அய்ஜாஸ் அஹ்மத்
எர்னஸ்டோ சே குவேரா (1928-1967), இங்கே கொண்டுவரப்பட்டிருக்கிற இரு மிகச்சிறந்த செவ்வியல் புத்தகங்களின் ஆசிரியர்; மூலதனமும், சாம்ராஜ்ஜியங்களும் ஏற்படுத்தியிருந்த உலகத்திற்கு எதிராக நிரந்தரக் கிளர்ச்சியாளர்; உலகை புரட்சிகரமான முறையில் மாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு போராளி; இவ்வாறு எதிர்காலத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாபெரும் மனிதனாவார். அவரைப் படிப்பது என்பது நமக்கு மிகவும் சிரமமாக இருப்பதற்குக் காரணம், அவர் நம்முடைய காலத்திற்கு முற்றிலும் வேறுபட்ட காலத்தில் வாழ்ந்து, மறைந்ததால் ஆகும். அவர் வாழ்ந்த காலம், உலகம் முழுதும் மூலதனத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையேயான மோதல் போக்கு நாளும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்; ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பொங்கிஎழுந்துகொண்டிருந்த காலம், உலகத்திலிருந்த மனிதகுலத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, சோசலிச நாடுகளில் வாழ்ந்து வந்த காலம். இதன் காரணமாகத்தான், பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் புரட்சிகரமான தேசியவாதம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றிற்கு இடையேயான சிந்தனைகளுடன் அந்தக்காலத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் வீரஞ்செறிந்தமுறையில் பங்கேற்க வேண்டும் என்கிற உணர்வும் உள்ளார்ந்த முறையில் இயற்கையாகவே, தாமாகவே வெளிப்பட்டது. அந்த வகையில்தான் சே அவர்களின் எழுத்துக்களும் கடந்த காலத்தில் அடைக்கப்பட்டிருந்த புரட்சிகரமான சிந்தனைகளை வெளிக்கொணர்ந்து, எதிர்காலத்தில் புரட்சிகர அமைப்பை உருவாக்குவதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் விதத்தில் அமைந்திருந்தது.
ஏகாதிபத்தியத்தாலும் அதன் குண்டர்களாலும் சே குவேரா கொல்லப்பட்டபோது அவருக்கு வயது வெறும் 39 மட்டுமேயாகும். அவருடைய வாழ்வை ஒருவர் நுணுகி ஆய்வு செய்யும்போது, வின் கல்லின் வேகம் மற்றும் பல வாழ்க்கைகள் ஒன்று திரண்டே தன்மையைக்கான முடியும். அவர் ஒரு மருத்துவராகப் பயிற்சி பெற்றிருந்தார். ஆனாலும், அவர் தன் மருத்துவக் கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுதும் பயணம் செய்திருந்தார். பிறப்பால் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அவர், 1954இல் குவாதமாலாவில் சிறிதுகாலம் தங்கியிருந்த சமயத்தில்தான் அநேகமாகப் படிப்படியாகத் திட்டமிட்டு மார்க்சியத்தைக் கற்றறிந்தார். அங்கேதான் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ மற்றும் அதன் கூலிப்படையினர் முற்போக்கு அர்பென்ஸ் அரசாங்கத்திற்கு எதிராக ராணுவ சதியை மேற்கொண்ட சமயத்தில் அதனைப் பாதுகாத்திடவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஆயுதங்கள் ஏந்த தாமாகவே முன்வந்தார். அவர் மெக்சிகோவிற்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார், அவர் நம்பிக்கையை வென்றெடுத்தார், கியூபாவின் புரட்சிக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்திட முடிவு செய்தார். ஆரம்பத்தில், நாடுகடத்தப்பட்டிருந்த புரட்சியாளர் குழுக்களுக்காக மருத்துவராகப் பணியைத் தொடங்கிய அவர், விரைவில் கலக ராணுவத்திற்குத் தலைமை தாங்கும் கமாண்டர்களில் ஒருவராக உயர்ந்தார். மிக விரைவாக கொரில்லா யுத்ததத்தின் உதாரண புருஷராகவும் அதன் கோட்பாட்டாளராகவும் மாறினார்.
புரட்சிக்குப்பின்னர், சே புரட்சிகர அரசாங்கத்தில் தேசிய வங்கியின் தலைவர், தொழில்துறை அமைச்சர் போன்ற கேந்திரமான பொறுப்புகளை எடுத்துக் கொண்டார். மேலும் அந்த சமயத்தில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளுக்கு, கியூபாவின் தூதராகவும் செயல்பட்டார். அல்ஜீரியாவிலிருந்து நியூயார்க் வரை பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கங்களில் கியூபா நாட்டின் சார்பில் கலந்துகொண்டார். இப்பயணங்கள் சில வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் இருந்தன. இவற்றின்மூலம் அவர் பல நாடுகளில் தூதரக அளவிலும் வர்த்தக ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். சோவியத் யூனியனுடனும், இதர சோசலிச நாடுகளுடனும் மிகவும் நெருக்கமாக, பன்முக அளவில் கூட்டணிகள் அமைத்துக்கொள்வதற்கான விவாதங்களையும் நடத்தி இருக்கிறார். மற்றும் பல நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரகசியமாகச் செயல்பட்டுவந்த புரட்சி முன்னணிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட ரகசியமாகவும் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். அவர் பொலிவியாவில் ஒரு புரட்சிகரமான யுத்தத்தைத் தொடங்குவதற்காக, அவ்வாறு ஒரு ரகசிய பயணத்தை மேற்கொண்டபோதுதான் கொல்லப்பட்டார். பொலிவியாவில் புரட்சி யுத்தத்தைத் தொடங்கிவைத்து அங்கிருந்து அர்ஜெண்டைனாவிற்குள் பரவச்செய்ய வேண்டும் என்று அவர் கருதியிருந்தார். எனினும் பதுங்கியிருந்த கொரில்லா தளம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, சிஐஏ தலைமையில் செயல்பட்ட பொலிவியன் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்.
இவ்வாறு அவர் பல்வேறுபட்ட நிலைகளில் தன் புரட்சிகர நடைமுறை வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்த போதிலும், அதற்கும் மேலாக அவர் ஓர் வல்லமைமிக்க அறிவார்ந்த பாரம்பரிய மரபையும் (a formidable intellectual legacy) விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றில் சில ஸ்பானிய மொழியில் இருக்கின்றன. அவற்றை அதிலிருந்து இதர மொழிகளில் மொழியாக்கம் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு அவர் எழுதியவற்றில் இரண்டு உரைகளை இங்கே நாம் இந்த நூலில் முன்வைத்திருக்கிறோம். அவை அவருக்கு பல்வேறு அம்சங்களிலும் இருந்துவந்த வல்லமைமிக்க புலமையையும் புத்திகூர்மையையும் புலப்படுத்தக்கூடியவைகளாகும்.
இவை ஒவ்வொன்றுமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டவையாகும். எனவே இவை ஒவ்வொன்றின் சாராம்சமும் அந்த நோக்கத்தால் தீர்மானிக்கப்பட்டவையாகும். எனினும், இதில் கூறப்பட்டிருக்கிற சிந்தனைகள் பல, அவருடைய ‘கலகம் புரிந்திடும் ராணுவத்தின் சோசலிச சிந்தனைகள்’ (Social Ideals of the Rebel Army’(1959), ‘கியூபா: வரலாற்று விதிவிலக்கா அல்லது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணிப்படையா?’ (Cuba: Historical exception or vanguard in the anticolonial struggle?’(1961), ‘புரட்சிகரமான மருத்துவர்’ (‘The Revolutionary Doctor’ (1960) ‘இளம் கம்யூனிஸ்ட்டாக இருப்பது என்பது’ (‘To be a Young Communist’) (1962) போன்ற அவருடைய அறிவார்ந்த பல நூல்களிலும், பேச்சுக்களிலும் காணப்படுபவைகள்தான்.
அடுத்த இதழில் தொடரும்…
(சே எழுதிய முக்கியமான இரண்டு கட்டுரைகளும் அவர்குறித்து பல்வேறு அறிஞர்களின் அறிமுகமும் இணைத்து உலகின் பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இந்நூலிலிருந்து அய்ஜாஸ் அஹ்மத் அவர்களின் அறிமுகத்தின் முதல் பகுதி)
l