*(அஞ்சலி: எஸ். ஆல்பர்ட்)
திருச்சியின் கலை, இலக்கிய முகம்
திருச்சியைச் சேர்ந்த கலை-இலக்கிய ஆளுமையான பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் (81) ஏப்ரல் 26ஆம் தேதி காலமானார்.
திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்ற பேராசிரியர் ஆல்பர்ட், அந்தக் கல்லூரியிலேயே சிறிது காலம் பயிற்றுவித்தார். பிறகு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பேராசிரியர், துறைத் தலைவராகப் பணியாற்றி 1997இல் ஓய்வுபெற்றார்.
திருச்சியில் நவீனத் தமிழ் இலக்கிய ரசனையை வளர்த்தெடுத்த ஆங்கிலப் பேராசிரியர் அவர்.
எழுத்தாளர், திரைப்பட – இலக்கிய விமர்சகர், நாடக இயக்குநராகச் செயல்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சிறுகதை, கவிதைப் பயிலரங்குகளை நடத்தியவர். தமிழகத்தின் முன்னோடி இலக்கியப் பயிலரங்குகளில் ஒன்றாக அவை திகழ்ந்தன.
1966இல் ‘திருச்சி சினி ஃபோரம்’ என்கிற அமைப்பை புனித வளனார் கல்லூரி பேராசிரியரான அருட்தந்தை பெஸ்ஸின் உதவியுடன் உருவாக்கி உலக திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்படக் காரணமாக இருந்தார். அதேபோல் ‘திருச்சி வாசகர் அரங்கம்’, ‘திருச்சி நாடக சங்கம்’ உள்ளிட்ட அமைப்புகளில் தீவிரமாகச் செயலாற்றினார். விஜய டெண்டுல்கர் பாதல் சர்க்கார் நாடகங்களை அரங்கேற்றினார். அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். – ஆதி வள்ளியப்பன்
previous post