உலக புத்தக தினத்தில் புத்தெழுச்சி கொள்வோம்
‘புத்தகம் பேசுது’ இதழ் மீண்டும் அச்சில் வெளிவருவது வாசிப்பு உலகத்தின் வாழ்த்துக்களோடும் பல தோழமை உள்ளங்களின் நம்பிக்கை வார்த்தைகளாலும் புத்தெழுச்சி தரும் நிகழ்வாகி உள்ளது. புதிய நூல்களை தமிழ் படைப்புலகின் தரமான பதிவுகளை வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் நமது பணி எவ்வகையிலும் தடையின்றி தொடர்கிறது, தொடரும். தமிழில் வாசிப்பின் எல்லைகளை மேலும் விரிவாக்கிட பள்ளிதோறும், கல்லூரிதோறும் நமது ‘புத்தகம் பேசுது’ இதழ் சென்றடைய வேண்டிய தேவை உள்ளது. பொதுவாக புத்தக வாசிப்பின் உலகளாவிய நடப்புகள், சிறப்பு கவனம் பெறும் படைப்புகள் தமிழ் சூழலில் அறிமுகம் ஆவது, இந்த கணினி – இணைய யுகத்திலும் சவாலான ஒன்றாகவே உள்ளது. தமிழ் சூழலில் உலக புத்தக தினத்தை வாசகர் எழுத்தாளர் சந்திப்பாக்கி சர்வதேச கவனம் பெற வைத்த முதல் அடியை புத்தகம் பேசுது எடுத்து வைத்தது. புத்தக பரஸ்பர பகிர்வு, புத்தக மாரத்தான் என பல நிகழ்வுகளை – புத்தகத் திருவிழாவுடன் சேர்த்து நடத்தி ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழ் வாசிப்பு உலகிற்கு புத்தெழுச்சி ஊட்டி வருகிறோம். உலக புத்தக தினம் என்பது ஆங்கில இலக்கிய சிற்பி ஷேக்ஸ்பியர் பிறந்த ஏப்ரல் 23 அன்று ஆண்டுதோறும் எழுத்து – உரிமை (உரிமம்) தினமாகவும். வாசிப்பு மற்றும் பதிப்புத்துறை தினமாகவும் 1995 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பு அறிமுகம் செய்த இந்த சர்வதேச தினத்தை 100க்கும் மேற்பட்ட நாடுகள் வாசிப்பை மக்களிடையே பரவலாக்க பயன்படுத்துகின்றன. ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளில் உலக புத்தக தினத்தில் பொது விடுமுறை விடப்படுகிறது. இங்கிலாந்திலும் அயர்லாந்திலும்
நூலக எழுச்சி தினமாகவும், அமெரிக்காவில் (குறிப்பாக மேரிலாந்து, ஃபுளோரிடா மாகாணங்கள்) வீதித் திருவிழா என்று பிரதான வீதிகளின் இருபுறம் புத்தக கடைகளை பரப்பி மலிவு விலை, சலுகை விற்பனை, கதையாடல், புத்தக அறிமுகம் என பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கனடா முதல் கியூபா வரை பல நாடுகளில் உலக புத்தக தினத்தில்தான் தேசிய புத்தக விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. துனிசியா எனும் குட்டி தேசத்தில் கூட வீதி – வாசிப்பு என்று மாணவர்கள் தொடர் வாசிப்பு நடத்துகிறார்கள். பெர்லினில் வாக் ஆஃப் ஐடியாஸ் என்று ஒரு புத்தக அடுக்கு சிலை உள்ளது. அதன் கீழே பல்லாயிரம் பேர் கூட வாசிப்பு நிகழ்வு நடத்துகிறார்கள். போலந்தில் ஐந்து நிமிட வாசிப்பு என்று ஒரு நிகழ்வு இந்தநாளில் அரங்கேறுகிறது. புத்தகத்திலிருந்து புத்தக பராமரிப்பு பொருட்கள், வாசிக்கும் வானொலி, 100 புத்தகம் அடங்கிய மெமரிகார்டு விற்பனை என்று பின்லாந்தில் ஹெல்சிங்கி சந்தை இந்த நாளில் கூடுகிறது. மெக்சிகோவில் உரக்க வாசிக்கும் தினமாக – சுதந்திர வாசிப்பு என்று அறிமுகம் செய்திருக்கிறார்கள். ‘முதன் முதல்’ என்று சிறந்த உலக நூல்களின் ‘முதல் – பதிப்பை’ மீட்டெடுத்து வெளியிடும் நாளாக ரஷ்யாவில் மக்கள் – வாசிப்பு தினமாக உலக புத்தக தினம் ஏப்ரலின் சிறப்பு என ஏற்றம் பெறுகிறது. உலக புத்தக தினத்தில் பேரெழுச்சி கொள்வோம். தமிழ் நூல் வாசிப்பு வீதி தோறும் வீடுதோறும் எடுத்துச் செல்வோம். – ஆசிரியர் குழு