பெ.சு.மணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சற்றே சுருக்கமாக மீள்பதிவு செய்யப்படுகிறது.
துறை சாராத ஆய்வாளர்கள் என்று தமிழக சூழலில் ஒரு நிலை உள்ளது. இந்த பாரம்பரியத்தின் தொடக்கப்புள்ளியாக மயிலை சீனி வேங்கடசாமி, நா.வானமாமலை, குத்தூசி குருசாமி ஆகியோரைச் சொல்லலாம். இந்த மரபில் வந்தவர்தான் திரு. பெ.சு.மணி. இவர் ம.பொ.சி.யிடம் நெருங்கிய நட்புக்கொண்டவர். வெ. சாமிநாத சர்மாவின் சீடர். இந்தப் பின்புலத்தில் இருந்து வந்த பெரியவர்
பெ.சு.மணி ஒரு வரலாற்று ஆய்வாளர். வரலாறு சார்ந்த நூல்களை எழுதுவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டவர். அதற்காக தரவுகளை தேடித்தேடி இந்தியா முழுவதும் பயணம் செய்கிறவர். ‘வீரமுரசு சுப்பிரமணிய சிவா’, ‘இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும்’, ‘பத்திரிகையார் பாரதியார்’ ஆகிய இவரின் நூல்கள் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றது. இனி அவருடன் ஒரு நேர்காணல்.
- முத்தையா வெள்ளையன்
உங்கள் வாசிப்பு பற்றி….
எனக்கு சிறுவயதிலே வாசிக்கும் பழக்கம் உண்டு. நான் வியந்த அல்லது ரசித்த செய்திகளை எல்லாம் ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். எங்கள் ஊரில் (செங்கம்) ஆர். ராமசாமி என்ற கம்யூனிஸ்ட் தோழர் இருக்கிறார். அவரை ஆர். ஆர். என்று அழைப்பார்கள். இப்போது அவருக்கு 85 வயது. அவர் ‘சிட்டாகாங் வீரர்கள்’ என்ற சிறு பிரசுரத்தை முதலில் வாசிக்கத் தந்தார். பின்னர் நிறைய பிரசுரங்களையும் தந்தார். அதில் மார்க்ஸ், லெனின் பற்றியெல்லாம் இருந்தது. எனக்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதோ, பக்குவமோ அப்போது இல்லை. ஆனால் சில அரசியல் சார்ந்த கண்ணோட்டங்களை புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயத்தில் என்னுடைய பெரிய அண்ணன் விவேகானந்தர் மீது ஈடுபாடு உடையவர். அதனால் விவேகானந்தரையும் தெரிந்து கொண்டேன். இதற்கு அடுத்ததாக பாரதியை படித்தேன். எனக்கு சிறுவயதிலே வாசித்து அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது விவேகானந்தர், பாரதியார், மார்க்ஸ் ஆகியோரின் நூல்கள்தான்.
உங்களுடைய முதல் நூலைப் பற்றி?
ம.பொ.சி.யிடம் இருந்த போது அவருக்கு தேவையான தகவல்களை திரட்டுவதில் துணையாக இருந்தேன். அப்போது அவரை மாதிரி ஏன் எழுதக்கூடாது எனும் நினைப்பு தோன்றியது. என்னுடைய முதல்நூல் இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும். அப்போது வே. கணபதி என்கிற நண்பர் எனக்கு நெருக்கமானார். அவர் கொழும்பில் வீரகேசரி பத்திரிகையில் வேலைபார்த்து வந்தார். அவரும் ம.பொ.சி.யிடம் இருந்தார். அவரிடம் என் நூலைப்பற்றி கூறினேன். அதற்கு கணபதி அவர்கள், அதெல்லாம் கவலைப் படவேண்டாம் என்று கூறி அந்தப் புத்தகத்தைப் பற்றி தமது தம்பி வே. சுப்பையாவிடம் சொன்னார். அவர்தான் பூங்கொடி பதிப்பகத்தை நடத்தி வந்தார். அண்ணன் சொன்னதற்காக உடனடியாக என்னுடைய முதல்நூலை 1973-ல் வெளியிட்டார். நூலகத்தில் வாங்குவதற்காக வே. சுப்பையாவிற்கு ஒரு வாய்ப்பு வந்தது. நூலகத்துறையின் ஆணைக்கிணங்க மிகக் குறுகிய காலத்தில் நூலை அனுப்ப வேண்டியிருந்தது. அதனால் ம.பொ.சி. யிடம் நான்கு நாட்களுக்குள் முன்னுரை வேண்டும் என்று கேட்டோம். அவரும் ஒரே நாளில் எழுதிக் கொடுத்தார்.
அந்த முன்னுரையின் ஒரு பகுதி வருமாறு: ‘‘இந்தியாவில் ‘தேசியம்’ என்பது 1908ல் தான் புதியதாக தோன்றிய மார்க்கம்’’ என்கிறார் மகாகவி பாரதியார். அவர் குறிப்பிடும் ஆண்டிற்கு முன்பும் பல்வேறு வடிவத்தில் ‘தேசியம்’ இருந்திருக்கிறது. இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்து விளக்கம் தரும் நூல் இதுவரை தமிழில் வெளிவந்ததில்லை. இந்தக் குறையைப் போக்கி எனதருமை நண்பர் திரு.பெ.சு.மணி அவர்கள் ‘‘இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’’ என்னும் பெயரில் இந்நூலை எழுதியுள்ளார்.
‘தேசியம்’ என்னும் புதிய மார்க்கத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்திருக்கிறார். ‘தேசியம்’ என்றாலே அதிலுள்ள அரசியல் அம்சம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. இதற்கு மாறாக, ‘தேசியத்’திலுள்ள கலாசார அம்சங்களுக்கு முதன்மை தருகிறார் இந்நூலாசிரியர். அரசியல் தொடர்புடைய கலாசார இயக்கமான தமிழரசு கழகத்தோடு உள்ளன்போடு உறவாடிவரும் காரணத்தால் கலாசார பின்னணியில் தேசியத்தைக் காண இவரால் முடிந்திருக்கிறது.”
கலாசார தேசியம் என்று எதைக் கூறுகிறீர்கள்?
குறிப்பாக இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865), பிரம்ம சமாஜம் (1828), ஆரிய சமாஜம் (1875), பிரம்ம ஞானசபை (‘தியோ பிசிகல் சொசைட்டி’) (1875) ஆகியவை தோன்றின. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், கிழக்கிந்திய கம்பெனி போன்றவைகள் ஆங்காங்கே ஏற்படுத்திய முரண் பாடுகளை இந்நூலுக்காக எடுத்துக் கொண்டேன்.
இந்த முரண்பாடுகள் முதன் முதலில் மேல் மட்டத்தில்தான் வந்துள்ளது. ஏனெனில் நம்முடைய சமுதாய அமைப்பே அடுக்குமுறை சமுதாய அமைப்புதான். எந்த ஒரு எழுச்சியோ அல்லது எந்த ஓர் இயக்கமோ மேல் மட்டத்தினரைச் சார்ந்து இயங்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த அடிப்படையில்தான் கலாசார தேசியம் எந்த அளவிற்கு அரசியல் தேசியமாக மாறியது? என்பதுதான் அந்த நூலின் அடிநாதமாகும்.
ராஜா ராம்மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை (1772-1833) ஆரம்பித்தார். ‘பிரம்ம சமாஜம்’ என்ற பெயருக்கு பரம்பொருள் வழிபாட்டுச்சங்கம் என்பது பொருளாகும். பிரம்ம சமாஜம், இந்து சமயத்தை நவீன மயமாக்க பாடுபட்டது. சமூக சீர்திருத்தத்திற்கு பாடுபட்டது. சமய விவாதங்களை பொது சபைகளில் நிகழ்த்தி பொதுமக்கள் பங்கேற்பதற்கு வழிவகுத்தது. சமூக மாற்றத்திற்கு சமய உணர்வை பயன்படுத்தியது. பல சமயத்தினரும் ஒரே இடத்தில் கூடி பரம்பொருளை வழிபட முதன்முதலில் உலகிலேயே வழிவகுத்தது. உலக சமயங்களிடையே ஒப்பாய்விற்கு ஊக்கமளித்தது.
அடுத்ததாக ஆரியசமாஜம் 10-4-1875-ல் பம்பாயில் தயானந்த சரஸ்வதியால் (1824-1883) தோற்றுவிக்கப் பட்டது. அவர் வேதாந்தம் உட்பட அனைத்தையும் தூக்கி எறிந்தார். வேதாந்தத்தில் உள்ள சம்ஹிதை என்ற பகுதியை மட்டுமே ஆதரித்தார். வடக்கே சாதாரண மக்கள் வீடு தோறும் விரும்பிப் படித்த துளசிராமயாணத்தைத் தூக்கி எறிந்தார். சாதியை எதிர்த்தார். அவருடைய முரண்பாடான விஷயம் என்பது கிறிஸ்துவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் கடுமையாக எதிர்த்தார்.
மத மாற்றத்தை கடுமையாக எதிர்த்தார். அதற்காக இரண்டு இயக்கத்தை ஆரம்பித்தார். அதற்கு சுத்தி, சங்கட்டன் என்று பெயர். ஒருவர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமியனாக மாறி, மீண்டும் இந்து மதத்திற்கு வருவதற்கு ஒரு சடங்கோ, நடைமுறையோ இந்துமத ஆசாரியார்கள் யாரும் சொல்லவில்லை. இதை செய்வதற்கு சுத்தி இயக்கத்தை ஆரம்பித்தார். ஆரிய சமாஜம் விடுதலைப் போராட்டத்திற்கு பல தலைவர்களைத் தந்தது.
நாட்டின் தென்பகுதியில் கலாசார இயக்கங்கள் எப்படி செயல்பட்டன?
தெற்கே கலாசார இயக்கங்கள் ஒரு பரந்துபட்ட அளவில் இல்லை. ராமலிங்க சுவாமிகள் (1823-1874) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் கொண்டு வந்தாலும்கூட, இங்கே இருந்த மேல்சாதி வர்க்கம் அதுவும் குறிப்பாக வேதியர்-வேளாளர் கூட்டமைப்பால் இங்கு தலை யெடுக்காமல் பார்த்துக் கொண்டனர். ‘தமிழ் நாட்டின் புதிய விழிப்பிற்கான ஆதிக்ககர்த்தாக்களுள் ஒருவகை வள்ளலாரை ஏற்றிப்போற்றி சுதேசமித்ரனில் 25.01.1918 எழுதினார் பாரதியார். வேதியர்-வேளாளர் என்ற முரண்பாட்டால் தொடங்கப்பட்டதுதான் நீதிக்கட்சி. பத்தாம் நூற்றாண்டில் சமூக சமய ஞானிகளிலே வள்ளலார் அளவுக்கு முற்போக்கு யாரும் கிடையாது. அவரின் ஐந்தாம் திருமுறைகள் வரை சமயநெறி வழிப் பட்ட பக்திப்பாடல்கள்தான். ஆறாம் திருமுறையில்தான் அவரின் வேறு ஒரு பக்கம் தெரியும். சமயம் கடந்த சன்மார்க்கம் என்றார் அவர். தாயுமானவர் கூட சமய சன்மார்க்கத்தைதான் வலியுறுத்தினார். வள்ளலார் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று சொன்னவர் என்பதுதான் பொதுபுத்தியில் உள்ளது. மாமிசம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் புனிதம் சார்ந்தது அல்ல.
கலாசார தேசியத்தில் விவேகானந்தரின் பங்கு என்ன?
அடித்தட்டு மக்கள் முன்னேற்றமே அனைத்து சீர்திருத்தங்களுக்கும் ஆதாரம் என்பது விவேகானந்தர் கருத்து. மேலும் கலாசாரம் ஆதிக்க கலாசாரமாக இருக்கக்கூடாது என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் வழியில் விளக்கினார்.
தேசியத்தின் அடிப்படைக் கூறு என்பது சமயமே என்று விவேகானந்தர் கூறினார். அதற்காக வேதாந்தத்தை கொண்டு வந்தார். அந்த வேதாந்தம் உலகம் முழுவதிற்குமான மதமாக வர வேண்டும் என்றார். இந்த வேதாந்தம் என்பது ஆதிசங்கரர் போன்றவர்கள் சொன்னமாதிரி இல்லாமல், மரபுவழிப் பட்ட வேதாந்தமாக, அதாவது நாலுபேர் மட்டுமே கூடிப் பேசி விவாதிப்பதாக இல்லாமல் செயல்முறை வேதாந்தமாக இருக்க வேண்டும். அந்த வேதாந்தம் வாழ்க்கைக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் முதுகெலும்பு அடித்தள மக்கள்தான் என்று முதன்முதலில் சொன்னவர் விவேகானந்தர்.
இந்த மாதிரி கலாசாரங்கள் சேர்ந்து அரசியல் தேசியத்திற்கு வழி வகுத்தது. ஆனால் கலாசார தேசியம் என்று சொல்கிற போது, அது யாருடைய கலாசாரம்? மக்களுடைய கலாசாரம் என்ற பதில் வருகிறது. அது எந்த மக்கள்? வர்ணாஸ்ரம அடிப்படையில் மக்கள் இருக்கும் போது எந்த மக்கள் ஆதிக்கம் செய்கிறார்கள்? சமுதாயத்திலும், சமயத்திலும் வளர்ந்துவிட்ட வர்க்கங்கள் அல்லது சாதிகள் என்ற அடிப்படையில் ஆதிக்கம் இருப்பதை விவேகானந்தர் ஏற்றுக்கொண்டார். இதைப் பற்றி ஸ்மீபீணீஸீtணீ ணீஸீபீ ஜீக்ஷீவீஸ்வீறீமீரீமீ என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார். வர்ணாஸ்ரம கருத்துகளை மிக வன்மையாக, விவேகானந்தர் கண்டிக்கவில்லை.
அவர் ஒரு இடத்தில் ‘ஓ தொழிலாளி வர்க்கமே உன்னை தலை வணங்குகிறேன்’ என்கிறார். இவர் சொன்ன தொழிலாளி வர்க்கம் என்ற வார்த்தைக்கும் காரல்மார்க்ஸ் சொன்ன தொழிலாளி வர்க்கம் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதே வார்த்தையை அரவிந்தர், தாகூர் போன்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் மார்க்ஸ் பயன்படுத்தியது வர்க்க அடிப்படையில்தான்.
பொதுவாக கலாசார இயக்கங்கள் மத்தியதர வர்க்கத்தினரை மட்டுமே கையில் எடுத்தனர். ஆனால் விவேகானந்தர் அடித்தள மக்களையும் இணைத்துக் கொண்டார்.
எதிர்கால உலகத்தில் உழைப்பாளிகளின் (சூத்திரன்) ஆட்சிதான் மலரப்போகிறது என்றும், முதல் மூவர்ணத்தாரின் ஆட்சி வரலாற்றில் முடிந்த கதையாகி விட்டதென்றும் விவேகானந்தர் வங்கமொழி இதழான உத்போதனில் ‘தற்கால இந்தியா’ எனும் தலைப்பில் 1899 மார்ச்சில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது ‘‘இந்திய சமூகத்தில் ‘‘மேல்மட்ட வர்க்கம்’ பௌதிகமாகவும் தார்மீக மாகவும் செத்துவிட்டது. இனி இந்தியாவின் ஒரே நம்பிக்கை பாமர மக்கள்தான்’’.
பாமர மக்களை ஒதுக்கி வைத்ததை விவேகானந்தர் ‘‘தேசிய மகா பாவம்’’ என்று கூறினார். 1894ல் தமது சகோதரத்துறவி ஒருவருக்கு எழுதியக் கடிதத்தில் பாமர மக்களின் முன்னேற்றத்தை வழிபாட்டு உணர்ச்சியுடன் அணுகவேண்டுமென்று பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’’ என்று நாம் ஓதி வருகிறோம். ஆனால், நான் கூறுகிறேன் : ‘தரித்ர தேவோ பவ’, ‘மூர்க்க தேவோ பவ’, அதாவது ஏழை, எழுத்தறிவில்லாதவர், மூடர் இவர்களையே உன்னுடையே தெய்வமாகக் கருதி அவர்களுக்காக தொண்டு செய்க; அதுவே சமயஉணர்வின் சாரமாகும்.
‘கார்ல் மார்க்ஸ், இந்தியாவில் பெரும்பாலும் அறியப்படாத நிலையில், மார்க்சிய மொழி மரபுச் சொற்களையொத்த பாணியில் விவேகானந்தர் பேசியுள்ளார்’’ என்று விவேகானந்தர் ஆய்வில் ஆழம் கண்ட சுவாமி-ரங்க நாதானந்தர் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகிலம் நடந்த போது இந்தியாவைப் பற்றி வங்காளத்திலிருந்து சிலர் கடிதம் எழுதினர். இதைப்பற்றி காரல்மார்க்சின் இலக்கிய இதயம் என்ற நூலில் விரிவாக எழுதி உள்ளேன்.
நான் விவேகானந்தரை முழுமையாக பாரதியின் மூலம்தான் புரிந்து கொண்டேன். விவேகானந்தரின் சிக்காகோ பிரச்சாரத்தை இந்திய தேசியத்தின் தாய் முயற்சி என்று பாரதி கூறினார்.
இந்திய தேசியத்திற்காக மற்றவர்கள் மதத்தை மட்டுமே சொன்னார்கள். விவேகானந்தர் மதத்தை கூறினாலும் கூட பாமர மக்களை முன்னிறுத்தி ஒரு புதிய அரசியல் எழுச்சிக்கு வழி வகுத்தார்.
கலாசரா இயக்கங்கள் எழுச்சியாக செயல்பட்டதற்கு என்ன காரணம்?
காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் வங்கத்தில் முரண்பாடுகள் அதிகமாக இருந்தது. மாவோ ‘‘முரண்பாடுகள் பற்றி’’ (on contradiction) சொன்ன மாதிரி முரண்பாடுகளுக்கு இடையில் வங்காளத்தில் எழுச்சி ஏற்பட்டது. அங்குதான் முதன் முதலில் அரசியல் இயக்கங்கள் தோன்றியது. அந்த அரசியல் இயக்கங்கள் நிலபிரபுத்துவத்தையும், வர்த்தகர்களையும் சார்ந்து இருந்தது. அதே மாதிரி பூனாவிலும், பம்பாயிலும், சென்னையிலும் இருந்தது. இந்த நான்கு நகரங்களில் உள்ள இயக்கங்களை வைத்து மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கங்கள் உருவாயின. கல்கத்தாவில் பிரிட்டிஷ் இண்டியன் அசோசியேஷன், பம்பாயில் இண்டியன் அசோசியஷன், பூனாவில் சர்வ ஜனிக சபா, சென்னையில் 1852-ல் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் ஆகியவைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதை சென்னையில் ஆரம்பித்தவர் காஜுலு லெட்சுமி நரசு செட்டி. அன்றைய சென்னை மாநிலத்தில் ‘‘பொதுமக்கள் கருத்து’’ உருவாக்கத்திற்கு மூல கர்த்தா இவர்தான். இவரின் பொது கருத்து உருவாக்கம் என்பது கிறிஸ்துவமதத்தை ஆளும் வர்க்கம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பாக இருந்தது. அதற்கு எதிராக எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி மனு தயாரிப்பது, பொதுக்கருத்தை உருவாக்குவதுதான் என்று இருந்தது. மக்களை ஒன்றுத் திரட்டி ஒரு மனு தயாரித்து அதை பொதுமக்கள் கருத்தாக அரசாங்கத் திற்கு சமர்பிக்க வேண்டும் என்று வழிமுறையை ஆரம்பித்து வைத்தவர். பொதுமக்கள் கருத்தை உருவாக்கிய தந்தை என்று இவரை
வெ. சாமிநாத சர்மா குறிப்பிடுவார். இந்த பொதுமக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டம்தான். நாம் இப்போது சொல்கிற பொதுமக்கள் என்ற அர்த்தத்தில் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது.
இதற்கு அடிப்படையான காரணம் பிரிட்டிஷ் அரசும், கிழக்கு இந்திய கம்பெனியும் ஆங்கிலக் கல்வியை கொடுத்ததால் இந்தியாவில் ஒரு புதிய வர்க்கம் தோன்றியது. அது நடுத்தர வர்க்கம். அந்த மத்தியதர வரக்கத்தின் எழுச்சி கலாசார இயக்கங் களுக்குப் பயன்பட்டது.
இந்த நான்கு மாநிலங்களிலிருந்து இயக்கங்கள் அந்தந்த மாநிலத்தினுடைய தேவையை மட்டும் ஆராய்ந்து அதற்கானப் போராட்டங்களை வகுத்தது. போராட்டங்கள் என்பது இன்றைக்கு இருக்கிற மாதிரி பரந்துபட்ட அளவில் இருக்காது. அன்றைக்கு போராட்டம் என்பது அரசியல் சார்ந்த கருத்துகளை மக்களிடம் உருவாக்குவதுதான். வேண்டுதல், விண்ணப்பம் அளித்தல் – இவை தாம் ‘போராட்ட’ முறைகள். இந்தச் சூழலில்தான் 1857-ல் நடந்த இந்திய புரட்சியைப் பார்த்த ஹ்யூம் என்பவர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்த மாதிரியான புரட்சிகள் இந்தியாவில் இனிமேல் வாரமல் இருப்பதற்காக இங்குள்ள படித்த வர்க்கம், ஆங்கிலேய அதிகார வர்க்கம் சேர்ந்து இந்த நான்கு மாநில அமைப்புகளைக் கொண்டு ஒரு பொதுவான அரசியல் அமைப்பை அனைத்திந்திய அளவில் ஹ்யூம் தலைமையில் தோற்றுவித்தனர். அதுதான் இந்திய தேசிய காங்கிரஸ். அன்றைக்கு இருந்த காங்கிரஸ்காரர்களை விட ஹ்யூம் முற்போக்கானவர்.
இந்திய தேசியம் சார்ந்த காங்கிரஸ் வரலாறு என்பது என்ன?
காங்கிரஸ் கட்சி 72 பட்டதாரிகளை மட்டுமே வைத்து ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் நோக்கம் உத்தியோகங்களில் இந்தியர்கள் இருக்க வேண்டும் என்பதுதான். இவர்களுக்கு கீழே கோடானுகோடி பாமர மக்கள் இருக்கிறார்களே அவர்களுக்காக எந்த விதமான கொள்கையோ, போராட்டத்தையோ அப்பொழுது காங்கிரசால் கொடுக்க முடியவில்லை.
காங்கிரசின் முதல் 15, 16 ஆண்டுகள் ஹ்யூம் சகாப்தம் என்று சொல்வார்கள். வங்கப்பிரிவினை ஏற்பட்டு ஒரு தேசிய எழுச்சி ஏற்பட்டது. அந்த தேசிய எழுச்சி என்பது சுதேசிக்கல்வி, சுதேசிப்போராட்டம் என்று இருந்தது. இதனுடைய ஒரு பிரிவாக மொழி வழி மாநிலம் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்தக் கோரிக்கை விரித்து எடுக்கப்படவில்லை. ஆனால் மூலக்கருத்து தூவப்பட்டது. 1906-ல் ஏற்பட்ட இந்த எழுச்சிக்கு முன்னோடிகளாக வங்காளத்தில் அரவிந்தர், தமிழகத்தில் பாரதி, வ.உ.சி, மேற்கில் கோகலே, பஞ்சாபில் லாலா லஜபதிராய் ஆகியோர்கள் இருந்தனர். இதில் அரவிந்தரும், திலகரும் தேசியம் என்பது கடவுளின் அவதாரம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தனர். அதனால் ஆன்மீகப்படுத்தப்பட்ட தேசியத்தின் செல்வாக்குதான் இவர்களிடம் இருந்தது. இதை பாரதியிடமும் பார்க்கலாம். உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் தேசியத்தை இழுத்துச் செல்லும் இயந்திரமாக மதம் இருக்கிறது என்று பிரபல வரலாற்றறிஞர் டாயின்பீ சொல்லியிருக்கிறார். அன்றைய இந்தியாவில் கல்வி என்பது குறைவாக இருந்தது. ஆகவே ஆன்மீகத்தை இவர்கள் கையில் எடுத்தார்கள். ஆன்மீகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆன்மீகத்தை அரசியலாக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். திலகர் அரசியலில் தீவிரவாதியாக இருந்தாலும் சமுதாயப் பிரச்சனையில் மிதவாதியாக இருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மக்களைத் திரட்டிய சாதனை களை ஏற்படுத்தியவர் திலகர்.
இதற்கு பிறகு 1919-ல் காங்கிரசில் காந்தியின் சகாப்தம் தொடங்கியது. ஒரு இயக்கத்தை பெரும் மக்கள் இயக்கமாக மாற்றியது காந்திதான். சத்யாகிரகம், அகிம்சை, ஒத்துழையாமை எனும் புதிய போராட்ட முறைகளை வகுத்தார். ஹ்யூம் சகாப்தத்தில் படித்தவர்க்கம் இருந்தது. திலகர் காலத்தில் மத்தியதர வர்க்கத்தினர் பங்கு பெற்றனர்.காந்தியிடம் ஆரம்பத்தில் ஆங்கிலேயேருடன் இணைந்து போக வேண்டும் என்ற கொள்கையே இருந்தது. அந்தச் சூழலில்தான் கம்யூனிஸ சித்தாந்தங்கள் இங்கு அறிமுகமாகின. அக்கால தொழிற்சங்க தலைவராகப் புகழ்பெற்ற பாரிஸ்டர் இ.எல்.அய்யர் என்பவர் சுதர்மா (ஆங்கிலம்) என்ற வாரப் பத்திரிகையை 1921 ஏப்ரல் 17 இல் தொடங்கினார். அதில் சிங்காரவேலர் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். 23.4.1922 ஆம் ஆண்டு வெளிவந்த இதழில் ‘காந்தியமும் கம்யூனிசமும்’’ எனும் தலையங்கத்தை சிங்காரவேலர் எழுதினார். இதில், ‘‘இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அருளப்பெற்ற மகாதர்மத்தின் உண்மையான வாரிசாக காந்தியம் என்னும் புதிய இயக்கத்தைக் கொள்ளலாம்’’ என்று குறிப்பிட்டார். அவர்தான் இரண்டு கருத்துகளும் இணைந்து போக வேண்டும் என்றார். அதே நேரத்தில் இந்தக் கருத்துகளில் முழுமையான உடன்பாடும் அவருக்கு பிற்காலத்தில் இல்லை. சிங்காரவேலருக்கு பிரச்சார தந்திர நிலையில் இது ஒரு வழிமுறை. அப்போது லேபர் கிசான் கட்சியை 1923இல் மே தினத்தில் ஆரம்பித்தார். அந்த கட்சியின் சின்னமாக கைராட்டையும், அரிவாளும் இருந்தன. கதர் சீருடையையும் காந்தி குல்லா அணிவதையும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு கட்டாயமாக்கினார். அதாவது அவர்கள் வழியில் சென்று, அவர்களில் முற்போக்கானவர்களை வென்று எடுத்து நம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த வழியில் வந்தவர்கள்தான் காங்கிரசில் உள்ள சோஷலிஸ்ட்கள். பின்னாளில் இவர்கள் கம்யூனிஸ்ட்களாக மாறினார்கள். உதாரணத்திற்கு எம்.என்.ராய், முசபார் அகமது, எஸ்.ஏ. டாங்கே, சிங்காரவேலர் போன்றவர்களை சொல்லலாம்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் பொருளாதார தேசியப்போராட்டத்தைப் பற்றிய பதிவுகள் உள்ளனவா?
இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இந்தியச் செல்வத்தை உறிஞ்சி எடுத்து வற்றடிக்கும் (Drain Theory) கொள்கையைப் பற்றியும் சில இந்திய தேசிய இயக்கத் தலைவர்களும், இந்திய தேசிய இயக்கத்தின்பால் நல்லெண்ணம் கொண்ட பிரிட்டிஷ் அறிஞர்களும் ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டனர்.
1871-ல் உலகத் தொழிலாளர் அகிலத்தின் பேரவை கார்ல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது கல்கத்தாவில் இருந்து ஒரு கடிதம் பேரவைக்கு வந்தது. எழுதியவர் யார் என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. ஆனால் அந்தக் கடிதம் பேரவையின் நடவடிக்கைகள் தொகுக்கப்பெற்ற அறிக்கையில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு பகுதி தொழிலாளர்கள் உருவாக்கும் செல்வம் சீரழிக்கப்படுவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தின் ஒரு பகுதி, வருமாறு:
‘மக்களிடையே பெருமளவு குழப்பம் நிலவுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் முற்றிலும் வெறுக்கப்படுகிறது. வரிவிதிப்பு அளவுக்கு மீறியிருக்கிறது. பெருஞ்செலவு பிடிக்கிற அரசு பணித்துறை பெரும்பகுதி வருவாய் இனங்களை விழுங்கிவிடுகிறது. தொழிலாளர்களின் துயரம் கப்பிய நிலையில் ஆளும் வர்க்கத்தின் ஊதாரித்தனம் எங்கும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் உருவாக்கும் செல்வம் இவ்வாறு சீரழிக்கப்படுகிறது. பாமர மக்களை ஸ்தபான ரீதியாகத் திரட்ட அகிலத்தின் கோட்பாடுகள் துணைபுரியும்.’ இந்தக் கடிதத்தின் மீது எவ்வித முடிவும் எடுக்கப் படவில்லை.
காங்கிரசிற்கு ஆதரவான பிரிட்டிஷ் நண்பர்கள் இந்தியச் செல்வம் வெளியேற்றப்பட்டு வந்ததை அம்பலப்படுத்தி ஆய்வு நூல்களை எழுதினர். இதைப் பற்றி பாரதியார் ‘இந்தியா’ வார இதழில் (அக்டோபர் 17.1.1908) பின் வருமாறு எழுதினார்.
‘‘மாரென்ஸ் என்ற பார்லிமண்ட் மெம்பர் எழுதியிருக்கும் ஆசியாவில் நமது ராஜ்யம் (Empire in Asia) என்ற புத்தகத்தையும், காட்டன் எழுதியிருக்கும் ‘நவீன பாரதம்’ (New India) டிக்பி எழுதிய இந்தியவின் செழிப்பு (Prosperous India) ஹைன்ட்மான் எழுதிய ‘இந்தியவின் வறுமை’ (Bankruptsy of India) என்ற புத்தகத்தையும் படித்துப் பாரத்தால் ஒவ்வொரு தேசஅபிமானியின் மனமும் அணலில் இட்ட புழுப் போலத் துடிக்கும் படியாக இருக்கும்.’
TREASURE FLOWED TO ENGLAND IN OCEAN என்று பிரிட்டிஷ் அறிஞர் மெக்கலே கூறியதுபோல பிரிட்டிஷ் இந்தியக்கம்பெனி ஆட்சிகாலத்திலேயே இந்தியச் செல்வம் வெள்ளப்பெருக்கென வெளியேறியது. போராசிரியர் பிபின் சந்திரா அவர்கள் (The Rise and Growth of Economic Nationalism in India-1968) எனும் நூலில், ‘‘தாதாபாய் நவ்ரோஜியின் வழிகாட்டுதலின் பேரில் ரானடே, ஜோஷி, கோகலே, ஜி.எஸ்.ஐயர், வாச்சா, ஆர்.சி. தத் முதலானோர் தேசிய பொருளாதார சிந்தனையின் செழுமைக்கு உரிய கருத்துகளை வழங்கினர்’’ என்று எழுதியுள்ளார்.
தாதாபாய் நவ்ரோஜியின் ‘வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் (Poverty and Un-British rule in India – 1901) எனும் ஆய்வு நூல் தேசியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டு தலாக விளங்கியது.
மேலே ஜி.எஸ். ஐயர் என்று குறிப்பிடப்பட்டவர் இந்து, சுதேசமித்திரன் இதழில்களில் கட்டுரை எழுதி தமிழகத்தின் புதிய அரசியல் விழிப்பிற்கு முன்னோடியாக புகழ்பெற்றவர். இவருடைய பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் சில பொருளாதார அம்சங்கள் (Some Economic Aspects of British Rule in India – 1903) எனும் நூல் தேசியப் பொருளாதார சிந்தனைக்கு ஆக்கம் அளித்தது.
இந்தியச் செல்வம் எவ்வாறு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் வற்றடிக்கப்படுகிறது என்பதை விளக்கி வந்த முதல் தமிழ்நூல் ‘இந்தியா இழந்த தனம்’ என்பதாகும். இந்நூல் தேசிய மாவீரர் கிருஷ்ணசாமி சர்மா (1887-1925) என்பவரால் எழுதப்பெற்று 1923ல் வெளிவந்தது. 1922ல் கடலூர் சிறையில் அவர் இருந்த போது எழுதப்பட்டது. இவருடைய மற்றொரு அரசியல் நூலான ‘இராஜரிக சாஸ்திரம்’ என்பதில்தான் காரல்மரர்க்ஸ் பற்றி விரிவான செய்திகள் முதன்முதலில் வெளிவந்தன. இவர் தோழர் சிங்காரவேலரின் அரசியல் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் திலகர் யுகத்தில் தமிழ்நாட்டில் தேசபக்தச் செம்மல் வ.உ.சி. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு முனைகளில் ஒன்றாக பொருளாதார தேசிய முனையை முதன்முதலில் உருவாக்கினார். இவருக்கு முன் 1897ல் கிழக்கு வங்க நதிபோக்குவரத்து கப்பல் கம்பெனி தோன்றியது. இது 1906-1908களில் வீறுபெற்று நடந்தாலும் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் வஞ்சக சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது. இதற்கு முன் 18ஆம் நூற்றாண்டில் ஆனந்தரங்கம்பிள்ளை ‘ஆனந்தபுரவி’ எனும் பெயரில் கப்பலோட்டினார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சியுடன் தீவிர தேசியவாதத் தளபதி வ.உ.சி. பொருளாதார தேசியம் ஒன்றையே மையப்படுத்தி சுதேசி நாவாய் சங்கத்தினை 1906ல் தூத்துக்குடியில் துவக்கி கூட்டுறவு முறையில் சுதேசி கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். ஒப்பற்ற இந்த சீரிய முயற்சி முழுக்க முழுக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை பாரதியாரின் ‘ஆங்கிலேயே கலெக்டர் விஞ்ச்துறை-தேசபக்தர் வ.உ.சி சம்வாதப் பாடல் வரிகளில்’ தெளிவாக அறியலாம்.
சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் மாபெரும் பணிவிடையாகும் என்று வ.உ.சியின் அரசியல் குரு திலகர் பாராட்டியது சுதேசமித்திரனில் 24.10.1906ல் வெளிவந்துள்ளது.
திராவிடன் பத்திரிகையைப் பற்றி உங்கள் ஆய்வு என்ன?
நீதிக்கட்சி கூட தேசிய திராவிடர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். திராவிடன் பத்திரிகையைப் பற்றி ஒரு கட்டுரை படிப்பதற்காக ஆய்வு செய்த போது கிடைத்த செய்தி இது. எனக்கு முன்னால் திராவிடன் இதழை யாரும் ஆய்வு செய்யவில்லை. சேத்துப்பட்டில் மெயில் முனுசாமி என்ற தோழரிடம் முதல் ஆறுமாத திராவிடன் இதழ்கள் இருந்தன.
ஆட்சி நிர்வாகத்திலும் உத்தியோகத்திலும் பார்ப்பன மேலாதிக்கம் இருக்கிறது. அதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை நியாயமானது. ஆனால் பார்ப்பன எதிர்ப்பு என்பது ஆரிய, திராவிட இன வாதத்திற்கு திசை மாறிப்போனது. இந்த ஆரிய திராவிடம் என்பது வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வாதமே இல்லை. ஆரியர் யார், திராவிடர் யார் என்று கூற முடியாது. மேக்ஸ் முல்லர் ஆரியர் என்பதை இனவாத சொல்லாக முதலில் கூறுகின்றார். பின்னாளில் அவரே ஆரியன் என்றே இனமே இல்லை. நான் தவறாக பயன்படுத்தி விட்டேன் என்கிறார். இதை ரொமிலாதாப்பாரும் பதிவு செய்துள்ளார். ஆரியன் என்ற சொல்லுக்கு உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்பதுதான் பொருள் என்று அம்பேத்கர் கூறி இருக்கிறார். கால்டுவெல்லும் திராவிடன் என்ற கருத்தாக்கத்தையும் கொண்டு வருகிறார். வரலாற்றில் ஆராய்ச்சிக்காக எளிமையாக பயன்படுத்தப்பட்ட இந்தச் சொற்கள் அரசியல் தத்துவ சொற்களாகவே நிலைபெற்று விட்டன.
ஆராய்ச்சிக்காக ஏற்படுத்திய சொற்கள் காலகதியில் ஒரு யதார்த்தமான நிலையை எய்தி விட்டது. அதை எடுப்பதற்கு இனி வழியில்லை. ஆகவே அந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று திரு.வி.க. குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில் பார்க்கும் போது பார்பனீய எதிர்ப்பு தமிழ்நாட்டில் தோன்றுவதற்கு முன்னரே இதைப்பற்றி ஆழமாக சிந்தித்து மக்கள் இயக்கத்தை இந்திய மண்ணில் உருவாக்கியவர் மகாத்மா பூலே. இவர் சத்ய சோதக் சமாஜ் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அயோத்திதாசர் பெரியாருக்கு முன்பே பார்பனீயத்தை கடுமையாக தாக்கியவர். அயோத்திதாசர் பற்றி பெரியார் எதுவுமே குறிப்பிடவில்லை. மகாத்மா பூலே பற்றி அயோத்திதாசரும் கூறியதாகத் தெரியவில்லை. மகாத்மா ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே (1827-1890) பற்றி நான் 1972-இல் வெளிவந்த என்னுடைய ‘இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலில் எழுயுள்ளேன். தமிழில் இது முதல் தகவல் குறிப்பாகும்.
அயோத்திதாசர் பற்றி வெகுஜன வாசிப்பில் முதன் முதலாக நீங்கள்தானே எழுதியுள்ளீர்கள்?
அயோத்திதாசரின் சீடர் க.அப்பாதுரையார் மூலம் பிராமண சடங்குகளை எதிர்ப்பது பற்றி பெரியார் தெரிந்து கொண்டுதான் செயல்படுகிறார். ஆதி திராவிடர்களை ஆதிதமிழர் என்றும், அவர்களுடைய மதம் பௌத்தம் என்றும் முதன்முதலில் அயோத்திதாசர் கூறினார். இந்த நிலைப்பாட்டை தன் வாழ்வின் இறுதிப்பகுதியில்தான் அம்பேத்கர் எடுத்தார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அயோத்திதாசரைப் பற்றி முதன்முதலில் தினமணிக் கதிரில் எழுதினேன். பின்னர் காரல்மார்க்ஸ் இலக்கிய இதயம் என்ற நூலில் கட்டுரையாக வந்தது. சாதியவாதத்தை எதிர்ப்பதற்கும் பகுத்தறிவு வாதத்தை வளர்ப்பதற்கும் பொதுவான அடித்தளம் பௌத்தம். பிராமணனை எதிர்த்து, அதற்குப் பதிலாக சத்திரியனை கொண்டுவந்து நிறுத்தியது பௌத்தம்.
‘‘அயோத்திதாசர் சிந்தனைகள்’’ நூல் வெளியீட்டு விழாவில் என்னையும் அழைத்திருந்தார்கள். 13.11.1999இல் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அயோத்திதாசரை நாங்கள் முதன் முதலாக தெரிந்து கொண்டது பெ.சு.மணியின் கட்டுரையால்தான் என்று வ.கீதா சொன்னார். அதற்கு பின்னால் அவரும், வேறுயாரும் என்னைப் பற்றி பேசுவது இல்லை. அரணமுறுவல் என்பவர் இதற்காக பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது. அயோத்திதாசரின் இயக்கவாதியாக நான் இருக்கிறேனா இல்லையா என்பது வேறு. அந்தக் கருத்தை சொன்னது யார் என்று கூட யாருமே இங்கு சொல்வதில்லை. இந்தச் சூழல்தான் இங்கு நிலவுகிறது. அயோத்திதாசரின் பேரன் அசோகன் நேரில் வந்து பாராட்டினார்.
அயோத்திதாசர், லட்சுமிநரசு, சிங்காரவேலர் ஆகியோர் பற்றி திரு.வி.க. எழுதியுள்ளார். அயோத்தி தாசருக்கும், திரு.வி.க.விற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தலித் என்ற சொல் இன்றைக்கு பெரும்பான்மை யாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாக இருந்தாலும் என்னுடைய நண்பர் அன்பு பொன்னோவியம் போன்றவர்கள் இந்தச் சொல்லை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். அனைத்திந்திய அளவிலும் தலித் என்ற சொல் புழக்கத்தில் வேர்விட்டுவிட்டது என்பதால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் தலித் என்ற சொல்லை ஏற்கவில்லை. தலித் இலக்கியத்திற்கு மூலகர்த்தா அயோத்திதாசர். இன்றைக்கு இருக்கும் தலித்துகளுக்கு முதன் முதலில் அயோத்திதாசரை அறிமுகப்படுத்தியவர் அன்பு பொன்னோவியம். தலித் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய அயோத்திதாசரை பின்னால்தான் தலித்மக்கள் தெரிந்து கொண்டனர். தமிழக தலித் இயக்கங்கள் கூட ஆரம்பக்காலத்தில் அயோத்திதாசரை கொண்டாட வில்லை. ஒரு சமயம் சென்னை அசோக் நகரில் அன்பு பொன்னோவியத்தின் இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் (2009)ல் திருமாவளவனுடன் ஒரு
கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டு பேசும் பொழுது பத்தாண்டுகளுக்கு முன்பு திருமாவளவனுக்குக் கூட அயோத்திதாசரைப் பற்றித் தெரியாது என்பதைக் குறிப்பிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார்.
பகுத்தறிவு இயக்கத்தின் ஆதி கர்த்தாக்கள் என்று அயோத்திதாசரையும், சிங்காரவேலரையும், லட்சுமி நரசுவையும் பற்றி கட்டுரை எழுதி இருந்தேன். இதைப் படித்த நண்பர் ஒருவர் பெரியாரை இரண்டாந்தரமாக ஆக்கும் பார்பனீயத்தின் முயற்சி இது என்றார். பகுத்தறிவு என்பது கருத்துகளின் பரிணாம வளர்ச்சிதானே. இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஒரு இடத்தில்தான் பெரியார் வருகிறார். அவருக்கு முன்பு வரலாறே கிடையாதா? வளர்ச்சியே கிடையாதா? அதை ஏன் கையில் எடுக்கக் கூடாது?
பார்பனரல்லாத உயர்சாதி இந்துக்களின் நலனுக்காக நீதிக்கட்சி கருவியாக பயன்பட்டது என்ற கருத்து அந்தக் காலத்திலே வந்து விட்டது. நீதிக்கட்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசக்கூடியவர்கள் இருந்தனர். ஆனால் தெலுங்கு, மலையாளம் பேசக் கூடிய மொழியினரின் ஆதிக்கம்தான் ஆரம்பத்தில் நீதிக்கட்சியில் இருந்தது. நீதிக்கட்சியின் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது எவ்வளவு போலித்தனமானது என்று தோல் உரித்துக் காட்டியவர் அயோத்திதாசர். அரசியல், நிர்வாகத்துறையில் கொண்டு வந்த பார்ப்பன எதிர்ப்பை சமுதாயத்தில் கொண்டு வரவில்லை என்பதுதான் அயோத்திதாசரின் கருத்து.
‘‘பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டே ‘நான் பிராமின்ஸ்’ எனக் கூறுவது வீணேயாகும். காரணம் சாதி ஆசாரக் கிரியைகளிலும் பிராமணர்கள் என்போர் வர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆதலின் இவ்விரண்டிற்கும் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் ‘நான் பிராமின்ஸ்’ ஆகார்கள்’’ என்று பண்டிதர் அயோத்திதாசர் செப்டம்பர் 15,1909ல் தமது தமிழன் இதழில் கூறினார்.
பார்ப்பனர்களால் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டோம். இப்போது உயர்சாதி இந்துகளால் கஷ்ட்டப்படுகிறோம் என்ற மெயில் முனுசாமி ஒரு முறை என்னிடம் கூறினார். இதற்கு உதாரணமாக வன்னியர் x தலித், தேவர் x தலித், ரெட்டியார் x தலித் என்ற நிலைமை தான் உள்ளது. தீண்டாமைக்காக சுவரை எழும்பியுள்ள தேசம் இது. அதை எதிர்த்து இந்தப் பகுத்தறிவுவாதிகள் எந்தவிதக் குரலையும் எழுப்பவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தான் கையில் எடுத்தது.
தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதிஎதிர்ப்பு போராட்டம் இரண்டையும் இணைத்து முன்னெடுத்துச் சென்றனர் பொதுஉடைமை இயக்கத்தினர். சாதி எதிர்ப்புப் போராட்டத்தை முன்நிறுத்தி அல்லது வலியுறுத்தி, வர்க்கப்போராட்டத்தை பலவீனப்படுத்தும் போக்கும் இருந்தது. இவ்விரு போக்குகள் ஒருபுறமிருக்க, ஆதி திராவிடர்கள் தஞ்சையில் விவசாயிகள் இயக்கத்தில் (கிசான் சபை) முன்னணி வீரர்களாயிருந்தனர் எனும் கருத்தை ஆய்வாளர் அன்புபொன்னோவியம் அவருடைய ‘உரிமைக்காக்கப் போரிட்ட உத்தமர் அங்கம்பாக்கம் குப்புசாமியார்’’ எனும் நூலில் பின்வருமாறு முன்வைத்துள்ளார்.
‘நிலவுடைமையாளர்களான மிராசுதார்களை எதிர்த்து ஆதிதிராவிடர்கள் தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்வைத்து நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தினர்-பெருந்தலைவர் எம். சி ராஜா தலைமையில் 1931-ல் தஞ்சையில் நடந்த தஞ்சை ஜில்லா ஆதி திராவிட மாநாட்டில்
‘ஆதி திராவிடர்களுடைய விவசாயக் கஷ்டங்களை நிவர்த்திக்கவும், மிராசுதார்களுக்கும் தங்களுக்கும் கஷ்டம் உண்டாகாமல் இருக்கும்படிக்கும் ஒரு விவசாயக் கமிஷன் நியமித்து அதில் ஆங்கிலேயர், மிராசுதாரர், ஆதிதிராவிடர் ஆகியோர் மெம்பர்களாக இருக்கும்படி ஏற்பாடு செய்யும்படி சர்க்காரை கேட்டுக் கொள்கிறோம்’’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி, இக்கோரிக்கைளை ஆங்கில அரசிடம் வலியுறுத்தவும், ஒடுக்கப்படும் விவசாயிகளுக்காக போராடவும் தஞ்சை திரு. மானுவேல் மற்றும் நாகை திரு. ஆ. சிவராமசாமி பிள்ளை (நாகை ஆதிதிராவிட மகாஜனசபை தலைவர்) தலைமையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி – ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயிகள் அனைவரின் நலனுக்காக பாடுபட்டது என்று அறிய முடிகின்றது.’
தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப் பட்ட விவசாயிகளை அணிதிரட்டி சக்திவாய்ந்த கிசான்சபை எனும் அமைப்பை நிறுவி போராடிய முன்னோடிகளில் தோழர் பி.சீனிவாசராவ் (1907-1961) குறிப்பிடத்தக்கவர். ‘‘தஞ்சையில் நடப்பது என்ன?’ (1947) எனும் நூலில் அவர் ‘கிசான்சபை’ யில் ஆதிதிராவிடர்களே முன்னணி வீரர்களாக பெரும் பங்கேற்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். வாரதாரர்களாகவும், குத்தகைதாரர்களாகவும் சிறு விவசாயி களாகவும் இருந்த சாதி இந்துக்கள் கிசான் சபையை ஆதிதிராவிடர்கள் சங்கம் என்றே நினைத்தார்கள் என்பதையும் தோழர் பி. சீனிவாசராவ் பதிவு செய்துள்ளார். ஆகவே, பொதுவுடைமை இயக்க வாதிகள் விவசாயிகளின் விடுதலை இயக்கத்தில் தலித் விடுதலை இயக்கத்தையும் உள்ளடக்கினர் என்பது வரலாற்று உண்மையாகும்.
பெரியார், அக்காலத்தில் பார்ப்பன நிலப்பிரபுவாக இருந்தால் எதிர்த்துப் போராடு, பார்பனரல்லாத நிலப்பிரபுவாக இருந்தால் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனும் ‘‘இரட்டை நிலைப் பாடு’’களை எடுத்தார். இந்த நிலைப்பாட்டை பொதுவுடமை இயக்கத்தினர் எதிர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீண்டாமையை நிலைநிறுத்த உத்தப்புரத்தில் ஊர்நடுவே சுவரை எழுப்பும் இழிவான செயல் உத்தப்புரத்தில் நீடித்து வருவதை சாதி எதிர்ப்பை பேசிவரும் பகுத்தறிவுவாதிகள் என்போர் போராட முன்னணியில் வரவில்லை. ஆனால் பொதுவுடைமை இயக்கமான
‘சி.பி.எம்.’ போராட்டத்தை கையில் எடுத்து நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது தலித்துகளின் மீதான ஒடுக்குமுறையைப் பார்க்கும்போது, அதற்கான அடிப்படைகளையும் தத்துவங்களையும் பார்பனீயம் உருவாக்கி இருந்தாலும், அதேக் கருத்தை கையில் எடுத்து ஒடுக்குகிற சாதி எது? என்ற கேள்வி வருகிறது. இந்தக் கேள்வியின் அடிப்படையில்தான் அம்பேத்காரிஸ்ட்டுகள் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அயோத்திதாசரை நாம் கையில் எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்து பேச ஆரம்பித்தார்கள். காலம் தாழ்ந்தாலும் நல்ல முடிவுதான்.
சாமிநாத சர்மாவிற்கும், உங்களுக்கமான தொடர்பு பற்றி…
நான் என்னுடைய ‘தமிழர் கண்ட விவேகானந்தர்’ எனும் நூலிற்கு முன்னுரை கேட்பதற்காக முதன் முதலில் சந்திக்க சென்றேன். அப்போது கலாஷேத்திராவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அதுவரைக்கும் அவரை நான் பார்த்ததில்லை. எங்கள் அருகே ஒருவர் வந்தார். அவரிடம் சாமிநாத சர்மாவை பார்க்க வேண்டும் என்றோம். அவர் வாங்க என்று எங்களைக் கூட்டிக் கொண்டு ஒரு குடிசைக்குள் சென்றார். அப்போது எங்களிடம் கூட்டிக்கொண்டு சென்றவரே, ‘நான்தான் சாமிநாத சர்மா, சொல்லுங்க’ என்றார். அதற்குப் பிறகு எனக்கு அவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அப்போது பர்மா வழி நடைபயணம் என்ற நூலின் கையெழுத்துப் பிரதியை என்னிடம் கொடுத்தார். நூலாக வெளிவர ஏற்பாடு செய்யச் சொன்னார். ஆனால் 7.1.1980இல் அவருடைய இரண்டாவது நினைவு நாளில்தான் வெளியிட முடிந்தது.
வெ. சாமிநாத சர்மா தமிழில் 80 நூல்களை எழுதியுள்ளார். ஆனால் பின்னாளில் நான் படித்து தெரிந்து கொண்டது தமிழில் முதன் முதலில் அரசியல் நூலை கொண்டு வந்தவர் ஜி. சுப்பிரமணி ஐயர். அதாவது 1884-ல் ‘ஸ்தானிக சுய அரசாட்சி வினாவிடை’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் நகராட்சிகளுக்கு தேர்தல் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் ஆங்கிலேயர்கள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அப்போது தேர்தல் என்றால் என்ன என்று நம்முடைய மக்களுக்குத் தெரியாது. இந்த தேர்தலை விவரித்து, ரிப்பன் பிரபு கொண்டு வந்த ‘‘ஸ்தல சுயாட்சி திட்டம் பற்றி வினாவிடை’’ வடிவில் நூலைக் கொண்டு வந்தார். மக்களுக்கு ஒரு அரசியல் கண்ணோட்டம் கிடைப்பதற் காக இந்த நூல் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பிறகு ஏழு எட்டு நூல்களை அவர் எழுதியுள்ளார்.
தமிழில் அரசியல் நூல்களைப் படைத்தவர்களுள் ஒரு முன்னோடி சாமிநாத சர்மா. இவருக்கு முன்பே காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா என்று ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த போராளி. அவரிடம் இம்மி அளவுக்கு கூட பிராமணியத்தை பார்க்க முடியாது. வ.வே.சு ஐயர் நடத்திய குருகுலப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தார். இதை திரு.வி.க. பதிவு செய்து இருக்கிறார். இவர்தான் மார்க்சியத்தை பற்றி முதன் முதலாக தமிழில் எழுதியவர். சிங்காரவேலர் கொண்டாடிய முதல் மே தினத்திற்கு கிருஷ்ணசாமி சர்மாதான் தலைமை தாங்கினார். கிசான் லேபர் கட்சியைப் பற்றி எழுதி இருக்கிறார். இவர் சிறையில் இருந்த போது தமிழில் ஏழு நூல்களை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் 17 நூல்களை எழுதி உள்ளார். சாமிநாத சர்மா ரங்கூனில் பாரத்பந்தர் என்று கடை நடத்தி வந்தபோது கிருஷ்ணசாமி சர்மா நூல்களை விற்பனை செய்துள்ளார்.
சாமிநாத சர்மா என்னிடம் நெருக்கமான நட்புக் கொண்டவர். அவரின் நூல் உரிமையை என் பெயரில்தான் உயில் எழுதி வைத்தார். அவருடைய நூலின் நாட்டுடைமைக்கான தொகை எனக்கு வழங்கப்பட்டது. அந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த முதல் அரசியல்வாதி கிருஷ்ணசாமி சர்மா. இவரைப் பற்றி நான் புத்தகம் எழுதிய போது, அவருடைய படம் கிடைக்கவில்லை. அதற்காக காஞ்சிபுரம் டி.எம்.பார்த்தசாரதி வீட்டிற்கு சென்றேன். அவர் சி.பி.எம். கட்சியை சேர்ந்தவர். அப்போது காஞ்சிபுரத்திற்கு பெருமை அண்ணாதுரையால் அல்ல. கிருஷ்ணாசாமி சர்மாவால் தான் என்றார். ‘அரசியல் ஞான போதினி’ என்ற பதிப்பகத்தையும் நடத்தினார். சாதி எதிர்ப்பில் முக்கியமானவராக இருந்ததால், அவர் இறந்த பிறகு, பிரேதத்தை தூக்கிச்செல்ல அவர் சாதியை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. டி.எம்.பார்த்தசாரதி அவருடைய மாட்டுவண்டியில் பிரேதத்தை எடுத்துச் சென்றார். கொள்ளி வைக்க யாருமே வராததால் அவருடைய மனைவியே கொள்ளி வைத்தார்.
சாமிநாத சர்மாவைக் கொண்டு மார்க்சின் மூலதனத்தை தமிழில் மொழிபெயர்க்க சிலர் விரும்பினர். சாமிநாத சர்மாவின் தமிழ் மிக அருமையாக இருக்கும். பிளாட்டோவின் அரசியல் என்ற நூலைப் படித்தால் உங்களுக்குப் புரியும். ஜீவாவின் பாடல்களுக்கு முன்னுரை எழுதி இருக்கிறார். மூலதனத்தை ஒரு தனி மனிதர் மொழி பெயர்க்க இயலாது என்றார். குழு அமைத்துதான் மொழி பெயர்க்க முடியும் என்றார். மூலதனத்தை ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப் பதற்கே மிகவும் சிரமப்பட்டார்கள். இங்கே மூலதனத்தை மொழி பெயர்த்தது டிக்ஸ்னரி அர்த்தம்தான். ஒன்றுமில்லாததற்கு இது பரவாயில்லை. சாமிநாத சர்மா எழுதிய காரல்மார்க்ஸ் என்ற நூல் மிக அற்புதமான நூல். பொதுவான கருத்துகளை மேலோட்டமாக சொல்லாமல் ஆராய்ச்சி தன்மையுடன், அடிக்குறிப்புகளுடன் கொடுத்தவர் சாமிநாத சர்மா. அவருக்கு முன்பும் பின்பும் அவரை மாதிரி எழுத்தாளர் இல்லை. பிரபஞ்சசோதி பிரசுராலயம் சொக்கலிங்கம் செட்டியாருக்கும் சாமிநாத சர்மாவுக்கும் பிரச்சனை இருந்தது. அந்த பிரச்சனை என்பது ராயல்டி சமாசாரம்தான். அதைப்பற்றி சொக்கலிங்கம் கடுமையாக கடிதம் எழுதி இருந்தார். இந்த சூழலில்தான் எனக்கு நூலின் உரிமையைக் கொடுத்தார் சாமிநாத சர்மா. கடைசி வரையில் தேசியவாதியாக வாழ்ந்தார். 7.1.1978இல் கலாசேத்திராவில் தமது சிறு குடிலில் பிற்பகல் மூன்று மணி அளவில் அமரரானார். ஆனால் அவரை அனைத்துக் கட்சியினரும் கொண்டாடினர். அந்தக்கால அரசியல் மேடைகளில் பேசுவதற்கு இவருடைய நூல்கள்தான் தமிழ்மட்டுமே அறிந்தவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தன.
சாமிநாத சர்மாவின் நூல்கள் எனக்கு இயக்கங்களை எப்படி பார்க்க வேண்டும் என்ற தெளிவைத் தந்தது.
உங்களின் பாரதி ஆய்வுகள் பற்றி கூறுங்கள்?
தொ.மு.சி.ரகுநாதன், கைலாசபதி மரபில் பாரதி ஆய்வுகளை செய்தேன். பாரதி அடிப்படையில் மார்க்சியவாதி இல்லை என்றாலும் பாரதியைப் பற்றி மார்க்சியப் பார்வைக்கான தேவை இருக்கிறது. மார்க்சிய சிந்தனையை வளர்ப்பதில் பாரதிக்கு ஒரு பங்கு உண்டு. ஆர்.கே. கண்ணன் மூலம்தான் இந்தக் கருத்துகளை நான் உள்வாங்கினேன். அவர் எழுதிய ‘புது நெறி காட்டிய பாரதி’ நூலை வாசித்தால் இதை உணரமுடியும்.
நான் என்னதான் பாரதியாரின் பத்திரிகைகளை படித்தாலும் சில நேரங்களில், திரும்ப திரும்ப படிக்கும்போதுதான் நாம் கவனிக்காத பல கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும். பாரதியார் பிப்ரவரி 6, 1909-ல் ‘இந்தியா’ பத்திரிகையில் மாதாவின் கட்டளை என்று தலையங்கம் எழுதி இருந்தார். அந்த தலையங்கத்தை சாதாரண பாமர மக்களின் பாட்டுக்களையும் பயன்படுத்தி எழுதி உள்ளார். தலையங்கத்தின் பின்வரும் பகுதி வர்க்கப் பார்வையில் குறிப்பிடத்தக்கது. தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் பூமி சொந்தமானது. மனித சமுகத்தில் இவர்களே தேனீக்கள். மற்ற நம் போன்றோரெல்லாம் பிறர் சேகரித்து வைத்த தேனை உண்டுத் திரியும் வண்டுகள். விவசாயிகளையும், தொழிலாளிகளையுமே நாம் ‘வந்தே மாதரம்’ என்ற மந்திரத்தால் வணங்குகிறோம். இவர்களுடைய எண்ணங்களும் ஆசைகளும் பிரார்தனைகளும் மற்றோர்களால் கட்டளைகளாகப் பாராட்டி போற்றத்தக்கதாகும் என்று கூறுகிறார். மேலும் தர்மகர்த்தா பொதுவுடமையைப் பற்றியும், மேல்தட்டு மக்களுக்கும், மிட்டா மிராசுகளுக்கு சுதந்திரம் வந்து ஒரு பிரோஜனமும் இல்லை என்று எழுதியுள்ளார்.
பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் வேலை பார்த்த போது, எம்.சீனிவாசன் என்பவர் பத்திரிகை ஆசிரியராக வேலை செய்து வந்தார். அப்போது பாரதியார் எழுதியக் கட்டுரைக்காக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வருகின்றனர். அப்போது பாரதியார் மேலே இருந்து கீழே இறங்கி வருகிறார். போலீஸ்காரர் வரும் போது, ஆசிரியர் மேலே இருக்கிறார் என்று சொல்லிவிட்டு பாரதியார் சென்று விடுகிறார்.
எம். சீனிவாசன் கைது செய்யப்படுகிறார். அப்போது சீனிவாசன் கோர்ட்டில் எனக்கு தமிழே எழுத வாராது. பாரதிதான் எழுதியது என்கிறார். ஆனால் அவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்து. இதைப்பற்றி ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதி தலையங்கம் எழுதுகிறார். அந்த தலையங்கத்தில் கூட இதைப்பற்றி சூசகமாக கூட பாரதி எழுதவில்லை. ‘அமிர்த குணபோதினி’ இதழில் எஸ். ஜி. இராமநுஜ நாயுடு இதைப்பற்றி எழுதி இருக்கிறார். வழக்கு முடிந்த பிறகு கூட இதைப் பற்றி பாரதி எங்குமே பதிவுசெய்யவில்லை.
பிரம்மபாந்த உபாத்தியா என்று வங்க எழுத்தாளர் ஒருவர் இருந்தார். இவர் மகா புரட்சிக்காரர். பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவர். ‘சந்தியா’ என்ற பத்திரிகையை நடத்தியவர். விவேகானந்தரின் வகுப்பு தோழர். இவரைப் பற்றி பாரதி எழுதும் போது நான் யாருக்கும் அடிமையில்லை, பிரம்மபாந்தனுக்கு அடிமை என்று எழுதி இருக்கிறார். அப்படிப்பட்ட பாரதி இதை செய்தது எனக்கு உடன்பாடாக இல்லை.
பாரதியார், வர்ணாசிரம கருத்துகளை மிக வன்மையாக கண்டிக்கவே இல்லை. அதே நேரம் பார்ப்பனீயத்தை பாரதி வளர்த்ததாக சொல்ல முடியாது. எல்லா இடங்களிலும் மனித பலவீனம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக மற்ற செயல்களை குறை கூற முடியாது.
துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு பொதுவாக நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் துறை சாராத ஆய்வாளர்களுக்கு அதாவது உங்களை போன்றவர்களுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லையே?
நண்பர் ஒருவர் என்னுடைய ‘பயோடேட்டா’வைப் பார்த்தார். ‘என்ன மணி நீங்க எஸ்.எஸ்.எல்.சி. தானா?’ என்று கேட்டார். பொதுவாக இங்கே உள்ள மூடப்பழக்க வழக்கம் என்பது பல்கலைக்கழகத்திற்கு வெளியே அறிவு மரபே கிடையாது என்பதுதான். பெரியார், ஜீவா, மயிலை சீனி வேங்கடசாமியை பார்க்கும் போது, அறிவு மரபு வெளியேதான் இருக்கிறது. முறைசார்ந்த கல்வி, முறைசார கல்வி என்பது இங்கு உண்டு. இது ஆங்கிலக் கல்வியால் வந்த விளைவு. ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை என்று ம.பொ.சி புத்தகமே எழுதி இருக்கிறார். ஆங்கில ஆதிக்கம் என்பது மேலாதிக்கத்தின் கூறாக தமிழ்நாட்டில் இருந்தது. இன்னும் கூட இருக்கிறது. ஆங்கிலம் படித்தவன் எல்லாம் உயர்சாதி என்ற மனோபாவம் இங்கு இருக்கிறது. கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்த நிலைகள் இல்லை. என்னுடைய நூலுக்கு முன்னுரையோ அல்லது விமர்சனம் எழுதுகிறவர்கள் Non-acadamician ஆக இவர் இருந்தாலும் கூட’ என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
ஈழம் தந்த தமிழியியல் ஆய்வுப் பேரறிஞர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் என்னுடைய ‘பெ.சு.மணி ஆய்வுக் கட்டுரைகள்’ எனும் நூலிற்கு (2009) அளித்துள்ள முன்னுரையில் பின்வரும் பகுதி எனக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
‘‘ஒருபுடை நோக்கும் பொழுது நண்பர் பெ.சு.மணி தன் சீவிய காலத்திலேயே தான் விதைத்தவற்றுக்கான அறுவடையைப் பெற்றுக் கொண்டவர். அதனிலும் பார்க்க அந்த அறுவடையின் சிறப்புக்கான பாராட்டுக்களையும் பெற்றுள்ளவர் ஆவர். இப்படியான புலமைத் திருப்தி எல்லோர்க்கும் கிட்டுவதில்லை. அந்த பெருமைக்காக நண்பர் பெ.சு.மணி அவர்களை மனம் நிறைய வாழ்த்துகிறேன். இந்த வாழ்த்து மேலிருந்து கீழே பார்த்து சொல்வதல்ல, கீழிருந்து மேலே பார்த்து சொல்வதாகும். பெ.சு.மணி மெல்லெனப்பாயும் ஆறாக இந்த வரலாறுகளை யெல்லாம் நமக்கு எடுத்துச்சொல்கிறார். 66நூல்களில் ஆசிரியரான இவரது நூற்பொருள் மையம் சுதந்திர கால இந்தியாவும் விடுதலை போரும். அந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியத்துவம் வகித்தவர் தமிழரான பாரதி. பாரதியாரை மிக அகண்ட பின்புலத்தில் வைத்து நோக்கியுள்ளது இவரது முதன்மைப் பணியாகும். பெ.சு.மணி பற்றி நான் அடுத்துக் குறிப்பிட விரும்புவது அவரது ஆராய்ச்சி நெறிகளாகும். வரலாற்றுப் பின்புலம் முழுவதையும் தந்து அதனூடாகச் சொல்லப்படும் விடையம் பற்றிய அபிப்பிராயத்தை தோன்றுவிக்கும் முறைமையை வரலாற்றுமுறை விமர்சனம் பிவீstஷீக்ஷீவீநீணீறீ நீக்ஷீவீtவீநீவீsனீ என்பர்’.
‘நிதானம், நேர்மை, நுனித்து நோக்கும் திட்டம், நெஞ்சுறுதி ஆகிய சிறப்பியல்புகளிலே ஒருமைப் பாடுடையவராய் இருக்கின்ற திறனாய்வாளர் பட்டியலிலே’ என என் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்’ பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி.
முற்போக்கு படைப்பிலக்கியத்திலும், திறனாய்விலும் பராதியியலிலும் தமக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றவரான தொ.மு.சி. ரகுநாதன் ‘கார்ல்மார்க்சின் இலக்கிய இதயம்’ எனும் தன் நூலிற்கு (1986) அளித்துள்ள முன்னுரையின் பின்வரும் பகுதியும் நான் பெற்ற அங்கிகாரங்களில் ஒன்றாகும்.
‘எடுத்துக் கொண்ட தலைப்பு அல்லது கருப்பொருள் சம்பந்தப்பட்ட தகவல்கள் பலவற்றையும் கர்மசிரத்தை யோடு தேடிச்சேகரிப்பது சான்றாதாரங்களைக் கூடியவரையில் அவற்றின் மூல வடிவிலேயே கண்டறியச் சிரமங்களை மேற்கொள்வது, புத்தகம் எழுதுவதை ஓர் யக்ஞமாகக் கருதி அதற்கு விரதம் மேற்கொண்டு, புதிய தகவல்களையும், சான்றுகளையும் தக்க ஆதாரங்களோடு திரட்டித் தருவதில் மெய்வருத்தம் பாராது பாடுபடுவது, இத்தனைக்கும் மேல் எழுதும் தொழிலுக்கு மிக மிக அத்தியாவசியமான – ஆயினும் இப்போது பல எழுத்தாளர்கள் விஷயத்தில் இல்பொருளாகி விட்ட – நேர்மையோடும் சத்தியத்தோடும் எழுத்துப் பணியில் ஈடுபடுவது – ஆகிய இவையே திரு.பெ.சு.மணியின் நூல்களை அறிஞர் உலகமும் அறிவார்ந்த வாசகர் வட்டமும் கணக்கில் எடுத்துக் கொள்ளச் செய்யும் சிறப்புகள் எனலாம்.’
எத்திசையிலும், எவரிடமிருந்தும் அறிவாற்றல் வந்தாலும் இருகரம் கூப்பி வரவேற்கும் மனப்பக்குவம் தமிழர்களிடையே யாழ்பாணத்தில் இருக்கிறது. பிராமணர், பிராமணரல்லாதோர் பிரச்சனையில் எத்தகைய அறிவாளியாக இருந்தாலும் பிராமணராக இருந்தால் ஒதுக்கிவிடு என்ற மனோபாவம்தான் தமிழகத்தில் மேலோங்கி இருக்கிறது. தமிழியியல் என்று எடுத்துக் கொண்டால் தனிநாயகம், கைலாசபதி, சிவதம்பி மாதிரி இங்கு சிலராக இருக்கும் நிலைமை பலராக மாறவேண்டும். - புத்தகம் பேசுது மார்ச் 2011
l