வீட்டில் இருந்து காட்டிற்கு – சிதம்பரம் இரவிச்சந்திரன்
கேரகல் (Caracal). யானை, புலி, சிங்கம் போல இந்த விலங்கும் ஒருகாலத்தில் இந்தியாவில் மன்னராட்சி காலத்தில் புகழுடன் வாழ்ந்தது. ஆனால், இன்று கேரகல் என்ற காட்டுப் பூனை வகையைச் சேர்ந்த இந்த விலங்கினம் அதன் வாழிடத்தை இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மன்னராட்சி காலத்தில் இந்த உயிரினம் அரசர்களுக்கு ப்ரியமான ஒரு விலங்காக இருந்தது. அவர்களுடன் காட்டிற்குச் சென்று வேட்டையாடியது. அன்றைய அரசர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்த வேட்டையாடுதலின்போது அதற்கு உறுதுணையாக கேரகல் பறக்கும் பறவைகளைத் தாவிப் பிடித்து வேட்டையாடி அவர்களுக்கு உதவியது. எப்போதும் சுருசுறுப்புடன் செயல்படும் இதனை மன்னர்கள் வேட்டையாடச் செல்லும்போது தங்களுடன் அழைத்துச்சென்றனர். ஆனால், இன்று இதன் நிலை பரிதாபத்திற்கு உரியதாக மாறியுள்ளது. நடுத்தர அளவுள்ள இந்தப் பூனை இப்போது இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. 2021 ஜனவரியில் இந்திய வனவிலங்குகள் வாரியம் (National Board for Wildlife) மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சரகம் இந்த விலங்கை இன அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளின் பட்டியலில் (critically endangered species list) உட்படுத்தியுள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற ஆபத்தை காரகல் இப்போது சந்திக்கவில்லை என்றாலும், இந்தியாவில் இந்த விலங்கு அழியும்நிலையில் உள்ளது. இதைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேர்கொள்ளப்பட்டால் மட்டுமே இதனை முற்றிலுமாக அழிவதிலிருந்து காக்கமுடியும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இன அழிவை எதிர்கொண்டுள்ள விலங்குகளின் பட்டியலில் ஏற்கனவே 22 உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன.
கேரகல் என்ற காட்டுப்பூனை
இந்தியா தவிர இந்த உயிரினம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, மத்திய மற்றும் தெற்காசியாவில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால், ஆசியாவில் இவற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவருகிறது என்று வன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீண்ட கால்கள், சிறிய முகம், நீண்ட பற்கள், நீண்ட, தனிச்சிறப்பான வடிவமைப்புடன் கூடிய கூர்மையான காதுகளுடன் கேரகல் தோற்றமளிக்கிறது. காதுகளின் நுனியில் அடர்ந்த கரடுமுரடான உரோமங்கள் காணப்படுவது இந்த உயிரினத்தின் சிறப்பு அடையாளம். இதன் காதுகளின் சிறப்பான வடிவமைப்பே இந்த உயிரினத்திற்கு இந்தப் பெயர் ஏற்படக் காரணம். துருக்கி மொழியில் “கேரகுலக்” (Karakulak) “கறுப்புக்காதுகள்” (black ears) என்று பொருள்படும் சொல்லில் இருந்து இதற்கு பெயர் ஏற்பட்டது. இந்தியாவில் இந்தப் பூனையின் பெயர் சியா காஷ் (Siya gosh) என்ற பெர்சிய மொழிச்சொல்லில் இருந்து ஏற்பட்டது. சியா கோஷ் என்ற சொல்லின் பொருள் “கறுப்புக் காதுகள்” என்பதே. வடமொழி கட்டுக்கதை ஒன்றில் “நீண்ட காதுள்ள” என்று பொருட்படும் டீர்ககான்“ (Deergha-karn) என்ற பெயருடன் ஒரு சிறிய காட்டுப்பூனை பற்றிக் கூறப்பட்டுள்ளது.
வாழ்ந்த வரலாறு
கேரகல் வாழ்ந்ததற்கான சான்றுகள் சிந்து சமவெளி நாகரீக காலத்தில் இருந்து கிடைத்துள்ளன. கி.மு 3000 முதல் கி.மு 2000 காலத்தில் இந்தப் பூனை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன என்று “இந்தியாவில் கேரகல்லின் தோற்றம்” (Occurrence of Caracal in India) என்ற ஆய்வுக்கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் தர்மேந்திரா காண்டல் (Daarmendra Khandal), இஷன் டிஹார் (Ishan Dhar), கொடில்லா விஸ்வநாத ரெட்டி (Goddilla Viswanatha Reddy) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விலங்கு பற்றி ஒரு சில ஆய்வுக்கட்டுரைகளே வெளிவந்துள்ளன. அவற்றில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கேரகல் குறித்த இந்த ஆய்வுக்கட்டுரை டிசம்பர் 14, 2020ல் “அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள உயிரினங்கள்” (Journal of threatened taxa) என்ற இதழில் வெளியாகியது. நீண்ட காதுகள் இதன் தனி அடையாளமாக இருந்தது. இதற்கு காட்டில் பறக்கும் பறவைகளை குறி பார்த்து வேட்டையாடும் திறன் அபாரமாக இருந்தது. இதனால், இதனை வேட்டைக்குச் செல்லும் அரசர்கள் அனைவரும் விரும்பினர்.
மொகலாயர் காலத்தில் கிடைத்த மரியாதை
இடைக்கால இந்திய வரலாற்றில், மொகலாயர் ஆட்சிகாலட்தில் இந்த காட்டுப்பூனை சீரும் சிறப்புமாக வாழ்ந்துவந்தது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களில் கேரகல்லின் பெயர் இடம்பெறும் அளவிற்கு இதற்கு சிறப்புஇடம் வழங்கப்பட்டிருந்தது. பிரௌஷ் ஷா துக்ளக் (1351-1388) (firruz shah Tughlaq) காலத்தில் அரண்மனையில் தொழுவங்கள் அமைக்கப்பட்டு, இந்தப் பூனைகள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டன. இது குறித்து சியா கோஷ்டார் கானா (Siyah Goshdar Khana) என்பவர் குறிப்பிட்டுள்ளார். அக்பர்நாமா (Akbarnama) என்ற நூலில் அக்பரின் ஆட்சிகாலத்தில் (1556-1605) இந்தப் பூனைக்கு சிறப்பிடம் அளிக்கப்பட்டது என்று அபுல் பாக்கல் (Abul Facl) கூரியுள்ளார். இதன் உடலமைப்பு, இதன் தோற்றத்தை விவரிக்கும் படங்கள் போன்றவை இடைக்கால இந்தியாவில் எழுதப்பட்ட மற்ற ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளன. அன்வர் ஐ ஸ்க்யூஹைலி (Anvar-I-Sqhayli), டிட்டு னாமா (Titunama), காம்ஸ் ஈ நிஸாமி (Khamsa-E-Nizami), ஷானிமே (Shahnameh) போன்றவை இத்தகைய வரலாற்று ஆவணங்களில் ஒரு சில.
இடப்பெயர்வு
காலப்போக்கில் இந்த உயிரினங்கள் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் இருந்து வடக்கில் லடாக் முதல் கிழக்கில் வங்காளம் வரை இடம்பெயரச்செய்யப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் 1757ல் பிளாசி போரில் (battle of Plassey) சிராஜ் தௌலத்தைத் (Siraj-Ud-Daullah) தோற்கடித்தபோது, அவருக்கு கேரகல் காட்டுப்பூனை ஒன்று பரிசளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
காணாமல் போகத் தொடங்கிய கேரகல்
இயற்கையில் கேரகல் பிடிப்பதற்கு கடினமான ஒரு விலங்கு. இரவில் நடமாடும் இயல்புடையது. காட்சிக்குப் புலப்படுவது அபூர்வம். இந்தக் காட்டுப்பூனையைப் பற்றி ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. இவற்றின் சரியான கணக்கெடுப்பு இதற்கு முன்பும், இப்போதும் நடைபெறவில்லை. சமீபகாலத்திலும் இது பற்றிய ஆவணப்படுத்தல்கள் நடைபெறவில்லை. அதனால் இதன் சரியான எண்ணிக்கை குறித்த நம்பகத்தன்மையுள்ல விவரங்கள் எவையும் இல்லை. இந்த உயிரினம் காட்சிக்குப் புலப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது என்பதால் நிபுனர்கள் கேரகல் அழிந்து போயிருக்குமோ என்ரு அஞ்சுகின்றனர். சில புள்ளிவிவரங்கள் இந்தியாவில் இவை ஐம்பதிற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கக்கூடும் என்ரு கூறுகின்றன. இதன் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினம் என்று வேறு சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
வரலாற்றுகாலம் முதல் முக்கிய உயிர்ப்பன்மயத்தன்மை உள்ள 26 இடங்களில் ஒன்பதில் இவை வாழ்ந்துவந்துள்ளன. அந்த காலகட்டத்தில், இவை 13 இந்திய மாநிலங்களில் காணப்பட்டன. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இவை 7.9 இலட்சம் ச.கி.மீ பரப்பளவில் அமைந்த நிலப்பகுதியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. விடுதலைக்குப் பிறகு 1947 முதல் கி.பி 2000 வரை உள்ள காலத்தில் இந்தப் பரப்பளவு பாதியாகக் குறைந்தது. 2001க்குப் பிறகு, இந்தக் காட்டுப்பூனை இந்தியாவின் மூன்று மாநிலங்களில் மட்டுமே காணப்பட்டது என்று பதிவுகள் கூறுகின்றன. 2001 முதல் 2020 வரை உள்ள காலகட்டத்தில் இவற்றின் வாழிடம் மேலும் சுருங்கியது. வாழிடப்பரப்பு 95.95% குறைந்தது. இன்றையநிலையில் கேரகல் வெறும் 16,709 ச.கி.மீ பரப்பில் மட்டுமே வாழ்கிறது. ஐந்து சதவிகிதத்திற்கும் குறைந்த நிலப்பரப்பிலேயே இன்று இவை தங்கள் வாழ்வை நடத்திவருகின்றன. 1948 முதல் 2000 வரை உள்ள காலத்தில் இவை வாழ்ந்த பரப்பை இப்போது இவை வாழும் நிலப்பரப்புடன் ஒப்பிடும்போது இந்த உயிரினங்கள் தங்களின் வாழிடத்தை பெருமளவில் இழந்துள்ளன என்று காண்டல் எட் அல் (Khandal Et Al) என்ற ஆய்வாளர் கூறுகிறார். இந்த விலங்குகள் முழு அளவு அல்லது பகுதியளவு நீரற்ற வறண்ட வனங்களில் (arid/semi arid forests) வாழ்ந்துவந்தன. இப்பகுதிகள் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கட் ஆகிய மாநிலங்களில் அமைந்திருந்தது. ஆனால், இன்று இவற்றின் வாழிடம் ராஜஸ்தான், கஜ் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. சமீபகாலத்தில் கேரகல் அரிதாகவே வேட்டையாடப்பட்டுள்ளது அல்லது கொல்லப்பட்டுள்ளது. இந்தப் பூனைகள் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு சிலருக்கு வளர்ப்பு பிராணிகளாக விற்கப்பட்டுள்ளதாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்றாலும், இந்த உயிரினங்களின் இன அழிவிற்கு முக்கியக்காரணம் இவற்றின் வாழிட இழப்பே என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த விலங்குகளின் இயற்கையான வாழிடம் நகர மயமாக்குதல், பாழ்நிலங்கள் என்று கருதி வறண்ட நிலங்கள் அழிக்கப்பட்டு வளர்ச்சி என்ற பெயரில் திட்டங்கள் மேர்கொள்ளப்படுவதே. பாழ்நிலங்கள் என்று கருதப்படும் நீரற்ற நிலங்களைக் காப்பாற்றுவதற்குரிய கொள்கைகள் சரிவர வகுக்கப்படவில்லை என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இத்தகைய நிலங்களைப் பாதுகாப்பதற்குப் பதில் கொள்கை வகுப்பவர்கள் இவற்றை மாற்றுமுறையில் பயன்படுத்துவதாக நினைத்து அழிக்கின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் இந்த நிலங்கள் சாலைகள் போட அழிக்கப்படுவதால், கேரகல்லின் வாழிடங்கள் துண்டாடப்பட்டுவிட்டன. தீவுகளாக்கப்பட்ட வாழிடங்களில் இவற்றின் சுதந்திரமான நடமாட்டம் தடுக்கப்பட்டது. இது இவற்றின் உணவின் அளவையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. இவற்றின் முக்கிய உணவு குளம்புக்காலிகள் (angulates), கொறிக்கும் விலங்குகள் (rodants). அழியும் விலங்குகளின் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டுள்ளதால், இவை இழந்த வாழிடத்தை இவற்றிற்கு மீட்டுத் தரும் பணிகளுக்கு இனியேனும் நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்க முன்வருவர் என்று நம்பப்படுகிறது.
கேரகல்களின் வாழிடப்பரப்பு (home range), எண்ணிக்கை, இரை போன்றவை குறித்த ஆய்வுகள் இனி வருங்காலத்திலேனும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை குறித்த ஆய்வுகள் இதுநாள் வரை புறக்கணிக்கப்பட்டுவந்தன. இனியேனும் பாழ்நிலங்கள் என்று தவறாகக் கருதப்பட்டு வரும் வறண்ட நிலங்கள் (waste lands)மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். கேரகல் மட்டும் இல்லாமல் இந்த நிலப்பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு விலங்குகள், பறவைகள் வாழ்கின்றன. சிறுத்தைகள், ஆசிய சிங்கங்கள், துரும்புப்பூனைகள் (rust spotted cats), சோம்பல் கரடிகள் (sloth bears), ஓநாய்கள், காட்டு நாய்கள் (wild dogs), புனுகுப்பூனைகள் (civets) போன்றவை அவற்றில் சில.
ஒருகாலத்தில் அரசர்களுக்கு பிரியமான விலங்காக இருந்த இந்தக் காட்டுப்பூனைகள் இன்று இன அழிவை எதிர்நோக்கியுள்ளது எந்த அளவு நாம் சூழலைச் சூறையாடுகிறோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதிகம் அறியப்படாத இந்த ஒரு காட்டுப்பூனை இனம் அழிந்தால் அதனால் நமக்கென்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால், இந்தப் புவிப்பந்தில் வாழும் மனிதன் உட்பட சகல உயிரினங்களும் ஒரு உயிர்ச்சங்கிலி கொண்டு இயற்கை அன்னையால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் என்பது சூழலைப் பொறுத்தவரை இன்று கண்ணெதிரே கண்டு, உணர்ந்து, அனுபவித்துவருகிறோம். எல்லா உயிரினங்களையும் சகோதர உயிரினங்களாக மதித்து வாழக் கற்றுக்கொள்வோம்.
வீட்டில் இருந்து காட்டிற்கு
மனிதர்களின் பராமரிப்பில் வாழ்ந்த உயிரினங்களுக்கு பிறகு காட்டின் இயல்பான சூழலில் சென்று வாழ்வது என்பது கடினமான செயலாக கருதப்படுகிறது. வரலாற்றுகாலம் முதல் மனிதர்களுடன் வாழ்ந்துவரும் நாய்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருகாலத்தில் காட்டில் வேட்டையாடி சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் என்ற சிறிய எண்ணம் கூட இத்தகைய உயிரினங்களில் காணப்படுவதில்லை. என்றாலும், நாய்கள் போல மனிதர்களுடன் ஒன்றுசேர்ந்து இயல்பாக வாழமுடியாத உயிரினங்களும் உலகில் உண்டு. பலர் முயற்சி செய்தும் மனிதர்களுடன் இணங்கி வாழமுடியாத சிறுத்தைகள் இவற்றில் ஒன்று. இவை நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக வேகமாக ஓடக்கூடியவை. இதனால் இவற்றின் இயல்பான வாழ்க்கைமுறை காடுகளில் வாழ்வது என்பதே. என்றாலும், அபூர்வமாக ஒரு சில இடங்களில் இந்த உயிரினங்கள் மனிதர்களுடன் இணைந்து வாழ்கின்றன. இவ்வாறு மனிதர்களுடன் பிறந்தது முதல் வாழ்ந்த இரண்டு சிறுத்தை சகோதரர்களை மீண்டும் அவைகளின் இயல்பான வாழிடத்திற்கு வெற்றிகரமாக அனுப்பிவைத்த உலகின் முதல் வரலாற்றுச் சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்பினால் அறக்கட்டளை (Aspinall Foundation) என்ற அமைப்பு இதற்காகப் பாடுபட்டு வெற்றி பெற்றுள்ளது.
சாபாவும், நெய்ரோவும்
இங்கிலாந்தில் தனியாருக்குச் சொந்தமான ஒரு காப்பகத்தில் சாபா, நெய்ரோ என்ற பெயர்களுள்ள இந்த இரட்டைச் சிறுத்தை சகோதரர்கள் 2017 ஜூலை 15 அன்று பிறந்தனர். இவற்றில் சாபாவிற்கு மரபணுப் பிரச்சனைகளால் உடல் நலம் குன்றியது. அதனால், இந்த சிறுத்தைக் குட்டிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியதாயிற்று. சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சாபாவை ஆஸ்பினால் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஓராண்டிற்கும் மேல் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்தனர். 2018 டிசம்பரில் இரண்டு சகோதரர்களும் பிறந்ததற்குப் பின் முதல்முறையாக சந்தித்து ஒன்றுசேர்ந்து வாழத் தொடங்கினர். விரைவிலேயே இருவருக்கும் இடையில் அன்பும், பாசமும், ஆழமான புரிந்துணர்வும் உருவானது.
சிறுத்தைகளின் மரபணு வேறுபாடுகள்
இந்த வகை விலங்குகளிடையில் பொதுவாகக் காணப்படும் மரபணுரீதியிலான வேறுபாடுகள் ஆய்வாளர்களுக்கு என்றும் கவலை தரும் ஒரு அம்சமாக இருந்துவருகிறது. இந்தப் பிரச்சனைக்கு சாபா, நெய்ரோ சகோதரர்களின் காட்டு வாழ்க்கைஓரளவிற்கேனும் பரிகாரமாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.ஆஸ்பினால் அறக்கட்டளை மீண்டும் சாபா நெய்ரோ சகோதரர்களை காட்டில் விட தீர்மானித்தனர். ஒராண்டிற்கும் மேலாக ஆர்வலர்கள் இதற்காக பாடுபட்டனர். பிறந்தது முதல் மனிதர்களுக்கு இடையில் வாழ்ந்து பழக்கப்பட்ட இந்த சிறுத்தை சகோதரர்களால் அவ்வளவு எளிதில் காட்டிற்குச் சென்று வாழமுடியாது. தாக்க வரும் மற்ற உயிரினங்களை போராடி சமாளிப்பதற்கான திறன், இரை பிடிப்பதற்கு உரிய ஆற்றல் அவசியம்.
வீட்டில் இருந்து காட்டிற்கு
2020 பிப்ரவரி 5 அன்று இலண்டன் நகரம் இருவருக்கும் விடைகொடுத்தனுப்பியது. உடனே தென்னாப்பிரிக்காவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு பூங்காவில் இவர்களின் புது வாழ்க்கைத் தொடங்கியது. அங்கு இவர்கள் இருவரும் சுதந்திரமாக நடமாடத் ஆரம்பித்தனர். முதலில் இவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வந்தது. மெல்ல காட்டின் இயல்பான சூழலைப் புரிந்துகொண்டு வாழத் தொடங்கிய இந்த சகோதரர்கள் 2020 ஆகஸ்ட் மாதம் தங்கள் முதல் வேட்டையை வெற்றிகரமாக நடத்தினர். இதன் மூலம் தங்களால் காட்டில் வெற்றிகரமாக வாழமுடியும் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்களிடம் இந்த சிறுத்தைக்குட்டிகள் ஏற்படுத்தினர். இதன் பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து ஆய்வாளர்களின் கண்காணிப்பில் இருந்தனர். இவர்களுக்கு உணவு கொடுக்கும் இடைவேளையை ஆய்வாளர்கள் நீட்டித்தனர். இதனால், இருவருக்கும் வேட்டையாடி பசி போக்கிக்கொள்ளும் வேகம் அதிகரித்தது. கடைசியில் பெரிய மான் ஒன்றை இருவரும் வேட்டையாடி உண்டனர். இருவர் மீதும் ஆய்வாளர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் தனியார் காப்பகத்தில் இருந்து உண்மையான காட்டிற்கு கொண்டுபோய் விட்டனர். பொறுமையுடன் பணிவிடை செய்து பரிவுடன் பராமரித்தால் எந்த ஒரு உயிரினத்தையும் அதன் இயல்பான வாழிடத்தில் வாழவைக்கமுடியும் என்பதை சாபா, நெய்ரோ என்ற இந்த சிறுத்தைச் சகோதரர்களின் கதை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆஸ்பினால் அறக்கட்டளை தவிர மற்ற அமைப்புகளும் இது போலுள்ள செயல்களில் இன்று தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. காட்டில் வன விலங்குகளின் பல்லுயிர்த்தன்மைக்கும், மரபணு பிரச்சனைகளுக்கும் இந்த இரட்டை சகோதரர்களின் வெற்றிக்கதை மூலம் தீர்வு காணமுடியும் என்ற புதிய நம்பிக்கை இப்போது விஞ்ஞானிகளிடையில் ஏற்பட்டுள்ளது. l