நூலகங்களுக்கு உயிரூட்டுவோம்
என்ன செய்ய வேண்டும் புதிதாக பொறுப்பேற்கும் அரசு? பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என்றாலே அவர்கள் உருவம் அவர்கள் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை வாசிப்பது மாதிரிதான் நம் கண்ணிற்கு தோன்றும். புத்தக வாசிப்பை கிராமம், நகரம் என்று பார்க்காமல் எடுத்துச் சென்றவர்கள் அவர்கள். அண்ணா காலத்து திண்ணை நூலகமும் கலைஞர் காலத்து அண்ணா நூலகமும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தொடங்கப்பட்ட கிளை நூலகங்களும் தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கான விதைகள். இன்று மிகவும் நலிவடைந்த துறையாக இருப்பது நூலகத்துறை. தூசி படிந்த புத்தகங்கள் கொண்ட பழைய அலமாறி வைத்த கிராமத்து நூலகங்கள் முதல், பிரமாண்ட அண்ணா நூலகம் வரை பேரழிவின் விளிம்பில் உள்ளன. நூற்றுக்கணக்கான காலியிடங்களை நிரப்பாமலேயே காலந்தள்ளுதல்… நிரப்பியவற்றை ஊழல் கலாச்சார மையங்களாக்கி சீரழித்தல் என நூலகத்துறை சந்தி சிரிக்கிறது. இது மிகவும் துரதிர்ஸ்டவசமான சூழல் ஆகும். 2019ஆம் ஆண்டு வரையிலான புத்தகங்களை நூலகத்திற்கு வாங்கிவிட்டதாக அரசு சொல்கிறது. அப்படி ஒன்று ஜனநாயகமாக உண்மையாக நடந்ததாக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் உறுதி செய்ய மறுக்கிறார்கள். எனவே கீழ்க்கண்டவற்றை தமிழகத்தில் பதவி ஏற்கப் போகும் புதிய அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகம் முழுதும் தமிழ் இதழ்களை தலைமை அலுவலகமே வாங்கி நூலகங்களுக்கு அனுப்பும்முறை அமலுக்கு வர வேண்டும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் வெளிவந்த தமிழ் நூல்களை நூலகத்திற்கு வாங்கியது குறித்து ஒரு தீவிர விசாரணை வேண்டும். நூலகங்களை மேம்படுத்த துறையை நவீனப் படுத்த ஆலோசனைகளை வாசகர் மக்களிடம் பெற்று தொகுக்க ஒரு வல்லுனர் குழுவை அமைத்து அதன் அறிக்கை பெற்று செயல்பட வேண்டும். நூலகத்திற்கு ஆணைக் குழுவில் வாசகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள், கொண்ட குழுவை அமைக்க வேண்டும். புத்தக தேர்வு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். கொரானா பேரிடர் காலத்தின் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நூலகத்துறை பதிப்பாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பொதுமக்கள், மாணவர்கள், நூலகத்தை நோக்கி வருவதற்கும் மக்களிடம் நூலகம் செல்வதற்கு புதிய உத்திகளை வகுத்து செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்களை அவ்வாண்டின் இறுதியிலேயே நூலகங்களுக்கு கொள்முதல் செய்திட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பெயர்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்களைப் பொதுத்தளத்தில் (Public Domain) வெளியிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் நூலக வரியை நூலக மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அண்ணா ஊர்ப்புற நூலகங்களை மறு சீரமைப்பு செய்து ஆண்டுதோறும் புதிய நூல்கள், பத்திரிகைகள், பருவ இதழ்கள் வாங்கப்பட வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாரம் ஒருமுறை நூலகப் பாட வேளை இருப்பதையும் மாதம் ஒரு முறை நூல் அறிமுகம், நூலகப் பயன்பாடு பற்றிய ஆளுமைகளின் உரை நிகழ்வுகளையும் உறுதி செய்து இளம்பருவத்தில் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். மக்களிடையே புத்தகப் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, உலகப் புத்தக தினத்தை மாவட்டம்தோறும் அரசு விழாவாக-புத்தகக் கண்காட்சிகளாக நடத்துவது அவசியம். சென்னையில் தேசிய, சர்வதேச புத்தகக் கண்காட்சிகளை அரசே நடத்திட முன்வர வேண்டும்.
குழந்தை இலக்கிய நூல்களுக்கு தனி நிதி ஒதுக்கீடும், தனி நூலக ஆணையும் பிறப்பிக்க வேண்டும். நூல் தேர்வுக்கு தனித்துவமான விதிமுறைகள் உருவாக்கப்படுவதும் அவசியம்.
பதிப்பாளர் நல வாரியத்தை மேம்படுத்தி பதிப்பகத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவித் தொகை திருமண உதவித் தொகை, வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
புதிய அரசு, மூச்சுத் திணறியபடி நோயாளிப் படுக்கையில் கிடக்கும் நூலகத்துறையை உயிர்ப்பித்து சமூக வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு – ஆசிரியர் குழு