தமிழ்நாட்டில் வாணியம்பாடி என்ற சிறிய ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும்கூட, தனது திறமையாலும் நேர்மையான உழைப்பாலும் சர்வதேச அளவில் முத்திரை பதித்து தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன்.
அமெரிக்காவில் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், பிஎச்டி படித்த பிறகு, கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக இருந்து அக்கல்வி நிறுவன வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர். அதன் பின்னர், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராகவும் (Science Counselor) , அதன்பிறகு 1978இல் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் (United Nations Centre for Science and Technology for Development) சீஃப் ஆஃப் நியூ டெக்னாலஜி பொறுப்பிலும் இருந்தார். பின்னர் ஐக்கிய நாடுகள் சபையிலேயே அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருமுறை, அதாவது ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் துணைவேந்தராக இருந்த காலத்திலும் அதற்குப் பிறகும் அவர் செய்த முக்கியப் பணிகளுக்காக தமிழக மக்களால் என்றைக்கும் நினைக்கப்பட வேண்டிய மாமனிதர் அவர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவியேற்றதும் நிர்வாகப் பொறுப்புகளைப் பரவலாக்கும் வகையில் டீன்களை நியமனம் செய்தார். பிளஸ் டூ மாணவர்கள் மருத்துவ, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதற்கு Ôமார்க் சென்ஸார் ரீடர்Õ என்ற நவீன தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்.
அவரது காலத்தில் தான் பொறியியல் மாணவர் சேர்க்கையில் Ôசிங்கிள் விண்டோ அட்மிஷன் சிஸ்டம்Õ என்கிற ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஒரு மாணவர் பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நிலை மாறி, ஒரே விண்ணப்பம் போட்டால் போதும், மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரிகளைத் தேர்வு செய்ய முடியும் என்ற நிலை உருவானது. மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டிய ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறை அவர் தமிழ் சமூகத்துக்கு அளித்த கொடை எனலாம்.
அந்தக் காலகட்டத்தில், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாலும்கூட, இரண்டாம் ஆண்டில்தான் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு அந்தந்தக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யும். தனியார் சுயநிதிக் கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்வதாக மாணவர்களிடம் வந்த புகார்களை அடுத்து, கல்லூரியில் சேரும் போதே பாடப்பிரிவும் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முறையைக் கொண்டு வந்தார். இவர் துணைவேந்தராக இருந்தபோதுதான், கிராமப்புற மாணவர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டு முறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேருகிற கிராமப்புற, குறிப்பாகத் தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்கு முதல் செமஸ்டரில் மாலை நேரங்களில் ஆங்கிலம் கற்றுத்தருவதற்கு ஏற்பாடுகள் செய்தவர். அத்துடன், அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேராசிரியர்களை நியமித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்தவர்..
இதேபோல, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதற்காகவும் அவர்களது பயன்பாட்டுக்காகவும் அனுமதி அளித்தவர். கிராமப்புற மாணவர்களுக்கு அவர்களது ஊர்களிலேயே கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு பவுண்டேஷன் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிக் காலம் முடிந்த பிறகு, 1996இல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பணியில் ஆறு ஆண்டு காலம் இருந்தார். அந்த கால கட்டத்தில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்துவதில் இவரது பங்கு முக்கியமானது. அதற்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடப் புத்தகங்களைத் தயார் செய்யும் குழுவிற்கு அவர் தலைவராக இருந்தார்.
இதே கால கட்டத்தில், மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஐ.டி. டாஸ்க் போர்ஸ் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த ஆனந்தகிருஷ்ணனின் வழிகாட்டுதலில் உருவானதுதான் தமிழக அரசின் வெற்றிகரமான திட்டமான சென்னையில் உள்ள டைடல் பார்க். முதலமைச்சரின் அறிவியல் ஆலோசகராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை) நியமிக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டை நடத்தியதில் ஆனந்தகிருஷ்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இணையத்தில் தமிழின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் தமிழ் விசைப் பலகையை (கீ போர்டு) முறைப்படுத்துவதில் அந்த மாநாட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம்) உருவானது.
தமிழ்நாட்டில் மருத்துவ, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த நுழைவுத் தேர்வு முறையினால் கிராமப்புற, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு அடைகிறார்கள் என்றும் இதனால் கோச்சிங் மையங்கள் பணம் சம்பாதிக்கவே இந்த முறை உதவுவதாக மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, தமிழக அரசு இவரது தலைமையில் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதையடுத்து, மால்கம் ஆதிசேஷய்யா உருவாக்கிய எம்ஐடிஎஸ் என்று அழைக்கப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்ட்டீஸ் கல்வி நிலையத்தின் தலைவராக இருந்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உள்பட பல்வேறு மாநில, மத்திய அரசுகளின் ஆய்வுக் குழுக்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் முதலில் பணியில் சேர்ந்த கான்பூர் ஐஐடியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவராகவும் (2007– — -2016) இருந்திருக்கிறார். சயின்ஸ் சிட்டி அமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாட்டில் பள்ளிப் பாடத்திட்டத்தை திருத்தி அமைப்பதற்கான குழுவின் தலைவராக இருந்தவர்.
2002ஆம் ஆண்டில் அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 2003இல் அவர் படித்த மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தலைமைப்பண்பு விருது (Distinguished Leadership Award of the University of Minnesota) கிடைத்தது. கான்பூரில் உள்ள சத்திரபதி சாகுஜ் மகராஜ் பல்கலைக்கழகம் (2010), கோட்டாவில் உள்ள ராஜஸ்தான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (2014) ஆகியவை கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி ஆனந்தகிருஷ்ணனை கௌரவித்துள்ளன.
பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்கூட ஆனந்தகிருஷ்ணன் எளிமையானவர். அனைவரிடமும் அன்புடன் பழகுவார். பணிகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதிலும் நேர்மையாகப் பணி செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தவர். தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கமாட்டார். விருதுநகரில் Ñஇந்திய மாணவர் சங்கம் நடத்திய மாநில மாநாட்டில் கலந்து கொண்டவர். சமூக அக்கறையுடன் செயல்படும் அமைப்புகள், அது எவ்வளவு சிறிய அமைப்பாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்களைப் பெருமைப்படுத்துவார். ஏதாவது பணிகளைச் செய்து கொண்டே இருப்பார். கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதி வந்த கல்வி தொடர்பான ஆங்கிலப் புத்தகத்தை சமீபத்தில்தான் எழுதி முடித்திருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த முப்பது ஆண்டுகளில் அவர் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார். ஓய்வு காலத்தை எளிமையாகவும் சமூகத்துக்குப் பயனுள்ள வகையிலும் எப்படி செயல்படுத்த முடியும் என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது நான்கு மகன்களும் அமெரிக்காவில் பணிகளில் இருந்த போதிலும்கூட, பிறந்த நாட்டுக்காகவும் தன்னை வளர்த்த மண்ணுக்காகவும் பணிபுரிய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மனைவி ஜெயலட்சுமியுடன் தங்கியிருந்து ஆர்வத்துடன் பணி செய்தவர். சில ஆண்டுகளுக்கு முன், அவரது 90வது பிறந்த நாள் நிகழ்வில் பத்து ஆண்டுகளில் மீண்டும் உங்களைப் பார்ப்போம் என்றார் ஆனந்தகிருஷ்ணன். கொரோனா அதை நிறைவேறாமல் செய்து விட்டது.
l
previous post