சந்திப்பு: மன்னை தேவதாஸ்
கடந்த மார்ச் 23-ம் தேதி காலை உலகப் புத்தக தினத்தன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் திருக்குறள் வரிகளை உரக்க வாசித்தனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குறள் வாசிப்பதை சாத்தியமாக்கியிருக்கிறது மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கம். இயல்பாகவே வாசிப்பு கலாச்சாரம் கொண்ட ஊர் மன்னார்குடி. எனினும் அந்தப் போக்கில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க, குறிப்பாக மாணவர்களிடத்தில் வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட மன்னார்குடி வாசிப்பு இயக்கம், கடந்த உலகப் புத்தக தினத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. அன்றைய தினம் நகரின் அனைத்து வீடுகளிலும் அடையாளபூர்வமாக ஒரே நேரத்தில் திருக்குறள் வாசிப்பை நடத்தியுள்ளது. நகரின் 33 வார்டுகளிலும் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் காலை நேரத்தில் திருக்குறள் வாசித்தனர்.
பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என ஒரு பெரும்படை தன்னார்வமாக உழைத்ததன் பயனாக அன்றைய தினம் திருக்குறள் வாசிப்பு ஒரு மக்கள் இயக்கமாக நடந்தேறியுள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது பற்றி மன்னார்குடி வாசிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ் அவர்களுடன் நடத்திய ஒரு நேர்காணலில் இருந்து…
கே: வாசிப்பு கலாச்சாரத்தில் மன்னார்குடிக்கான தனித்துவமான வரலாறு பற்றி சொல்லுங்கள்…
ப: இந்த கலாச்சாரம் களப்பிரர் காலத்திலிருந்தே கூட தொடங்கியிருக்கலாம். கி.பி.4ம்நூற்றாண்டில் அச்சுதவிக்கந்தர் என்ற களப்பிர மன்னன் ஆட்சியில் பிரபல பௌத்த நூல்களை எழுதிய புத்ததத்தர் மன்னார்குடி அருகேயுள்ள பூதமங்கலத்தைச் சேர்ந்தவர். அதேபோல் மன்னார்குடி அருகேயுள்ள மேலநாகையில் பத்துநாட்கள் தலைமறைவாய் இருந்தபோதுதான் மகாகவி பாரதிக்கு “பாருக்குள்ளே நல்லநாடு”என்றபாடல் கருக்கொண்டது. 1838-ம் ஆண்டிலேயே பின்லே கல்லூரி தொடங்கப்பட்டது என்பது இந்த நகருக்கு உள்ள நீண்ட கல்வி பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது.
1866-ம் ஆண்டு மன்னார்குடி நகராட்சி தொடங்கப்பட்டது. அப்போதே ரூ2500 செலவில் 3ஆரம்பப் பாடசாலைகளும்,13 உதவிபெறும் பள்ளிகளும் அன்றைய நகராட்சி நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் 15.9 1927 மன்னார்குடிக்கு வருகை தந்தார். அப்போது, தேசிய மேனிலைப்பள்ளிக்கு சென்ற அவர், விருந்தினர் பதிவேட்டில் “கீதையை மாணவ மாணவியர் கற்க வேண்டும்”,என குறிப்பெழுதியுள்ளார். இன்று புழக்கத்திலிருக்கும் பாரதி படத்துக்கு உருவம் கொடுத்தவர் ஆர்யா என்கின்ற பாஷ்யம் அய்யங்கார். அவர் மன்னார்குடியை அடுத்துள்ள சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஜெர்மனியின் மாக்ஸ்முல்லர் என்ற சமஸ்கிருத அறிஞரால் இந்தியாவின் மிகச்சிறந்த சமஸ்கிருத அறிஞர் என்று போற்றப்பட்ட ஸ்ரீராஜூ சாஸ்திரி அவர்களும் மன்னார்குடி கீழமுதல்தெரு சங்கர் மடத்தில் வேதம் நடத்தியவர். தனது இருபதாவது வயதிலேயே சாஸ்திரி பட்டம் பெற்ற இவர், முக்தியடைந்த காஞ்சிகாமகோடி பீடாதிபதி பரமாச்சார்யாவின் குருவிற்கு குரு.
அகில இந்திய அளவில் 1938-ம் ஆண்டில்தான் முதன்முதலில் முதியோர் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தஞ்சை மாவட்டத்தின் மையமாக இருந்த மன்னார்குடியில் இத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
மன்னார்குடி சஞ்சீவிகோயில் தெருவில் குடியிருந்த பொதுப்பணித்துறை பொறியாளர் எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்கள் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னைசென்று அன்னிபெசன்ட் அம்மையாரின் இயக்கத்தில் சேர்ந்து “புதுயுகம்”என்ற மாத இதழை வெளியிட்டார். இந்தியாவின் முதல் முதியோர் கல்வித்திட்டம் 28.4.1925 அன்று பெசண்ட் அம்மையார் தலைமையில் மன்னார்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை கனகசபை ஏற்றார்.
“முதியோர் கல்வி நூல்” கனகசபையால் தயாரிக்கப்பட்டு இரண்டு ஆண்டு பல மையங்களில் களப்பரிசோதனை செய்யப்பட்டு…”வாலிபர் நூல்”என்ற பெயர் மாற்றத்துடன் வந்தது. விவசாய வேலைக்காலம் முடிந்து ஆறுமாத காலத்திற்கு
“கௌமார குருகுலம்”என்ற பெயரில் வகுப்புகள் நடந்தன. பாடத்திட்டத்தில் மதம்,ஒழுக்கம், கிராமப் பொருளாதாரம், சுகாதாரம், தமிழ்மொழி, வரலாறு, புவியியல், அரசியல் நிகழ்வுகள், இயற்பியல்…..ஆகிய பாடங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட எட்டு வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நிலங்கள் தரப்பட்டன. சாகுபடி முடிந்தவுடன் கிடைத்த வருவாய், பகிர்ந்து கொள்ளப்பட்டது. விவசாய வேலை இல்லாத ஓய்வு காலத்தில் இந்த கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதேபோல் இந்தியாவிலேயே முதன்முறையாக இரட்டை மாடு பூட்டிய வண்டியில் 18.10.1931 விஜயதசமியன்று நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆலோசனையோடு வடிவமைக்கப்பட்ட நடமாடும் நூலகம் இந்த ஊரில்தான் தொடங்கப்பட்டது. மன்னார்குடியைச் சுற்றி 12 மைல் சுற்றளவில் 95 சிற்றூர்களுக்கு இந்த வண்டி சென்று வந்தது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கபப்பட்டார். புத்தகங்களை கடனாகப் பெற்று வண்டி அடுத்த சுற்று வரும்போது திரும்பக் கொடுத்து புதிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளும் முறை இருந்தது. 1931ம் ஆண்டு 280 நூல்களுடன் தொடங்கப்பட்ட இந்த நூலகம், 1937-ல் 2211புத்தகங்களுடன் விரிவடைந்தது. ஒரு வருட காலத்தில் இந்த பகுதியை 275 முறை இந்த நடமாடும் நூலக வண்டி சுற்றி வந்தது. மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில் இந்த வண்டியில் இசைத்தட்டுகள் இசைத்தன. நிறைய படங்கள் இடம்பெற்றன. இந்த மாட்டு வண்டி தற்போது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு 1936-ல் தஞ்சை மாவட்ட போர்டு மோட்டார் வண்டியில் நடமாடும் நூலகத்துடன் மருத்துவர்களையும் ஆங்காங்கே சிகிச்சை தர அனுப்பியதால் மக்கள் அப்பக்கம் திரும்பினர். அதே போல் மன்னார்குடி நகரின் வாசிப்பு கலாச்சாரத்துக்கு இன்னொரு அடையாளமாக கே.ஆர்.எம்.எஸ்டேட்டின் நூலகம் திகழந்தது. அங்கு 5052 தமிழ் நூல்கள், 729 சமஸ்கிருத நூல்கள், 274ஆங்கில நூல்கள் என தொன்மையான நூல்கள் பல இருந்தன. இப்படியாக மன்னார்குடியின் வாசிப்பு வரலாறு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
மன்னார்குடி வாசிப்பு இயக்கத்தின் நோக்கம் என்ன?
வீட்டுக்கொரு நூலகம், வீதிகள் தோறும் வாசகர் வட்டம் அமைப்பதுதான் நீண்ட கால நோக்கம். அதற்கான தொடக்கமாக நூல்களை வாசித்தோர் தாங்கள் வாசித்த நூல்களை சக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது…என ஆரம்பித்து தற்போது புத்தகத்திருவிழா நடத்துவது வரை வந்திருக்கிறோம். என்னதான் இணையவெளியில் நூல்கள் அறிமுகம் வந்தாலும் நேருக்கு நேர் புத்தகத்தைக் காட்டி..தேவைப்படுவோருடன் நூல்களைப் பகிர்ந்து கொள்ளும் அனுபவத்துக்கு இணையாகாது. அத்தகைய உணர்வுகளை அனுபவித்தபடி, இந்த கொரோனா சூழலில் ஆங்காங்கே சிறு நூலகங்கள், வாசகர் வட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஏராளமானோர் நூல்களை எடுத்துச் சென்று படிக்கிறார்கள். வாசித்து முடித்து வெறுமனே அடுக்கி வைத்திருந்த பல நூல்களை தற்போது நூற்றுக்கணக்கான வாசகர்களோடு பகிர்ந்து உள்ளோம். மன்னார்குடியில் உள்ள எல்.ஐ.சி. கிளையில் 90 நூல்களுடன் ஒரு வாசகர் வட்டம், இங்குள்ள தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் 140 நூல்களுடன் ஒரு வாசகர் வட்டம் தொடங்கியுள்ளோம். அதேபோல், மன்னார்குடி அரசு கல்லூரிக்கு 40 நூல்கள், மார்க்சிஸ்ட் கட்சி நகர அலுவலகத்தில் உள்ள நூலகத்துக்கு 350 நூல்கள், தெப்பக்குளம் துளிர் வாசகர் வட்டத்துக்கு 150 நூல்கள் வழங்கப்பட்டு சிறு நூலகங்களும், அங்கு வாசகர் வட்டமும் தொடங்கப்பட்டுள்ளன. புத்தக உண்டியல் தந்து குழந்தைகளை சேமிக்கச்செய்து, புத்தக தினத்திலோ, புத்தகத் திருவிழாவிலோ குழந்தைகளை புத்தகம் வாங்க செய்யும் திட்டமும் உளள்ளது.
மன்னார்குடி புத்தகத் திருவிழா அனுபவங்கள் எப்படி இருந்தன?
கடந்த 2019ம் ஆண்டு புத்தக திருவிழா நடத்தினோம். முதல் புத்தக திருவிழா என்பதால் பதிப்பகங்களை வரவழைப்பது சவாலாக இருந்தது. மக்களிடம் அங்கீகாரமும் மதிப்பும் அதிகரித்தது. பத்து நாட்களும் திருப்திகரமான கலை இலக்கிய இரவாக சென்றது. ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து நடத்திட நம்பிக்கை ஏற்பட்டது. தற்போது வாசிப்பு இயக்கம் விரிவடைந்து வருவதால் வரும் ஆண்டுகளில் புத்தக திருவிழா மேலும் சிறப்பாக நடைபெறும் என்பது நிச்சயமாக தெரிகிறது.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் பள்ளி மாணவர்களை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் வாசிப்பு இயக்கத்தில் ஏதேனும் உள்ளதா?
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் தற்போது எல்லா சிறுவர்களின் கைகளிலும் செல்போன் புகுந்து விட்டது. இந்த செல்போன்களையும், சிறுவர்களையும் பிரிக்கவே முடியவில்லை. மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படும் நோக்கில் அவர்களின் கைகளில் செல்போன்கள் திணிக்கப்பட்டன. ஆனால் இப்போது மிக மோசமான ஆன்லைன் விளையாட்டுகளில் அந்த சிறுவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆபாச வீடியோக்கள் கூட தாராளமாக அவர்களுக்கு கிடைக்கும் சூழல் உள்ளது. இது இளம் தலைமுறையை மிக மோசமாக பாதிக்கும். இந்த பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க புதத்க வாசிப்புதான் சிறந்த கருவியாக இருக்க முடியும்.
இதற்காக அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்ல வடிவில் பத்து பத்து குழந்தைகளைக் கொண்ட குழுக்களை ஏற்படுத்தி கதைகளாக, விளையாட்டுகளாக, பாடல்களாக அவர்களிடம் வாசிப்பை கொண்டு சேர்க்கும் திட்டம் உள்ளது. எனினும் கொரோனா சூழல் தடையாக உள்ளது. இதையும் உள்ளடக்கியே மாற்றை யோசிக்க வேண்டும்.
இழப்பதற்கு எதுவுமில்லை. எதையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
வாசிப்பு இயக்கத்தின் சார்பில் உலக புத்தக தினத்தன்று நடைபெற்ற குறள் வாசிப்பு நிகழ்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் யார் யாரெல்லாம் பங்கேற்றார்கள்?
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு கலைஇலக்கியபெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியோரின் கூட்டியக்கம் இது. எனினும், எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள். ஆட்டோ தொழிற்சங்கங்கள், சாலையோர வியாபாரிகள், தையற்கலைஞர்கள், தச்சர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ரோட்டரி சங்கம், ஜேசீஸ் சங்க நிர்வாகிகள், மனவளக்கலை மன்றத்தினர், இஸ்லாமிய கல்வி அமைப்பினர், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பெரியார் இயக்க தோழர்கள் என பல்வேறு திசைகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கெடுத்தனர். ஒவ்வொரு அமைப்பினரும் தங்களுக்கென சில வார்டுகளை பிரித்துக் கொண்டு, அங்கு வீடு வீடாக நேரில் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். இதனால்தான் உலகப் புத்தக தின நிகழ்வு மன்னார்குடியில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக வெற்றி பெற்றுள்ளது.
உலகப் புத்தக தினத்தில் எத்தனை பேர் எத்தனை இடங்களில் பங்கேற்றார்கள்?
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக இருப்பதால் இரண்டு இடங்களுக்கு மட்டும் வாசிப்பு இயக்க பொறுப்பாளர்கள் நேரில் சென்று குறள் வாசிப்பு நிகழ்வுகளை நடத்தினார்கள். ஆனால் நகரெங்கும் அனைத்து வார்டுகளிலும் சுமார் 25 ஆயிரம் வீடுகளில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே ஒரே நேரத்தில் குறல்களை வாசித்தனர். மக்கள் குறள் வாசித்த ஆயிரக்கணக்கான படங்களையும், வீடியோ பதிவுகளையும் இப்போது வரை எங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
உங்களுடைய இந்த முயற்சிகளுக்கு மன்னார்குடி நகர மக்களிடம் எத்தகைய வரவேற்பு இருந்தது?
நகரின் 25 ஆயிரம் வீடுகளுக்கும் நேரில் சென்று உலக புத்தக தின நிகழ்வு பற்றி குறைந்தபட்சம் குறைந்தபட்சம் இரண்டு
நிமிடங்களாவது பேசினோம். அப்போது, செல்போன் பிசாசுகளிடம் சிக்கிக் கொண்டு தங்கள் குழந்தைகள் படும்பாடு பற்றி அனைத்து பெற்றோர்களும் தங்கள் கவலைகளைக் கொட்டி தீர்த்தனர். அதனால் வாசிப்பு இயக்க முயற்சிகளுக்கு பெற்றோர்களிடம் மாபெரும் ஆதரவு இருந்ததை நேரில் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆட்டோக்கள் மூலம் வீதிகளில் பிரச்சாரம் செய்தபோது, தெருமுனைக் கூட்டங்களை கவனிப்பது போல பொதுமக்கள் நின்று, கவனித்து, காது கொடுத்து கேட்டார்கள். ஏராளமானோர் தாங்கள் வாசித்து முடித்த நூல்களை கொடுக்க முன்வந்தனர். தங்கள் தெருக்களில் வாசகர் வட்டம் அமைக்க பலர் அழைத்துள்ளனர். திட்டமிட்டு தொடர்ந்து செயல்பட்டால் ஆக்கபூர்வமான பல மாற்றங்களை நிகழ்த்துவதற்கு மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
வாசிப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
முன்பே கூறியது போலவே கல்விக்கூடங்கள் திறக்கப்பட இயலாத சூழலில் கொரோனா சூழலை கணக்கில் கொண்டு துளிர் இல்ல மாதிரியிலான செயல்பாடுகளை வார்டுகள் தோறும் பரவலாக்குவதை உடனடி பணியாகத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக புதிதாகக் கிடைத்திருக்கும் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் செயல்படுத்தப்படும். ஆண்டு தோறும் புத்தக திருவிழா நடத்துவது, மாணவர்களிடம் புத்தக உண்டியல் வழங்கி சேமிக்கச் செய்வது, வீடுகள் தோறும் நூலகமும், வார்டுகள் தோறும் வாசகர் வட்டமும் அமைப்பது நீண்ட கால திட்டங்கள்.
மன்னார்குடி நகரில் வாசிப்பு கலாச்சாரத்தை வளர்க்க அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் செய்யவேண்டியவைபற்றி..
டிஜிட்டல் நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். வார்டுகள் தோறும் வாசகர் வட்ட கூட்டம் கூட, பொது சிறுநூலகம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு நூலகங்களை தரம் மேம்படுத்தி புதிய நூல்களை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு பயிற்சிக்கான போட்டித்தேர்வு நூல்களை வழங்குவதோடு, அதற்கான தனியான வாசகர் வட்டத்தையும் ஏற்படுத்த வேண்டும். அறிவியல் கருத்துகளை பரவலாக்கும் துளிர் இல்ல செயல்பாடுகளுக்கு தேவையான டெலஸ்கோப் போன்ற கருவிகளை வாங்கித் தர வேண்டும். நகரில் சிறிய கோளரங்கம் அமைத்துத் தந்தால் வானவியல் தொடர்பான வாசிப்புகளை மேம்படுத்த முடியும்.
வீட்டுக்கொரு நூலகம்,,வீதிகள் தோறும் வாசகர்வட்டம் அமைக்கும் தங்கள் இலக்கு முழுமைபெள எவ்வளவு காலம் தேவைப்படும்?
இதை ஒரு தொடர் பணியாக மக்கள் இயக்கமாக எல்லா அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துக்காக எல்லா அமைப்புகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை பலப்படுத்த மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கம் தொடர்ந்து பல நிகழ்வுகளை முன்னெடுக்கும். இன்னும் இரண்டு மூன்று புத்தக திருவிழாக்களை நடத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த கனவுகள் நனவாக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. l