அறிவியல் எழுத்தாளர்களில், அடுத்த தலைமுறை அடர்ந்த செறிவுடன் தயாராகிக் கொண்டு வருகின்றது. பொதுமக்களுக்கான/சமூகத்துக்கான அறிவியல் எழுத்துக்களில் பங்களிப்பை செலுத்திவருபவர்கள் சொற்பமான அளவில்தான் உள்ளனர். அதிலும் சிலர் துறைப்பின்புலம் இல்லாமல், அறிவியலின் மேல் உள்ள ஆர்வத்தினால் அதனைப் பற்றி 360°யில் தரவுகளையும் தகவல்களையும் முன்வைக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். எஞ்சியுள்ள வெகுசிலரே துறைப் பின்புலத்தில் இருந்து எழுதுகின்றனர். அப்படியாக, தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்வரவாக இந்நூலும், நூலாசிரியர்களும் அமைந்துள்ளனர்.
சாதாரணமாக வானத்தை அண்ணாந்து பார்த்து வியக்கத் தொடங்கும் சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்புடன் கட்டிப்போடும் அறிவியலின் ஒரு பிரிவு விண்வெளி அறிவியல்
ஏவூர்தி (Rocket), செயற்கைக் கோள் (Satellite),விண்வெளி ஓடம்(Space Ship),நூலில் பயணம், ஹபிள் டெலஸ்கோப், கிரகணங்கள், செவ்வாய் பயணம்,ஏலியன்ஸ்,வால் நட்சத்திரம், ISS(சர்வதேச விண்வெளி நிலையம்),ஏரோப்ளான் என, பலரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் மேலே பூமியை சுற்றி வருகின்றன. எனக்கு இந்த ஆர்வத்தை அறிமுகம் செய்து, அதனை மேலும் செழுமைப்படுத்திய எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் விஞ்ஞானி TV. வெங்கடேஸ்வரன், நெல்லை முத்து, அறிவியல் எழுத்தாளர்கள் என்.ராமதுரை, ஏற்காடு இளங்கோ,சி.ராமலிங்கம், பேரா.சோ.மோகனா உள்ளிட்டோர். இவர்களுடைய எழுத்துகளில் இருந்து இந்நூல் வேறுபடுகிறதா? எனக் கேட்டால், நிச்சயம் “ஆம்” என்றே சொல்வேன். 2018ல் இந்தியா மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் என்கிற பிரதமரின் அறிவிப்பால் எழுத உந்தப்பட்டதாக நூலாசிரியர் நூல் வெளியீட்டன்று கூறினார். உண்மையில் இந்தியாவால் மனிதரை விண்வெளிக்கு அனுப்ப இயலுமா? என்கிற கேள்விக்கான பதிலை விண்வெளித்துறைக்கான துவக்க வரலாற்றில் இருந்து துவங்கி, எதிர்கால செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது வரையிலும் 17 அத்தியாயங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் மிக சமீபத்தைய ஆய்வுப் போக்குகளையும் இணைத்து பதிலைக் கொடுத்திருப்பதில் இந்நூலின் தனித்தன்மை தெரிகின்றது. ஏற்கனவே விஞ்ஞானி த.வி.வெ யின் “நிலவுக்குள் பயணம்” நூலில் கிடைத்த சில விபரங்கள் இதிலும் கிடைத்தாலும் , இந்நூல் முழுமூச்சாக, தமது இலக்கில் இருந்து தவறாமல் சேர்க்க வேண்டிய விசயத்தை வாசகனுக்கு எளிதில் கடந்திவிடுவதில் மட்டும் நூலாசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கின்றனர்.
இதுவரை வெளிவந்த விண்வெளி தொடர்பாக ஹாலிவுட் முன்வைத்த திரைப்பார்வையை மாற்றி அவற்றை கேள்விகேட்க வைக்கின்றது. மனிதரை விண்ணுக்கு அனுப்புவதென்பது மந்திர தந்திரம் போன்ற நிகழ்வு அல்ல. அதற்கு முறையான பயிற்சியும், துல்லியமான கணக்கீடும், லாவகமக சூழ்நிலையைக் கையாளுந்திறனும் மிக முக்கியத்தேவை என்பதை சுவைபட எடுத்துரைக்கின்றது. இவற்றில் ஒன்றின் அளவு, கடுகளவேனும் குறைந்தாலும் கூட பல நூறு கோடிகள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விண்வெளியில் மனிதர்களின் உடல் நிலை எப்படி இருக்கும்? அங்கு தகவமைந்து கொள்ள என்னென்ன அம்சங்களைக் கைக்கொள்ள வேண்டும்? அங்கே நடைபெறுகின்ற நுட்பமான ஆராய்ச்சிகள், மீண்டும் புவிக்கு திரும்புகின்ற உயிரைப் பணயம் வைக்கும் புறப்பாடுகள்,புவிக்கு வந்தபின் அவர்களது உடலில் ஏற்படுகிற மாற்றங்கள், இடையே கவனக்குறைவால் ஏற்பட்ட விண்வெளி விபத்துகள், விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியில் உலக நாடுகளின் பங்களிப்பு, ஸ்பேஸ் எக்ஸ் ம் எலான் மாஸ்க்கும், எதிர்காலப் பயணங்களை சாத்தியப்படுத்துவதற்கான நடைமுறைகள் என, இந்நூல் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பலவற்றையும் அதன் நம்பகத்தன்மை குறையாமல் எடுத்துக்கூறுகிறது என்றால் அது மிகையில்லை. இத்துறையில் நிலவும் பெண்கள் மீதான பாராமுகமும் அங்கங்கே வெளிப்படுகின்றன. ஒரு வாசகர் இந்நூலை எந்த அளவு வாசித்துள்ளார் என்பதற்கு அவராகவே சுயமதிப்பீடு செய்யும் பொருட்டு பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள 70 கேள்விகள் புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தன. நாஜி ஜெர்மனியின் இருபெரும் விஞ்ஞானிகள் அமெரிக்காவையும், ரஷ்யாவையும் தஞ்சமடைந்ததில் இருந்து நவீன விண்வெளித்துறையின் வரலாறானது துவங்குகின்றது.
ஹிட்லரிடம் இருந்தவரை அறிவு அழிவிற்குப் பயன்பட்டது. அதுவே சனநாயகப் பாதையில் மாற்றம் கண்டபொழுது, இன்றைய தொலைதொடர்பு வசதிகளை நாம் சுகமாக அனுபவித்துக் கொள்வதற்கு உதவியாக இருந்திருக்கன்றது. எனவே அறிவை யார் கைக்கொள்ள வேண்டும், எதைச் சார்ந்துள்ள அறிவு எல்லோருக்குமானதாக இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வே பெரும் உதாரணம். பின்னாளில் முதலாளித்துவம் அதனை வெகு சுலபமாக மாற்றீடு செய்துவிட்டது தனிக்கதை.அதற்கும் நூலுக்கும் தொடர்பு இல்லை. நேற்று ஏதோ ஒன்றில் பின்வரும் வரிகளைப் படித்தேன். அனைத்து மதங்களும் மனிதர்கள் விண்ணிற்குச் செல்வது எப்படி எனக் கூறுகின்றன. ஆனால் அறிவியல் மட்டுமே அந்த விண்வெளி எப்படி இயங்குகிறது என்பதை நமக்கு விளக்குகிறது. அப்படியான விண்வெளி அறிவியலின் துறைசார் விஞ்ஞானிகள் இருவரும் இணைந்து எழுதியுள்ள இந்நூலும் அந்த மேற்கோளைப் போலவே அறிவியலின் உண்மையான அணுகுமுறைக்கு வலுவாக நியாயம் சேர்க்கின்றது. 6ம் வகுப்பு முதல் அனைத்துக் குழந்தைகள் உள்ள வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய நூலாக நண்பர்களுக்கு பரிந்துரை செய்கின்றேன். l
previous post