ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடைக்கோடி மலைக் கிராமம் முதல் முறையாக அம்மாவட்டதின் ஆட்சியரை இழுத்து வந்தது. கொஞ்சம் மழை பெய்தாலும் பல மணி நேரம் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத அவலம் அங்குள்ள மணியாச்சி பள்ளம். அதற்கு பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்த காரணமாக அமைந்தது. மலைப் பகுதியில் மானிய விலையில் எரிவாயு இணைப்புகளை வேகப் படுத்தியது. சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் பேருந்தே இல்லாத மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் சென்று வரக் காரணமாக அமைந்தது.
இத்தகைய குழந்தைகள் இனிமேலும் பள்ளி இடை விலகி சென்றுவிடக் கூடாது என்பதற்காக எல் ஐசி ஊழியர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் பணமுடிப்புக் கொடுத்து நிரந்தர சேமிப்பில் இறுத்தி வைத்து குழந்தைகளை படிக்க வேண்டும் என்று கூட பல்லாயிரம் ரூபாய் நிதி கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது.
இந்த மூன்று பணிகளும் நடைபெறுவதற்கு மூன்று குழந்தைகளின் அறிவியல் மாநாட்டு ஆய்வு அறிக்கைகள் காரணமாக இருந்தன.. மூவரும் பழங்குடி குழந்தைகள். மூவரும் பள்ளி இடை விலகி, குழந்தை தொழிலாளர் பள்ளியில் படித்தவர்கள். மூவரும் முதல் முதலாக தங்கள் மாவட்டத் தலைவருக்கு குழந்தைகள் அறிவியல் மாநாடு வழியாகத் தான் அறிமுகம் ஆனார்கள். முதல் முதலாக ரயிலைப் பார்த்தார்கள். அதில் பயணம் செய்தார்கள். மலைப்பூ நாவலின் நாயகி லட்சுமி எதையெல்லாம் முதல்முறையாக பார்த்து அனுபவத்தார்களோ அதேபோல் இவர்களும் பார்த்து அனுபவித்தார்கள். இதில் இப்போது அதில் ஒரு குழந்தை விஞ்ஞானி, கணேசன் இளங்கலை கணினி அறிவியல் பட்டம் படித்து வருகிறார் பகுதி நேரமாக. சின்னக் கண்ணன் பத்தாம் வகுப்பு படித்து படித்து வருகிறார்.
மற்றொருவர் மீண்டும் வறுமை தாளாமல் கர்நாடக மாநிலத்தில் குழந்தை தொழிலாளியாக சென்று விட்டார். இப்போது வயதுவந்த தொழிலாளியாகி விட்டார் எனக் கேள்வி. மலைப் பகுதி குழந்தைகளை மாநில மாநாட்டில் பங்கு பெறச் செய்ய, சிறப்பு குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமைக் கூட அவர்களுக்கு ஏற்றவாறு மலை அடிவாரத்தில் நடத்தினோம். அதிலும் மலைப்பூ நாவலில் வரும் பெரிய டீச்சர் பேராசிரியர் மோகனா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
மலைப் பூ வை படிக்க படிக்க, இவர்களது கதைகள் இவர்களது மலைகள் இவர்களின் வீடுகள், இவர்களது வாழ்நிலையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
சின்னக் கண்ணன் தேசிய மாநாடு சென்று வந்த போது, அவர் ரயிலை விட்டு இறங்கி வந்ததும் எங்கள் கல்லூரியில் ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். ஊடகங்கள் வழியாக அன்று மாலையே தமிழ் நாடு முழுவதும் சின்னக் கண்ணன் அறிமுகம் ஆகிவிட்டார். அனைத்து அரசியல் கட்சிகளும் வாழ்த்து மழை பொழிந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய மாநில செயலாளர் எங்களையும் அழைத்துக் கொண்டு, மலை முகட்டில் இருந்த சின்னக் கண்ணன் வீட்டுக்கு சென்றார். அது மலைப் பகுதி குழந்தைகள் கல்வியில் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. மலைப் பகுதி குழந்தைகள் மத்தியில் பணியாற்றி வந்த சுடர் என்ற தொண்டு நிறுவனம் நமது முயற்சிகளை புரிந்து கொண்டு குழந்தைகள் அழைத்து வந்தனர். நாம் எவ்வளவு எடுத்துக் கூறியும் குழந்தைகளை அழைத்து வர உற்சாகம் ஊட்டாத தொண்டு நிறுவனங்களும் இருக்கத் தான் செய்கின்றன. மலைப் பூ நாவலைப் படிக்கப் படிக்கத் தான், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மலைப் பகுதியில் கவனம் செலுத்தி பழங்குடி குழந்தைகள் கலந்து கொள்ள கவனம் செலுத்தினோமே, ஏன் பெண் குழந்தைகள் மீது கவனம் செலுத்த இயலவில்லை? நமக்குள் இருந்த பாலின பேதம் இத்தனை வருடங்கள் கழித்து நம்மைத் தாக்குகிறது. லட்சுமியைப் போன்ற சிறுமிகளை அடையாளம் கண்டிருந்தால் இன்னும் கூடுதலாக தாக்கம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் நாவலைப் படிக்கும் போது தான் தோன்றுகிறது.
குழந்தைகள் மாநாட்டோடு உடன் பயணிப்பவர்களுக்கு முத்துக் குமாரி போன்ற எண்ணற்ற ஆசிரியர்கள் முகங்கள் வந்து போகும். முத்துக் குமாரி ஆசிரியரை ஓர் குறியீடாகவே விழியன் படைத்திருப்பதாக உணர்கிறேன் . 1993 ஆம் ஆண்டு முதல், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வரும் குழந்தைகள் மாநாட்டிற்கு, அரசுப் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் எண்ணற்ற ஆசிரியர்களின் தியாக பிம்பம் முத்துக் குமாரி ஆசிரியர் என்பதை அறிவியல் இயக்கத்தின் ஆர்வலர்கள் அறிவார்கள். பி.எஃப் லோன் போட்டு அப்படியே எடுத்து வந்து குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக செலவு செய்து மகிழும் ஆசிரியர்கள் உட்பட்ட எல்லோருக்கும் முத்துக் குமாரி பிரதிநிதி. எத்தனை மாநாடுகளில் கலந்து இருப்போம். எத்தனை குழந்தைகளோடு உரையாடி இருப்போம். விழியனைப் போல் குழந்தைகளை, அவர்களின் உரையாடல்களை, அவர்களது செயல்பாடுகளை உற்று நோக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.
மலைப் பகுதி குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் என யாருக்கெல்லாம் குழந்தைகள் அறிவியல் மாநாடு வாய்ப்பளிக்கிறது என்று விழியன் சொல்லாமல் சொல்லி விடுகிறார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு பெறும் அறிவியல் இயக்கத்தின் அடிப்படை ஆர்வலர்கள் ஐஸ்வர்யா முதல் உதயன் சேதுராமன் மோகனா தவிவி போன்ற தலைவர்கள் வரை எப்படியான உறவை குழந்தைகளோடு வைத்துள்ளார்கள் என்பதை நாவலைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். எப்படியான கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள் என்பதும் குறியீடாகவே கதையில் கூறப்படுகிறது.
மிகமிக எளிய ஆர்பாட்டம் இல்லாத மொழிநடையில் கதை நகர்கிறது. மாநில மாநாட்டில் தேர்வாகி, அகில இந்திய மாநாட்டிற்கு அழைத்து செல்ல இயலாமைக்கு பெண் குழந்தைகளே காரணம். எனவே, “இனிப் பெண் குழந்தைகளையே இத்தகைய செயல்பாடுகளில் சேர்க்க வேண்டாம்” என சர்வசாதாரணமாக பாலின பேதத்தை வெளிப்படுத்தும் தலைமை ஆசிரியர், லட்சுமி காசியில் நடந்த தேசிய மாநாட்டிற்கு சென்று பள்ளி திரும்பும் போது, முழுப் பள்ளியையும் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து வந்து லட்சுமியை வரவேற்று ஆரத்தழுவிக் காட்சி! அப்பப்பா. நமது இயலாமையும் பாலின பேதத்திற்கு தோததாக அமைந்து விடுகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், அதுவும் நாட்டின் பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில், ஆறாம் வகுப்பு குழந்தை மேடை ஏறி ” எங்கள் பள்ளிக்கு கழிப்பறை வேண்டும். எங்கள் ஊருக்கு பள்ளி வேண்டும்” என்று ஆணித்தரமாக பேச முடியுமா என்று நினைக்கலாம். ஸ்சுவட்ச் பாரத் ஸ்சுவட்ச் என்று மத்திய அரசு முழங்கிக் கொண்டிருக்கும் போது, புதிய கல்விக் கொள்கை வழியாக மலைப் பகுதியில் ஏற்கனவே உள்ள பள்ளிகள் இழுத்து மூடப்படும் அபாயத்தில் இருக்கும் போது, குழந்தைகள் இப்படிக் கேட்குமா? இது நாவலாசிரியரின் அதீத கற்பனை என்று கூட சில வாசகர்கள் நினைக்கலாம். குழந்தைகள் இப்படிப் பேசும் என்பதை குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு பெற்ற நானே கண்ணாறக் கண்டிருக்கிறேன்.
அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் கௌகாத்தியில் ஓர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதில் ஒரு நாள், காலஞ்சென்ற அம்மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் பங்குபெற்றார். குழந்தைகளைக் கேள்வி கேட்கக் கோரினார். பிரம்மாபுத்திரா நதிக் கரையில் இந்தப் பக்கம் கௌகாத்தி நகரம். அந்தப் பக்கமோ, சுத்தமான குடிநீர் கூட இன்றி வாழும் ஏழை எளிய மக்கள். வறுமை தாண்டவமாடுகிறது. மாநாட்டின் ஒருபகுதியாக அக்கரைக்குச் சென்று வந்த குழந்தைகள். இதைப் பார்த்து வந்தனர். நேரிடையாக ஒரு மாணவன் முதல்வரிடம் இக்கேள்வியை முன் வைத்தான். முதல்வர் ஆடிப்போனார். அதற்கொரு ஏற்புடைய பதிலையும் சொன்னார். குழந்தைகள் அப்படிப் பல கேள்விகளை கேட்கும் திறனுள்ளவர்களே. அவ்வாறு நடக்காதது பெரியவர்களே என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
லட்சுமி மலைக்குள் இருக்கும் வரை அவள் யாரென்று யாருக்கு தெரியவில்லை. வாய்ப்பை பயன்படுத்த ஊக்குவிப்பு செய்யும் போது ஏழை எளிய மக்களின் தலையாய பிரச்சினை கழிப்பறை வசதி மற்றும் கல்வி இரண்டையும் சரியாக அடையாளம் கண்டு சுட்டிக் காட்டுகிறாள். மலை மக்களின் ஆயிரத்தாண்டு சாப விமோசனம் திற்காக ஏங்கி அழும் காட்சி, கல்நெஞ்சையும் கரைத்து கதறச் செய்துவிடுகிறது. விழியனின் இயல்பான எழுத்து நடைக்குள் அப்போது வேகம் கூடிவிடுகிறது. தாண்டவம் அதில் தவழ்கிறது. சமுக அற்பணிப்பு உள்ள படைப்பாளியின் வீரியத்தை அடையாளம் காட்டுகிறது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எந்த அங்கீகாரத்திற்கும் ஏற்காமல் அறிவியல் இயக்கத்திலும், குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும் தொடர்ந்து இயங்கி வந்த, வருவோருக்கு இந்த நூலை விழியன் காணிக்கை ஆக்கியிருப்பதற்கு, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
குழந்தைகள் மாநாட்டின் மைய நோக்கத்தை வெகு அழகாக, ஆழமாக, லாவகமாக குழந்தைகள் உள்வாங்கிக் கொள்ளும் விதத்தில், படைத்திருக்கிறார் விழியன். குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இதனைப் படிக்கத் தூண்டலாம். குழந்தைகள் மாநாட்டின் அனைத்து அம்சங்களையும் கதையாக சொல்லி விடும் யுக்திக்காகவும் அறிவியல் இயக்கம் நாவல் ஆசிரியருக்கு நன்றி கூற வேண்டும்.
1993 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை ஒரு புதினமாக வடித்து, வெளிவரும் முதல் படைப்பிலக்கியம் இதுவாகத்தான் இருக்கும். இது இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்கப்பட வேண்டும்.
நா.மணி தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறைத் தலைவர். l
previous post