கதைகளின் மீட்சியில் – எஸ். வி. வேணுகோபாலன்
குமுதம் இதழில் 1970களின் இறுதியில் வாசித்த சிறுகதை அது. நினைவு சரியாக இருக்குமானால், அந்த இதழ் நிறைய புதுமைகளை பரிசோதனை செய்து கொண்டே இருந்த வகையில், ஓவியரது கற்பனையில் விரியும் காட்சியை வரையச் சொல்லி, எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி அவர்கள் எழுதும் கதையை அடுத்த வாரம் வெளியிட்டு வந்தது குமுதம். ஓவியர் வர்ணம் அவர்களது சித்திரத்திற்கு, ஆர்.சூடாமணி அவர்கள் எழுதியது தான் நெருப்பு எனும் அந்தக் கதை என்று நினைவு. 1978ல் வெளிவந்திருக்கிறது. அவரது சிறுகதை தொகுப்பொன்றில் இருந்து நகலெடுத்து, அண்மையில் அனுப்பிய நீதியரசர் கே சந்துரு அவர்களுக்கு நன்றி உரித்தாகிறது.
திடீர் என்று வீட்டில் பற்றி எரிந்த தீயில் எப்படியோ பேத்தி உயிர் தப்பிக் கிடைத்த நிம்மதியில் இருக்கிறார் வீட்டின் பெரியவர், ஆனால், அந்தக் குழந்தையை, எரியும் வீட்டுக்குள் துணிச்சலாகப் புகுந்து காப்பாற்றியது யாரெனில், வீட்டு வராந்தா தாண்டி உள்ளே வர அனுமதிக்கப்படாதிருந்த ஒருவர் என்பது தான் கதை. வீட்டைச் சுடும் நெருப்பை அணைத்துவிட முடிந்தது, அது பெரிய விஷயமில்லை. மனிதர்கள் மனத்தில் பெருந்தீயாக எரிந்துகொண்டிருக்கும் சாதீயத் தீயை எப்படி அணைப்பது? தனது அன்பு மகனின் உயிர் நண்பன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனாக இருப்பது அந்தப் பெரியவரது நிம்மதியை ஓயாது குலைத்துக் கொண்டிருந்தது. நகர்ப்புறம் என்றாலே இது தான் பிரச்சனை, ஒரு நேமத்தோடு வாழ முடிவதில்லை, கிராமத்திற்கே போய்விட வேண்டியதுதான் என்று அலுத்துக்கொள்பவரும் கூட. வீட்டில் தாங்கள் யாரும் இல்லாத நேரத்தில், மகனோடுதான் குழந்தையும் வெளியே போயிருந்தாள் என்று நம்பிய ஒரு கணத்தில், யாரோ சொல்ல ஓடிப்போய்ப் பார்க்கையில் எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள்ளிருந்து கேட்கிறது குழந்தை கதறியழும் சத்தம். தற்செயலாக அங்கே வரும் மகனுடைய உயிர் நண்பன் சடாரென்று உள்ளே புகுந்து, குழந்தையோடு பத்திரமாக வெளியேறியும் வந்து விடுகிறான். அதற்கு அடுத்த கட்டத்தில், இப்போது நிம்மதி வேறு விதமாக அலைக்கழிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. பெரியவர் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்.அதையொட்டித் தான் கதையின் போக்கும்.
அந்த மாதம் இலக்கிய சிந்தனை கூட்டத்திற்குச் செல்கையில், வழக்கம்போல் அதற்கு முந்தைய மாதத்தில் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருந்த சிறுகதைகளை அலசி ஆராய்ந்து அவற்றினுள் ஒரு சிறுகதையைத் தேர்வு செய்து வந்திருக்கும் இலக்கிய ஆர்வலர் பேசிக்கொண்டிருக்கிறார். நெருப்பு கதையைப் பற்றி அவர் விவரிக்கிறார். அவர் பெயர் என்ன, இன்னார் என்பது எதுவும் நினைவில் இல்லை. ஆனால், அவரது குரல் இன்னும் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆர் சூடாமணி சிறுகதை ஆக்கத்தின் நுட்பங்களை, அதன் எழுத்து நடையை, மொழிவளத்தை, தீண்டாமைக்கு எதிரான சமூக உணர்வை விவரித்துக் கொண்டிருக்கையில், குறிப்பிட்ட இடம் அப்படியே ஒளிப்படமாக மனத்தில் நிலைத்துவிட்டது.
கதையில் அந்தப் பெரியவர் பின்னோக்கிப் பார்த்துத், தான் நடந்துகொண்ட விதங்கள் குறித்த சுய விமர்சனத்தோடு இருக்கிறார். ஏதேனும் தக்க விதத்தில் தனது மன மாற்றத்தைத் தனது மகனது நண்பனுக்கு உணர்த்த விரும்பும் இடம் அது. ‘இரவில் யாருமறியாமல் ரகசியமாக மடலவிழும் பூவைப் போல், இந்த மாற்றம் நிகழ்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. எல்லோரும் அறியும் வண்ணம் ஓர் ஓவியச் செயலால் உணர்த்த வேண்டாமா’ என்று அவர் துடிப்பதை, அன்றைய உரையாளர் நா தழுதழுக்க எடுத்துச் சொன்னது மறக்க முடியாதது.
மறுநாள், அவனை வீட்டுக்குள் அழைத்துத் தம்மோடு அமர்ந்து உண்ணச் சொல்லி அழைக்கிறார். அவன் சம்மதிப்பதில்லை. எனக்கு விருப்பம் இல்லையே என்று சென்றுவிடுகிறான், அன்றைய காலை செய்தித்தாளில் பீகாரில் ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசியதற்காக,தாழ்த்தப்பட்டவரை மரத்தில் கட்டி வைத்து எரித்த செய்தி ஒன்று வந்திருக்கும் என முடிகிறது கதை.
தொண்ணூறுகளில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை பேருந்தில் ஏழு நாட்கள் – கர்நாடக மாநில சிறப்புச் சுற்றுப்பயண ஏற்பாட்டில் குடும்பத்தோடு போயிருக்கையில், கிட்டத்தட்ட இப்படியான நிகழ்வு ஒன்று நடந்தது. பல்வேறு பயணிகளில் வங்கி ஊழியர் குடும்பம் ஒன்றும் வந்திருந்தனர். அவரது நிறம், பேச்சு வைத்து, வண்டியில் பயணம் செய்த ஒரு சிலர் அத்தனை நெருக்கமாக அவர்களிடம் பழகவில்லை. இரண்டாம் நாள் மாலை நேரத்தில் மழை பெய்து ஓய்ந்திருந்த சமயம், மலைப்பாதை ஒன்றில் வண்டிச் சக்கரம் பள்ளத்தில் இறங்கி சிக்கிக் கொண்டு நகர மறுத்தது. என்னென்னவோ முயற்சி எடுத்தும் நகரவில்லை.
அந்தக் கறுத்த மேனி உழைப்பாளி, தடதடவென்று மலைப்பாதையின் குறுக்கே வெளிச்சம் தெரிந்த இடத்திற்கு இறங்கியோடிப் போய் மொழி தெரியாவிட்டாலும் சைகைகள் செய்து மண்வெட்டி ஒன்று வாங்கிவந்து, பள்ளத்தில் மண்ணைச் சமன் செய்து நிரப்பி, கல்லொன்று அண்டக் கொடுத்து, பத்து நிமிடங்களுக்குள் வண்டியை நகர வைத்துவிட்டார். இரவு நேரத்தில், அதல பாதாள இடத்தருகே எல்லோரும் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது செயல் அபாரமான ஒன்று. அவரை அத்தனை மதியாதிருந்த சிலர் அப்போது அவருக்கு வணக்கம் வைத்தது, அவரது உழைப்பின் கம்பீரம். அந்த உண்மை நிகழ்வையொட்டி ‘சக்கரங்களின் மீட்சியில்’ என்று பின்னர் எழுதிய சிறுகதை, நிச்சயம் ஆர் சூடாமணி அவர்களது நெருப்பு சிறுகதையின் தாக்கம் தான்.
1975க்குப் பிந்தைய வாசிப்பு, அன்றைய அரசியல், சமூக நிலைமைகள் மாற்றத்தின் பிரதிபலிப்பாகவும் இருந்திருக்கிறது. குமுதம் இதழ், மாலைமதி என்ற பெயரில் மாத நாவல் வெளியிடத் தொடங்கவும், சிறுகதைகள் கடந்து பல எழுத்தாளர்களது படைப்புகள் வாசிப்பு நிகழ்ந்தது. மாணவர் படைப்புகள் ஊக்குவித்த ஆனந்த விகடன் இதழில் எனது முதல் சிறுகதை, ஷா கமிஷன், வெளியானது. தங்கி இருந்த மாமா வீட்டுக்குப் பக்கத்தில் சீனிவாசா காபி ஹவுஸ் எனும் காப்பிக்கொட்டை வறுத்து அரைத்துத் தரும் கடையில் நாளேடுகள், வார இதழ்கள் படிக்க வைத்திருப்பார்கள், ஆவலோடு போய் எடுத்துப் பார்க்கவும் கதை வந்திருக்க ஏற்பட்ட உற்சாகம் விவரிக்க முடியாதது.
நேரே விகடன் அலுவலகத்திற்குச் சென்றோம், நானும் என் அண்ணன்
எஸ் வி ரங்கராஜனும். வரவேற்பறையில் ‘யாரைப் பார்க்க’ என்று கேட்டனர், ஆசிரியர் குழு என்று சொல்லவும், எழுத்தாளர் ஜே எம் சாலி அவர்கள் வெளியே வந்து சோபாவில் அமர வைத்து, கதையைப் பாராட்டி, மேலும் எழுத வேண்டும் என்று ஊக்கம் அளித்து, அறுபது ரூபாய்க்கு காசோலை அங்கேயே வழங்கினார்.
அண்ணா சாலையில் பேசிக்கொண்டே நடை போட்டோம். சஃபையர் தியேட்டருக்குச் சற்று முன் இருந்த கடைகளில் ஒன்றில் வாழ்க்கையின் முதல் லஸ்ஸி (அப்போது பெரிய கோப்பை அறுபது பைசா) அண்ணன் வாங்கிக் கொடுத்து, ‘ஜமாய், நிறைய எழுது’ என்றார். ஆனால், எழுதுவதை விடவும் வாசிப்பதில் தான் ஆர்வம் கூடிக்கொண்டிருந்தது.
இலக்கிய சிந்தனை கூட்டங்கள், வாசிப்பு தொடர்பான நிறைய அனுபவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அழகிய சிங்கர், மௌனி கதைகள் கொடுத்துப் ‘படி’ என்றார். தினமணி கதிர் இதழில் சாவி இருந்த நேரம். சுஜாதா கதைகள் வரும். சாவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு குங்குமம் எனும் புதிய இதழ் வரத்தொடங்கியது. அதன் முதல் இதழில், ஒரே நகைச்சுவை துணுக்கு இரண்டு முறை வெவ்வேறு பக்கங்களில். இது போல் வேறு சில குறைகளும் பளிச்சென்று பட்டது. வியப்பாக இருந்தது. அந்த வார இறுதியில், ராயப்பேட்டை நிகழ்ச்சி ஒன்றில், ராணி மைந்தன் அவர்களைத் தற்செயலாக அறிந்து அறிமுகம் செய்துகொண்டு பேசிக்கொண்டிருக்கையில், இதைக் குறிப்பிடவும், அவர் சிரித்தார், இதெல்லாம் வாசகரிடம் இதழ் பற்றிய விவாதம் உருவாக்கி கவன ஈர்ப்பு செய்யும் உத்தி என்று பெருமையாகச் சொன்னார். குமுதம் இதழில், அரசு பதில்கள் திடீர் என்று ஒரு வாரம் நிறுத்துவார்கள், ஏன் வெளியிடவில்லை என்று எத்தனை கடிதங்கள் வருகின்றன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதைக் கண்டறிவார்கள் என்று அவர் சொன்னார்.
உள்ளபடியே அரசு பதில்கள் பகுதிக்கு ஏராளமான வாசகர்கள் உண்டு. ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை, உதவி ஆசிரியர்கள் ரா கி ரங்கராஜன், ஜ ரா சுந்தரேசன் இவர்கள் மூவரது முதலெழுத்துக்கள் சேர்த்தே அரசு பதில்கள் என உருவாக்கப்பட்டது, இவர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு பதில்கள் எழுதி வந்தனர் என்று சொல்லப் படுவதுண்டு. தீவிரமான கேள்வி பதிலும், இன்னொரு பக்கம் சாதாரணமான கேள்வியும் மிகுந்த சுவாரசியமான பதிலுமாக வாசித்தவற்றில் சில நினைவில் இருக்கிறது. இதற்கு இடையே, குமுதம் இதழில் வெவ்வேறு கவிஞர்கள் எழுதியிருந்த புதுக் கவிதைகள் சிலவற்றைத் தேர்வு செய்து சுஜாதா அறிமுகப்படுத்தி இருந்தது முக்கியமானது. கவிதைகள் சுவாரசியமாக வந்திருந்தன. எல்லா வரிகளும் நினைவில்லை என்றாலும், சில பொறிகள் இன்னும் நினைவு அடுக்குகளில்!
‘பிறந்த நாள் இல்லை, விழா இல்லை, சுவரொட்டி இல்லை, சால்வை போர்த்துகிறான் சலூன்காரன் மாதம் ஒரு முறை’ என்பது போல் ஒன்று வரும். இன்னொன்றில், புலவரிடம் சிக்கிக் கொண்ட கவிதையின் கதியை, “க் ஒன்றைக் கழற்றிப் போட்டார், ச் எங்கே என்று கேட்டார்…., கடைசியில் திருப்பிப் பார்த்தேன் கவிதையைக் காணோம் அங்கே” என்று முடியும். அதற்கு அடுத்த வாரம், வாசகர் பகுதியில் சிலரிடமிருந்து எதிர்ப்புக் கடிதங்கள் வந்திருந்தன. ஒருவர்: “புதுக்கவிதைகளை அவர்கள் பாணியிலேயே சொல்வதானால், யாப்பறியா அரைகுறைகள் எண்ணக் குமட்டலில் எடுத்த வாந்தி” என்று சபித்திருந்தார்.
சுஜாதாவும் அடுத்த வாரம் எழுதி இருந்தார், ‘அச்சு எந்திரம் ககனத்தைக் கனமாக்கி, கடைசி கவிஞர் பெயரையும் தின்று விட்டிருந்தது’ என்று!
புதுக்கவிதை பக்கம் நாட்டம் திரும்பி விட்டிருந்தது அப்போது ! கணையாழி இதழ் மீதும், குறிப்பாக அதில் இடம் பெற்றிருந்த கவிதைகள் மற்றும் சுவையாக எழுதப்பட்டு வந்த கடைசி பக்கங்களுக்காக!
ஆனால், என்னை முற்றிலும் புரட்டிப் போட்ட கதை ஒன்று, கணையாழியில்தான் பின்னர் வர இருந்தது.
(தொடரும் ரசனை….) l