ஆயிஷா இரா. நடராசன்
வாசிப்பு என்பது பொழுது போக்கல்ல. எழுத படிக்கவே கூடாது என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒருவனுக்கு – வாசிப்பு என்பது ஒரு போராட்டம் – நெல்சன் மண்டேலா
களை எடு! | நம்மாழ்வார் |கிழக்கு, |பக்.108 ரூ.115
இயற்கை விவசாயம் குறித்த மிக முக்கிய பாடநூலாக நான் இந்த நூலைப் பார்க்கிறேன். மத்திய அரசின் விவசாய விரோத கொள்கைகள் சட்டங்களின் பின்னணியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் நூல் இது. உலக விவசாய பேரறிஞர்கள் மசானேபு ஃபுகோகா, தபோல்கர் போன்றவர்களை புத்தகம் முறைப்படி அறிமுகம் செய்கிறது.
இயற்கை வேளாண்மை: வழிகாட்டும் கியூபா எனும் கட்டுரை நம் எத்தனையோ அறியாமை இருள் விழி திறந்து வழி காட்டும் அற்புதம். இந்த நூலில் – நம்மாழ்வாரின் இரண்டு நேர்காணல்களும் உள்ளன. பஞ்சமும் 12 கட்டுக்கதைகளும் கட்டுரையை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்க வேண்டும். உப்பு நீர் குடித்தால் தாகம் தீராது. உப்பு உரம் போட்டால் அது தண்ணீரை அதிகம் இழுக்கும் என்பன போன்ற எளிய சாட்டையடிகளும் உண்டு எல்லாரும் படிக்க வேண்டிய பாடம்.
உவர் (சிறுகதைகள்) | இரா. சிவ சித்து | மணல் வீடு |பக்.152,|ரூ.150.
சிவ சித்து ஒரு நாய்பிரியர்…. குறிப்பாக வேட்டை நாய் வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு. இந்து தமிழ் திசையில் அதுபற்றி தொடர்கூட எழுதினார். ஆனால் மணல் வீடு இதழில் அவரது சில கதைகளை வாசித்து இருக்கிறேன். மண் மணக்கும் உவர், வௌம், கேவி என தலைப்பே அசத்தல்.
ஒவ்வொரு கதையிலும் ஒரு கிராமமே வாழ்கிறது. மருந்து சாப்பிட்டு இறக்கும் அந்த மாமாவின் வாழ்க்கை சித்திரமான உவர் படிக்க படிக்க மனதை வருடும் அழகும், விடியல் கதையில் வரும் லாலாக்கடை அலுவாவும், சிவேரி சுப்பையா கடை மைசூர்பாகும் தந்த சுவையும், சக்திக்கெடா வெட்டும் வெள்ளைத்துரை தரும் படையல் சோறு கூடவே வெறும் கதையில், மூன்று ரூபாய் முட்டைகோஸ் கேக் மூன்றும் ஒரு ரஸ்னா பாக்கெட்டும் பரிமாறும் இக்கதைகள் இழந்த கிராமங்களை நமக்கு மீட்டு தரும் நம்பிக்கை உலகை முன் வைக்கின்றன.
மணல் வீடு, குட்டப்பட்டி கிராமத்தில் இருந்து இப்படி அச்சும் அமைப்பும் அசத்தலான நூல்களை தருவது பாராட்டுக்குரியது.
தமிழர்களின் ஆதி நிலம் | ஆதி வள்ளியப்பன் | புக்ஸ் ஃபார் சில்ரன் | பக்.46, ரூ.45
இதழாளர் டோனி ஜோசப் எழுதிய ஏர்வி இந்தியன்ஸ் எனும் மிக சிறப்பான நூலை முன்வைத்து சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டில் அழகான அறிமுகத்தை ஒரு நூலாக வடித்திருக்கிறார் பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன். சிந்துவில் வாழ்ந்தவர்கள் ஆதி தமிழர்களே என்பதை நம் மண்ணின் தொல்லியல் அறிஞர்களான ஐராவதம், ராகுலசாங்கிருத்யாயன், இரா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் கருத்து வழி இந்நூல் நிறுவுகிறது.
சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. அது மட்டுமல்ல சிந்து மக்கள் பேசிய மொழி திராவிட மொழி. இன்று ஆரியர்கள் ஆர்ப்பரிக்கும் சரஸ்வதி ஆறு உண்மையில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ளது. 65,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல்லாவரத்திலும், 2.5 லட்சம் வருடங்களுக்கு முற்பட்ட ஆதி மனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகள் அத்திரம்பாக்கத்திலும் கிடைத்துள்ளன. இப்படி பல நூறு தகவல்கள் யார் படித்தாலும் தொல் ஆராய்ச்சி செய்ய தூண்டும்.
மந்திரச் சந்திப்பு | யெஸ்.பாலபாரதி | புக்ஸ் ஃபார் சில்ரன் | பக். 104, ரூ.100
சிறார் கதையாடலில் முக்கிய தற்காலக் குரல் யெஸ். பாலபாரதி. இந்த கதையில் மிகு யாதார்த்த பேன்டசி புனைவை நமக்கு தருகிறார். இந்த நோய்க்கால ஊரடங்கில் வீட்டில் இருக்கும் ஒரு சிறுவனின் மின் விசிறிவழி விரியும் என புத்துலகை படைத்துள்ளார். கல்கி, கோபால கிருஷ்ணனில் இருந்து வாண்டுமாமா முதற்கொண்டு படைத்த பல கதாப்பாத்திரங்களை சந்திக்கும் மந்திர கதை.
குறிப்பாக காகித பாப்பா, பறக்கும் பாப்பாவாக இக்கதையில் தோன்றி பல ஊர்களை பறந்து கடப்பது நம்மை கட்டிப்போடும் அழகு. பாலபாரதி கோகுலம் காலத்தில் வளர்ந்த அற்புத சிறுவன். அழ.வள்ளியப்பா காலத்தின் கின்னார் இனத்தை சேர்ந்த கானமூர்த்தியைக்கூட விடவில்லை. எல்லாமே தத்ரூபமாக நம் கதையில் கச்சிதமாக இணைந்து ஒரு ஊரடங்கில் இந்த மந்திர சந்திப்பை நிகழ்த்தி அசத்துகிறார்கள். குழந்தைகளின் கற்பனா சக்தியை வளர்க்கும் சிறப்பான கதை. ரமேஷ் வைத்தியாவின் முன்னுரை பல ஜன்னல்களை திறக்கிறது.
கரும்பலகை நாட்கள் | முனைவர் அ.சந்தான கிருஷ்ணன் |பிரதிபதிப்பகம் | பக்.165, ரூ. 150.
ஒரு தலைமை ஆசிரியரின் கல்வி வாழ்க்கை அனுபவங்களை ஒரு புத்தகமாக வாசிப்பது அற்புத அனுபவம் தரும் விஷயம். முனைவர் அ.சந்தான கிருஷ்ணன் திருப்பத்தூர்காரர். அவரது கரும்பலகை நாட்கள் என்கிற இந்த நூல் நம் கல்வி முறை கடந்து வந்த பாதையை நுண்ணிய முறையில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த நூலில் போகிற போக்கில் தன் நேர்மையான அரசுப்பணி நாட்களின் அனுபவங்களுடன் நிலைப்பாடுகளையும் அவர் பகிர்ந்து செல்கிறார். தற்போது எண்பது வயதை நெருங்கி வரும் இக் கல்வியாளர் இன்றும் தன் மாணவர்களோடான தொடர்பில், அன்பில், தோழமையில் உறைந்து கிடப்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.
இந்த நூலில் உள்ள மாணவரும் அரசியலும், பெண் ஆசிரியர்கள், ஆசிரியர் இயக்கங்கள், கல்வி எனும் கருவறை போன்ற கட்டுரைகளை வாசித்து எளிதாக கடக்க முடியாது. பள்ளியில் மணியே இல்லாமல் தன் சைக்கிள் மணி அடித்து பள்ளி நடத்திய காலத்தை – ஓராசிரியர் பள்ளி காலத்தை அவர் எழுதும் பாங்கு நமக்கு கிடைக்கும் பொக்கிஷம். ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
இதுதான் வைரல் | ஹேமபிரபா | பாரதி புத்தகாலயம், பக்.88, ரூ.90.
நீல நிற அட்டை. அதில் கருஞ்சிவப்பு கோவிட் வைரஸ். அறிவியல் பார்வையில் கரோனா என்ற அறிவிப்பு. வேறு என்ன வேண்டும். ஒன்னரை மணி நேரத்தில் வாசித்து முடித்து விட்டேன்.
ஹேம பிரியா ஒரு மருத்துவர் அல்ல. கண்டிப்பாக ஒரு கிருமி வித்தக விஞ்ஞானியும் அல்ல. நேனோ விஞ்ஞானி. ஆனால், வைரஸ் பற்றிய பதிவுகளால் தேர்ந்த அறிவியல் செய்தி பகிர்வாளராக மிளிர்கிறார். பல அறிவியல் துறைகளையும் நுய்த்துணர்ந்து எழுத நமக்கு – அடுத்த தலைமுறையாளர்கள் வந்துவிட்டதை நூல் உணர்த்தி நிற்கிறது.
கரோனா வைரஸுக்கு எதெல்லாம் மருந்து என்பதைவிட எதெல்லாம் மருந்து கிடையாது என அவர் அடுக்குவது சுவையாக வந்துள்ளது. முதல் சுவை, இது இரண்டாம் அலை என எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை விளக்கும் இரண்டாம் அத்தியாயம் வில்லியம் ஃபார் எனும் மாமனிதரை நமக்கு அறிமுகம் செய்கிறது. பிறகு வரும் பக்கங்களில் பிளாஸ்மா சிகிச்சை உட்பட சிகிச்சை முறைகளை விவரிக்கிறது.
இந்தியாவில் எந்த நோய் குறித்தும் எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது எத்தகைய பெரிய சவாலாக இருக்கிறது என்பதை கர்பப்பை வாய் புற்று – உதாரணம் வழியே ஹேம பிரியா விளக்கும் இடங்களை வாசித்தால் நம் மக்களின் அறியாமை அதிரவைக்கும்.
கராத்தே ஆடு |பேரா.எஸ்.சிவதாஸ் | புக்ஸ் ஃபார் சில்ரன் | பக்.32, ரூ.30.
மலையாள சிறார் எழுத்தாளர் எஸ். சிவதாஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அம்பிகா நடராஜனை நான் அறிவேன். இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் நிறைய மொழி பெயர்ப்பவர்
இந்த கராத்தே ஆடு, அகந்தையும் இறுமாப்பும் கொண்ட பலரை முட்டிச் சாய்க்கும் அற்புத சிறார் நேச பிறவி. நம் குழந்தைகள் விரும்பி வாசிக்க ஒரு சாகச கதை இது. ஆட்டுக்கு சிறுவன் சின்னு முட்டன் என்றே பெயர் வைக்கிறான். ஊரிலேயே தான் பெரிய அதிகாரி எனும் தலை கனமிக்க போலீஸ்காரரை முதலில் முட்டன் முட்டித் தள்ளுகிறது. கராத்தே பிளாக்பெல்ட் – அது முட்டும் முறை சீன முறையா ஜப்பானிய முறையா என்று கேட்கும் இடம் நமக்கே சிரிப்பை வரவழைத்து விடும். சின்னு எங்கே போனாலும் கராத்தே ஆடு கூடவே போகிறது.
சிறார் கதையாடலில் சாகச பிராணிகளுக்கும் வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளுக்கும் எப்போதுமே தனி இடம் உண்டு. இந்த புத்தகம் அவர்களது ஆவலை மேலும் தூண்டி விலங்கு பிரியர்களாக மாற்றும்.
உருவமறியா இசைவெளி |ப.கவிதாகுமார் | புதிய கோணம் | பக்: 456 ரூ.425
தமிழ்த் திரையிசையின் வரலாறு முடியாமல் தொடரும் ஒன்று. அதை விடாமல் தேடி எழுத்தில் வடிக்கும் பெரிய வேலையை ப.கவிதாகுமார் செய்து வருகிறார். அநேகமாக இந்த பெரிய புத்தகம் முதல் பாகமாக இருக்கலாம். மதுரையைச் சேர்ந்த கவிதா குமார் முன்பு தீக்கதிரில் பணியாற்றி தற்போது தினகரனில் இருக்கிறார் கவிஞர் எனவே அங்கங்கே கவித்துவம் மிளிர்கிறது.
அறியப்படாத கலைஞன் டி.எஸ். ராகவேந்திராவோடு நூல் தொடங்குகிறது. ஆனால் தன் ஆதர்சன இயக்குனர் கர்ணன் வழியே விரியும் அறிமுகம் நம்மை கட்டிப் போடுகிறது. இரண்டே பாராவில் இப்படிப்பட்ட ஒரு சூப்பர் புத்தகத்திற்கும் அறிமுகம் எழுதுவது நியாயம் இல்லை என்றாலும் இரண்டு நாட்களில் என் ஜும் கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் சரளமாக நான் வாசித்து முடித்த புத்தகம் என்பது சிறப்பு. அத்தனை செய்திகள் உள்ளன.
மெல்லிசை மன்னரின் இசைக் குழுவில் பாடகராக இருந்து கொண்டே கவிஞராக மிளிர்ந்த உதயணன், நாம் அதிகம் அறியாத கவிஞர் சீத்தாராமன், பாடகர் நடிகர் சதன் போன்ற அபூர்வ மனிதர்களையும் 2,563 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் மதுரை தங்கம் தியேட்டர் உட்பட தமிழக சினிமா சரித்திரத்தை புரட்டிப்போடும் புத்தகம். செம விறுவிறுவென்று ஓடுகிறது.
வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம் இரு மாநில கள ஆய்வு
|எம்.எஸ்.செல்வராஜ்,
சங்கர் கோபாலகிருஷ்ணன், த்ரேபான் சிங் சௌஹான் |பாரதி புத்தகாலயம்|பக்.48,|ரூ.50
வளர்ச்சி நாட்டின் முன்னேற்றம் என்கிற போர்வையில் இயற்கை பேரழிவை ஏற்படுத்தும் கார்பரேட் கள்ளத்தனத்தை இதைவிட பட்டவர்த்தனமாக கிழிக்க முடியாது. நகர்மயமாதலில் – சுற்றுச்சூழல் மீது எந்த அக்கறையும் இல்லாத வனத்துறை கார்பரேட்களுக்கு அடியாட்களாகும் போது சமூக காடுகள் எனும் பெயரில் அயல்நாட்டு மரங்களை – ஒரே மரக்காடாக வளர்க்க நீலகிரியை சுரண்டி ஏப்பம் விட்ட கதையை முதல் சில பக்கங்களில் படிக்கவே கொதிக்கிறது.
பழங்குடியினர், ஆதி – மலைசாதியினர் உரிமைகளை மீட்பதற்கும் காட்டுபயிர்களை பாதுகாப்பதற்கும் தொடர்பு இருப்பதை இது நாள் வரை நான் யோசித்தது இல்லை. வனப்பகுதிக்கு மிக அருகே விவசாயம் செய்ய வனத்துறையே ஊக்குவிப்பது, பிறகு யானை வந்தால் அவற்றை அழிப்பது என்பது ஒரு வகை பகடி. உத்திரகாண்ட், தமிழ்நாடு இரு மாநில ஒப்பீடு கள ஆய்வு என விரியும் இந்த நூலின் பல அம்சங்கள் நம்மை அதிர வைக்கின்றன. கேடு விளைவிக்கும் தாவரங்களின் ஆக்கிரமிப்பு எனும் கட்டுரை – திகைக்க வைக்கும் ஒன்று, புலிகளை, சிறுத்தை கூட்டத்தை வெறும் யூகலீப்டஸ் மரமும், கருவேல மரமும் அழித்துவிடும் கொடுமை பதிவாகாத விஷயம்.
பத்மராஜன் திரைக்கதைகள் | மணி எம்.கே.மணி | புதிய கோணம் |பக். 184, ரூ. 180
பத்மராஜன் திரைக்கதைகள் ஒரு அழகான தொடராக புக்டே டாட் காமில் வெளிவந்த போதே ரசித்து வாசித்தவர்களில் நானும் ஒருவன். மணி எம்.கே.மணி நம் திரைத்துறையில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிபவர். திரைக்கதை எழுதுவது பற்றி தமிழில் புத்தகமே கிடையாது. இந்த சூழலில் புதிய கோணம் இந்த நூலை கொண்டு வந்திருக்கிறது.
திரைக்கதைகளை அமைப்பதில் தனக்கென்று முத்திரை பதித்த மலையாள திரை உலக மேதையின் அணுகுமுறையை கதை கதையாக விவரிக்கும் மிக சிறப்பான புத்தகம் இது. பத்மராஜனின் முரடனும், திருடனும், வேசியும் கூலியும் கூட நம்மிடம் ஆகத் தோழமையுடன் இயல்பாக அறிமுகம் ஆவதை மணி எழுத வேண்டும், நாம் வாசிக்க வேண்டும். இதோ இவிடே வரே படத்தை நிர்பயா கொடுமையோடு ஒப்பிடவும், தகர படத்தின் இறுதி காட்சியில் வீச்சருவா (பிச்சுவா) வோடு கதாநாயகன் – மூப்பனை (உயர்சாதிகளை) உன்னால் குத்த முடியாதுடா என மிரட்டும்போதும் குத்தி கிழிப்பதையும் பின் வர மறுக்கும் காதலிக்காக வருந்தி ரயில் தண்டவாளத்தில் ரயிலை எதிர்கொண்டு நடப்பதும் நமக்கான வாழ்விலிருந்தே ஒலிக்கும் யதார்த்தமாக உள்ளதை உணர்கிறோம். சினிமாவை நாம் எப்படி பார்க்க வேண்டும். என்பதை கற்றுக்கொடுக்கும் சிறப்பான பாடப்புத்தகமாக நான் இந்த நூலை பார்க்கிறேன் l