சிந்துவெளி ஆய்வாளராகவும் இந்திய ஆட்சிப் பணியாளராகவும் பரவலாக அறியப்படுபவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன். அவர் எழுதிய சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம், Journey of a Civilization – Indus to Vaigai ஆகிய நூல்கள் குறித்து அறியாதவர்கள் குறைவு. ஏப்ரல் மாதத்தில வரும் சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு அவரது தமிழ் வாசிப்பு மற்றும் அவர் எழுதிய பிற நூல்கள் அவற்றின் பின்னணி குறித்து ‘புத்தகம் பேசுது’ இதழுக்காக டாக்டர்.சங்கர சரவணன் அவரை நேர்காணல் செய்தார். இனி அந்த நேர்காணல்…
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது – எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது என்பது போன்ற அச்சங்கள், தாங்கள் தமிழ் படித்த 1970-களிலும் இருந்தனவா? அவற்றை எப்படி எதிர் கொண்டீர்கள்?
எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எனது நெருங்கிய உறவுமுறையிலும் கூட நான்தான் முதல் பட்டதாரி. தமிழ் இலக்கியம் படிக்கத் தயங்கும் இன்றைய நிலவரத்திலிருந்து 1970களின் கல்விச் சூழ்நிலை எந்தவகையிலும் வேறுபட்டிருக்கவில்லை. வீட்டுக்கொரு பொறியாளர் வளர்க்கப்படவில்லை என்றாலும் மருத்துவப் படிப்புக்கும், பொறியியல் கல்விக்கும்தான் அப்போதும் மவுசு அதிகம். வணிகவியல் படிப்பவர்கள் தங்களை ராயல் பி.காம் என்ற அடைமொழியோடு அழைத்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை அப்போதும் இருந்தது. தமிழ் வளர்த்த மதுரையில் தாடி வளர்த்துக் கொண்டிருந்தவர்களில் பாதிப் பேர் தமிழ் மாணவர்கள்தான் என்ற நையாண்டி வேறு.
புகுமுக வகுப்பில் அறிவியல் படிப்பில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. தவளையை மல்லாக்கப் போட்டு அறுப்பதிலும், அழகிய மலர்களின் அல்லி வட்டங்களைப் புல்லிவட்டங்களை அலசுவதிலும் மனம் ஒன்றவில்லை . அடுத்தது. இளம் அறிவியலா? இளங்கலையா என்று தடுமாறினேன். பிடித்தது எது, பிடிக்காதது எது என்பது கொஞ்சம் பிடிபட்டது. சுட்டுப்போட்டாலும் வராத கணக்கைத் தொட்டுப் பார்ப்பதில்லை என்று துணிந்தேன். தமிழ் பிடித்திருந்தது. தமிழ்க் கவிதைகள் பிடித்திருந்தன. அதனால் தமிழ் மாணவனாய் ஆனேன்.
வேலை எதுவும் கிடைக்காது என்று என்னைச் சுற்றியிருந்தவர்கள் பாட்டாய்ப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் படித்து முடித்து ஒருநாள் கூட வேலையில்லாமல் இருக்கக்கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன், தமிழ் என்னைத் தாங்கியது. முதுகலைத்தேர்வு முடிவு வரும் முன்னரே தினமணியில் வேலை தேடி வந்தது. பயிற்சிக் காலத்தில் மாத ஊதியம் 240 ரூபாய்தான். தினம் எட்டு ரூபாய் என்ற கணக்கு. சொந்த ஊரான நத்தத்திலிருந்து பஸ்சில் மதுரைக்குப் போய்வரவே ஐந்து ரூபாய் செலவு. மீதியில் தேநீர் குடிக்கலாம். இருந்தாலும் அது குறையாகத் தோன்றவில்லை. பத்திரிகைப் பணியில் மேலும் மேலும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. கரும்பு தின்னக் கூலியும் கிடைத்தது. கசக்குமா?
இலக்கியக் கல்வி பயின்றுவிட்டு இந்திய ஆட்சிப் பணிக்கு வந்துவிட்டீர்கள். இந்திய ஆட்சிப்பணியில் நுழைந்த முதல் தமிழ் இலக்கியப் பட்டதாரி நீங்கள்தான். நீங்கள் பயின்ற இலக்கியக் கல்வி இந்திய ஆட்சிப் பணியிலும் வழிநடத்துகிறதா?
இந்திய ஆட்சிப் பணியில் இன்றும் என்னை வழி நடத்துவது எனது இலக்கியக் கல்விதான். 2007-ல் உத்தரப் பிரதேச தேர்தலுக்குப் பொறுப்பேற்று நடத்தினேன். அந்த மாநிலத்தைப் பொறுத்த வரையில் ஒரு துளியும் வன்முறையின்றி நடந்த முதல் தேர்தல் அது. இதற்குமுன் நலிவடைந்த பிரிவினரை வாக்குச்சாவடிப் பக்கம் போகவிடாமல் தடுத்து, இன ஆதிக்கவாதிகள், வன்முறையாளர்கள் கள்ள வாக்குப் போட்டு வந்த ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்து வந்தது. முதன் முறையாகத் தடுக்கப்பட்டது இந்தத் தேர்தலில் தான். உத்தரப் பிரதேசத் தேர்தலில் முதல் முறையாக அச்சமின்றி வாக்குச்சாவடிக்குச் சென்றவர்கள், அப்போது, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த திரு என். கோபாலசாமியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.
“எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற மகாகவி பாரதியின் ஆசையை, அரசியல் சாசனம் போல் செயல்படுத்த முடிந்தது சிலிர்க்கவைத்தது. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியது செல்லும் என்று தோன்றியது. உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிந்த அன்று எங்கள் வீட்டிலுள்ள பாரதியின் கம்பீரமான ஓவியத்தின் முன் நின்று வணங்கினேன். தேர்தல் முடிந்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய பொறுப்பிற்கு வாய்ப்பு வந்தது. ஆட்சிப் பணியில் கிடைக்கும் ஊதியத்தைவிட பன்மடங்கு ஊதியம் தருவதாய்க் கூறினார்கள். விருப்பமில்லை என்று விடையளித்தேன்.
நான் தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் தொடங்குவதெனில் மீண்டும் தமிழ்தான் படிப்பேன். மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வுதான் எழுதுவேன். உண்மையில், இலக்கியக் கல்வியைப் போலவே இந்திய ஆட்சிப் பணியும் எனக்குப் பிடித்திருக்கிறது.
இன்னொரு கருத்தையும் நான் இங்கே பதிவு செய்ய வேண்டும். ஓர் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் பணியில் இருக்கும்போது பல்வேறு படிப்புகளைப் படிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், நான் ஒரு தமிழ் மாணவர் என்ற அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அத்தகைய வாய்ப்புகளை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்துள்ளேன்.
தாங்கள் எழுதியுள்ள ‘இரண்டாம் சுற்று’ புத்தகத்தைத் தங்களது ‘சிறகுக்குள் வானம் ‘ நூலின் இரண்டாம் பாகம் என்று கருதலாமா? அல்லது அதிலிருந்து மாறுபட்டதா? மாறுபட்டது எனில் எவ்வாறு என்பதையும் விளக்கமுடியுமா?
எனது ‘சிறகுக்குள் வானம்’ ஈர்ப்புவிசை மீறி மேலெழும்பிப் பறப்பது பற்றியது என்றால் ‘இரண்டாம் சுற்று’விழுந்தபின் மீண்டும் எழுந்து நடப்பது பற்றியது. “அவரவர் வானம்; அவரவர் சிறகு” என்று சிறகுக்குள் வானத்தில் எழுதியிருந்தேன். அதைப்போலத்தான் இரண்டாம் சுற்று. இலக்கணம் எதுவும் இல்லை இரண்டாம் சுற்றுக்கு. அவரவர் சுற்று; அவரவர் கணக்கு. அவரவரது பயணத்தில் ஏதோ ஒரு புள்ளியில் “இது எனது இரண்டாம் சுற்று” என்ற உள்ளுணர்வு மேலோங்கக் கூடும். அது மேலோங்காமலும் போகலாம். யாருக்குத் தெரிகிறது அடுத்த திருப்பம்? எத்தனை பேரால் முடிகிறது உட்கார்ந்து உயில் எழுத?
பயணம் செய்த பாதைகளில் மீண்டும் பயணிக்கும்போது கடந்த கால நிகழ்வுகளுக்கும் நிகழ்கால நிகழ்வுகளுக்கும் இடையிலான மிக நேர்த்தியான, கவித்துவமான தொடர்ச்சி சிலநேரங்களில் கண்கூடாகிறது. அதை உணர்ந்து உள்வாங்கும்போது அது எதேச்சையானதா? அல்லது நமக்கு விளங்காத ஒரு ‘மாயக்கரத்தின்’ முன்னேற்பாடா! என்ற ஓர் இனிமையான குழப்பம் குடைந்து எடுக்கும். கொஞ்சம் கவனமாக இல்லையென்றால் அது நம்மைச் சில அதீத உணர்வுகளின், தெளிவற்ற நம்பிக்கைகளின் மடியில் கிடத்தி மயங்கவைத்துவிடும். அதற்கு இடம் கொடுத்துவிட்டால், கை விரல்களின் மீதிருக்கும் நம்பிக்கையை விட கை ரேகைகள் மீது நம்பிக்கை கூடிவிடும்.
32 ஆண்டுகளுக்கு முன்னால் 1986 இல் மணிக்கணக்காக மலைகளைக் கடந்து நடந்து சென்ற ‘கடைசி மைலுக்கு’ 2017 இல் சாலை போட்டு காரில் செல்கிறேன்; எனக்குப் புற்றுநோய் சிகிச்சை அளித்த மும்பை டாக்டர் பெந்தர்கர் ஒடிசாவில் முப்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இலவச சிகிச்சைத் திட்டத்தின் உந்துவிசையாக இருக்கிறார்; நான் படிப்பதற்குப் போக முடியாத சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிந்துவெளி பற்றி உரையாற்றுகிறேன்; நான் தொடாமல் விட்டு விலகிச்சென்ற முனைவர் பட்டத்தைக் கடைசியில் எனது ஆய்வுகளுக்கான பெருமிதமாக, மதிப்புறு முனைவர் பட்டமாக என் கைகளில் ஏந்தி நிற்கிறேன்; இவை எல்லாவற்றையும் விட, மேலும் மேலும் சான்று தேடும் முனைப்பில் நான் அறிவிக்காமல் அடைகாத்த சிந்துவெளியின் ‘கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை’ 2010 இல் கோவை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் பதற்றம் கலந்த பரவசத்துடன் நான் அறிவிக்கிறேன் – புற்றுநோய் சிகிச்சை முடிந்து ஒரிரு மாதத்தில் நான் கலந்துகொள்ளும் முதல் பொதுநிகழ்வாக அது அமைகிறது.
இது போன்ற தருணங்களில் இனம்புரியாத ஓர் ‘இரண்டாம் சுற்று உணர்வு’ என்னைக் கவ்விக்கொண்டு கண்ணீரை வரவழைக்கிறது. அவ்வாறு, இரண்டாம் சுற்று உணர்வில் நான் ஆட்பட்டிருக்கும் ஒவ்வொரு முறையும், எனது கல்லூரி நாட்களில் நான் மீட்டெடுத்த அந்த “குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயத்தை” ஒரு குறியீடாக எனது ‘நாளைக் குறித்த ஞாபகம்’ போல எனது கைகளில் ஏந்திக்கொண்டு நிற்பது போல உணர்கிறேன்.
இந்த ‘இரண்டாம் சுற்று’, பள்ளி மாணவ மாணவியர்களை மனதில் வைத்து நான் எழுதிய ‘சிறகுக்குள் வானம்’ நூலிலிருந்து பலவகைகளில் வேறுபட்டது. தற்காலக் கல்வி மற்றும் சமூகச் சூழல்களின் அழுத்தங்கள் மிக வித்தியாசமானவை. நம்மைச் சுற்றி நிகழும் சில அண்மை நிகழ்வுகள் நம்மை வேறு கோணத்தில் யோசிக்கவைக்கின்றன. சொந்த ஊரில் படிப்பு, சொந்த ஊரில் வேலை, சொந்த ஊரில் வாழ்க்கை என்பதெல்லாம் மலையேறி வெகுகாலம் ஆகிவிட்டது. நமது குழந்தைகள் தங்களின் தன்முனைப்பிற்கும் அப்பாற்பட்ட புறக்காரணிகளின் தாக்கத்தை எதிர் நோக்க தயாராக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, விடாமுயற்சி, கடின உழைப்பு, நேரம் தவறாமை என்பது போன்ற ஆளுமை வளர்க்கும் சொல்லாடல்களுக்கும் அப்பால் சென்று எதார்த்த உலகின், நடைமுறை வாழ்க்கையின் சில தத்துவார்த்தமான உண்மைகளை எனது அனுபவங்களின் ஊடாகப் பேசமுயல்கிறேன்.
தங்கள் படைப்புகள் எல்லாவற்றிலும் ஓவியர் டிராட்ஸ்கி மருது தங்களோடு கைகோர்ப்பதன் ரகசியம் என்ன?
தமிழ்க்களத்தில் தொடர்ந்து இயங்கும் தூரிகைப் போராளி அவர். ‘சிறகுக்குள் வானம்’, ‘நாட்டுக்குறள்’, ‘பன்மாயக் கள்வன்’ போன்ற எனது படைப்புகளுக்கு அவரது ஓவியங்கள் ஓர் அழகான, கூடுதல் பரிமாணத்தைக் கொடுத்தன. இரண்டாம் சுற்றுக்கும் அழகு சேர்த்தது அவரது தூரிகை மொழி.
அவரது கோட்டோவியங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். அந்தக் கண்ணாடியின் முன்பு நிற்பது நானாகவோ அல்லது உங்களில் யாருமாகவோ இருக்கலாம். ஆனால் அந்தக் கண்ணாடியில் தெரியும் உருவம் எதிரே நிற்கும் உருவத்தின் வெறும் பிம்பமாக இல்லாமல் வேறொன்றையும் கூடுதலாகச் செய்கிறது. சக்கர நாற்காலியில் இருப்பவர் தலையில் பீனிக்ஸ்’ பறவையின் சிறகைப் பரிவுடன் சூட்டுகிறது. கண்ணாடி முன் பெருமிதத்துடன் நிற்பவர் கையில் ஒரு பூங்கொத்தைக் கொடுக்கிறது. பாதையைப் பார்ப்பவர் முன் குனிந்து மலர்களைக் காட்டுகிறது. அந்த எதிர் நிற்கும் உருவம் நானும்தான்; நீங்களும்தான். அதோ, அங்கிருக்கும் அவர்களும் இங்கிருக்கும் இவர்களும் தான். அவர்களின் முகம் தெரியத் தேவை இல்லை. முகவரி தேவையே இல்லை. அன்பும் பரிவும்தான் அந்த முகமும் அதன் முகவரியும். அந்த அன்பை, பரிவை, அக்கறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் “டாக்டர்.வி” என்று அழைத்தார்கள்; அழைக்கிறார்கள். அழைப்பார்கள். இது பற்றி இரண்டாம் சுற்றில் நான் எழுதிய ‘அரவிந்த் என்னும் அற்புதம்’ என்ற கட்டுரையில் பதிவிட்டிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.
தமிழ்நாடு பாடநூல் கழகம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்துள்ளது. அதோடு கரிசல் கதைகள், வாடிவாசல் போன்ற இலக்கியங்களையும் பன்னாட்டு பதிப்பகங்களோடு இணைந்து கூட்டு வெளியீடாக கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற முறையில் தாங்கள் கூற விரும்புவது என்ன?
1960 – 1970களில் கல்லூரிகளில் தமிழ் வழி அறிவியல் பட்டப்படிப்புகளும் சமூக அறிவியல் படிப்புகளும் வரவேற்பு பெற்றபோது, அதற்கான தமிழ் வழி பாடநூல்களைப் பாடநூல் கழகம் வல்லுநர்களையும் பேராசிரியர்களையும் கொண்டு எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருந்தது. 1980களில் நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் வழியில் தயாரானபோது அந்த நூல்கள் பெரிதும் உதவியாக இருந்தன. அப்போதிருந்த முதலமைச்சர்களே அந்த நூல்களுக்கு முன்னுரை, அணிந்துரை எழுதியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அந்த நூல்களின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தமிழ் வழி கற்போர் குறைந்து ஆங்கில வழியில் கற்போர் அதிகமானதால், அந்த புத்தகங்களுக்கான தேவை சந்தையில் குறைந்துவிட்டது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்மொழி மற்றும் தமிழ்வழிக் கல்வி பற்றிய விழிப்புணர்வு பெருகி வரும் நிலையிலும் ஐ.ஏ.எஸ். தேர்வைத் தமிழ் வழியில் எழுதி வெற்றி பெறுபவர்கள் மீது ஊடக வெளிச்சம் பாய்வதாலும் தமிழ்வழி பாடநூலுக்கான ஆதரவு பெருகத் தொடங்கியுள்ளது. இதை உணர்ந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 600க்கும் மேற்பட்ட அரிய உயர்கல்வி நூல்களை மறுபதிப்பு செய்துள்ளது. அந்த நூல்கள் புத்தகக் கண்காட்சியில் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில், நானே அதை நேராக கவனித்தேன். ஒரு தமிழ் மாணவன் என்ற முறையில் எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்திய வரலாறு, கே.கே.பிள்ளை எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் போன்ற நூல்களுக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாக அறிந்தேன்.
இதுமட்டுமின்றி, பிரபல தமிழ் இலக்கியங்களைப் பன்னாட்டுப் பதிப்பகங்களோடு இணைந்து கூட்டு வெளியீடாக கொண்டுவரப்பட்டுள்ள கரிசல் கதைகள் (Along with the Sun), வாடிவாசல் (Vaadivasal), செம்பருத்தி (The Crimson Hibiscus) போன்ற நூல்களும் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தகைய முயற்சிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் அறிமுகப்படுக்கப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், மறைவாக நம்மிடையே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை திறமான புலமையெனில், வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாடிய பாரதியின் கனவு மெய்ப்படும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டுள்ள உங்களையும், அப்பணசாமி, மினி கிருஷ்ணன் ஆகியோரையும் நான் பாராட்டுகிறேன்.
திருக்குறளை உலகப் பொதுமறை என்று அழைப்பதை விட ‘உலகப் பொதுமுறை’ என்று அழைப்பதே பொருத்தம் என்ற கருத்தைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன?
திருவள்ளுவர் ஓர் உலக மனிதர், திருக்குறள் ஓர் உலக இலக்கியம் அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட அற்புதம், ‘இந்திய மற்றும் உலக இலக்கியத் தரவரிசையில் தலைசிறந்த நூல் திருக்குறள்’ என்று ரஷ்ய நாட்டு தத்துவ அறிஞர் அலெக்சாண்டர் பியாட்டிகோர்ஸ்கி தந்த மதிப்பீடு மிகையற்ற மெய்.
தமிழ்கூறும் நல்லுலகின் இலக்கிய மற்றும் சமூக வரலாற்றில் இதுவரை தோன்றியுள்ள ஆளுமைகளில் ஆகச்சிறந்த ஆளுமை திருவள்ளுவர். திருக்குறள் மனித ஆற்றலைக் கொண்டாடும் மாபெரும் படைப்பு உழவுத் தொழிலை உச்சியில் வைத்த உன்னதம்: இல்லறம் போற்றிய வாழ்வியல், நீதின்றி வந்த பொருளின் திறம் தெரிந்த தெளிவின் வரிவடிவம் திருக்குறள், ஒரு தனிமனிதனின் குரல் அல்ல; ஓர் உயர் பண்பாட்டின் ஒட்டுமொத்த தெளிவின் திரள்.
சமூக இலக்கிய ஆளுமைகளின் மீட்டுருவாக்கத்தில் கட்டமைத்தல் போலவே முக்கியமானது. கட்டுடைத்தலும், திருக்குறளுக்கும் அப்படிப்பட்ட ஒரு மீள்வாசிப்பு தேவைப்படுகிறது. உண்மையில் திருக்குறளை ‘பொதுமறை’ என்று அழைப்பதைவிடவும் ‘பொதுமுறை’ எனலே பொருத்தம். ஏனெனில், எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் எதுவும் ‘மறை’யாக இருக்க முடியாது; மறையாக இருக்கும். எதுவும் எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியாது. திருக்குறள் மொழி, இனம், சமயம், அரசியல் போன்ற தனிப்பட்ட முத்திரைகள் அனைத்தையும் புறக்கணித்து நின்ற பொதுமை திருக்குறள் ஒரு மந்திரமோ தந்திரமோ இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுதந்திரம்.
திருக்குறள் தொடர்பான தங்களது முன்னெடுப்புகளில் மிகவும் முக்கியமானது 2016-ல் தாங்கள் வெளியிட்ட
‘நாட்டுக்குறள்’ என்ற இசைத் தொகுப்பு. அதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்துப்பால் மக்களின் கவனத்திற்கு முழுமையாகக் கொண்டு செல்லப்படவில்லை. வள்ளுவர் என்னும் மாபெரும் படைப்புக் கவிஞரின் கற்பனை வளமும் கவித்திறனும் காட்சிப்படிமங்களாய் கண்முன் விரியும் இலக்கிய மேடை இன்பத்துப்பால், இன்றைய புதுக்கவிதைகளுக்கும் கூட வேராகவும் விதை மூலங்களாகவும் திகழும் தன்மை கொண்டவை இன்பத்துப்பால் குறட்பாக்கள்.
1848இல் இன்பத்துப்பாலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட மோன்சியர் ஏரியல் இன்பத்துப்பால் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு: மனித எண்ணங்களின் மிக உன்னதமான, ஆகத்தூய்மையான வெளிப்பாடு என்று வர்ணித்ததை இங்கே நினைவு கூறலாம்.
காதல் உணர்வுகளின் மிகத்துல்லியமான உளவியல் ஆழங்களில் மூழ்கி முத்தெடுத்த இன்பத்துப்பால் என்றும் இளமையாய் எல்லாக் காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதாய் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், வேறெந்த காலகட்டத்தையும் விட இன்றைய சமூகப் பொருளாதார, உளவியல் சூழலுக்கு மிகுதியும் தேவைப்படும் வாழ்வியல் இலக்கியமாக இன்பத்துப்பால் விளங்குகிறது.
சிந்துவெளி, கொற்கை, வஞ்சி, தொண்டி, பூம்புகார் என்று நமது தமிழ்த்தொன்மங்கள் தொட்ட இடங்களில் எல்லாம் தொலைதூர வணிக மரபுகளில் தடயங்கள், பொருள்தேடுவதற்காக தலைவன் தலைவியைப் பிரிந்து வெளியூருக்குச் செல்வது என்பது நமது அக இலக்கியங்களின் பாலைத்திணைப் பாடல்களில் அடிக்கடி பேசப்படும் உணர்வுக்களம்.
ஆயினும் முன்பு எப்போதையும் விட நாம் இப்பொழுதுதான் நிற்காமல், நிதானிக்காமல் கூடுதலான இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புரட்சி பல தனியுரிமைத் தளங்களைத் தகர்த்து நிமிர்த்தி நேராக்கி நியாயம் செய்துள்ளது. ஆனாலும், இன்னொரு தளத்தில் சாதனங்களால் கட்டமைக்கப்படுகிறது. நமது காலமும் பொழுதும் உறவுகளும் உணர்வுகளும் அவற்றின் வெளிப்பாடுகளும்.
இந்நிலையில், திருக்குறள் இன்பத்துப்பால் ஊட்டும் உணர்வுகளை, தற்காலப் பின்னணியில் புதுக்கவிதைகளாவும், நாட்டுபுறப்பாடல் வடிவிலும் அவ்வப்போது எழுதிப் பதிவிட வள்ளுவர் குடும்பத்தின் ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்’ என்ற சமூக ஊடகக் குழு (முதலில் ‘வாட்ஸ்அப்’ இப்போது ‘டெலிகிராம்’) எனக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. இல்லையென்றால் என்மட்டில், இது சாத்தியமாகி இருக்காது.
அவ்வாறு பகிர்வு செய்த பதிவுகளில், ஏழு நாட்டுபுறப் பாடல்களுக்கு இசையமைப்பாளர் தாஜ் நூர் அருமையாக இசை அமைத்தார். மிகத்தேர்ந்த பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளனர். இந்த ஏழு குறட்பாக்களுக்கு பரிமேலழகர் முதல் நாமக்கல் கவிஞர்.மு.வ. கலைஞர் மற்றும் வள்ளுவர் குடும்பத்தைச் சேர்ந்த சிற்பி ஹெலினா கிறிஸ்டோபர், அன்வர் பாட்சா வரை ஏழு உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகளைப் பயன்படுத்தினோம்.
ஏழே பாடல்களைக் கொண்ட குறும்படைப்பான, நாட்டுக்குறளில் ஊடாக இருப்பதோ ஈரடிக்குறள் பற்றிய இரண்டாயிரம் ஆண்டுகலாகப் புரிதல்கள். திருவள்ளுவரை மனிதம் பாடிய மாமனிதராய், ஒளிவு மறைவற்ற உயர்தனிக்கவிஞராய்க் கொண்டாடுவதே நாட்டுக்குறளின் நோக்கம். அதுவே அதன் உந்துவிசை. நாரதகான சபாவில் நடைபெற்ற நாட்டுக்குறள் வெளியீட்டு விழாவில் நாட்டுக்குறள் ஒலிநாடாவை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகளிடம் வழங்கினார். இது தலைமுறைகள் தாண்டி குறள் பயணிப்பதை உணர்த்தும் குறியீடாக அமைந்தது.
குறளை அடிப்படையாகக் கொண்ட தங்களின் மற்றொரு படைப்பு ‘பன்மாயக் கள்வன்’. அதன் முக்கியத்துவம் என்ன?
திருவள்ளுவரின் இன்பத்துப்பால் இலக்கிய வளத்தை சமகால நடைமுறை வாழ்க்கை மற்றும் சமகால மொழியின் ஊடாக கொண்டாடுவது குறளின் மீள்வாசிப்பிற்கும் திருவள்ளுவரை வையத்துள் வாழ்வாங்கு வாழச் சொன்ன சக மனிதராக மடைமாற்றம் செய்து அவர் குறித்த கோணல்மாணலான கற்பிதங்களைக் கட்டுடைக்கவும் ஏதுவான களமாக உதவுகிறது.
“பன்மாயக் கள்வன்” என்ற அந்த நூலின் தலைப்பே திருவள்ளுவர் தந்ததுதான் (குறள் 1258) இன்பத்துப்பாலில் ததும்பும் உணர்வுகளின் ஆழம் உண்மையில் ஒரு எதார்த்த உளவியல். என் மட்டில் ‘பன்மாயக் கள்வன்’ என்பது வேறு யாருமில்லை வள்ளுவன்தான். அறம் பேசும் ஆசானாய், பொருள் பேசும் அறிஞனாய் இன்பம் பேசும் காதலனாய் இந்த வள்ளுவனுக்குள் எத்தனை பன்முங்கள்! ஆமாம். பன்மாயக் கள்வன் என்பதில் ‘மரியாதைப் பன்மை’ இல்லைதான் ஒருமைதான். அதனால் என்ன? அதுதான் அருமை. வள்ளுவனிடம் நமக்கு இல்லாத உரிமையா?
இதுவரை வரையப்பட்டுள்ள வள்ளுவர் ஓவியங்கள்; செதுக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், எழுதப்பட்டுள்ள உரைகள் யாவும் தரும் மனத்தோற்றத்தை கொஞ்சம் நேரம் மறந்துவிட்டு திறந்த மனத்துடன், தன்னிச்சையாக, திருக்குறளைக் குறிப்பாக திருவள்ளுவர் மிக நுட்பமான படைப்புக் கவிஞனாக மிளிரும் இன்பத்து பால் குறளைப் படியுங்கள்.
வள்ளுவர் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் உணர்வீர்கள். வேட்டி கட்டியவனுடன் வேட்டியோடும் ‘பேண்ட் சட்டை’ போட்டவனுடன் அதே உடையிலும் வள்ளுவர் பேசிக்கொண்டே உடன் நடந்து செல்வது போலத் தோன்றும்.
இதோ, அங்கும் இங்கும் அலைந்து திரிகையில் அலைபேசி குறிப்பேட்டில் நான் பன்மாயக் கள்வனை வள்ளுவரிடம் வாசித்துக் காட்டுகிறேன்.
கவிதை இழுத்துச்செல்லும் போக்கில் நிகழ்காலக் காட்சிப்படிமங்கள், சொல்லாடல்கள் எனது ‘ஆண்ட்ராய்ட்; விசைப்பலகையிலிருந்து எனது விரல்களின் வழியே நழுவி இயல்பாக மின் திரையில் விழுந்தபோது வலிந்து தடுக்கவில்லை என்று அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேன்.’
அதைக் கேட்டுக்கொண்டு புன்முறுவலோடு என்னுடன் தோழமையுடன் நடந்து செல்கிறார் தோழர் திருவள்ளுவர்!.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘பன்மாயக் கள்வன்’ மூத்த எழுத்தாளர்கள் பிரபஞ்சன், மு.மேத்தா ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
சங்க இலக்கியத்தைச் சமகால இளைஞர்களுக்கான இணையவழி உரையாடலாக எடுத்துச் செல்லும் பணியைக் கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘சங்கச்சுரங்கம்’ என்ற பெயரில் தொடங்கி, தொடர்ந்து வழங்கினீர்கள். அந்த அனுபவம் குறித்து பகிர முடியுமா?
சங்க இலக்கியத்தில் பத்து பத்துப் பாடல்களாக தொகுக்கும் மரபு, பதிற்றுப்பத்தில் தொடங்கி ஐங்குறுநூறு, திருக்குறள், முதுமொழிக் காஞ்சி என்று தொடர்ந்தது. அந்த மரபையொட்டி, இணையப் பத்து என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட ‘சங்கச் சுரங்கம்’ முதல் பத்து, இரண்டாம் பத்தைக் கடந்து மூன்றாம் பத்தும் முடிவடைந்து விட்டது. சிறிது இடைவெளி விட்டு நான்காம் பத்தை தொடங்க உத்தேசித்துள்ளேன்.
வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் சுமார் 9.30 மணி வரை ஜூம் செயலி (Zoom App) மற்றும் முகநூல் நேரலை வழியாக நிகழ்த்தப்பட்ட இந்த உரையாடல் உலகத் தமிழர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் திருச்சியில் உள்ள களம் அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தன.
அணுகுமுறை அடிப்படையில் புதுமை என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் தனித்துவம். சங்க இலக்கிய பாடல் அடி ஒன்றை எடுத்துக்கொண்டு அதையொட்டிய தொன்மை, உண்மை, தொடர்ச்சி சொல்லாய்வுகள், சிந்துவெளிக் களஆய்வுகள், என் பணி அனுபவங்கள், உலகத் தமிழ் வாசகர்கள், அத்தலைப்பையொட்டிக் கேட்கும் வினாக்களுக்கான பதில்கள் என்று இந்நிகழ்ச்சி எடுத்துச் செல்லப்பட்டது.
சங்ககாலம் பாலாறும் தேனாறும் ஓடிய பொற்காலம் என்று நிரூபிப்பது உரைகளின் நோக்கம் அல்ல. சங்ககாலத்திலும் வறுமை இருந்திருக்கிறது. அதை சிறுபாணாற்றுப்படையும் புறநானூறும் சித்தரித்திருக்கின்றன என்பது போன்ற உண்மைகளை உரக்கச் சொல்வதோடு, சங்ககாலத்தில் கல்வி, பெண்கள் நிலை, முதியோர் நிலை எனப் பலவற்றையும் சமகாலக் கண்ணோட்டத்தோடு பொருத்திப் பார்க்கும் உரையாடலாக அது அமைந்தது.
நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும், சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே, சங்க இலக்கியம் சிந்துவெளியின் மென்பொருள், சங்க இலக்கியம் ஆகச்சிறந்த நகர்மைய இலக்கியம், நடுவுநிலை இலக்கியம் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளும் இந்த உரைகளில் முன்வைக்கப்பட்டது.
இந்த உரைகளில் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உண்டு. ஒன்று, பேச்சுமொழி நடை. சங்கப் புலவர்களை மெலிதான நகைச்சுவை மிளிர விமர்சித்தல். ஒவ்வொரு வாரமும் என் உரைக்குப் பின் தலைப்போடு தொடர்புடைய ஆளுமை ஒருவரை அன்றைய தலைப்பு பற்றி கருத்துரை வழங்கச் செய்தல் போன்றவை ஆகும். எழுத்தாளர் பெருமாள் முருகன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கடல் இலக்கிய ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தைன், கல்வெட்டு ஆய்வாளர் பேரா.மார்க்சிய காந்தி, நீதியரசர், கால்நடைத்துறை பேராசிரியர் நெசவுத்தொழில் புரியும் பெண்கள் எனப் பலரும் கருத்துரை வழங்கியுள்ளனர்.
இந்த உரையில் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் உருவான சித்திரங்கள், அரிய புகைப்படங்கள், புள்ளி விவரங்கள், அட்டவணைகள், வெண்படங்கள், காணொலிகள், word clouds, infographics எனப் பலவும் பகிரப்பட்டன. ‘அரங்கத்தில் இருந்து சுரங்கத்திற்கு’ என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு சங்கப்பாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ‘இன்று மாலை இவருக்கு பூமாலை’ என்ற தலைப்பில் துறைவல்லுநர் ஒருவரை அங்கீகரித்தும், உரைக் கருத்தோடு தொடர்புடைய சமகாலத்தவர் ஒருவருக்கு (உதாரணம் ராமு தாத்தா, அனிதா) உரையைக் காணிக்கையாக்கியும் மரியாதை செய்தோம்.
சங்க இலக்கியத்தோடு உளவியல் கோட்பாடுகளும் பொருத்திக்காட்டப்பட்டன. உதாரணமாக, ‘இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ’ என்ற உரையில் நம்பி நெடுஞ்செழியன் என்ற குறுநில மன்னன் இறந்தபோது, அவனுக்கு இரங்கல்பா பாடிய பேரவையில் முறுவலார் என்ற புறநானூற்றுப் புலவர், மன்னன் அவனது வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்து முடித்ததைக் குறிப்பிட்டு, இனி அவனை எரித்தால் என்ன? புதைத்தால் என்ன? என்று குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி அதை கார்ல் யூங் என்ற உளவியல் நிபுணரின் கோட்பாட்டின்படி, அமைந்த மையர்ஸ் பிரிக்ஸ் சோதனை (Myers Briggs Test Indicator)-ல் இடம்பெறும் 16 ஆளுமைப் பண்புகளோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டது.
இதேபோல், ‘இமிழ்பனிக் கடல்’ என்ற உரையில் கடலின் சிறப்பைச் சங்க இலக்கியம் எவ்வாறெல்லாம் கொண்டாடுகிறது என்பதற்கு பனிகடல், விரிகடல், மா கடல், மலி கடல், நெடும் கடல் என்று 20-க்கும் மேற்பட்ட அடைமொழிகளில் கடல் குறிக்கப்படுவதையும் 1862 அகப்பாடல்களில் 347 பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டிவிட்டு, இன்றைக்கு நாம் கடலில் இருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்பதற்கு 2050-ல் கடல், மீன்களற்ற நெகிழிக் கடலாக மாறிவிடும் என்ற சுற்றுச்சூழல் உண்மையும் சாட்சிகளுடன் முன்வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள 25க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து பங்கேற்க சங்கச்சுரங்கம் வெள்ளிவிழா உரை இந்தாண்டு மாட்டுப் பொங்கல் தினத்தன்று ‘எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு’ என்ற தலைப்பில் வழங்கப்பட்டது. அதில், திரையிடப்பட்ட ஏறு தழுவுதல் குறித்த காணொலி மிக முக்கியமானது. இந்த உரையில் மொஹஞ்சதாரோ M-312-Aவது முத்திரை, முல்லைக்கலியில் சோழன் நல்லுருத்திரன் பாடல் மற்றும் தற்கால ஜல்லிக்கட்டு (அலங்காநல்லூர் / பாலமேடு) ஆகிய மூன்றும் நேர்முக வர்ணனைப் போல் ஒரே நேர்கோட்டில் இணைவதும் எடுத்துக்காட்டப்பட்டது. இந்த உரைகளையெல்லாம் இணையத்தில் நீங்கள் பார்க்க முடியும். சங்கச் சுரங்கத்தின் முதல் பத்து ‘கடவுள் ஆயினும் ஆக’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயத்தால் அண்மையில் சென்னையில் நடைபெற்ற 44வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தனி நூலாக வெளியிடப்பட்டது. l
previous post