தோழர் எல்.பி.சாமி அவர்கள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய அமைப்புகளின் பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தனது பொதுவாழ்வை தொடங்கினார். நாகை மாவட்டம் உருவான பின்பு அவரது பணிகள் தமுஎகச நாகை மாவட்டத் தலைவர், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் என்று கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேல் தொடர்ந்தது. சமீபத்தில் நாகை மயிலாடுதுறை என்று இரு மாவட்டங்களாக தமுஎகச பிரிக்கப்பட்ட போதும், அவர் நாகை மாவட்டத் தலைவர் பொறுப்பை தனது முதுமையான வயதிலும் துணிந்து ஏற்றுக்கொண்டார். 2011 முதல் 2016 வரை தோழர் நாகை மாலி அவர்கள் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவரது உதவியாளராக இருந்து பணியாற்றினார். கீழ்வேளூர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக இடையில் சில நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் பணியாற்றி உள்ளார். நாகை மாவட்டத்தின் தமுஎகச நிர்வாகியாக மட்டுமே அவரை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர் 14 மொழிகளின் அறிவை கொண்டுள்ள ஒரு பன்மொழி ஆளுமை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் என்று பல மொழிகளை கற்றவர். தனது பன்மொழி ஆளுமையை கூட அவர் அமைப்பின் தேவைக்காகவே கற்றுக்கொண்டார். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் பணியாற்றாத போதும், மற்ற மொழிகளின் மீதான ஆர்வத்தால் அவைகளை பயின்றார். பயின்றதோடு நிற்காமல் மலையாள இலக்கியங்களை தமிழுக்கும், தமிழ் மொழி இலக்கியங்களை மலையாளத்திற்கும் கொண்டு சென்ற நம் சமகாலத்தின் சிறந்த ஆளுமை. மு.முருகேஷ், ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோரின் படைப்புகளை மலையாளத்திலும், மலையாளதிலுருந்து குழந்தை இலக்கியம் உள்ளிட்ட நூல்களை தமிழிலுக்கும் மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழி பெயர்ப்பு பணிகளை பாராட்டி கேரளாவில் அவருக்கு பாராட்டுவிழா நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு “குடியுரிமையும், குடியுரிமைச்சட்டமும்” எனும் நூலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து இருந்தார். அதை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருந்தது. நாகை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள பல எழுத்தாளர்களுக்கு, மொழிபெயர்ப்பாளர்களுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். தோழரின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு. வரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு புதிய புத்தகம்பேசுது தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம். – களப்பிரன்