பரவசமாய் பற்றிக் கொள்ளும் கதைகள் – ஸ்ரீநிவாஸ் பிரபு
கீரனூர ஜாகிர்ராஜா கடந்த இருபது ஆண்டுகளாக சிறுகதை நாவல்கள், கட்டுரைகள் என பரந்து பட்ட தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்திற்கு தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். பழனி வட்டம் கீரனூரில் பிறந்தவர், சிறந்த நாவல்களுக்காக கனடா- தமிழ் இலக்கியத் தோட்ட விருது, தமுஎகச விருது, சேலம் தமிழ்ச் சங்க விருது, சிறந்த சிறுகதை நூலுக்காக உயிர்மை – சுஜாதா அறக்கட்டளை விருது, புதுமைப்பித்தன் நினைவு விருதுகளைப் பெற்றிக்கிறார். இவரது கதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.முழு நேர எழுத்தாளராக தஞ்சையில் வசிக்கிறார்.
கீரனூர் ஜாகிர்ராஜாவின் கதைகள் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை எவ்வித அலங்காரமுமின்றி கலாபூர்வமாகப் பதிவு செய்பவை. ‘தேய்பிறை இரவுகளின் கதைகள் என்ற தலைப்பில் இவரது 39 தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் முன்பு வெளிவந்தது. தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை இவர் அளவுக்குச் சித்தரித்தவர்கள் குறைவு என்றே சொல்லலாம். இப்போது பதினோரு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக ‘கொமறு காரியம்‘ வெளிவந்திருக்கிறது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் அவ்வப்போது பல இதழ்களில் வெளியானவை. அவ்விதழாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டவை. இந்த பதினோரு கதைகளை எழுத நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். காலதாமதானபோதும் கதைகள் ஒவ்வொன்றும் காத்திரமானதாகவே இருக்கிறது. இது இவருடைய நான்காவது சிறுகதைப் புத்தகம்.
ஒவ்வொரு கதையையும் எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி ஒருவிதமான நெருக்கடியுடனேயே எழுதத் துவங்குகிறது, துவக்கத்தைவிட எழுதத் தொடங்கிய பிறகான மனநிலை எப்போதுமே பரவசத்துக்குரியதாக மாறிவிடுவதாகச் சொல்கிறார். அது கதைகளைப் படிக்கும் போது நமக்கும் தொற்றிக் கொள்கிறது.
தொகுப்பின் முதல் கதையாகவும்,தலைப்பாகவும் இடம்பெற்றிருப்பது ‘கொமறு காரியம் சிறுகதை. வெக்கையை உமிழும் கோடையின் இரவுகள் கொடுமையானவை. அப்படியான கொடுமையை அனுபவித்திருக்கிறாள் ஆதிலா. ஏழ்மை போர்த்திய அவள் வாழ்க்கையில் எவ்வித விடுதலையும் இல்லாமல் நெடிய இரவைக் கடப்பது அவளுக்கு சுலபமானதாக இல்லை. ஆதிலாவின் வாப்பா கலந்தர் குடும்பத்தில் எவ்வித ஈடுபாடும் இல்லாதவராக இருக்கிறார். அவள் வாப்பா முன்பு பள்ளிவாசலில் ஊழியம் செய்த போது கபர்ஸ்தானை (இடுகாடு) ஒட்டினார் போலிருந்த காலிமனையில் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வாப்பா கலந்தருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆதிலா முதிர்கன்னியாகவே இருக்கிறாள். பள்ளிவாசல் உத்தியோகம் போனபிறகு, கலந்தர் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்கிறார். பள்ளிவாசலின் மூத்தவல்லி கலந்தரின் ஏழ்மையைக் குறிப்பிட்டு, புற்றுநோயால் அவதிப்படும் மனைவியும், திருமணமாகாத நான்கு கொமர்களும் இருக்கிறார்கள் எனவே பொருளுதவி செய்யுமாறு கடிதம் எழுதித் தருகிறார். அதை கலந்தர் லேமினேட் செய்து கொள்கிறார். அதை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஊருக்குச் சென்று பள்ளிவாசலில் காட்டி துண்டை ஏந்தி நிற்கிறார். கொமறு காரியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லா சொர்க்கத்தில் சிம்மாசனங்கள் ஏற்பாடு செய்திருக்கிறான் என்கிறார். ஆதிலாவுக்கு கனவுகள் எழுகிறது. கனவுகள்தான் அவளுக்கு பெரிய ஆசுவாசத்தைத் தருகிறது. ரவூப்புடன் நீளும் உறவு அவளது நெடுங்கால வெம்மையைத் தணிக்கிறது. ஆதிலாவின் கண்களுக்கு கபர்ஸ்தான் அழகாகத் தெரிய ஆரம்பிக்கிறது. கனவில் வரும் ராஜநாக பாம்பு ரவூப்பை ஞாபகப்படுத்துகிறது. ராஜநாகம் அவள் உடலோடு பிணைந்து கிடக்கும் இரவுக் கனவை, கொமறு காரியத்திற்கு ஆதரவு தாருங்கள் என அவள் வாப்பா கண்ணாடி முன் நின்று தாடியை நீவிக் கொண்டு வசனம் பேசி ஒத்திகை பார்க்கும் காட்சி திடுக்கிடலோடு யதார்த்த நிலைக்குத் திருப்புகிறது.
கதை முழுவதும் ஆதிலாவின் எண்ண ஓட்டங்களும், வாழ்வியல் கசப்புகளும் வெம்மை ததும்ப சித்தரிக்கப்படுகிறது. ரவூப்புடனான சிநேகமும், அவர்களுக்கிடையிலான உறவும் ரம்யம் மிளிரும் அழகாக காட்சி. ‘கொமறு காரியம் கதையை எப்போதாவது எழுதப்படும் அபூர்வமான கதை என நாஞ்சில் நாடன் பாராட்டியும், வண்ணதாசன் நல்ல அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கிறது கதை.
‘காஃப்காவின் நண்பன்‘ கதை புதிய உத்தியில் வெளிப்பட்டுள்ள கதை. இன்றுபோல ஆழ்ந்த உறக்கத்தின் கனவிலிருப்பது அவனுக்கு அபூர்வமாகவே நகழ்கிறது. சில நேரக் கனவுகள் அதீத சுவாரஸ்யம் அளிப்பவையாக அமைந்துவிடுவதுண்டு. கனவுகளில் நேர்மறை வஷயங்கள் நிகழுந்த வண்ணம் இருக்கிறது. கனவில் விஸ்தரிப்பில் பூனையாக உருமாறி திரைப்படம் பார்க்கிறான். அதில் கடிதம் எழுதும் இளைஞனாக ஃபிரான்ஸ் காப்காவை காண்கிறான். கனவிலிருந்து விழிப்பவன் முன் கரப்பான் பூச்சிகள் எதிர்ப்படுகிறது. மல்லாந்த வாக்கில் கிடக்கும் கரப்பான்பூச்சிகள் உரையாற்றத் துவங்குகிறது. தான் படித்த புத்தக கதாபாத்திரங்களை முன்வைத்து சுவாஸ்யமாகப் பேசுகிறான். மல்லாந்து கிடக்கும் கரப்பான் பூச்சியை நிமிர்த்துகிறான். அது ஊர்ந்து ஒரு இடுக்கில் சென்று மறைகிறது.‘டேய் மூதேவி, இன்னுமா விடியலை, எழுந்து வாடா வெளியில‘ என்ற அப்பாவின் வசை ஒலி கேட்டு குழப்பத்துடன் அறையை விட்டு வெளியே வருகிறான்.
கணவனால் ‘முத்தலாக்‘ சொல்லி தள்ளி வைக்கப்பட்ட பரக்கத் தன் மகன் மன்சூருடன் தாய் வீட்டிற்கு பயணப்படுகிறாள் பரக்கத் நிஸா. கசகசப்பு, வெக்கை, அசதியோடு பீதியும் அவநம்பிக்கையும் கலந்த மனநிலையோடு பிறந்த மண்ணில் கால் வைக்கிறாள். ‘ராவுத்தர்‘ இல்லாமல் தனியே ஒரு பெண் குழந்தையுடன் செல்வதை ஊர் வேடிக்கையாகப் பேசுகிறது. திருமணமானதும் குழந்தை பெற்று பொலிவிழந்து போனதைக் காரணம் காட்டி மும்முறை தலாக் சொல்லி அனுப்பிவிடுகிறான் அவள் கணவன். ‘ச்சீ போங்கடா‘ என மஹர் (ஜீவனாம்சம்) தொகையை விட்டெறிந்து மகனை அழைத்துக் கொண்டு வருகிறாள். “இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு. அவனில்லாட்டி பெழைக்க முடியாதா“ என ஆறுதலாக ஏற்றுக் கொள்கிறாள் தாய். கணவனால் தலாக் தந்து விடப்பட்ட பக்கத்து வீட்டுப் பெண் ஆமினாவை அழைக்கிறாள். ஆமினா தன் மகள் பானுவுடன் வருகிறாள். அறிமுகமாகிறார்கள். குழந்தைகள் மன்சூரும், பானுவும் நட்பாகி விளைபாடுகிறார்கள். குழந்தைகள் விளையாடுகையில் ஒரு கட்டத்தில் ‘இப்படி சோறாக்குனா நீ எனக்கு வேணாம், போடி உன் ஆத்தா வீட்டுக்கு நான் உனக்கு தலாக் குடுத்துட்டேன‘ என்கிறான் மன்சூர். இதைப் பார்த்து ஒருவித வேகத்துடன் பாய்ந்து வரும் பரக்கத், மன்சூரை அறைகிறாள். மன்சூர் அழுகிறான். சிறிது நேரம் கழித்து குழந்தைகள் இருவரும் இணைந்து மீண்டும் சோறு விளையாட்டு விளையாடுகிறார்கள். பெரியவர்கள் ஏதேதோ யோசித்தவாறு கிடக்கிறார்கள் என்று முடிகிறது பாவம் இவள் பெயர் பரக்கத் நிஸா சிறுகதை.
ஒவ்வொரு கதையிலும் யாரோ ஒருவருக்கு கனவு தீராமல் வந்து வழிந்து கொண்டே இருக்கிறது. நாச்சியா கதையிலும் தனிமையின் துயரைத் தணிக்க முயற்சிக்கும் நாச்சியாவுக்கு கனவுகள்தான் ஆசுவாசத்தைத் தருகிறது. சன்னலைத் தொட்டுத் தடவியபடி நிற்கும் எருக்கஞ்செடிகளுக்கு அப்பால் பரந்து கிடக்கும் பெருநிலக்காட்சிகளை ரசித்து லயித்திருக்கிறாள். அவள் தனது பால்யத்தை நினைத்துப் பார்ப்பது ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. தாயும் தந்தையுமற்ற நாச்சியாவுக்கு கொக்காட்டி மாமாவும், அவரது சிஷ்யப் பிள்ளை வாஹீதும் உறுதுணையாக இருக்கிறார்கள். அவள் அழும் போதெல்லாம் மாமன் தனது சுட்டுவிரலைக் குவித்து கொக்கு போலாக்கி, ‘கொக்கே கொக்கே மீனப் புடி‘ என்று வேடிக்கை காட்டி சிரிப்பை வரவழைக்கிறான். நாச்சியாவுக்கும் ரகுமானுக்கும் திருமணமாகிறது. அவனைக் கட்டிக் கொண்ட நாள் முதலாக நாச்சியாவுக்கு தூர்ந்து போன மரச்சன்னலே ஆசுவாசமாக இருக்கிறது. மாமாவும், வாஹீதும் துணையிருக்க, ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வரும் ரகுமான் தன் சுதந்திரத்தை குறிப்பிட்டு அவர்களை விலக்குகிறான். அதிலிருந்து மாமாவும், வாஹீதும் விலகிப் போகிறார்கள். ரகுமான் பணிக்குச் செல்ல, துணைக்கொரு ஜீவனுமற்று இருக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. தனிமை துயரம் அவளை வாட்டுகிறது. இரவில் துயரமான கனவு காண்கிறாள். நிஜத்தில் இல்லாத மாமனாரும் மாமியாரும் வருகிறார்கள். கூடவே வருகிறது கரும்பூணை. பூணை ஜன்னலின் மேல் தொற்றிக் கொண்டு வெறிக்கிறது. கனவிலிருந்து விழித்துக் கொள்கிறாள். ஜன்னலைப் பார்க்கிறாள். இரவு பூனையின் நிறத்தில் வழிந்து கொண்டிருக்கிறது. பூரண நிலவொளியில் புதிதாய் போடப்பட்ட ரயில் பாதையில் நின்றபடி கொக்காட்டி மாமாவும், வாஹீதும் அவளை கைகளை ஆட்டி அழைக்கிறார்கள். அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்கிறாள். மூவரும் ரயில் பாதையில் சேர்ந்து நடப்பது இரவின் முக்கியமான நிகழ்வாகிறது. அதை நாட்குறிப்பில் எழுதிக் கொள்கிறாள். இப்படியாக அவள் கனவுகளை எழுதிக் கொள்கிறாள். கனவிலிருந்து மீண்டதும் மற்றொரு கனவுக்குள்தான் நுழைய வேண்டும். வேறு நிவர்த்தி அற்றவளாக இருக்கிறாள் நாச்சியா.
இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சமூகம் சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறது. ‘கேரக்டர், ‘புத்தகச் சந்தையில் மாடு மேய்ப்பவன் போன்ற கதைகள் இலக்கிய உலகம் சார்ந்து இயங்குபவையாக அடையாளப்படுகிறது.
கீரனூர ஜாகிர்ராஜா தன் படைப்பின் ஊடாக தான் கண்டடைந்தவைகளை, மனத்தாவல்களை செறிவான மொழியில் முன்வைக்கிறார். கவித்துவமான சொல்லாட்சிகளைக் கையாண்டு, வாசிப்பவர் மனதைத் தொட்டறிந்து கதைகளை ஓர் அந்தரங்க உணர்வாகவும், வாழ்வியல் தொடர்ச்சியாகவும் விவரித்துக் காட்டுகிறார். அந்தச் சித்தரிப்பு ஒரு தனித்த அழகுடன் மிளிரவே செய்கிறது.
ஒவ்வொரு கதையிலும் விளிம்பு நிலை மக்களின் அவலமும் அறிமுகமும், அவர்களின் வாழ்வியல் நகர்வும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுவே கதைகளையும் கதை மாந்தர்களையும் மிகவும் நெருக்கமானவர்களாக உணரச் செய்கிறது
l