வாசிப்பு எனும் வசந்தத்தை குழந்தைகளுக்குள் விதைப்போம்
இன்னொரு ஜூன் வந்து விட்டது. பள்ளிகள் திறப்பது மேலும் தள்ளிப்போகிறது. குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் நமது ஒரே நம்பிக்கை வாசிப்புதான். நம் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை அறிமுகம் செய்துவிட்டால் பள்ளிக் கல்வி தடைபடுகிறதே என்று நாம் கிஞ்சிற்றும் அச்சப்படத் தேவை இல்லை. தற்போது உள்ள சூழல் கவலை அளிப்பது நியாயம்தான். பெருந்தொற்றின் இரண்டாம் அலை நம் சமூகத்தையே பதைபதைக்க வைத்து பலவகைப்பட்ட இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே ஓராண்டு முழுமையாக பூஜ்யம் கல்வி ஆண்டாக வெற்றிடமாகியது. காலத்தின் கோலம். நாம் யாரையும் குறை சொல்ல வேண்டியது இல்லை.
குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வது எப்படி. பாடப்புத்தகத்தையே பத்துமுறை நெருக்கடி கொடுத்தால் மட்டுமே கையில் எடுப்பார்கள் – இந்த நிலையில் டி.வி., வீடியோ கேம்ஸ் கடந்து யார் புத்தகம் வாசிக்கப் போகிறார்கள் என்பது போல பேசுவது நம் கடமையை தட்டிக்கழிக்கும் வெற்றுப் பேச்சுக்கள். குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது அப்படி ஒன்றும் முடியாத காரியம் அல்ல. முதலில் நம் இல்லங்களுக்கு செய்தித்தாளை வரவழைக்க வேண்டும். இதுதான் முதல் படிநிலை. கேரளத்தில், மாதா மாதம் ஒரு குடும்பம் வாசிப்பிற்கு இந்தியாவிலேயே உயர்ந்த பட்சமாக 850 ரூபாய் (சராசரியாக) செலவு செய்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. மேற்கு வங்கம், ஹிமாச்சல், ஏன் ராஜஸ்தானில் கூட தமிழக சராசரி – மாதாந்திர குடும்ப வாசிப்பு (ரூ 142) செலவை விட கூடுதலாக மக்கள் செலவு செய்கிறார்கள். வீட்டிற்கு ஒரு செய்தித்தாளை வரவழைத்து குழந்தைகளோடு உட்கார்ந்து நாமும் வாசிக்க காலையில் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குதல் முதல் படி ஆகும்.
அடுத்து ஒவ்வொரு செய்தித்தாளும் குழந்தைகள் வாசிக்க சிறப்பு பக்கங்கள், விளையாட்டு செய்தி, அறிவியல் என பலவகைப்பட்டவற்றை தருகின்றன அல்லவா. அதை முழுமையாக வாசிக்க வைப்பதும் அவற்றை குடும்ப உரையாடலில் சேர்ப்பதும் இரண்டாம் படிநிலை. இது பழகும்போதே பத்தே நாட்களில் சிறு புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். எழுத்து கூட்டி, சத்தமாக குழந்தை வாசிக்க, அதை பாராட்டி சிறு தவறுகளை வலி இன்றி, சுட்டிக்காட்ட குடும்பமாக உட்கார்ந்து ஆளுக்கு ஒரு பாரா வாசித்தும் ஊக்குவிக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து. பின் அடுத்த கட்டமாக குழந்தைகள் விரும்பும் சிறு சிறு நூல்களை கடைகள் திறக்க முடியாத இந்த காலத்தில் இணையம் வழியே வரவழைத்து வழங்கலாம். அவர்களோடு மேலும் பத்து நாட்கள் நாமும் வாசித்து, வாசித்ததை பகிர்ந்து பேசி உடன் பயணித்தால் போதும். பிறகு நாம் அவர்களை வாசிப்பு உலகில் விட்டு மெல்ல நம் வேலைகளுக்குகள் நுழையலாம். வீட்டிலேயே ஒரு நூலக அலமாரியை அமைத்துத் தருவது, அவர்களுக்கு ஒரு கைபேசி வாங்கித்தருவதை விட குறைவான செலவே ஆகும். மாதம் பத்து சிறு புத்தகங்களை வாங்கி தருவது, ஒரு வீடியோ கேம்ஸ் டவுன்லோடு செய்வதை விட பல மடங்கு குறைவான செலவு பிடிக்கும் ஒன்றே. ஆனால் வாசிப்பு தரும் வளங்களை கைபேசியோ, கேம்ஸ் உட்பட இணைய செயல்பாடுகளோ தர முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
புத்தக வாசிப்பு யோகாவை விட ஆரோக்கியமான ஒருமுகப்படுத்துதலை ஏற்படுத்துகிறது. மன – வளத்தை மேம்படுத்துகிறது. பல்வேறு பாத்திரப் படைப்புக்கள் சூழல்கள் – உலக அறிவு என பெற்றுவிட வாசிப்பு மனித நிர்வாக திறன்களை மேம்படுத்துகிறது. ஒரு குறுஞ்செய்தியை கைபேசியில் கண்டு நகர்த்துவதை விட அதை நூல்களின் வழியே வாசித்து உணர்ந்தால் மூளையில் ஆழமாக பதிகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் எதிர்காலத்தில் அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக, மாபெரும் கலை, இலக்கிய வித்தகர்களாக வருவதற்கு, பயிற்சி வகுப்பு, பெரிய வசதியான, டாம்பீக பள்ளிக்கூடத்தில் படிப்பது என எதுவும் தேவை கிடையாது. அவர்களுக்கு தானாகவே விரும்பி தேடித்தேடி வாசிக்கும் நூலக பழக்கத்தை தொடங்கி வைத்தாலே போதும். பள்ளிக்கல்வி தன் கதவுகளை மூடி உள்ள இந்த காலகட்டத்தில், நாம் வாசிப்பின் கதவுகளை திறந்து வீட்டில் குழந்தைகளை மேம்படுத்துவோம். புத்தக உலகம் அவர்களுக்காக கோடிக்கணக்கான புதையல்களோடு காத்திருக்கிறது – ஆசிரியர் குழு