கடவுளின் பெயரால் காமக்கூத்து – பொ.வேல்சாமி
கி.பி.6, 7ம் நூற்றாண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் சமண சமயத்தையும் பௌத்த சமயத்தையும் ஓரங்கட்டிவிட்டு சைவ, வைணவ சமயங்கள் முதல்நிலைக்கு வந்தன. இவ்விரண்டு வைதீக சமயங்களும் புதிதாக கோவில் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கின. அதாவது புதிதாக உருவாக்கப்பட்ட கோவில்களுடன் அந்தப் பகுதியை சுற்றி இருந்த விளைநிலங்களை இணைத்துக் கொண்டு அந்நிலங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்கள் மீது தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தன. இதே காலக்கட்டத்தை ஒட்டி தமிழ்நாட்டில் சாதிகள் என்ற அமைப்பு உருவெடுத்து தன்னைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தச் சாதி அமைப்பில் உயர்சாதியினராகக் கருதப்பட்ட மிகச்சிலவான சாதிகள் அன்றைய அரசர்களுடனும் கோவில்களுடனும் தங்களை இணைத்துக் கொண்டு பெரும் பொருளாதார வளர்ச்சியையும் பெற்றன. 8ம் நூற்றாண்டுக்கு பின்னர் அரசு அதிகாரம் பொருளாதார அதிகாரம் போன்றவற்றை செம்மையாக நிலைப்படுத்திக் கொண்ட இந்தச் சாதிகள் அடுத்தபடியாக பெருவாரியான பெண்களைத் தங்களுடைய போக நுகர்ச்சிக்கு ஆட்படுத்துவதற்காக “தேவதாசி” முறையை உருவாக்கி அதற்கு தோதான சமய சட்டங்களாக ஆகமங்களையும் உருவாக்கிக் கொண்டன. “தமிழகத்தில் தேவதாசிகள்” என்ற அரிய நூலைப் படைத்துள்ள முனைவர் கே.சதாசிவன் கூறுகிறார் “அப்பரடிகளின் நாட்களின் போது தொடங்கிய தேவதாசி முறையின் முன்னேற்றச் செயல்முறை, சம்பந்தர், ஆழ்வார்கள் காலத்தில் உறுதியான முறையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது; மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரரின் நாட்களின் போது இந்தச் செயல்முறை முழுமையடையத் தொடங்கியது.” (பக்.69)
“இந்த தேவதாசி முறைக்கு அரசு ஆதரவு வழங்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்: (1) ஆளுகிற, மற்றும் புரோகித வர்க்கங்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் பணிகளைச் சட்ட பூர்வமானவையாக ஆக்குவது, (2) அரசியற் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும், அவர்களை என்றும் நிரந்தரமாக தமது கட்டுபாட்டின் கீழேயே வைத்திருப்பதற்கும், மூடநம்பிக்கைகளின் பிடிக்குக் கீழ் அவர்களை ஆழ்த்தி வைத்திருப்பதற்கும்; (3) மதம் சார்ந்த மற்றும் கலாச்சார சேவைகளைப் புரிவதற்கென அரசுக்கு ஒரு கருவியாகவும் (4) தேவதாசிகளிடமிருந்து தனிப்பட்ட சலுகைகள் மற்றும் பொழுதுபோக்குகளுக்காகவும் ஆகும்.1 பல்லவர்கள் மற்றும் பாண்டியவர்கள் காலத்திய புரோகித வர்க்கம் தேவதாசி முறையின் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றது. களப்பிரர் காலத்தில் வெளித்தெரியாத ஒரு நிலையிலிருந்து புரோகித வர்க்கம், பக்தி இயக்கக் காலத்தில் மிக வலிமைபடைத்த ஓர் அதிகார அடுக்காக உருவெடுத்து மெலெழுந்து வந்துவிட்டது” (பக்.76)
ஒரு கோவிலைப் புதிதாகக் கட்டுவது, அந்தக் கோவிலில் அன்றாடம் பூஜைகளை நிகழ்த்துவது போன்றவற்றிற்கு விதிகளை வகுக்கும் நூல்களுக்கு பெயர் “ஆகமங்கள்” என்பதாகும். இத்தகைய ஆகமங்களிலிலேயே பெண்களை தேவதாசிகளாக்குவதற்கும் விதிகள் கூறப்பட்டுள்ளன. “காமிகாகம(ம்)” த்தில் தேவதாசிகளாக மாற்றப்படும் பெண்கள் ஏழு, எட்டு, ஒன்பது வயதாக மட்டும் இருக்க வேண்டும் என்று விதி வகுத்துள்ளது. இந்தப் பெண்களுக்கு கோவில் விக்ரகத்தின் முன்பு திருமணம் நிகழ்த்தப்படும். திருமணத்தில் தாலியை அந்தப் பெண்களுக்கு கட்டுவது அந்தக் கோவில் புரோகிதர் ஆவார். அந்தப் புரோகிதரை தேவதாசிகளாக்கப்பட்ட பெண்கள் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆகமங்கள் விதித்துள்ளன.(பக்.77) ஏழு, எட்டு, ஒன்பது வயது பச்சிளம் குழந்தைகளுக்கு என்ன விவரம் தெரியும்? இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வறுமையை மூலதனமாகக் கொண்டே இந்த நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. பல பெற்றோர்கள் தங்கள் வறுமையைக் கருதி தங்களுடைய குழந்தைகளை இப்படியான கோவில்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பதைப் பற்றிய ஆவணங்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன.2 பச்சிளம் குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளி விடும் இந்தச் செயல்முறை தமிழ்க் கலாச்சாரத்தை வளர்த்து எடுத்துள்ளது என்று பேசுவது எவ்வளவு வஞ்சகமானது குருரமானது.
தேவதாசிகளின் வாழ்க்கை முறையைப் பற்றி நூலாசிரியர் தரும் தகவல்கள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதற வைக்கும். அந்தக் குழந்தைகளைப் பருவமடைய வைப்பதற்கு கோவில்களில் நிகழ்த்தும் சடங்கைப் பற்றிய ஒரு குறிப்பு நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கிறது. (பக்.230) நூலாசிரியர் திருவாரூருக்கு அருகில் உள்ள எண்கண் என்ற ஊரின் தேவதாசி ஒருவருடான நேர்காணல் வெளிபடுத்திய செய்தியாகக் கூறுவது..”தனது துணைவி குறித்த அதிருப்தியில் இருந்த இறைவனை மகிழ்விப்பதற்காக நள்ளிரவுப் பூசையான ராக்காலப் பூஜையின் போது மட்டும் அப்பெண் நிர்வாணமாக நடனம் ஆடினாராம்.” (பக்.289) “சங்கரமூர்த்தி அய்யர் விறலிவிடுதூது” என்ற நூலில் 655 – 660 ம் வரிகளில்(கன்னிகள்) இத்தகைய பெண்கள் அரசு சார்ந்த அதிகாரிகள் தங்களை நாடி வரும்போது அவர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளக்கூடாது. அதைமீறி இவர்கள் பணம் வசூலித்தால் இவர்களுடைய தொழிலில் அரசு அதிகாரிகள் மண்ணைப் போட்டுவிடுவார்கள் என்ற வரிகள் பதிவாகி உள்ளன.
நீண்ட நெடுங்காலமாக இந்த அபலைப் பெண்கள் பட்ட பாடுகளையும் அவமானங்களையும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த எந்த சிந்தனையாளரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் டெல்லியின் சுல்தானாக இருந்த அலாவுதின் கில்ஜி இத்தகைய அவலமான நடவடிக்கைகளை அனுமதிக்கவில்லை என்றும் இந்த பெண்கள் விலைமகளிராக உருவாகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களில் பலரைப் பிடித்து அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் நூலாசிரியர் சதாசிவன் குறிப்பிடுகின்றார். (பக்.213)
நீண்டகாலமாக பல்வேறு சான்றுகளை எல்லாம் தொகுத்து தேவதாசிகளின் வரலாறு பற்றிய நெஞ்சை உலுக்குகின்ற தகவல்களை ஆராய்ந்து திரட்டி இந்த சிறந்த நூலை ஆசிரியர் படைத்துள்ளார். இத்தகைய ஒரு நூல் முதல்முதலாக இப்பொழுதுதான் தமிழில் வெளிவருகின்றது. இந்த நூலை சிறப்பாக மொழிப்பெயர்த்த கமலாலயன் அவர்களுக்கும் அழகாக அச்சிட்டு வெளியிட்டிருக்கும் அகநி பதிப்பகத்திற்கும் நம்முடைய பாராட்டுதல்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாகப் பெண்ணிய ஆய்வுகளில் பற்றுதல் உள்ளவர்களும் பெண்விடுதலை பற்றி சிந்திக்கின்ற ஆண்களும் பெண்களும் இந்நூலை தவறாது வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அடிக்குறிப்பு
- அவர்கள் அங்கிருந்த கோயிலுக்கு அந்தப் பெண்களை அனுப்பினர். அவர்களுடைய உடல்களைக் கொண்டு அக்குறிப்பிட்ட கோயிலுக்கென பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு அவர்கள் அனுப்பப்பட்டனர். பாலியில் தொழிலின் மூலம் ஈட்டப்பட்ட வருவாயினங்கள், கோயில்களைப் பராமரிக்கும் பணிக்காகச் செலுத்தப்பட்டபோது, கோயில்களின் உண்டியல்களை நிரப்பியாக வேண்டிய நோக்கத்திற்காக ஆலய பூசாரிகள் அந்த வருமானத்தை அனுமதித்திருக்க வேண்டும் என்று அர்த்தம் ஆகிறது. (பக்.274)
- கி.பி.1178 – 1217 ம் ஆண்டுகளின் காலத்தில் 3ம் குலோத்துங்க சோழன் ஆட்சியின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அடிமைமுறை என்பது பொதுவாக நிலவியிருந்ததை திருவாலங்காட்டிலிருந்து கிடைத்துள்ள கி.பி.1201 ம் ஆண்டு சாசனம் குறிப்பிடுகின்றது. வறட்சியின் கொடுமையைத் தாங்கமாட்டாத ஒரு வேளாளர், 110 காசு கடனுக்காகத் தன்னையும், தனது இரு மகள்களையும் ஆலய மடங்களில் ஒருவருக்கு விற்று விட்டிருக்கின்றார். அந்த ஆவணம் பின்வருமாறு சொல்லுகிறது.. ”காலம் மிக மோசமானதாகி இருக்கிறது; ஒரு காசுக்கு 3 நாழி நெல் விற்கப்படுகிறது; அவருடைய குழந்தைகள் உணவுக்காக ஏங்கிச் செத்துக்கொண்டிருக்கின்றன; அதன் தொடர்ச்சியாக, அவரும் அவரது இரண்டு மகள்களும் ஆலயக் கருவூலத்தில் இருந்து 110 காசுக்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். (பக்.131)
l