிளப்பில் பங்கேற்றதால் ஆங்கில அறிவு வளர்ந்ததாகவும், அதுவே பின்னர் ஒடிசா அரசு வழங்கிய ராக் பெபில்ஸ் போன்ற விருதுகளைப் பெற உதவியதாகவும் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
5.அமெரிக்க வியாசர் மேகி லிட்ச்சி கிராஸ்ஸி:
கெ.டி.சேத்னா கேட்டுக் கொண்டதற்கிணங்க வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகளை ராஜ்ஜா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சேத்னா இவரிடம் சொன்னது “கடிதங்கள் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி; அவை உன் மனதை எந்த விதச் சலனத்திற்கும் ஆளாக்கக்கூடாது” என்பதே. சேத்னா துணையுடன் லிட்ச்சியைச் சந்திக்கிறார். லிட்ச்சியின் தந்தை ஸ்பானிஸ் நாட்டவர். தாய் பிரெஞ்சுப்பெண்மணி. ஆங்கிலம் கற்றுக் கொண்டதோ ஒரு ஆங்கிலப் பெண்மணியிடம். கல்லூரிப்படிப்பு தென் ஆப்ரிக்காவில். இவரோ ஒரு அமெரிக்கப் பிரஜை. திருமணம் செய்து கொண்டதோ ஒரு இத்தாலியரை. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவர். இவரின் திறமை கண்டு அரபிந்தோ ஆசிரம அன்னை இவரை தனது காரியாதரிசியாக்கிக் கொண்டதாக ராஜ்ஜா குறிப்பிடுகிறார்.
6.அமல்கிரன் என்கிற கெ.டி.சேத்னா:
சேத்னா உலகப் புகழ் பெற்ற மதர் இந்தியா இதழை நடத்தி வந்தவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மதர் இந்தியாவில் ராஜ்ஜா நூல் விமர்சனம் எழுதுகிறார். கவிதை குறித்து சேத்னா கொடுத்த விளக்கம் இருக்கிறது பாருங்கள்… “கவிதை கவிதைதான். அதில் நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று ஏதும் இல்லை. கவிதை எழுதவேண்டுமானால் உலகக் கவிகளைப் படி. ரசித்துப் படி. உனக்கே புரியும் கவிதை என்றால் என்ன என்பது. பின் கவிதை எழுது” என்று ராஜ்ஜாவை உற்சாகப்படுத்தி எழுதச் சொல்லியிருக்கிறார்.
7.கன்னடச் சித்தர் மாதவ் பண்டிட் :
மாதவ் பண்டிட் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆசிரமத்தின் தி அட்வெண்ட் என்ற காலாண்டிதழும், வேர்ல்ட் யூனியன், சர்வீஸ் லெட்டர் என்ற இரண்டு மாத இதழ்களும் வந்து கொண்டிருந்தன. மனம் சரியில்லாத போதெல்லாம் அவரிடம் ராஜ்ஜா செல்வதும் ராஜ்ஜாவுக்கு வாழ்க்கை குறித்து பல கருத்துருக்களை எளிமையாகச் சொல்லுவாராம். மாதவ் பண்டிட் மங்களூரைச் சேர்ந்த கன்னடத்துக்காரர் என்றாலும் ஆசிரமவாசி.
8.மொழியாக்கத்திற்கு முக்கியத்தும் தந்த கவிஞர் மீரா:
மீராவைச் சந்திக்க விரும்பினார் ராஜ்ஜா. மீராவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பேரா.பஞ்சாங்கம் ராஜ்ஜா அவர்களின் வீட்டிற்கே மீராவை அழைத்து வருகிறார். ராஜ்ஜா வீட்டு நூலகத்தைப் பார்வையிட்டுவிட்டு தனது பதிப்பகம் சார்பில் வெளியிட நூல்கள் கேட்கிறார். வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பினையும், பாரதியின் வசன கவிதைகளையும் பதிப்பிக்க எடுத்துச் செல்கிறார். 1981-ல் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள் ஆங்கிலத்தில் THE STUPID GURU AND HIS FOOLISH DISCIPLES என்ற தலைப்பிலும், 1982-ல் பாரதியின் வசன கவிதைகள் THE SUN AND THE STARS என்ற தலைப்பிலும் வெளிவந்தன. இரண்டுமே அகரம் வெளியீடுகளாக வந்தன.
9.எழுத்துச் சித்தர் கெளதம நீலாம்பரன்
நீலாம்பரனை ராஜ்ஜாவுக்கு அவர் தாயார் தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கெளதம நீலாம்பரனின் உறவின் எல்லைகள் நாடகத்தை புதுச்சேரி வானொலிக்காக BOUNDS OF RELATIONSHIPS என்ற தலைப்பிட்டு மொழிபெயர்ப்பு செய்தார். கெளதம நீலாம்பரனின் புத்தர்பிரான் தொடரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் ராஜ்ஜா.
10.தர்மகர்த்தா வரதராசு:
ராமலிங்க சுவாமிகளின் தீவிர பக்தர் வரதராசு ராஜ்ஜாவிடம் சொன்னாராம் “நீ எவ்வளவு உயர்ந்தாலும் பழசையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க மட்டும் என்றும் மறந்துவிடாதே”. ஐயனார் கோவில் ஸ்தல வரலாற்றை எழுதும்படி வரதராசு கேட்டுக் கொள்ள, கோவில்கள் பக்கமே போகாத ராஜ்ஜா கஷ்டப்பட்டு புதுச்சேரியிலுள்ள கோவில்கள் பற்றிய தகவல்களையெல்லாம் சேகரித்துத் தொகுத்து ANCIENT TEMPLES AND LEGENDS OF PONDICHERRY என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
11.ஆருயிர் நண்பர் ஞானசேகரன்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கச் சென்ற போது ஏற்பட்ட நட்பு. இது குறித்துச் சொல்லும் போது “இப்போதெல்லாம் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. ஞானசேகரன் துணைகொண்டு இவரது முதல் ஆங்கில கவிதைத் தொகுப்பு FROM ZERO TO INFINITY வெளியானது. இந்த நூல் கொல்கத்தாவின் மிகப்பெரிய இலக்கிய விருதான மைக்கேல் மதுசூதன் அகாதமி விருதைப் பெற்றது.
12.அமெரிக்காவில் எனக்கொரு தாய்
ஒரு நாள் இவருடைய படைப்பைத் தாங்கி PROPHETIC VOICES எனும் அமெரிக்க சஞ்சிகை வருகிறது. அத்துடன் எங்கள் பத்திரிக்கைக்கும் படைப்புகளை அனுப்புங்கள் என்கிற ரூத் ரூத் வைல்ஸ் ஷீலர் கையொப்பத்துடன் கடிதம் வருகிறது. இவர் சில கவிதைகளையும், கதைகளையும் அனுப்ப, இவர் எழுதிய THE BLOOD என்ற சிறுகதை பிரசுரமாகிறது. இந்தியப் பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கதையினை புஷ்கார்ட் விருதுக்கு ரூத் அம்மையாரே பரிந்துரைக்கிறார். ஆனால் விருது கிடைக்காமல் போனபோது ராஜ்ஜாவைவிட அதிகம் வருத்தப்பட்டவர் ரூத் அவர்களே.
13.என்னைத் தலை நிமிர வைத்த என் சிநேகிதி ரீத்தா:
ராஜ்ஜாவின் சிநேகிதி ரீத்தா ராஜ்ஜா எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பிஸி பி புக்ஸ் மூலமாக புத்தகங்களாகக் கொணர்ந்தார். GLIMPSES OF PONDICHERRY, A CONCISE HISTORY OF PONDICHERRY, FOLKTALES OF PONDICHERRY, BUSY BEE BOOK OF CONTEMPORARY INDIAN ENGLISH POETRY ஆகிய நூல்கள் மலர்ந்தன. ROUTLEDGE நிறுவனம் வெளியிட்ட ENCYCLOPAEDIA OF POST-COLONIAL LITERATURES IN ENGLISH எனும் கலைக்களஞ்சியத்தில் ராஜ்ஜா குறித்து கட்டுரையினை ரீத்தா அவர்கள் வழங்கியுள்ளார்.
14.என் வீட்டை நூலகமாக்கிய மணி:
பழைய புத்தகக் கடைகளை தங்கச்சுரங்கம் என்கிறார் ராஜ்ஜா. புதுச்சேரியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்னையிலிருந்து பழைய புத்தகங்களோடு வந்து கடை போடும் திரு.மணியை ராஜ்ஜா தனது நெருங்கிய நண்பராகவே கருதியிருக்கிறார். பழைய புத்தகக் கடைகளில் தோண்டத் தோண்ட புதையல் போல கிடைத்துக் கொண்டே இருக்குமாம். இதற்காக எல்லா புத்தகக் கடைகளிலும் ராஜ்ஜா கணக்கு வைத்திருப்பாராம். இவரிடம் ஆங்கிலம் கற்க வரும் மாணவர்கள் கொடுக்கும் மாத ஊதியத்தை புத்தகங்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். திரு.மணியின் கடைக்குச் சென்றதால் பல மொழி எழுத்தாளர்கள் நிறைய பேர் ராஜ்ஜாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். மணி இவரின் நெருங்கிய நண்பராக இருப்பதில் வியப்பென்ன…
15.என்னையும் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியனாக்கி அழகு பார்த்தவர்
ராஜ்ஜாவுக்கு குறிஞ்சிவேலன் என்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளர் கிடைக்கிறார். குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து பல நாவல்களை தமிழில் மொழி பெயர்த்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரைப் பற்றி ராஜ்ஜா சொல்லும் போது “மாட்டு டாக்டர் செல்வராசு ஓய்வு பெற்றிருந்தாலும், குறிஞ்சிவேலனுக்கு ஓய்வே கிடையாது.. ஒருவரிடம் இலக்கிய அக்னிக் குஞ்சினை அவர் கண்டு விட்டால் அதை காட்டினில் பொந்திடை வைத்து விடுவார். பிறகு என்ன ? தீம்தரிகிட தித்தோம்தான்” என்கிறார். பின்னர் ராஜ்ஜாவை ஆசிரியராகக் கொண்டு டிரான்ஸ்பயர் என்ற ஆங்கில இதழும் மலர்ந்தது.
16.என் குருவாகி வந்த மனோஜ் தாஸ்..
சாகித்ய அகாதெமி இருமுறை மனோஜ் தாஸ் அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது. மனோஜ்தாஸ் பல நேரங்களில் தான் பங்கேற்க முடியாத கூட்டங்களுக்கு ராஜ்ஜாவை அனுப்பி வைத்திருக்கிறார். மனோஜ் தாஸ் இலக்கிய வாரிசு என்று தன்னை அறிவித்தது மிகப்பெரிய நோபல் பரிசு என்கிறார் ராஜ்ஜா. மனோஜ் தாஸ் குறித்து 1992-ல் PROBING THE PSYCHE: SHORT STORES OF MANOJ DAS இவர் ஆய்வு செய்த ஆராய்ச்சி நூலை புதுதில்லி B R PUBLISHING HOUSE நிறுவனம் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது.
நண்பர்கள் அமைவதெல்லாம் வாழ்க்கையில் கிடைத்த அரிய வாய்ப்பு. திரு.ராஜ்ஜா அவர்களுக்குக் கிடைத்த ஆளுமைகள் மற்றும் அவர்களை ராஜ்ஜா உரிய முறையில் பயன்படுத்திக் கொண்ட விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த நூல் ராஜ்ஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.. ராஜ்ஜா அவர்களின் உழைப்பு மலைப்பினைத் தருகிறது.. ராஜ்ஜா இந்த அரிய பணியினை செய்திருக்கிறார்.. பாராட்ட வேண்டிய பணி.. l
previous post