முனைவர். சுஜா சுயம்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழியியல் சிந்தனாவாதங்களும் ஒப்பிலக்கண ஆராய்ச்சிகளும் வேகமெடுத்தன. தலைசிறந்த தனது எழுத்து, சொல்லிலக்கணக் கொள்கைகள் மூலம் தமிழில் இதற்கு வித்திட்டவர் தொல்காப்பியர். அவரைத் தொடர்ந்து பல இலக்கணிகள் இலக்கணப் பின்னணியில் தங்களது மொழியியல் பார்வையை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால்,
தமிழில் முழுமையான மொழியியல் ஆய்வுகள் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த அதிகாரிகளாலும் – கல்வியாளர்களாலும் மிகுந்த முனைப்போடு முன்னெடுக்கப்பட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை.
தொல்காப்பியரின் தொல்காப்பியத்தையும் பாணினியின் அஷ்டாத்தியாயியையும் ஒப்பிட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை வாழ்ந்த சட்டம்பிசுவாமிகள் என்கிற ஸ்ரீ வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகளால் (1853 – 1924) மலையாள மொழியில் எழுதப்பட்ட ஒப்பிலக்கண நூல் ஆதிபாஷா (1915). இதனை இரா. மதிவாணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2015இல் சென்னை வித்யாதிராஜ தர்மசபையின் வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டுவரை அறியப்படாதிருந்த இந்த நூலை முதன் முதலில் மலையாளத்தில் பதிப்பித்து வெளியிட்டவர் கெ.மகேசுவரன் நாயர் (1998). மலையாள மொழியில் தமிழின் காலப்பழமையையும் வடமொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் பண்பையும் அந்தந்த மொழிகளின் தலைசிறந்த இலக்கணங்களை முழுமையாக ஆய்ந்து விரிவாக விளக்கிக் கூறவேண்டிய தேவை சட்டம்பியவர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்ற வினா இங்கு நமக்கு எழாமல் இருக்கவில்லை. இது அவசியமானதொரு வினாவும்கூட. இதனை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், இதற்கு முன்னர் தென்னிந்திய மொழிகளின் திராவிடப் பொதுமையை ஆய்வுகளின் வழி நிறுவிய ஆளுமைகளின் எடுத்துரைப்புகள் குறித்துப் பேசவேண்டும். இந்தப் பின்னணியில் சட்டம்பியவர்களின் ‘ஆதிபாஷா’ என்கிற ஆதிமொழி நூல் எத்தகைய இடத்தினைப் பெறுகிறது என்பதையும் நாம் அறிய முடியும்.
சட்டம்பிசுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல் திராவிடக் கருத்தாக்கச் சிந்தனை மரபின் மிகக்குறிப்பிடத்தக்க தென்னிந்தியப் பதிவாக உள்ளது. மலையாளத்தைத் தனது தாய்மொழியாகக் கொண்ட பன்மொழிப் புலமைபெற்ற ஆளுமையாகிய சட்டம்பிசுவாமிகள், தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் தொடர்பு இல்லை என்பதை விளக்க இப்பதிவினைச் செய்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலப்பகுதியிலேயே திராவிடக் கருத்தாக்கம் ஐரோப்பிய அதிகாரிகள் – கல்வியியலாளர்கள் இடையே வேரூன்றத் தொடங்கிய நிலையில், கீழைத்தேயத்தைச் சார்ந்த புலமையாளர்களுக்கிடையேயும் அந்த வேர் கிளைபரப்பிக்கொண்டிருந்தது. தென்னிந்திய மொழிகளின் திராவிடப் பொதுமையை மையப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதற்கான சான்றுகளாக அமைகின்றன. எனினும் புலமைத்தளத்திலும் சமூகத்திலும் வடமொழி குறித்தும் ஆரிய மரபு பற்றியும் நிலவிவந்த மேன்மை விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்த சூழலில்தான் சட்டம்பி இந்நூலைப் படைக்கிறார். தென் திராவிட மொழிகள் பலவற்றிலும் சமஸ்கிருதச் செல்வாக்கு இருப்பதும் மொழிக்கடன்பேறுகளும் மொழித்தூய்மைவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கியதோடு வடமொழியே இம்மொழிகளின் தோற்றுவாயாக/ தாயாக அமைந்தது என்னும் எண்ணங்களும் வலுக்கத் தொடங்கின. இதுதொடர்பாக உருவாக்கம்பெற்ற தொன்மக் கதைகளின் வீச்சு, இவற்றை உண்மையென நம்பும் சூழலுக்கு சுவதேசிகளையும் கொண்டுவந்து நிறுத்தின. இப்படியான எண்ணத்திற்கு வித்திட்டவர்களில் முதன்மையானவராக வில்லியம் ஜோன்ஸைக் கூறமுடியும். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் கல்கத்தாவில் இவர் உருவாக்கிய ஆசியவியல் கழகமும் (Asiatic Society 1784) அவரது சமற்கிருத மொழி பற்றிய படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் (குறிப்பாக: The Sanskrit Language (1986)) இதில் பெரும்பங்காற்றின. கீழைத்தேயம் பற்றிய ஐரோப்பியக் கல்வியியலாளர்களின் எண்ணத்திற்கான சோற்றுப்பதமாக இதனைக் கொள்ளலாம். இந்தக் கருத்துநிலை எல்லீஸ், மெக்கன்சி, சீகன் பால்கு, காம்பெல், கால்டுவெல், லாசர், ஸ்டீவன்சன், ஸ்மித், லீச், பெர்சிவல் முதலானோர்களின் ஆய்வுகளின் வழி மாற்றம் பெற்றது.
பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (1796 – 1879) என்கிற எல்லீஸ் தான் முதன் முதலில் திராவிட மொழிகளுக்கிடையிலான உறவு குறித்து முதன்முதலாக ஆய்வு செய்து அவை சமஸ்கிருதத்திலிருந்து பிறக்கவில்லை என்பதை நிறுவுகிறார். 1812இல் தென்னிந்திய மொழிகளை ஆங்கிலேய இளநிலை அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்க சென்னைக் கல்விச் சங்கம் என்கிற புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி ஒன்று எல்லீசின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்டு அவரது மொழி ஆய்வுக்கான களமாக அமைந்தது. கும்பகோணத்தில் பணியாற்றும்போது தஞ்சை அரசரோடு ஏற்பட்ட மோதல் காரணமாக மசூலிப்பட்டினத்திற்கு மாற்றப்பட்ட காரணத்தாலும் ஏற்கனவே அவருக்கு இருந்த தமிழ்ப்புலமையும் புதிதாகப் பெற்ற தெலுங்கு மொழி அறிவும் அவரது திராவிட மொழிக்குடும்ப ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டது. தெலுங்கைத் தமிழின் சகோதரி மொழி என்றும், தமிழ் பிற திராவிட மொழிகளுக்குத் தாயாக விளங்குவதையும் அவரது ஆய்வின் வழிக் கண்டடைந்துள்ளார். 1816இல் ஏ.டி. காம்பெலின் (A Grammar of the Teloogoo language) தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கு எழுதிய விரிவான ஆய்வுரையில் தெலுங்கிற்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பு இல்லை என்பதையும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் ஒரே மொழிக்குடும்பத்தை – திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதையும் எல்லீஸ் முதன் முதலில் நிறுவுகிறார்.
எல்லீசுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் கால்டுவெல்லின் திராவிட மொழிகள் பற்றிய ஆய்வு வெளியாகிறது. ஆனால் கால்டுவெல்லுக்கு முன்னர், எல்லீசுக்குப் பின்னர் அல்லது அவரது சமகாலத்தில் இதே சிந்தனைப் புள்ளியில் இயங்கிய மற்றொரு ஆங்கிலேய ஆட்சியாளராக மெக்கன்சியைக் குறிப்பிடவேண்டும். கர்னல் காலின் மெக்கன்சியால் (1754 – 1821) தென்னிந்திய மக்களின் வரலாறு, பண்பாடு பற்றிய முழுமையான புரிதலை உருவாக்கும் விதமாக சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகள், ஓவியங்கள், சுவடிகள், நாணயங்கள், படிமங்கள், வரைபடங்கள் முதலான பலவகை ஆவணங்கள் திரவிடக் கருத்தாக்கத்தை நோக்கிய அவரது பயணத் தடத்தைக் காட்டுவதாக உள்ளன.
இவர்களது ஆய்வின் நீட்சியாக, சென்னை மறைமாவட்டத்தின் தென்பகுதியாகிய திருநெல்வேலி –இடையன்குடியில் கிறித்தவ நற்செய்தி சங்கத்திற்காக சமயப்பணி செய்யும் பொருட்டு வந்த இராபர்ட் கால்டுவெல் (1814 -1891) சமயப்பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ் கற்க முனைந்தபோது தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவருக்கு அறிமுகமாகியுள்ளது. குண்டர்ட், கிட்டல் முதலான முறையே மலையாளம், கன்னட மொழிகளில் சிறந்து விளங்கிய அறிஞர்களோடும் இவருக்குத் தொடர்பு இருந்துள்ளது. இத்தகைய வாய்ப்புகளால் தென்னிந்தியாவில் வழங்கப்படும் மொழிகளுக்கிடையேயுள்ள ஒற்றுமையை உணர்ந்த கால்டுவெல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மாட்டோ முதலான மொழிகள் சமஸ்கிருத மூலம் கொண்டவை அல்ல, இவை தொல்திராவிடம் என்ற ஒரே மூல மொழியிலிருந்து பிறந்தவை என முன்னோர் வளர்த்தெடுத்த திராவிடக் கருத்தாக்கத்தை மேலும் வரையறைக்குட்படுத்துகிறார். இவரது திராவிட மொழிகள் பற்றிய விரிவான ஆய்வின் பயனாகப் பெறப்பட்ட ஒப்பிலக்கண நூல் (A Comparative Grammar of the Dravidian of South Indian Family of Language (1856)) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண வரலாற்றில் மிகக்குறிப்பிடத் தகுந்த பங்கை வகிக்கிறது.
திராவிட மொழிகளுக்கிடையிலான ஒப்புமையை எடுத்துக்கூறுவதன் மூலம் தென்திராவிட மொழிகள் பற்றிய புரிதலை இவர்களது ஆய்வுகள் ஏற்படுத்தின. மாறாக, சட்டம்பியவர்கள் சமஸ்கிருதத்தையே தமிழோடு ஒப்பிட்டு அதன் வன்மை மென்மைகளை எடுத்துக்கூறித் தமிழின் தொன்மையை நிறுவுகிறார். முந்தைய ஒப்பியல் ஆராய்சிகளோடு ஒப்பிடும்போது இந்நூல் சுருக்கமானதாக அமைந்தாலும் தனிச்சிறப்புமிக்க ஒப்பிலக்கண ஆராய்ச்சி நூலாகவே உள்ளது. இந்திய மொழிகளின் வரலாற்றில் சமஸ்கிருதம் தமிழுக்குத் தாய் என்ற எண்ணத்தை உடைக்கின்ற முதல் தென்னிந்தியப் புலமை இலக்கணக் குரலாக ஆதிபாஷா நூலினைக் கூறமுடியும்.
தமிழின் இலக்கணப் பழமையை இணையில்லாத மொழிவளத்தை வெற்றுச் சொற்களாலோ கதைகளாலோ கூறாமல் இலக்கணப் பகுதிகளை நிரல்படுத்தி எழுத்துக்களின் பிறப்பிடம், புணர்ச்சி, சொல்லமைப்பு, பால் – எண் பகுப்பு, வேற்றுமைகள் அடிச்சொற்கள் முதலான கருத்துநிலைகளின் பின்னணியில் தமிழின் இயல்புகளையும் சமஸ்கிருதத்தையும் வேறுபிரித்துக் காட்டுகிறார். அதன் ஊடாகத் தமிழின் தொன்மையை உணரும்படிச் செய்கிறார். மொழிகளின் தோற்றம் – பரவலாக்கம் குறித்த விசீதரங்க நியாயம், கதம்ப மூலநியாயம் என்கிற இருவகைக் கருத்தாக்கங்கள் பற்றிய எடுத்துரைப்போடு இந்நூல் தொடங்குகிறது; ‘பிராரம்பம்’ முதல் ‘ஆதிபாஷா’ வரை பத்து உட்தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் – சமஸ்கிருத எழுத்து, சொல்லிலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு தமிழின் தொன்மையையும் சமஸ்கிருதத் தொடர்பற்ற நிலையையும் நிறுவும் இந்நூல் கருத்துகளைக் கீழ்க்கண்ட முறையில் தொகுத்துக் கொள்ள முடியும்.பல நெடுங்காலமாகப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் நிலைபேறு பெற்ற தமிழ் மொழி இலக்கணக் கட்டுக்கோப்போடு பயணித்து வந்தமையை எடுத்துக் கூறுதல். இடம் காலம் முதலான காரணிகளால் சில திரிபுகளையும் மாற்றங்களையும் பெற்றிருந்தாலும் வேறு எந்த மொழிகளோடும் ஒட்டுறவின்றித் தனித்தன்மையைப் பெற்றுள்ளதை நிறுவுதல்.
தமிழையும் சமஸ்கிருதத்தையும் எழுத்து, சொல், புணர்ச்சி, பால், எண், சொல்லடிகள், வேற்றுமைகள் முதலானவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டு இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் தொடர்பின்மையை எடுத்துக் கூறுவதன் மூலம் தமிழ்மொழியின் தன்மையை விளக்குதல்.
இயற்கையான எளிய ஒலியமைப்பு கொண்ட மொழியே மற்ற எல்லா மொழிகளுக்கும் தாயாக விளங்க முடியும் என்ற கோட்பாட்டின் பின்னணியில் தமிழின் உயிர், மெய் எழுத்துக்கள் மனதிற்கு ஏற்ப மாற்றி உச்சரிக்கப்படாத, இயல்பான ஒலி அமைப்பை – தோற்றத்தை எடுத்துக்கூறித் தமிழின் தலைமைத்துவத்தை விளக்குதல்.
பிராகிருதம் சமஸ்கிருத மொழிக்கு அளித்த நாடகம், சட்டம் முதலான இலக்கியப் பாங்கு கொடைகளையும் அவ்விரு மொழிகளுக்கும் இடையிலான நெடுங்கணக்கு வேறுபாடுகளைக் குறிப்பிடுவதன் மூலமும் பிராகிருதம் தனக்கே உரிய சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட முந்து எழுத்து வடிவங்களை கொண்டிருப்பதை எடுத்துக்கூறி பிராகிருதம் தமிழுக்குப் பின் சமஸ்கிருதத்திற்கு முன் தோன்றியது என்பதை நிறுவுதல். இவரது ஆய்வின் தொடக்கத்திலேயே ஏற்கத்தக்க, தர்க்கப்பூர்வமான மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத சிந்தனை வெளிப்படுகிறது. சான்றாக, எழுத்துக்களைப் பற்றிய பகுதியில், ‘சமற்கிருதத்தில் உள்ள எழுத்துகளை ஆராய்ந்தால் தமிழ் எழுத்துகள் வாயிலாக ஒலிக்க முடியாத ஒலிப்புகளுக்கு மட்டும் வேறு எழுத்துக்கள் படைத்திருப்பதைக் காண முடிகிறது. ர்ரு, ல்ரு எனும் குறில் எழுத்துகளும் இவற்றின் நெடில் எழுத்துகளும் தமிழில் இல்லை’ (2015:3)
இவ்வாறாக வடமொழியில் உள்ள உயிரெழுத்து வகைப்பாடுகளை எடுத்துக்கூறித் தமிழில் இல்லாத வரிவடிவங்களையும் வரிசைப்படுத்தித் தமிழ் எழுத்துக்களின் வரன்முறையை, இலக்கணத்தைத் தொல்காப்பியக் காட்டுகளின்வழி நிறுவுகின்றார். கருத்துரைகளோடு சேர்த்து அதில் ஏற்படும் ஐயங்களையும் தானே எழுப்பிக்கொண்டு விடைகாணும் முயற்சியையும் மேற்கொள்கிறார் ஆசிரியர். ‘எழுத்துவகை முறைவைப்பு தமிழிலும் வடமொழியிலும் ஒரே வகையான இலக்கண அணுகுமுறையைக் கொண்டிருப்பது ஏன் என்னும் ஐயமும் தோன்றுகிறது (2015:6-7).
‘ஸ்வயம மேவ ராஜன்த இதி ஸ்வரா:
அன்வக்பவதி வ்யஞ்சனம்’
என வடமொழியும் – வேறெந்த உறுப்புகளின் முயற்சியும் இல்லாமல் அங்காத்தல் முயற்சியால் தாமே பிறக்கக்கூடிய எழுத்துக்களை ஸ்வரம் என்னும் உயிர் எழுத்தாகவும் பிற உறுப்புகளின் முயற்சியால் பிறப்பனவற்றை வ்யஞ்சனம் என்னும் மெய்யெழுத்துகள் என்றும் வழங்குகின்றன (நன்றி: முனைவர். சௌம்யநாராயணன்). இதன் காரணமாகவே ‘உயிருக்காகவே உடம்பு அமைவதாலும் உயிரின்றி உடம்பு இயங்காததாலும் உயிர்மெய் என்னும் அமைப்பு மிகச் சிறந்த காரணப் பொருத்தம் உடையதாகிறது. வடமொழியாளரும் இந்தக் காரண முறைவைப்பை மிகப் பொருத்தமானது என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்’ (2015:7) என்று சட்டம்பிசுவாமிகளும் குறிப்பிடுகிறார்.
உயிர், மெய்யெழுத்துக்களின் பிறப்பிடமும் முயற்சியும் கூறி அத்தன்மையை வடமொழியோடு ஒப்பிட்டு இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிந்து இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பின்மையை விளக்குகிறார் . சமஸ்கிருத நெடுங்கணங்கில் உள்ள சில எழுத்துகள் தமிழில் இல்லை. சில எழுத்துக்கள் தமிழில் உள்ளது போல ஒலிவேற்றுமையின்றி ஒரே எழுத்தாகக் கருதும் வாய்ப்புள்ளவையாக உள்ளன (சான்று: ல, ள யோ ரபேத:). மேலும், ‘சமற்கிருதத்திலுள்ள பிறப்பிட நெறிமுறைகளும் வேறுபடுகின்றன. சமற்கிருத சப்தானுசாசன இலக்கணத்தில் ககர ஙகர எழுத்துகளின் பிறப்பிடமாக நாக்கு கூறப்படவில்லை. டகர ணகரங்களுக்கு மூர்தன்யம் (பல்லின் அருகில் உட்புறம் கன்னத்தின் மேல்பகுதி) இடமாகக் கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாகச் சமஸ்கிருத இலக்கண நூலார்க்கும் தமிழ் இலக்கண நூலார்க்கும் இடையில் ஒற்றுமை காணப்படவில்லை. இரு திறத்தாரும் தம்முள் கலந்து ஒரே வகையான இலக்கணம் எழுதவில்லை. அவரவர் தத்தம் மொழிப்பாங்குக்கு ஏற்ப எழுத்திலக்கணம் எழுதியுள்ளனர் என்பது உறுதிப்படுகிறது’ (2015:15). இவ்வாறாகக் குறிப்பிடத் தக்க நுண்மையான ஒற்றுமை வேற்றுமைகளை இவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். தமிழ் நெடுங்கணக்கின் பிறப்பிடவரிசை முறையை / வைப்பு முறை குறித்த இவரது விளக்கம் மொழியியல் சிந்தனையுடன் உள்ளது (2015:8)
தமிழின் உடம்படுமெய்விதி நிலைமொழி இறுதி வருமொழி முதல் மாறியமைந்தாலும் எந்த மாற்றமும் அடைவதில்லை. சமஸ்கிருதத்தில் மகர மெய்யீற்றின் முன் மெய்யெழுத்துகள் வந்தால் மகர மெய் அனுநாசிகம் எனும் அரை மெல்லொலியாகத் திரியும். இது மகரக்குறுக்கம் போன்றது (க்ருஷ்ணம்+வந்தே = க்ருஷ்ணவந்தே) ஆனால் தமிழில் மொழியிடையில் மகரக்குறுக்கம் வருவதில்லை. இவை போன்ற நுண்மையான எடுத்துரைப்புகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
சொற்புணர்ச்சி இலக்கணம் உலகமொழிகளுள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ளது. இரண்டு மொழிகளிலும் உள்ள சிறப்புப் புணர்ச்சிநெறிகளை ஒப்பிடுவதற்கு முன்னர், புணர்ச்சி இலக்கணம் ஏன் தோன்றியது அல்லது எப்படித் தோன்றிது (‘சொற்களை வேகமாகப் பேசிய உச்சரிப்பின் விளைவு … இயல்பாகவே ஒரு மொழியில் தோன்றும். இதனை இலக்கணங்காட்டி எல்லைப்படுத்தவியலாது. அதனால் தமிழில் மட்டும் ஏன் இது முதலில் தோன்றியது என்று வினவ முடியாது’ (2015:48). என்பதை விளக்கிப் பின்னர், ‘சமஸ்கிருதம் வளர்ந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதம் கற்ற தமிழ்ப் புலவர்கள் வாயிலாகப் பரவியிருக்கும் என்பது ஆராயத் தக்கது.’ என்ற கருத்தைப் பதிவுசெய்கிறார். தமிழில் மிகப்பழங்காலத்தில் புணர்ச்சித் திரிபுகள் இல்லை. பழைய பிராமிக் கல்வெட்டுகளை இதற்குச் சிறப்பாகச் சான்று காட்ட முடியும்.
சொல்லியல் பகுதியில், ‘சமற்கிருதத்திலுள்ள சொற்கள் யாவும் ‘கிரியா தாது’ எனும் வினைச்சொற்களிலிருந்து தோன்றியவை. ஆனால் முன்னொட்டுகள் பெறாத தனித்த வினைச் சொற்கள் சமற்கிருதத்தில் இல்லை. தாதுச்சொற்களோடு கிருத் எனும் ஒட்டுச் சொற்கள் சேர்ந்து கிரியா பதம் (வினைச்சொல்) தவிர்ந்த பெயர்ச்சொல், உபசர்கம், நிபாதம் எனும் மூவகைச் சொற்களும் தோன்றுகின்றன. (2015:68), ‘சுப், திங் எனும் இரண்டு ஒட்டுகள் சேராமல் சமற்கிருதத்தில் எவ்வித அடிச்சொல்லும் (தாது) உருவாவதில்லை’ (2015:69)’ என்று கூறுகிறார். தமிழில் வினைவடிவங்கள் இயல்பாக இடம்பெறுவதை இங்கு நாம் ஒப்புநோக்கும்போது தமிழின் தனித்த பண்பு வெளிப்படுகிறது.
வடமொழியில் எண்ணிக்கையை வசனம் என்றும் பிறப்பு வேறுபாட்டை லிங்கம் என்றும் வழங்குவது மரபு. ஆனால் தமிழில் பால்பகுப்பு விகுதிகள் எண்ணையும், பாலையும் காட்டக்கூடியனவாக உள்ளன. இதற்குக் காரணமாக, ‘வடமொழி இலக்கணப் பாங்கு ஏற்படுவதற்கு முன்பே மிகு தொன்மைக் காலத்தில் தமிழிலக்கண வகைப்பாடுகள் தோன்றிவிட்டனவாதலால் அவற்றை மாற்றமின்றித் தமிழிலக்கண வல்லுநர் பின்பற்றி வந்திருக்கிறார்கள். … இதிலிருந்து தமிழிலக்கணம் சமற்கிருத இலக்கணத்திற்கு காலத்தால் முந்தையது எனத் தெரிகிறது. தமிழில் விலங்கு பறவை முதலிய அஃறிணைகளுக்கு ஆண் பெண் வேறுபாடு காட்டாமலிருப்பதும் சமற்கிருதத்தில் இவை காட்டப்பட்டிருப்பதும் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் எவ்வகையிலும் இலக்கண ஒற்றுமை இல்லை என்பதைக் காட்டுகின்றன’ (2015:109). இவ்வாறாக எண் குறித்த பகுதியில், தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் உள்ள மிக முக்கியமான இரண்டு வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறார்.
சமஸ்கிருத இலக்கணமரபைத் தருவித்துக்கொண்டு இலக்கணம் கூறும் முயற்சியில் இடைக்கால இலக்கணிகள் ஈடுபட்டதையும் நன்னூலார் இத்தகை புள்ளியில் இயங்கியதையும் இனங்கண்டு குறிப்பிட்டுள்ளார் (2015:44). மேலும், தமிழின் வழக்கிற்கு ஏற்ப வகுத்துக்கொள்ளும் மரபு (ப.49), கிளைமொழியின் தோற்றம், புதிய எழுத்துக்களின் தோற்றம் பற்றிய விரிவான பதிவு (ப.19) என குறிக்கத் தக்க பகுதிகள் இந்நூலில் உள்ளன.
சொல்லியல் பகுதியில், ‘பலபொருள் குறித்த ஒரு சொல்லும் ஒருபொருள் குறித்த பல சொல்லும் திரிசொற்கள் எனப்படும்’ (ப.61) எனக்கூறுவது, ‘மெய்யெழுத்துக்களின் பிறப்பிடம் உத்திக்குப் பொருந்தாத இடங்களில் தொல்காப்பியர் இவற்றை மேலும் விளக்காமல் விட்டிருக்கிறார்’ (ப.14), ‘ரகர லகரங்கள் உகர ஊகாரங்களுக்குப் பிறகு வரிசைப் படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன?’ முதலான இடங்களை மேலும் ஆராயவேண்டிய அவசியம் உள்ளது.
இலக்கண நிலையில் மொழியின் எல்லா இயல்புகளையும் ஒப்பிடுவதால் சமஸ்கிருதம் குறித்த புரிதலை – அம்மொழி பற்றிய அறிவைப் பெறுவதற்கான ஆதாரமாகவும் கொள்ளக்கூடிய இந்த நூலைத் தமிழில் இரா. மதிவாணன் மொழிபெயர்த்துள்ளார். நூல் பொருளை நன்குணர்ந்து மொழிபெயர்த்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
l