உலகளவில் மட்டுமல்ல; இந்தியளவிலும் பெரும் தொற்று பற்றி நமக்கு நீண்ட அனுபவம் உண்டு. காலரா பெரும் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை உலகளவில் 19 மில்லியன், இந்தியளவில் 8 மில்லியன் (1817-1920) பிளேக் உலகளவில் 13 மில்லியன், இந்தியளவில் 20 மில்லியன்.(1894-1920) இன்புளுயன்சா உலகளவு 40 மில்லியன், இந்தியளவில் 20 மில்லியன். (1918 -1920) ஆக சரிபாதிக்கும் மேல் பெரும் தொற்றால் நம் இந்திய மக்களை இழந்துள்ளோம். அன்றைய மருத்துவ அறிவின் உதவியால்தான் அதனையும் கடந்தோம். ஆனால் இன்று புதிதாக நம்மிடையே வந்துள்ள கரோனா பெருந்தொற்று முற்றிலும் புதிது; கடந்த கால பெருந்தொற்று படிப்பினையும், கூடுதலாக இன்றைய நவீன மருத்துவம் கணக்கில் எடுத்து கொண்டது.இன்றைய நவீன மருத்துவத்தின் உலகளாவிய கூட்டு முயற்சியுடன் வெகுவிரைவாக தடுப்பூசியை கண்டறிந்தோம் என்பது மிகவும் சவாலான விஷயம். அதே நேரத்தில் லட்சகணக்கான மக்களையும் இழந்துள்ளோம். அந்த வகையில் நம்மிடையே காணப்பட்ட கரோனா குறித்த பயம், பீதி, வதந்தி, வைரஸ் பரவும் வீதம், பரவும் வேகம், அதனால் ஏற்படும் உயிர் இழப்பு சதவீதம், தடுப்புசி வேலை செய்யும் விதம் பற்றியும் எளிய தமிழில் ஹேமபிரபா ஒரு கையேடாக நமக்கு அளித்துள்ளார். இந்த கொடுங்காலத்தில் தெளிவு ஏற்படுத்திய வழிகாட்டி நூல் என்றால் மிகையாகாது.
நானோ மீட்டர் அளவில் இருக்கும் வைரஸ் என்ற உயிரியை 1879 பாக்டீரியாவை விட சிறிய உயிரினம் என்று வகைப்படுத்திய தே அன்றைய காலத்தில் அதிரடியான சிந்தனைதான். 1930 ஆம் ஆண்டு எலக்ட்ரான் நுண்ணோக்கி செயல்பாட்டுக்கு வந்ததும் 1960 க்கு பிறகு வைரஸ் பற்றிய புரிதல் அதிகமானது. அதனால்தான் பல வகையான வைரஸ்ஸை வகைப்படுத்த முடிந்தது. ஆகையால்தான் 2019 நவம்பரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸானது 2020 பிப்ரவரிக்கு பிறகு உலகம் முழுவதும் உச்சரிக்கும் சொல்லாக மாறியது. அதிவேகத்தில் கரோனா பற்றி பரவிய வதந்தி என்பதும் கரோனாவைவிட அதி பயங்கரமானது. சீனாவை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு தூற்றினோம். அதனை இன்று நாம் மறந்து இருக்கலாம். ஆனால் சீனா செய்த மிக நல்ல காரியம் என்னவென்றால் SARS – Cov-2 கரோனா மரபுத்தொகுதி கிடைத்ததும் உலக சுகாதார மையத்துக்கு அனுப்பியவுடன் உலகளாவிய நச்சுயிரியல் மையங்கள் இந்த மரபுத் தொகுதியின் அடிப்படையில் மனிதருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்தன. இன்னும் அதன் ஆய்வுகள் பல வகையில் தொடர்கிறது. நோய் தொற்றுக்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தொற்றை கண்டறிதல். அதனையொட்டி நோய் கண்டறிதல் கருவி, நோய் தொற்று ஏற்பட்டவரை தனிமைப்படுத்துதல் என்பதான வேலைகள் தொடங்கின. வைரஸ் தொற்று வேகம் பல நாடுகளில் மிக வேகமாக பரவியது. குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா இதனால் அங்கு ஏற்பட்ட உயிரழப்புகள் ஏராளம். இன்று 2வது அலையில் இந்தியா சந்தித்துக்கொண்டுயிருக்கிறது. ஆனால் நாவல் கரோனா வைரஸ் தொற்று மட்டும் ஏன் வேகமாக பரவுவுகிறது? நமது உடலில் நோய் எதிரணுக்கள் எப்படி உற்பத்தியாகி, நோய் தடுப்பாற்றல் மண்டல செயல்பாடு பற்றி ஹேமபிரபா அணுகுமுறை அவ்வளவு எளிதானது. கரோனா நோய்தொற்றில் மூன்று படிநிலைகள் உள்ளன. முதல்நிலை நோய் அறிகுறியற்றது. இரண்டாம் நிலை மிதமான அறிகுறி. முன்றாம் நிலை தீவிரத் தொற்று. உலக அளவில் நடைபெற்ற ஆய்வு படி நோய்த்தொற்று தீவிரம் அடைந்தவர்களின் மரபணுவும், மிதமான தொற்று ஏற்பட்டவர்களின் மரபணுவும் ஒப்பீடு செய்யப்பட்ட போது நோய் தீவிரம் அடைபவர்களுக்கு மரபுரீதியாக பிழை இருப்பது கண்டறியப்பட்டது. இது இந்தியா மாதிரியான நாடுகளில் அதிகயளவில் இருக்க வாய்ப்பு அதிகம்.
இறுதியாக கரோனா தடுப்பூசிக்கு மட்டும் முதலில் இத்தனை எதிர்ப்பு ஏன்? நமது குழந்தைகளுக்கு இன்று ஏறத்தாழ அனைவரும் பல்வேறு தடுப்பூசிகளை செலுத்த ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இந்த நாவல் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம், பயம் ஏன் ஏற்பட்டது? இதனை பொருத்தவரை அரசுதான் மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தியிருக்க வேண்டும், அதனை செய்ய தவறியதும், தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்காமல் இருந்ததும் பெறும் தவறு. இன்று வரை தடுப்பூசி உற்பத்தியை அதிகபடுத்தாமல் இருப்பது என்பது மூன்றாவது அலைக்கான அழைப்பு ஆகும். எளிதாக விரட்டக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியை முறையாக பெண் குழந்தைகளுக்கு செலுத்தினால் பல ஆயிரம் மரணம் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் குறையும் என்கிறார் நூலாசியர். அது உண்மைதான் இதற்கெல்லாம் நமது அறிவியல் மனப்பான்மை மேம்பட வேண்டியுள்ளது. கரோனா தடுப்பூசியை ஒரு சிலருக்கு (சில லட்ச, கோடி) மட்டும் செலுத்துவது என்பது யாருக்கும் தடுப்பூசி இல்லை என்று சொல்வதற்குச் சமம். ஆகையால் இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்க அரசு அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்திய அளவில் 55 சதவீதம் முதல் 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே வலுவான எதிர்ப்பாற்றல் கிடைக்கும். தடுப்பூசி மூலம் பெரும் தொற்றைதான் ஒழிக்க முடியுமே தவிர மற்றபடி நோய்யை ஒழிக்க முடியாது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். l
previous post