கடலோடிகளின் கண்ணீர்க் கறைகள் – ஸ்ரீதர் மணியன்
கடலையும், கடற்கரையையும் விட்டுவிட்டு இடம் பெயர்ந்து விடுங்கள். கடலிலே நீலப்புரட்சி, கரையிலே பிற தொழில் வளர்ச்சி. இப்படியாக கடலையும், கடற்கரையையும், மீனவர்களுக்கு அந்நியப்படுத்துதலே இன்றைய நிலைமை. போக்கிடமற்றுப் போன கடற்கரை மக்களின் இன்றைய எதார்த்தங்களை மானுட அக்கறை கொண்டோர் அறியத்தரும் எளிமையான முயற்சி இது. அவர்களை அரசியலை நோக்கிய நகர்த்துதலாகவும் இதனைக் காணமுடியும். (முகவுரையில் நூலாசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்)…
கடலோடிகளின் வாழ்வு முறை, கலாச்சாரங்கள் தனித்துவமிக்கவை. அவர்களுக்கான நடைமுறைகள் நம் போன்றோரின் பழக்க வழக்கங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. அவை குறித்து பெரிதான புரிதல்கள் நம்மிடையே குறைவென்றுதான் கூற வேண்டும். நிலத்தில் வாழ்வோர் அது குறித்து அறிந்து கொள்ள விழைவதுமில்லை. மீன் என்ற சுவைமிக்க பண்டத்தை அளிப்பவர்கள் அவர்கள் என்ற மிக எளியதொரு புள்ளியிலேயே அவர்கள் அறியப்படுகிறார்கள். இத்தகைய தட்டையானதொரு ஒற்றைப் பார்வை அம்மக்கள் குறித்தறிந்து கொள்ள போதுமானதன்று என்ற கருதுகோளின் அடிப்படையில் வறீதையா கான்ஸ்தந்தின் ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை‘ என்ற நூலினை வாசகர்களுக்கு அளித்துள்ளார்.
மனிதன் வேளாண்மையைத் தொடங்கிய புள்ளியே இயற்கை வளங்களை அழிக்கத் துவங்கிய காலமாகிறது. அடுத்து தனது வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எண்ணுவது இரண்டாம் கட்டமாகிறது. ஆடம்பரமாக வாழவேண்டும் என்னும் பேராசை இயற்கைக்கு இறுதிக்கட்டமாக அமைகிறது. இத்தகைய ஆடம்பரமும், பேராசையும் கூட்டுக் கொள்ளைக்கு வழி கோலுகிறது. எதனையும் தனது எண்ணத்திற்கேற்ப வளைத்துக் கொள்ளத் தூண்டுவதுடன், அதனை சாதித்துக் கொள்ள எத்தகைய எல்லைக்கும் செல்ல வைக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக The Gods must be crazy என்னும் ஓர் ஆப்ரிக்க மொழி திரைப்படத்தினைக் கொள்ளலாம். கலஹாரி பாலைவனத்தினுள் மனித நாகரீகத்தின் வாசனையற்ற ஓர் கூட்டம் தன்னியல்பாக வாழ்ந்து வருகிறது. குட்டி ஆகாயஊர்தி ஒன்றிலிருந்து விமானத்தினை ஓட்டுபவர் காலியான குளிர்பான போத்தல் ஒன்றினை வெளியே வீசிச் செல்லுவார். அதனைக் கடவுள் தந்த பரிசாக எண்ணி எடுத்துச் செல்லும் காட்டுவாசி தன் பிள்ளைகளிடம் தருகிறான். அக்கணத்திலிருந்து அக்குழுவிலுள்ள ஒவ்வொவருக்கும் அது தேவைப்படும் சாதனமாகிறது. ஒரு கட்டத்தில் அன்றாட வாழ்க்கைக்கு அந்தக் காலி போத்தல் இன்றியமையாததாக மாறி பல பூசல்களுக்கு வழி கோலுவதுடன் குழு பிளவுறும் நிலைமையை உண்டாக்கிவிடுகிறது.
இறுதியில் அக்குழுவின் தலைவனான அம்மனிதன் இத்தகைய நிலைக்கு அந்த போத்தலே காரணமென்று அதனை நீண்ட தொலைவு எடுத்துச் சென்று கடவுளிடமே தருவதாகக் கருதி கடலுக்குள் தூக்கி எறிந்துவிட்டு மீளுவதாக அத்திரைப்படம் நிறைவுறும். இது மனிதனின் சுயநலம், வசதியாக வாழ்வினை நகர்த்திச் செல்ல விழையும் மனப்போக்கினை, உளவியலின் அடிப்படையில் மிக்க பகடியுடன் சித்தரிக்கும் படம்.
‘பழவேற்காடு முதல் நீரோடி வரை என்ற இந்த நூலினை வறீதையா இரண்டு பகுதிகளாக எழுதியுள்ளார். முற்பகுதி கடலோர மீனவர்களின் வாழ்வு, அவர்களது தொழில் முறை குறித்து விரிவாகக் கூறுகிறது. மீனவர்களின் சாதி, மதப்பிரிவுகள், அவர்களது தொழில் முறை வகைப்பாடுகள் குறித்த தரவுகள் விளக்கமாக உள்ளன. பல்லவர் காலந்தொடங்கி மேய்ச்சலினைத் தொழிலாகக் கொண்டோர், பருத்தி விளைவித்த பிரிவினர் முதற்கொண்டு எவ்வாறு படிப்படியாக தங்கள் நிலத்தினை, தொழிலினை இழந்து விரட்டப்பட்டனர் என்பதனையும் வறீதையா கூறுகிறார். கச்சத்தீவு பிரச்சினையினை ஒவ்வொரு அரசும், ஒவ்வொரு தலைவர்களும் எத்தகைய கோணத்தில் பார்த்தனர், அது எதற்காக தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்றும் இந்நூல் பேசுகிறது. 1956ஆம் ஆண்டு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை பன்முகப் பரிமாணங்களோடு அணுகாது கேரளாவிற்கு அளித்ததன் விளைவாக முல்லைப் பெரியாறு விவகாரம் இன்று வரை தீராத பிரச்சினையாக உருவெடுத்து நிற்பதனையும் நூலாசிரியர் விவரிக்கிறார். அது போன்று கச்சத்தீவு, கடல் எல்லைப் பிரச்சினைகளை மீனவர்கள் பங்கேற்புடன் அணுகுவதே பலனைத் தரும் என்றும் கூறுகிறார்.
கடல் எல்லைப் பிரச்சினைகளுக்கு ‘எல்லையை ஒழித்தல்‘ என்பதும் தீர்வினைத் தரும் என்றும் வறீதையா கூறுகிறார். அதிகாரிகளுக்கும், அரசுக்கும் மீனவர்கள் குறித்து விரிவான புரிதல் குறைவு, ஊடகங்களுக்கும் அப்பிரச்சினை குறித்தான தார்மீக அக்கறையோ, புரிதலோ இல்லையெனவும் நூல் கூறுகிறது. தங்களது நியாயமான, தார்மீக, அடிப்படை உரிமைகளுக்காக, வாழ்வாதாரத்தினை பற்றிக் கொள்ளப் போராடும் எளிய மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி அவர்களை தேச விரோதிகள் என சித்தரிக்கும் வேலையினை ஊடகங்கள் செய்கின்றன என வேதனையுடன் வறீதையா விவரிக்கிறார், எடுத்துக்காட்டாக, குஜராத் எல்லையினைக் கடந்து மீன்பிடிக்கும்போது கைதாகும் மீனவர்களைக் குறித்த செய்தியினை ஊடகங்கள் ‘இந்திய மீனவர் கைது என செய்தி வெளியிடுகின்றன. ஆயினும், இலங்கை கடற்படையினரால் அதே மக்கள் கைதானால், ‘தமிழக மீனவர்கள் கைது என செய்தி வெளியிடும் பாரபட்சத்தினையும் நூலாசிரியர் பதிவாக்கியுள்ளார்.
மீனவர்கள் தங்களைத் தொழில் வர்க்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளாது பிளவுபட்டு நிற்கும் எதார்த்தத்தினையும் கான்ஸ்தந்தின் பேசுகிறார். அவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கான அரசியல் தளம் உறுதிப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறுகிறார். அதே தருணத்தில் திடீரென முளைக்கும் தலைவர்கள், பிரச்சினைகளை குழு மற்றும் சாதி பிரச்சினைகளாக மாற்றிவிடுவதும், மதத்தலைவர்கள் தங்கள் பங்கிற்கு மதச்சாயமளித்து அதனை திசை மாற்றுவதனையும் வேதனையுடன் கூறுகிறார். எடுத்துச்செல்வது ஏதுமில்லையென்றாலும் பெரு முதலைகளும், முதலாளிகளும், பன்னாட்டு கொள்ளை நிறுவனங்களும் நிகழ்த்தும் மணல்தாதுப் பெருங்கொள்ளைகள் குறித்தும் இந்நூல் வேதனையுடன் பேசுகிறது. தமிழினக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் குறித்த பதிவும் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. 1076 கி.மீ நீளமும், 600 கடலோர கிராமங்களும், ஏறக்குறைய ஒன்பது இலட்சம் மீனவர்கள், இத்தொழில் சார்ந்த பிறர் என இப்பகுதி பல தரவுகளுடன் அவர்களது எதார்த்தமான வாழ்வலத்தினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது..
இரண்டாவது பகுதி பழவேற்காடு ஏரி முதல் கீழ்ப்பகுதி அரிச்சல் முனைவரையிலான பகுதியில் வாழ்ந்த, தங்கள் வாழ்வை பன்னாட்டு நிறுவனங்கள் வருகையாலும்,, அம்மக்களின் பார்வையில் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள விரும்பாத அரசு, இயந்திரம், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினராலும் புறக்கணிப்புக்கு ஆளாகி நிற்கும் எளிய மக்களின் கையறு நிலையினை விளக்குகிறது. தேனினும் இனிய வாக்குறுதிகள் அளித்து கள்ளமற்ற, நேர்மையான எளிய அம்மக்களை தங்களது நிலத்தைவிட்டு அப்புறப்படுத்திய வேதனைகள் நிரம்பிய பகுதி. மீனவரின் மகன் மீனவனாக ஆக விரும்பாத சூழலினை, நிலையினை உண்டாக்கி, திசை திருப்பி மீன் வளத்தினை தனியாருக்கும், பெரு நிறுவனங்கள் கையிலும் தாரை வார்த்துத் தரும் தந்திரத்தினை விளக்குகிறது. பழவேற்காடு ஏரிப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறித்த வரலாறு, அவர்களது தற்கால நிலை என இப்பகுதி மக்கள் பற்றிய பகுதியாகிறது. தங்களது ஜீவாதார உரிமையினை விட்டுத்தர அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பது என்ற வாக்குறுதியினை அளித்துவிட்டு, சொற்ப எண்ணிக்கையிலானருக்கு அதை அளித்ததும், அவர்களுக்கான ஊதியத்தில் பாதியை கொள்ளையடித்துக் கொள்வதுமான அவலங்கள் பலரது நேர்காணல் வழி இதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த பிரிவாக விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட இறால் பண்ணைகள், அவற்றின் கழிவுகள் உண்டாக்கும் மாசு, சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மீனவர்கள், மீன்களின் இனப்பெருக்கம் குறைதல், சுனாமிக்குப் பிறகான கணிக்கவியலாத, தடம் மாற்றமடைந்த பருவகாலங்கள் என இப்பகுதி பலருடைய நேர்காணல்களை அடக்கியுள்ளது. பொதுவாக, அனைவருடைய வாழ்வும், கருத்துகளும் வேதனையளிப்பதாக உள்ளது உற்று நோக்கத்தக்கது. வாழ்க்கைத் தரத்தில் எவ்வித உயர்வற்று அவர்கள் சலிப்பும், விரக்தியுடனுமே உள்ளதும் கவனிக்கத்தக்கது.
தொண்டி குறித்த பகுதி மீனவர்கள் பயன்படுத்தும் வலையின் வகைகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. இப்பகுதியிலும் பலரது நேர்காணலின் வழி மீனவப் பெருமக்களின் வலி வெளிப்படுகிறது. இழுவை மடி வலையினைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மீனவர் என்னும் இனமே அழிந்துவிடும் என்கிற செய்தி அச்சத்தினை உண்டாக்குகிறது. 1970க்கு பிறகான நிலை இப்பகுதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம்ம கடலுக்கு எதிரி வெளியே இல்லை. நம்ம அரசுதான் அது என்கிற ஒரு மீனவரின் வாக்குமூலம் அதிர்ச்சியானது. நூலின் இப்பகுதியில் உள்ள ஒரு மீனவரின் கருத்து இங்கே தரப்படுகிறது. ‘மண்ணை அறிந்து பயிர் விளைக்கும் மரபார்ந்த விவசாயி போல தங்கள் வாழ்வாதாரமான கடலை நெய்தல் சமூகம் எவ்வளவு தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. கடல் வளம் ஏன் வற்றியது? அதனை மீட்டெடுக்க என்ன தீர்வு என்பதில் மீனவ வர்க்கத்தினருக்கு எந்தக் குழப்பமும் இல்லை. பாரம்பரியமான இத்தகையவர்களின் யோசனைகளை ஆட்சியாளர்கள் கணக்கிலெடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுகள் கிடைக்கும். இவையே அவ்வாக்கியங்கள். சூதுவாதற்ற இம்மக்களின் சிக்கல்களைப் பெரிதாக்கி குழப்பக்குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல் செய்வோரை நம்பி ஏமாறும் நிர்க்கதியான மக்கள் இவர்கள் என கான்ஸ்தந்தின் பதிவாக்குகிறார்.
அரிச்சல் முனை என்னும் தனுஷ்கோடி பகுதி மீனவப் பெருமக்களின் ஆதிக்குடிகள், வந்தேறிகளான ஆதிக்கசாதியினரைப் பற்றிய தரவுகளால் நிறைந்துள்ளது. மீனவர்களின் கருத்துகள் இப்பகுதியிலும் நிறைந்துள்ளன. வாசிப்போருக்கு இவை மிக்க ஆயாசத்தினை அளிப்பதாக உள்ளன. இவற்றிற்கான ஏற்புடைய தீர்வுகளுக்காக இச்சமுதாய மக்கள் ஏங்கி நிற்பது மிக்க வேதனையளிப்பதாக உள்ளது. நாட்டில் வேளாண்மைக்கு அடுத்தாற்போன்று இரண்டாவது பெரிய தொழிலின் அடிநாதமாக விளங்கிடும் மீன்பிடித் தொழிலின் பிரச்சினைகள் எவற்றையெல்லாம் பின்னிப்பிணைந்துள்ளன என்பது இப்பகுதியை வாசிப்போர்க்கு விளங்கும். மாற்றாக முத்துகுமார் என்னும் மீனவரின் கருத்தானது சற்றே ஆசுவாசத்தினை அளிப்பதாக உள்ளது. இறுதி அத்தியாயமான இரயுமன்துறை குறித்த பகுதியும் கவனிக்கத்தக்கது.
இடிந்தகரைப் படிப்பினைகள் யாருக்கு? நமது சமூகத்திற்கா, அல்லது அங்கு கிடந்து அல்லலுறும் மக்களுக்கா? ஆள்வோருக்கா? இப்பகுதி தொடக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்குதல், மக்களை ஏமாற்றிட அது கைக்கொண்ட தந்திரங்கள் என விரிகிறது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த போராட்டத்தில் பங்கு பெற்றமை குறித்தும், அச்சூழலில் அரசியல்வாதிகள், ஆள்வோரின் நிலைப்பாடு என அப்பகுதியில் விவரிக்கிறார் நூலாசிரியர். இது ஒட்டுமொத்த சமூகத்திற்கான சீர்கேடு என்றாரலும் மீனவகுடிகளை போராட்டத்தில் முன்னிறுத்தி அதனைத் திசை திருப்புவதனை முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறார் கான்ஸ்தந்தின். இடிந்தகரை போராட்டம் பற்றிய பகுதியில் வயது முதிர்ந்த பெண்களின் நிலைப்பாட்டினை பதிவு செய்த மாலதி மைத்ரியின் பதிவினை நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “தமிழ்ச் சமூகம் இழந்துவிட்ட சமூக அறம் பழங்குடி மதிப்பீடாக மீனவ சமூகத்தில் மீந்து நிற்கிறது. பருந்திடமிருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் போராடும் தாய்க்கோழியின் தர்மம் அது. நிலம் சார்ந்த நாகரீக மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்பதே அது. இவ்வாறு இன்னமும் அணுஉலையில் தினக்கூலிகளாக பணியாற்றுவோரின் அவலங்கள் பகுதி மனம் பதறச் செய்யும். சாமானியர்களை நிர்வாகமும், அரசும் மனிதர்களாகவே கருதுவதில்லை என்னும் உண்மையினை பலரது கருத்துகள் வாயிலாகக் காணலாம். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, முறையான சிகிச்சை ஏதுமின்றி மாள்வோரும், வாழ்நாள் நெடுக அவதியுறுவோருமாக அவர்கள் நிலையினை இங்கு வாசகன் காணலாம். இடிந்தகரை அணு உலைக்கெதிரான மக்களது தொடர் போராட்டம் பற்றிய பல தகவல்களையும் இப்பகுதியில் வறீதையா அளித்திருக்கிறார்.
உழைப்போர் என்னும் வர்க்கம் என்று உருவாகியதோ அக்கணம் முதல் அவர்களுக்கான இருப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆதிக்க சக்திகள், பொருள் படைத்தோர், அரசியல் பின்புலம் கொண்டோர், அதிகார வர்க்கத்தினர் என இத்தகையவர்களால் அவர்கள் ஏய்க்கப்படுவதும், வஞ்சிக்கப்பட்டு பந்தாடப்படுவதும் மாறாததாகவே உள்ளது. நாடெங்கும் நவீன கல்விக்கூடங்கள், தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி, கற்றோர் விழுக்காடு உயர்தல் என பல்வேறு வளர்ச்சிகள் யாருக்குப் பயனாகின்றன என்பதனை அறுதியிட இயலவில்லை. இம்மக்களுக்கு அவற்றின் பயன்கள் அவர்களை உய்விக்க உதவுகின்றனவா என்பதும் ஒரு வினாவாக விடையறியவியலாது தொக்கி நிற்கிறது. மக்களால், மக்களுக்காக என பேசித்திரியும் மக்களின் பிரதிநிதிகளும், அரசும் சட்டங்களைத் திருத்தம் செய்யும்போதும், புதிய சட்டங்களை இயற்றும்போதும் எளிய, சாமானிய மக்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றம் உள்ளிட்ட கூறுகளைக் கவனத்தில் இருத்தி உருவாக்குகின்றனவா என்ற வினா விசுவரூபம் கொண்டு நம்முன் நிற்பது துவர்ப்புமிக்க, எதார்த்தமான உண்மை.
1076 கி.மீ நீளமுள்ள கடற்கரை என்னும் தான் பதிந்த செய்தியின்படி நூலாசிரியர் கரை நெடுகிலும் பயணம் செய்து, பலரைச் சந்தித்து உரையாடி, தரவுகள் பெற்று அவற்றினை முறையாகத் தொகுத்து இந்நூலினை நமக்களித்திருக்கிறார். அவரது இத்தகைய முயற்சியும், உழைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கவை. மீனவப்பெருமக்களின் உரத்த குரலாக இந்நூல் விளங்குகிறது. இந்த நூல் பற்பல தரவுகளைத் தன்னுள் கொண்டிருந்தாலும் இவற்றின் மற்றுமொரு பக்கமாக நூல் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய அரசியல் கட்சிகள், அதன் காட்சிகள், அதன் தலைவர்களின் நிலைப்பாடு, இவை குறித்த ஊடகங்களின் பார்வை என பல பக்கங்களை வாசகனுக்குக் காட்டுகிறது. எளிய, கவனமற்றுப் போகின்ற இம்மக்களது நடைமுறை எதார்த்தங்களைக் கருதாது, அவர்களது குரலைச் செவிமடுக்காத அரசு, ஊடகங்கள், மலினமான பொழுதுபோக்கில் ஆழ்ந்து, தங்களையே மறந்து திரிகின்ற சமூகம் இவற்றிற்கிடையில் இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நூலாசிரியர்களின் பணிகள் அங்கீகாரம் பெறுகின்றனவா என்பதும், இந்நூல்கள் வாசகர்கள் கவனம் பெறுகின்றனவா என்பதையும் அறுதியிட இயலவில்லை. வறீதையா கான்ஸ்தந்தின் சமூகப்பிரக்ஞையுடன், சமூக அறத்துடன், தார்மீகப் பொறுப்புணர்வுடன் சற்றேறரக்குறைய இருபத்தி ஐந்திற்கும் மேலாக நூல்கள் எழுதியுள்ளார். இருப்பினும், இத்தகைய நூல்களைப் படைத்திடும் ஆசிரியர்கள், அதனைப் பதிப்பித்து வெளியிடும் பதிப்பகங்கள் ஆகியவற்றைப் பாராட்டித்தான் தீரவேண்டும். l