அறிவியல், கணிதம் போன்ற பல்வேறு ஆழமான செய்திகளையும் ரசித்து உயிர்ப்போடு வாசிக்க வைக்கும் புத்தகங்கள் உண்டு. பாடப்புத்தகங்கள் ஏன் இவ்வாறு உயிருள்ள மொழியோடு இல்லை? என்று நான் நினைப்பதுண்டு. கனமான புத்தகங்களும் இறந்த, தட்டையான மொழியும் குழந்தைகளை பயத்தில் அழுத்தி வைத்திருக்கின்றன. அதைத் தாண்டி வாசிப்பின் வாசல்களைத் திறக்கும் ஆசிரியர்களே வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வின் வாசலையும் திறக்கிறார்கள். அப்படியான ஆசிரியர்களுள் விருதுநகர் மாவட்டம் விடத்த குளம் அரசுப்பள்ளி ஆசிரியை முத்துக்குமாரியும் ஒருவர். சமீபத்தில் பரவலாகப் பேசப்படும் ‘மலைப்பூ’ நாவலின் மையக்கருத்தான பனைமரம் குறித்த செயல்பாட்டை முன்னெடுத்த ஆசிரியை இவர்தான். குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக அவர் முன்னெடுக்கும் செயல்பாடுகள் குறித்து உரையாடினோம்.
குழந்தைகளிடம் வாசிக்கும் ஆர்வத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறீர்கள்?
பாடம் நடத்தும்போது நான் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவேன். உதாரணமாக புவியியல் பாடத்தில் தொழிற்சாலைகள் பற்றி வரும்போது ‘முகிலினி’ நாவலில் உள்ள செய்திகளைக் கூறுவேன். அணைகள் எவ்வாறு கட்டுறாங்க? பவானிசாகர் ஆணை எவ்வாறு கட்டப்பட்டது? கோவை எப்படி தொழில் நகரமா மாறியது? ஆகியவை பற்றிக் கூறுவேன்.
பாடம் நடத்தும்போது அது சார்ந்து நான் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதை குழந்தைகள் கவனிக்கிறாங்க. சில குழந்தைகள் ஆர்வமா வந்து அந்தப்புத்தகம் கிடைக்குமா? என்று கேட்பாங்க. அப்போது வாசிக்கக் கொடுப்பேன்.
இப்படி ஆர்வமா கேட்கறவங்க கொஞ்சப்பேருதான். மற்றவங்களுக்கும் வாசிப்பில் ஆர்வத்தை வரவைக்க வகுப்பறை நூலகம் உதவியா இருக்கு. புக் பார் சில்ரன், வானம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள குழந்தைகள் நூல்களை அறிமுகம் செய்வேன். ஒரு வாரத்தில் யார் அதிகப் புத்தங்கள் வாசிக்கிறாங்க? போன்ற போட்டி, வாசித்தவை குறித்து வகுப்பறையில் பேசுதல் போன்ற பலவழிகளில் வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சி செய்வேன்.
வாசிப்பு ஏன் முக்கியம்?
பல்வேறு செய்திகள் குறித்த தகவல் அறிவு கிடைக்கும். அதைவிட, நாவல்களை வாசிக்கும்போது பலவிதமான கதாபாத்திரங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதை எவ்வாறு சமாளிக்கிறார்கள்? என்பதெல்லாம் குழந்தைகளை அறியாமலேயே அவர்களுக்கு வாழ்வியலை அறிமுகம் செய்யும். அவர்கள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளின் போது முடிவெடுக்க அது உதவியாகவும் இருக்கும்.
நமது வாழ்வில் அதிக குழப்பம் இல்லாமல் தெளிந்த நீரோடை போல எடுத்துச் செல்ல வாசிப்பு துணையாக அமைகிறது.
நமக்கு ஒரு பிரச்சினை வரும்போது, ‘எனக்கு மட்டும்தான் இப்படி வருகிறது’ என்று நினைத்து அதிகமாக வருத்தப்படுவோம். வாசிப்பு அதை மாற்ற உதவியாக இருக்கும். நம்மைப்போலவே பலரும் பலவிதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அதை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள்? என்பதெல்லாம் நமது வாழ்வைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும். நமக்குத் திணிக்கப்பட்ட பல்வேறு விடயங்களில் இருந்து இருந்து புதிய பார்வை, புதிய வெளிச்சம், அறிவியல்பூர்வமான சிந்தனை பெற வாசிப்பு உதவியாக இருக்கிறது.
நீங்க எப்போ வாசிக்க ஆரம்பிச்சீங்க?
இரண்டாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா சிறுவர் மலர் போன்ற புத்தகங்களில் இருக்கும் படக்கதைகளை வாசிச்சு சொல்லுவாங்க. அதன் பிறகு நான் வாசிக்கத் தொடங்கினேன். இப்பொழுது முகநூல், பத்திரிகைகளில் வெளியாகும் நூல் விமர்சனங்கள் மூலம் பல்வேறு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்.
பள்ளி இல்லாத இக்காலத்தில் குழந்தைகளில் வாசிப்பிற்காக என்ன செய்கிறீர்கள்?
முடக்கக் காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தான். ஓவ்வொரு கிராமத்திலும் ஆர்வமுள்ள ஒருவரின் வீட்டில் சிறிய நூலகத்தை அமைத்தேன். எழுத்தாளர் விழியன் போன்றவர்கள் புத்தகங்களை அனுப்பி உதவினார்கள். அதன்மூலம் குழந்தைகளின் வாசிப்பு தொடர்கிறது.
பல்வேறு சுமைகளுக்குள் அழுந்திக்கிடக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பின் மூலம் சிறகுகள் தரும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே சமூகத்திற்குள் நுழைந்து சமூக ஆசிரியர்களாக மாறியிருப்பது கல்வியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்கலாம். l
previous post