ஆயிஷா இரா. நடராசன்
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவு வளர்ச்சி சம்பந்தமான அத்தியாவசியமான ஒரே விசயம், நீங்கள் வாழும் இடத்திற்கு அருகே நூலகம் எங்கே உள்ளது என்பதுதான் – ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்
முறையிட ஒரு கடவுள் |சர்வோத்தமன் சடகோபன் |மணல்வீடு, |பக்.160 ரூ.150
தமிழ்ச் சிறுகதைகள் இன்று அடைந்திருக்கும் சமரசமற்ற தர மேம்பாட்டிற்கு இந்த கதைத் தொகுதி ஒரு சான்று சர்வோத்தம் சடகோபன் பெங்களூர்காரர். இவரது ஒன்றிரண்டு கதைகளை மணல்வீடு, உயிர் எழுத்து என சிறு பத்திரிகைகளில் வாசித்த அனுபவம் உண்டு. குறுநாவலுக்கும் சிறுகதைக்கும் நடுவே ஒரு கோட்டில் நிற்கும் கதையாடல் இது.
இந்தத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சில வருடங்களாக எழுதிய கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். நம்மை சீண்டி மனதை உலுக்கி ஆழம்பார்க்கும் கதைகள் இவை. தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை கதையில் வரும் ஸ்ரீனிவாசராவுக்கும் பூதக் கண்ணாடி கதையில் வரும் பசீருக்கும் ஜனனம் கதையில் வரும் பத்மநாபனுக்கும் உலகங்கள் தனித்தனி அவர்களது மனமுதிர்ச்சி ஒன்றேதான்.
சர்வோத்தமனின் உலகம் நவீன நகரம் சார்ந்தது. அங்காங்கே தெலுங்கு வந்து சர்ப்பத்தின் நாக்குப் போல நீண்டு பிறகு உள்ளே போகிறது. ஒரு கதை முடிந்து மறு கதையை தொடங்கும்போது லேசாக மூச்சு வாங்கி சொற்களின் எதிர்வினை கண்களை உறிய வைக்கிறது. நல்ல கதை தொகுப்பின் ஒரு வகை அறிகுறி இது தான்.
வாவுப் பறவை|ஆதிவள்ளியப்பன் | பாரதிபுத்தகாலயம் |பக்.141,|ரூ.160.
திடீரென்று வெளவால்களை உலகம் வெறுக்கிறது. கோவிட்-19 நோய் பரப்பும் வைரஸ் உற்பத்தியான உயிரி அது தான் என்று உலகம் கிளப்பிவிட்டது. பின்னணியில் ஒன்றாக அச்சிடப்பட்ட ரஸ்கிண்டான்டின் வெளவால் கவிதையைதான் முதலில் நான் வாசித்தேன். என் தனிமையான இரவகளின் போது பித்துப் பிடித்த வெளவால்கூட ஒரு துணைதான் என்று அவர் எழுதும்போது இயற்கையை பாதுகாக்க மனிதனின் துணைகளில் வெளவால் பிரதானமான பாத்திரம் இருப்பதை நினைத்தேன். ஆதி. வள்ளியப்பனின் சுற்றுச் சூழல் நூல்கள் சரியான கலத்தே சரியான நோக்கங்களோடே வெளிவரும் இந்த நூலும் விதிவிலக்கல்ல.
இந்த நூலில் வெளவாலை பற்றி 20 இயற்கை சூழல் கட்டுரைகள் உள்ளன வெளவால் பாதுகாப்பு அமைப்புகள் பற்றி அறிந்தபோது வியப்பாக இருந்தது. நாவல் கரோனா வைரஸ் நடந்தது என்ன… எனும் அந்த 19வது அத்தியாயம் கரோனாவும் சார்ஸ் வைரசும் எப்படி ஒரே மாதிரி உள்ளன என்பதை விவரிக்கிறது. நேரடியாக வெளவால்கள் மூலம் கரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதை இன்றுவரை யாருமே முழுதாக நிரூபிக்கமுடியாத போதும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அறிக்கையை ஊடகங்கள் திரித்துவிட பல தமிழக மாவட்டங்களில் வெளவாலை அழிக்க மக்கள் முற்பட்டதை சுட்டும் இடம் கொதிக்கவைக்கிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என யாவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
சிலேட்டுக் குச்சி சக. முத்துக் கண்ணன் | பிஎப்சி | பக். 112, ரூ.110
சக. முத்துக்கண்ணன் மற்றும் கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர் சிலேட்டுக்குச்சியில் ஒரு ஆசிரியராக அவரது 17 அனுபவங்கள் பதியப்பட்டுள்ளன. கீழே வைக்க முடியவில்லை. ஆசிரியர் மாணவர் உறவு என்பது பலநூறு சிடுக்குகள் கொண்ட ஒரு உயிர்நாடி கல்வி நடக்க அத்தியாவசுயமானது. தமிழ்ச் செல்வன் தோழர் முன்னுரையில் சொல்வதுபோல எல்லா ஆசிரியர்களும் வாசகர் ஆகிவிட்டால் பல அனுபவங்களை பதிய முடியும். உளவியல் தேவையில்லை அனுபவ இயலே போதும். இந்தப் புத்தகத்தின் பெரிய பலம் நகைச்சுவை. கூடவே தன்னை நோக்கிய நக்கல், இது தான் தேவை. வாத்தியாருக்கு பட்டப் பெயர் வைப்பதிலிருந்து, பரிட்சையில் பிட்டு அடிப்பது, டியூசனில் ஸ்கேலால் அடி வாங்குவது… பள்ளிகள் மாறிவிட வில்லை ஆசிரியர் மனநிலை மாறி வருகிறது என்பது நல்ல அறிகுறி.
சுதந்திரம் ஒரு டப்பா | விவேகானந்த் செல்வராஜ் | மணல்வீடு, பக். 80, ரூ.80
நவீன கவிதைகள் விவேகானந்த செல்வராஜீக்கு சிறப்பாக எழுத வருகிறது. எல்லா வலியையும் தாங்க வல்ல தாத்தாவைப் பற்றிய அந்த இடைவேளை கவிதை இன்னமும் நாக்கில் ஒட்டிக் கொண்டு மனதை பிசைகிறது.
புத்தகத்தின் தலைப்பு சுதந்திரம் ஒரு டப்பா என்று குரங்கன்ராக் இசைக்குழு முதலில் பதிவு செய்த பாடலில் இருந்து எடுக்கப்பட்டவரி. டெண்ட் கொட்டா பொற்காலத்தின் பாடல்கள், திரியுலக சக்ரவர்த்தி, உங்களுக்கு நான் என்ன சொல்ல முடியும், காலத்தின் கடை வாய்ப்பல், சுதந்திரம் ஒரு டப்பா என பொது தலைப்புகளில் கவிதைகளை அவர் தொகுத்திருக்கிறார். பொற்காலத்தின் பாடல்கள் முழுக்கவும் சீன அனுபவம் இனத்தில் மட்டும் பொற்காலம் என்பது இறந்த காலத்தில் இல்லை என்று அவர் எழுதும்போது வியப்பாக உள்ளது. புரட்சி இழப்பீடு செய்கிறது, புரட்சிமரணம் அறியாது, ஷின்றியன், பெய்ஜிங், ஒரு புகைச்சந்து போன்ற கவிதைகள் புதிய அனுபவங்களை தருகின்றன.
வாங்க பேசலாம் செல்லம்ஸ் | இளங்கோவன் கீதா|டிஸ்கவரி புக் பேலஸ் | பக்.111, ரூ. 100.
நான் பல முறையோசித்தது உண்டு. இந்த முக நூலில் வரும் பதிவுகளை எல்லாம் மொத்தமாக யாராவது தொகுத்து புத்தகம் போடுகிறார்களா. சிலபேர் ஏகத்துக்கு எழுதுகிறார்களே. வெளியே தெரியாத பாப்லோ நெருடா… அதிகம் பேசப் படாத ஓ.ஹென்றி, நோபல் பரிசு பெறாத மாக்குவஸ் என பலரும் இப்படி இணையத்திலேயே வாழ்ந்து மரித்துப் போகிறார்களா என்று யோசித்தேன்.
இளங்கோவனின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு இந்த முயற்சி. வாசிக்கும்போது ஒரு வகையில் கைபேசியில் முகநூல் பக்கங்களை படிப்படிபோலவே லகுவாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. புதிய நட்புகள் பிரச்சனைகளின் மீதான புதிய பார்வை தீர்வுகள் குறித்த புதிய அணுகுமுறைகள் உண்மையில் முகநூல் தனி உலகம்தான் வாழ்க்கை இணையரின் பெயர் கீதா. அதன் தன் பெயருக்கு பின்னால் போட்டு இன்ஸ்கோவன் கீதா ஆகி இருக்கிறார் நூலாசிரியர். சூப்பர் என்று ஒரு லைக் போட துடிக்கிறேன். இந்த நூலை வாசிப்பது நல்ல அனுபவம்.
வேதியியலின் கதை |அனிர்பன் ஹஸ்ரா | த.மோ: மோகனப் பிரியா | புக் பார் சில்ரன், பக்.112, ரூ.110.
அனிர்பன் ஹஸ்ரா பூனேகாரர் பரோடாவின் மதுவந்தி அனந்தராஜன் நூலை வடிவமைத்தவர். மோனப் பிரியா. தமிழுக்கு தந்திருக்கிறார். அமெரிக்காவின் முனைவர் பட்ட வேதியியல் ஆய்வை மேற்கொள்ளும் ஒருவர் இவ்வளவு எளிய சுவையான புத்தகம் ஒன்றை குழந்தைகளுக்காக தர முடியும் என்பது முதலில் வியக்கவைக்கிறது. வேதியியல் பருப் பொட்களை பற்றிய அறிவியல் என்று தொடங்கி, வேதியியலின் வரலாறு, இரசவாதம், வெடி மருந்தியல், மருத்துவ வேதியியல், வேதி அட்டவணையின் கதை, கதிரியக்க சிதைவு, ஐசோடேப்புகள் என அந்த உலகை கருத்துப்பட பாணியில் விவரித்து செல்லும் அற்புதம் இந்த புத்தகம். ஒரு வேதிவினைக்குள் நாமே நுழைந்து வெளியேறிய அனுபவத்தை பெற முடிகிறது. குவாண்ட இயந்திரவியல் பற்றிய பக்கங்களை வேதியியலின் பார்வையில் அசைச் சார்பு மூலம் மூலக்கூறுகளை விளக்கும் அந்த விசயத்தை இராமன் விளைவின் பார்வையில் விளக்கப்படும்போது இன்ப மைக்ரோ அலை நம்மீதே வீசுகிறது. இது புத்தகம் ஒரு அறிவியல் வேட்டை.
வான் வெளியின் புலிகள்| பேரா. முருகவேள் | உயிர் பதிப்பகம், | பக்.80, ரூ.100
ஒரு பொறியியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் முருகவேள் தலை சிறந்த சூழலியல் அறிஞராக மிளிர்கிறார். காட்டுயில் புகைப்பட கலைஞராக நம்மால் பார்க்க முடியாத உலகங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். இந்த சிறப்பான தொகுப்பில் 10 கட்டுரைகள் உள்ளன. வான்வெளியின் புலிகள் கட்டுரையை வாசித்து சிலிர்க்கும்போது கடைசி கட்டுரையான ஒரு யானையின் இறுதி நிமிடங்களால் நெகிழ்ச்சியுற்று இரண்டு நாட்கள் வேறு எதுவுமே வாசிக்க முடியவில்லை.சென்னையின் வேட்டைக்கார ஆந்தைகள், மஞ்சள் கொண்டை சிட்டு, இரவில் வெளியே வரும் ஆமை, யூ நாரை என விரியும் பக்கங்கள் காணாமல்போகும் கானமயில்களை பற்றி பேசும்போது பதறுகிறது. நகரமயமாதல் எனும் கார்ப்பரேட் பிசாசு எல்லாவற்றையுமே விற்பனை சரக்காக…. பல இறக்கும் கொடுமை நம்மை ரத்த சூடேற்றி ஏதாவது செய் என கொதிக்கவைக்கிறது.
சங்க இலக்கிய கதைகள்|ம.சுரேந்திரன் |புக்ஸ் ஃபார் சில்ரன் | பக்.104, ரூ.100.
சங்க காலம் சார்ந்த நமது சிந்தனைகள் ஆழப்பட்டால் மட்டும்தான் கீழடி உட்பட யாவுமே நமது இனத்தின் தொடர்ச்சி என்பது பிடிபடும். அந்த வகையில் சங்க இலக்கிய ஆய்வாளர் ம. சுரேந்திரன் நம்பிக்கை தரும் பதிவுகளால் நம்மை அதிர வைப்பவர். ஏற்கெனவே சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் படித்திருக்கிறேன்.
ஆட்டணத்தி ஆதிமந்தி முதல் ஆதிக்கத்திற்கு பணியாத அதியமான்வரை 20 அழகான குட்டிக் கதைகள் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன. சங்க இலக்கியமாக வரும் இரண்டே வரி, ஒரு வெண்பா கொஞ்சம் ஏழெட்டுவரி வரும். இவற்றை ஒரு முழு கதையாகவே எழுதிட தேவைப்படும் நல்ல படைப்புதிறன் சுரேந்திரனிடம் உள்ளது. பழம் எடுத்து தின்ற பெண் ஒருத்திக்கு இறக்கமின்றி மரண தண்டனை தரும் நன்னன் எனும் மன்னனையும் அவனது பரம்பரையையும் பாடுவதில்லை என புலவர் சேர்ந்தது முடிவெடுத்தனர் என்பது போன்ற தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன. நல்ல பதிவு. வரலாற்று கதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
சிரியாவின் தலைமறைவு நூலகம்|தெல்ஃபின் மினூய், |எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி | காலச்சுவடு | ரூ.175
சிரியாவில் அரசுக்கு எதிராக நடந்த தராயா கிளர்ச்சியை உலகமே அறியும். நான்காண்டு முற்றுகை அது குண்டுவெடிப்புகள் ரத்த ஆறுகள் இரசாயணவாயு தாக்குதல் என்று நடந்த கொடுமைக்கு மத்தியில் நாற்பதுஇளம் புரட்சியாளர்கள் நிலத்திற்கு அடியில் ஒரு நூலகம் அமைப்பது என சபதம் எடுக்கிறார்கள்.புத்தகங்களை ஆயுதமாகக் கொண்ட யுத்தத்தில் அவர்களது விசித்திர போராட்டம் தனித்த ஒரு குரலாக ஒலிக்கிறது. இந்த கட்டுரையில் ஸ்கைப் கூட்டங்கள் வாயிலாக போராளிகள் உலக பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் பேட்டியாக எழுதப்பட்டுள்ளது. காலச்சுவடு சமீபத்தில் வெளியிட்ட நூல்களில் குறிப்பிடத் தக்கது.
சுக்கா.. புக்கா.. முக்கா |புத்தக நண்பன் குழு |புக் பார் சில்ரன் | பக்.144, | ரூ.135
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகப்பட்டனம் கிளையின் அபாரமான முயற்சி இது. இந்த நோய் தொற்றுகாலத்தில் இணைய வழியே குழந்தைகளை கதை சொல்லவைத்து அதை பதிவு செய்து பிறகு எழுத்தில் வடித்து தொகுத்திருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் மனத்துணைநாதன் இந்த முயற்சிக்கு புத்தக நண்பன் என்றும் பெயர் வைத்த மேலும் நெகிழ வைக்கிறார்.
இத்தொகுப்பில் 3ம் குழந்தைகள் கதை சொல்லி உள்ளன. கற்பனை வளம் மிக்க கதைகள். பெரும்பாலான கதைகள் விலங்கு பூச்சி பறவை என்றே உள்ளது. கடிகாரம் பேசுகிறது பூ சிரிக்கிறது, குளம் அழுகிறது. இக்கதைகளின் வழியே நாம் குழந்தைகளின் உலகை தரிசிக்கிறோம். இந்த நூலின் சிறப்பு குழந்தைகளே வரைந்திருக்கும் படங்கள். உதயசங்கர் முன்னுரை எழுதி உதயசங்கர் தாத்தா ஆகி இருக்கிறார்.
தற்கால சிறார் கதைகள் | தொ. உமையவன்| பயில் பதிப்பகம் |பக். 176, ரூ. 222
எழுத்தாளர் உமையவன் தொடுத்த தமிழின் 31 சிறார்களுக்கான எழுத்தாளர்களின் கதை தொகுதி. கவிஞர் இந்திரன் தனது முன்னுரையில் தரும் பல தகவல்கள் சிறார் இலக்கிய வரலாறை நம் முன்வைக்கின்றன. தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு சொன்ன கற்பனை கதைகளை பொருள் மரபிலா பொய் மொழி என்று தொல்காப்பியம் சொல்கிறது. 31 பேர் எல்லாருமே தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் பங்களித்து வருபவர்கள் மிக நேர்த்தியாக படைத்த இது வரை பிரசுரமாகாத படைப்புகள் அவைகலுக்கு நேர்த்தியான படங்கள். அதைவிட பெரிய அளவில் பயில. பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் பாங்கு எல்லாமே சிறப்பாக உள்ளது. வாசிப்பை குழந்தைகளிடம் எடுத்துச் செல்லும் இது போன்ற முயற்சிகள் போற்றப்பட வேண்டும். பெற்றோர்கள் இது போன்ற புத்தகங்களை இன்று வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வாங்கித் தர வேண்டும்.
வாஷிங்டன் தோட்டாக்கள் | விஜய் பிரசாத் | த.பேரா. பொன்னுராஜ் | பாரதிபுத்தகாலயம், பக்.13, | ரூ. 15
விஜய் பிரசாத் முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குநர். ஏற்கெனவே இவரது இடது திருப்பம் எளிதல்ல நூலை வாசித்து அனுபவித்து விவாதித்திருக்கிறேன். எந்த நாட்டில் உழைப்பாளர்கள் எப்படி போராடினாலும் எப்படியோ அமெரிக்காவின் தோட்டாக்கள் அங்கே வந்துவிடும். ஹோசிமின் எனும் மாமனிதரின் போராட்டங்களை முன்வைக்கும் இந்த நூல் அமெரிக்க உளவுப்படை சிஐஏ முன் நின்று நடத்தும் ஆட்சி கழிப்புகளை மையமாக வைத்து நடக்கும் கொலைகார ஆயுதப் போராட்டங்களின் தோட்டாக்கள் உட்பட எங்கும் அமெரிக்க தோட்டாக்களே கொலை களத்தை உற்பத்தியும் செய்து அதை தனக்கு சாதகமான சந்தையாகவும் மாற்றி தன் லாபத்திற்காக ரத்த ஆறுகளையும் ஓடவிடுகிறது.
டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது. | அருண் நரசிம்மன் | அம்ருதா | பக்.240 |ரூ. 210.
அபூர்வமான செய்திகள் கொண்ட அறிவியல் கட்டுரை தொகுப்பு. அருண் நரசிம்மன் அமெரிக்காவில் படித்தவர் மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் இயந்திர பொறியியல்துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். இவரைப் போன்றவர்கள் தமிழில் அறிவியல் எழுத வந்திருப்பதே சிறப்பு.
இந்த புத்தகத்தில் 25 அறிவியல் கட்டுரைகள் உள்ளன. எல்லாம் இணைய பிளாக்கில் எழுதியவைகளின் தொகுப்பு அறிவியலும் சந்தை அறிவியலும், உயிர், மாற்று உயிர் போன்ற கட்டுரைகள் வியக்க வைக்கின்றன. ரிஸிஸ்டிவ் உழைக்கும் ஐ பாடியில் கப்பாஸிடிவ்ட இப்போது பிரபலம் என ஆங்கிலேய தமிழ் கொஞ்சம் உதைத்தாலும் சுவாரசியம் குறையவில்லை. ரேடியோ கார்பன் தேதியாக்கம் கட்டுரை சூட்பர் விருந்து.
நீதி உயர்ந்த மதிக் கல்வி | முனைவர் என். மாதவன் |புக் பார் சில்ரன், பக்.12, | ரூ.170.
தலைமை ஆசிரியராக அறியப்பட்டதைவிட அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளராக, கல்வி குறித்து எழுதுபவராக, துளிர் ஆசிரியர் குழு பங்களிப்பாளராக நண்பர் மாதவனை எனக்குத் தெரியும். கிருஷ்ணகுமார் புத்தகத்தை தமிழில் தந்தால் இந்த நூலில் அவர் அவ்வப்போது இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. செயல் வழிக் கற்றலில் தொடங்கி குழந்தைமையும் இழுக்ககற்றலும் வரை 33 கட்டுரைகள் உள்ளன. சில கல்வி நேரடியாக சாராத கட்டுரைகளும் உண்டு. ஆனால் அந்த ஆறேழு கட்டுரைகளை நீக்கிவிட்டால் ஒரு முழுமை கிடைக்கிறது.
சட்டமும் கோல்மேன் ஆய்வும், கல்வி உரிமை, நீதி உயர்ந்த மதி கல்வி, செய்கூலி சேதாரம், ஆசிரியர் மட்டும்தான் காரணமா? போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.
அடையாள மீட்பு |கூகி வா திவாங்கோ |அ.மங்கை | எதிர்வெளியீடு, | ரூ. 180.
முற்றிலும் ஒடுக்கி அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்க கதறும் அறைகூவல் இந்தப் புத்தகம். போராட்ட மொழி நம் சொந்த மண்ணின் மொழியாக இருப்பதே சிறப்பு.
கூகி சார்ந்துள்ள ஆப்பிரிக்க கருப்பினம் தன்னையும் மீட்டு, ஒடுக்குமுறையாளனையும் மீட்கும், ஓங்கு குரலை ஒலிக்கிறார். போராட்டமே வாழ்க்கை, போராட்டமே வரலாறு. மார்டின் கார்ட்டர் கண்ட கோடி மக்களின் ஒரு இதயமாய் எழுவோம் என முழங்கும் நூல். காலனியத்திற்கு எதிரான கென்யாவின் குரல் நேர்த்தியாக மொழி பெயர்த்துள்ளார் தோழர் மங்கை.
கிராம் ஷியை பயன்படுத்துதல் ஒரு புதிய அணுகுமுறை |மைக்கெல் பிலிப்பினி | த.சே. கோச்சடை | என்சிபிஹெச் | ரூ.450.
அந்தோனியே கிராம்சியின் வாழ்வும் போராட்டமும் குறித்த சமீபத்திய அற்புதமான படைப்பு இந்த நூல். இத்தாலியில் முசோலினிக்கு எதிரான மாபெரும் இயக்கத்தை கட்டமைத்ததும் பாசிசவாதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பதை துல்லியமாக கணித்தவர்.
முசோலினி சர்வாதிகார அரசு அவருக்கு 20 வருடங்கள் காவல் தண்டனை விதித்தது. சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு முதுகுத் தண்டு உடைந்து தண்டனைக் காலம் முடியும் முன்பே 12 வருடங்களில் அவர் இறந்துபோனார். ஆனால் சிறையில் பக்கம் பக்கமாக எழுதி வைத்தவைகளை சேகரித்து மக்களிடையே கொண்டு சென்று பாசிச அரசை தூக்கி எறிந்திட போராளிகள் பயன்படுத்தினார்கள்.
இன்று அந்த எழுத்துக்களின் ஊடாக பயணித்து இடது சாரி சிந்தனையாளர் மைக்கெல் பிலிப்பினி புதிய தற்கால கோணத்தில் கிராம்சியை அணுகுகிறார். கோச்சடை தோழரின் பிரமாண்ட பங்களிப்பு.
அன்புள்ள மாணவிக்கு |தா.கமலா |புக்பார் சில்ரன், பக். 78, | ரூ.70.
புரட்சிக் கவி பாரதிதாசனின் பேத்தியான ஆசிரியை கமலா வித்தியாசமானவர். தனக்கு மட்டுமல்ல தன் வகுப்பு மாணவிகளில் பலருக்கும் சேர்த்து சமைத்து டிபன் பாக்ஸ் சுமந்த அற்புத ஆசிரியை. பல ஏழை மாணவிகளை போராடி உயர் கல்வி கற்க உதவிய போராளி.
என்ன அற்புதம் என வியக்க வைக்கும் புத்தகம் இது. கல்வியில் பெண் குழந்தைகளுக்கு என்றே இருக்கும் பிரச்சனைகளை பேசி அவர்களுக்கு துயரத்தை பகிர்ந்து, துணிச்சலை விதைத்து, விடியலை எழுதிச் செல்லும் கமலா டீச்சரின் எழுதுகோலை வியந்து பார்க்கிறேன். பல இடங்கள் நெகிழவைக்கின்றன. ஒன்றுமில்லாத இன்ன விசயத்திற்கு தற்கொலை வரை போன பல கிராமத்து மாணவிகளை காப்பாற்றி கரை சேர்த்த ஒரு வழிகாட்டியின் அனுபவங்கள் ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய பாடம். கமலா டீச்சராக வேலைபார்க்கவில்லை. டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார்.
நீதி பற்றிய கோட்பாடு | அமர்தியா சென் | த.பூரணசந்திரன் |எதிர் வெளியீடு, | ரூ.750.
நீதி நாட்டுக்கு நாடு வேறுபடும். நீதி எப்போதும் அதிகாரத்தின் அரிதாரத்தை பூசியபடியே நிற்கிறது. நீதியின் எல்லா முகங்களையும் கிழித்து நம் முன் விவரிக்கும் கனமான இந்த புத்தகம் மிகவும் சிறப்பான முறையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அமர்தியாசென் நம் காலத்தின் தலைசிறந்த அறிஞர். பொது உலகிற்கான அறிவு ஜீவிகளில் ஒருவர்.கலப்படமற்ற தூய சிந்தனை என்கிற ஒன்று ஒருபோதும் இல்லை எனும் யதார்த்த நிலையில் இருந்து தாராளவாத பொருளாதாரத்தின் பின்னணியில் நீதியை நீதி விசாரணைக்கு உட்படுத்துகிறார் அமர்தியாசென். குற்றநீதி குறித்த சென்னின் விமர்சனம். மேலாதிக்கவாதிகளுக்கு மரண அடி கொடுக்கிறது. 1971ல் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாடு புத்தகத்தை கடந்து 21ம் நூள்ளாண்டில் செத்த நீதியின் எந்த பாகங்கள் முதலாளிய உலகின் மரணப் படுக்கைக்கு மருந்தாகப் போகிறது என்பதை அலசுகிறார். தொழிலாளர் விரோத சட்டங்களை புதிய யுக்தியோடு கொண்டு வரும் நவீன ஹிட்லர்களை தோலுரிக்கும் நூல்.
கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி | சு. உமா மகேசுவரி |பண்மைவெளி | பக்.20, ரூ.165
இந்து தமிழ்த்திசையின் காமதேனு வார இதழில் வெளிவந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையின் கல்விக் கட்டுரைகளின் தொகுப்பு சமகால கல்விப் பிரச்சனைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பார்வையில் அணுகியிருக்கிறார்.எப்போதுமே மேலிருந்து கீழ் செயல்படும் அதிகாரக் கல்வி நம்முடையது. கீழே களத்தில் என்ன நடக்கிறது என்ற எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏசி அறைக்குள் உட்கார்ந்து போய்படும் உத்திரவுகளை செயல்படுத்தும் அடிமைபோல ஆசிரியர்களை நடத்துகிறார்கள் என்பதை தோலுரிக்கிறார்.
குறிவைக்கப்படும் அரசுப் பள்ளிகள், பலனற்ற பயிற்சி வகுப்புகள், விருது அரசியல் பலனளிக்காத பள்ளி நூலகம், கற்றவை தடைபோடும் பொதுத் தேர்வுகள் என்றும் பள்ளிக் கல்வியின் அன்றாட சிக்கல்களை விவரித்து தன்னால் ஆன தீர்வுகளை முன் வைத்துள்ளார் ஆசிரியை உமா.
ஆதி திராவிட பழங்குடியினப் பள்ளி குறித்த அந்த கட்டுரை தனித்து நிற்கிறது. கல்வி பற்றிய சமகால நூல்களில் நாம் கவனிக்க வேண்டிய புத்தகம் இது.
கியூபாவின் மருத்துவ புரட்சி | தொ. தமுஎகச மத்திய சென்னை | பாரதி புத்தகாலயம் | பக்.71, | ரூ.70
பிடல்காஸ்ட்ரோ வின் பிரபல முழக்கம். உலகிற்கு தேவை குண்டுகள் அல்ல மருத்துவர்கள். இன்றைய நோய் தொற்று காலத்தின் ஆக சரியான நூல் தொகுப்பு என்று நான் இதனை முன் மொழிவேன். பிராணவாயு சிலிண்டர் வழங்குவதைகூட தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள அதிகார வெறிபடைத்த மத்திய அரசு இயந்திரம் கியூபாவிடம் கற்க ஏராளம் உள்ளது. இன்றும்கூட கோவிட் தொற்று இல்லாத நாடாக இருப்பதோடு பல நாடுகளுக்கு துணிந்து தன் சிறப்பு வல்லுனர் மருத்துவக் குழுக்களை நேரில் அனுப்பவும் செய்கிறது.
எஸ்.வி.ராஜதுரையின் முன்னுரையோடு, கியூபா கோவிட் 19 தொற்றை எதிர்கொள்ள சேகுவாரா எப்படி உதவினார் புரட்சிகர மருத்துவம் என்றால் என்ன கியூபாவின் சர்வதேசிய மருத்துவ புரட்சி எத்தகையது என மூன்று பிரதான கட்டுரைகள். மோகன் பிரபாகரன் ஆசிக் அன்வர், வேல் சுந்தர் ஆகியோர் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளனர். குறிப்பாக எழுச்சி உரையான புரட்சிகர மருத்துவம் தனியாக ஒரு கோடி நோட்டிஸ் அடித்தும், வாட்ஸ்அப்பில் பகிர்ந்தும் நம் டாக்டர்களை அணுக வேண்டும். l