முனைவர். என்.மாதவன்
அறிவியலை தமிழில் எழுத பலரும் தலைப்படுவதில்லை. இந்நிலையில் முனைவர் ஹேமபிரபாவின் இதுதான் வைரல் என்ற நூல் வாங்க இங்க வாராவதியில் உட்கார்ந்து அறிவியல் பேசலாம் என்று நம்மை அழைக்கிறது.
நேற்று நடந்தது புரியாமல் போனால் இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை என்றார் ஓர் அறிஞர். அந்த வகையில் தொற்றுநோய்களின் வரலாற்றிலிருந்து துவங்கியிருப்பது நல்ல அணுகுமுறை. 1847 களில் வில்லியம் ஃபார் என்பவர் எப்படி நோய்ப்பரவலை பதிந்து மணிவடிவத்தைக் கொடுத்தார் என்ற செய்தி, அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு தரவுகள் எப்படி உதவும்? இப்படிப்பட்ட ஆய்வுகள் மூலமாகவே இவ்வகை நோய்ப்பரவலிலிருந்து விடுபட இயலும் மாறாக மணி அடிப்பதன் மூலமாகவோ, விளக்கை ஏற்றுவதன் மூலமாகவே விடுபட இயலாது என்பதை வலியுறுத்துகிறார். வைரஸின் கண்டுபிடிப்பில் தொடங்கி அதன் வாழ்வியல் நுணுக்கங்கள், அது எப்படி மனிதர்களை ஒம்புயிரியாகப் பயன்படுத்தும். நமது உடலிலுள்ள எவ்வகையான அமைப்பினை இது பயன்படுத்தும் என படிப்படியாக ஒவ்வொன்றையும் விளக்கி இருப்பது மிகவும் சிறப்பு.
இவ்வாறான நோய்களின் பரவல் அலைகளை எவ்வாறு கண்டறிகிறார்கள். அதன் அறிவியல் பின்னணி என்ன என்பது மிகவும் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது. நாவல் கொரோனா வைரசின் பங்காளிகளான சார்ஸ், மெர்ஸ் போன்றோரையும் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி அவற்றுக்கும் கொரோனாவுக்கு உள்ள ஒற்றுமை, செயல்பாட்டில் உள்ள வேற்றுமை ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளது.
நோயை நாடியபின் நோய்க்கான முதல் நாடும் அறிவியல் செயல்பாட்டையும் சிறப்பாக அணுகியிருக்கிறார். அந்த வகையில் கொரோனா வைரசை பிரித்தெடுத்ததிலிருந்து எவ்வகைகளிலெல்லாம் தடுப்பு மருந்திற்கான முயற்சிகள் நடைபெற்றன. அதன் தற்போதைய நிலை என்ன? தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?. அது எவ்வளவு பாதுகாப்பானது?. நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் என்ன? என்பது வரை குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வண்ணம் பதிந்துள்ளார்.
காற்றுவழியாகப் பரவல் உள்ளதா? என்பதற்கான ஆய்வுகள் அதனை உலக சுகாதார மையத்தினை அறிவிக்க அறிவியல் உலகம் செய்த முயற்சிகள் போன்றவற்றை பதிவு செய்கையில் பயன்படுத்தப்பட்ட நீதிமன்றம் உதாரணத்தைப் படிக்கும்போது வெளிப்படையாக சிரித்தே விட்டேன்.
இதோடு மட்டுமல்ல கொரோனா நோயிலிருந்து மீள தடுப்பு மருந்து மட்டும் போதுமா? இளம்வயதினர் இறப்பிற்கான காரணங்கள் என்ன? பெரியவர்களுக்கான நோய்த் தடுப்பாற்றல், கொரோனா நோயிலிருந்து தற்காப்பு வழிமுறைகள். இந்நோயோடு தொடர்புடைய வதந்திகளை அறிவியல் பூர்வமாக எதிர்கொள்வது எப்படி என்பது வரை கொரோனா தொடர்பான அனைத்து ஐயங்களான அனைத்தையும் விளக்கியிருப்பது ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளிப்பதாக உள்ளது.
இன்றைக்கு இயல்பாக சாதாரணமானவர்களிடம் கூட கொரோனா வைரஸ் தொடர்பான சொற்றொடர்கள் புழங்கத் தொடங்கிவிட்டன. ஆனால் ஒராண்டிற்கு முன் அப்படி அல்ல. அப்படிப்பட்ட காலத்தில் இவற்றில் பல கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது பலருக்கும் ஒரு உடனடி குறிப்பாக (Ready reference) அமைந்திருந்திருக்கும்.
நூலின் தரத்தைக் கூட்டும் விதமாக மருத்துவர் கு. கணேசன், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், பத்திரிக்கையாளர்கள் திரு வள்ளியப்பன், வெளி ரங்கராஜன் ஆகியோரின் அணிந்துரைகளும் வெவ்வேறு வகைகளின் அறிவுபூர்வமான தகவல்களை பகிர்வதோடு ஹேமபிரபாவின் உழைப்பையும் பாராட்டுவது சிறப்பு. l