நீங்கள் வாசிக்க தொடங்கி விட்டால் போதும்.
அனைத்து விலங்குகளும் உடைந்து நீங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- பெடரிக் டக்ளஸ்
வலை வாசல் வருக | முனைவர். பா. சிதம்பர ராஜன், க. சண்முகம் | எஸ்.ஆர்.எம். வெளியீடு | பக்.75, | விலை ரூ.150/-
கணினி இயல் குறித்து தமிழில் நூல்கள் மிகக் குறைவு. அந்த வகையில் ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தங்களது கணினி – துறை பற்றி தமிழில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என நினைத்ததே பெரிய சாதனை. அதிவேகமாக தினம் ஒரு மாற்றம் முன்னேற்றம் கண்டு வரும் இந்தத்துறை 21ம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியின் ஆன்மாவாக திகழ்கிறது. தரவுப் பகுப்பாய்வு ((Data Analytics) மேகக் கணிமை (Cloud conputing), தரவுச் செயலாக்கம் (Data Mining) என்றெல்லாம் தமிழ்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள். ஆனால் பென்டிரைவை-விரலி என்றும், பிளாக்-செயினை தொடரேடு என்றும் தமிழ்படுத்தும்போது வியப்போடு நமக்கு சற்று வியர்க்கவும் செய்கிறது. ஆனால் சற்று பழகியபின் கணினிமயமாகி விடுவீர்கள்.
இலக்கணம் இனிது | நா. முத்து நிலவன் | பாரதிபுத்தகாலயம் | பக்.96, | விலை.ரூ.90/-
தமிழ் பேசும், எழுதும் நல்லுலகிற்கு மிகவும் தேவையான பங்களிப்பு இந்த நூல். தமிழின் புதிய தலைமுறை என்பது ‘ஆங்கலீஷ்’ அல்லது தமிழ் கலந்த ‘தங்கலீஷ்’ வாதிகளாகி நாட்களாகிறது. பத்திரிகை துறையில் இன்றைய பெரிய சிக்கல் தமிழை சரியாக பிழை இன்றி எழுதத் தெரியாத பத்திரிகையாளர்கள். இப்புத்தகம் இதுமாதிரி நபர்களுக்கு ஒரு வரம். சம்பிரதாயம் என்பதை தமிழில் குலவழக்கம் என்று எழுதக்கூடாதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த நூலில் ஒரு இடத்தில் மம்மி, டாடி என்றால் அம்மா, அப்பா என்று அர்த்தம் என எழுத வேண்டி வந்ததை கண்டு நெஞ்சு பதறியது எனக்கு. ஒரு அழகான படைப்பை எழுத்துப் பிழை கொன்று போடும். நல்ல சுவையான உணவை ருசித்து சாப்பிடும்போது கல் கடிபடுவது போலத்தான் அது. தோழர் முத்து நிலவன் தேர்ந்த பேச்சாளர், கவிஞர், ஓவியர், பாடகரும்கூட. பல்துறை வித்தகரால் மட்டுமே இலக்கணத்தை ஒரு துயர வகுப்பாகஅன்றி சுவையான பூங்கொத்தாக மணம் வீச செய்ய முடியும். அவரது மொழி இலக்கணம் நமது இளையதலைமுறையின் வாழ்வியலோடு பின்னி பிணைந்து இருக்கிறது. இன்றைய வாட்ஸ்அப் தலைமுறையை உட்கார வைத்து இந்த நூலை பாடநூலாக்கி தமிழகம் முழுதும் நாம் பயிற்சி பட்டறைகளை நடத்தினால் தமிழை காப்பாற்றலாம். பாம்பிற்கு காது கிடையாது. மகுடி ஊதுவது ஒரு பயிற்சி நடப்பு. ஆனால் நம் தமிழில் ‘கட்செவி’ என்றே பாம்பு இலக்கியத்தில் அறியப்படுகிறது. கண்ணே செவி என்பது பொருள். இப்படி துல்லிய – அதிசய தமிழ் வரலாற்று பதிவுகள் நூற்றுக்கும் மேல் இந்த நூலில் உள்ளன.
கண்ணில் தெரியும் கடவுள் | ஹைக்கூ… கவிதைகள் |தமுஎகச அறம் கிளை| பக்.80, | விலை ரூ.70/-
அறம் கிளையின் இலக்கிய பங்களிப்பு நம்மை மகிழ்ச்சி களிப்பில் ஆழ்த்தும் ஒன்று. இந்த புத்தகம் ஒரு பல மிக அசலான ஹைக்கூ கவிதைகளை உள்ளடக்கியது. புதிய கவிஞர்கள், புதிய சிந்தனை, புதிய முயற்சி என்று பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. 67 படைப்பாளிகளின் முதன் முதல் ஹைக்கூ தொகுப்பு. நிலம், நீர், ஆகாயம் / சுத்தம் செய்யும் நெருப்பு / கரோனா / என்பது என்ன ஒரு நச். விதைக்கிறான் விதை நெல்லை / பசித்த வயிரோடு / விவசாயி என்பது நம் வேளாண் சட்டத்தின் சுருக்கம். ஓடி விளையாடு பாப்பா / பாடல் ஒலிக்கிறது / ஆன்லைன் வகுப்பில் என்று இன்றைய யதார்த்தம் கவிதை ஆகிறது. இதுபோன்ற மின்னல்களுக்கு இடையே காவலரை கடித்த / கொசுவும் / அடிபட்டே செத்தது… என கொதிப்புகளும், இறந்த சடங்குகளிலும் / சாதி பார்க்கின்றன / மனித பிணங்கள் என சாட்டைகளும் உண்டு. ஹைக்கூ வகுப்பறையின் அங்கமாகி, பள்ளிக் கல்லூரிகளில் பயன்பாட்டு பாடமாகி ஆய்வுத்தாள் போலாகும்போது இச் சமூகம் புதிய கோணத்தில் படைப்பாக்கம் பெறும்… என்ற சிந்தனை உதிக்கிறது.
பொம்மைகளின் நகரம் | உதயசங்கர் | அறிவியல் வெளியீடு | பக்.60 விலை.60/-
பொம்மைகளின் நகரம் – குழந்தைகளிடையே கற்பனைத் திறனை வளர்க்கும் சூப்பர் சித்திரம். ஏழு மலையை தாண்டி, எண்பது கடலைத் தாண்டி, நெருப்பையும், நீரையும், காற்றையும், மணலையும், வானத்தையும் தாண்டி ஆடிக்கொண்டே இருக்கும் காட்டிற்கு நம்மை தன் விலங்கு சகாக்களோடு அழைத்துச் செல்கிறான் சிறுவன் தமிழ். எழுத்தாளர் உதயசங்கரின் அற்புதம். பொம்மைராஜா எனும் வில்லன் நம் நவீன கால – சுரண்டல் மற்றும் புவி அழிப்பு கார்ப்பரேட்களின் பிம்பம். அதை சிறார் மனதில் திறம்பட இந்த குட்டிக் கதை விதைக்கிறது. ‘நல்லது செய்ய அஞ்சக்கூடாது… கொடுமைகள் கண்டு துஞ்சக்கூடாது’ எனும் தேசிராஜா, பறவையின் குரல் புனைவு முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. முட்டையில் அடைக்கப்பட்ட கடல் தேவதையும் மலை தேவதையும் மீட்கப்படுவதுபோல நமது உலகில் மீட்கப்பட நிறையவே உள்ளது என்பதை நினைவூட்டும் அழகு கதை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் | முனைவர். ஜெ.ராஜா முகமது | ஜமால் முகமது கல்லூரி | பக்.262, | விலை.ரூ.120/-
விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று தன் உயிரையும் தியாகம் செய்த இசுலாமியர் பலர். ஆனால் இசுலாமியர் தேச பக்தி இல்லாதவர் என இந்துத்துவா வாதிகள் விஷப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நூலை வாசித்தபோது பல பக்கங்களை திருப்ப முடியாமல் நான் கண்ணீர் கசிந்தேன். ஆண்களை விடுங்கள், சத்தியாகிரக போராட்டத்தில் சிறை சென்ற பியாரி பீவியும் ஒத்துழையாமை இயக்கத்தின்போது சிறை சென்ற ரஹமத் பீவியும் எந்த பாட புத்தகத்திலும் இருப்பது இல்லை. திருச்சி, கரூர், திண்டுக்கல் என எல்லா ஊர் இசுலாமியரும் போராடி இருக்கிறார்கள். இந்த நூலில் சுயமரியாதை இயக்கத்தில் இசுலாமியர் எனும் அத்தியாயம் குறிப்பிடத்தக்கது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இசுலாமியர் பங்கும் வியக்க வைக்கிறது.
நன்றி ஓ ஹென்றி… |சிறுகதைகள் |
எஸ்.சங்கரநாராயணன் | சொல்லங்காடி | பக்.208, | விலை.ரூ.180/-
ஒரு நல்ல கதையின் முதல் வரியே நம்மை புதிய சூழலுக்கு பழக்கிவிடுகிறது என்றால் அந்த ஹென்றி கதையின் கடைசி வரி ஒட்டுமொத்த கதையையுமே புரட்டிப்போடுகிறது. 80களின் எழுத்துச் சிற்பியான எஸ்.சங்கர நாராயணனின் படைப்புகள் அன்று தரமான பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. இவரது கதைகளின் யதார்த்தம் நம்மை சுடும். கதையில் லாரி வந்தால் நாம் அதில் சவாரி செய்து குலுங்குவோம். வேலை நிறுத்தம் வரும் கதையில் நாம் முழக்கமிட்டு ரத்தம் கொதிக்க பதறுவோம். திருட்டு கதையின்போது இருட்டும் திருட்டும் நம் அங்கமாகிவிடும். இந்தத் தொகுப்பில் 23 மிக கச்சிதமான கதைகள் உள்ளன. பிரம்மன் ஞான வள்ளல் எனும் புனைபெயர்களிலும் அவர் எழுதுகிறார். 90 புத்தகங்கள் வந்திருந்தாலும் சிறுகதை வித்தகராகவே எனக்கு பிடித்திருக்கிறது. நேர்த்தியான தொகுப்பு. ஸவுந்தர்யலகரி கதையை படியுங்கள் ஒரு ராத்திரி தூங்கமுடியாது.
கண்மணி சோபியா | கவிஞர் புவியரசு | நந்தினி பதிப்பகம் | பக்.170, | விலை.ரூ.150/-
அறிவியல் புனைவுகளை எழுதுவது கவிஞர் புவியரசு எனும் ஆளுமைக்கு புதிதல்ல. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அபலைகளுக்கு நியாயம் சேர்க்க ஒரு அறிவியல் நாவலை எழுதிவிட முடியுமா? நிர்பயாக்களும் இன்னும் இன்னும் என்று காமக்கொடூரர்களால் ரத்தம் சிந்தும் எத்தனையோ பேரும் சீற்றம் கொண்டு ஒரு அமைப்பாக திரண்டு எழும்போது கண்மணி சோபியா நாவல் போலத்தான் நடக்கும். திறந்தவெளி வன்முறை பக்கம் பக்கமாக அரங்கேறி கவிஞரின் கோபத்தை விதைக்கிறது கண்மணி எனும் நவீன கண்ணகியின் எழுச்சிமிகு பயணம் வாசிக்க வாசிக்க நம்மன அழுக்குகளை துடைத்து ரத்தம் கொதிக்க நாவலை வீசிவிட்டு பதற வைக்கிறது. ஒரு எழுத்துக்கு அதைவிட நோக்கம் வேறு என்னவாக இருக்கமுடியும்.
நண்பர்கள் பார்வையில் எங்கெல்ஸ் | தமிழில் ச.சுப்பாராவ் | பாரதிபுத்தகாலயம் பக்.80, விலை.ரூ.75/-
‘நண்பர்கள் பார்வையில் மார்க்ஸ்’ நூலை கொடுத்த தோழர் சுப்பாராவ் , இப்போது எங்கெல்ஸின் 200வது பிறந்ததின வருடத்தில் ‘நண்பர்கள் பார்வையில் எங்கெல்ஸ்’ புத்தகத்தை தந்திருக்கிறார். உலகிலேயே நட்பிற்கு சிறந்த இலக்கணம் கண்டிப்பாக எங்கெல்ஸ்தான். அதைவிட மிக சிறப்பான விஷயம் மார்க்சியத்தை அறிவியல் பார்வையில் வரலாற்று பொருள் முதல்வாத தத்துவமாக்கிய அர்ப்பணிப்பு. இந்த நூலில் ஆறு மாமனிதர்கள் எங்கெல்ஸை நினைவு கொள்கிறார்கள். எங்கெல்ஸை சந்திக்க வாரா வாரம் வீட்டிற்கு வரும் இளைஞர் பட்டாளம், அவரது நகைச்சுவை, உற்சாகம், எல்லாம் பதிவாகி உள்ளது. எல்லாவற்றையும் விட மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பு குறித்த ஒரு நூறு சம்பவங்களை வாசிக்க முடிகிறது. பிரெடரிக் லெஸ்னர் எழுதிய எங்கெல்ஸ் குறித்து ஒரு தொழிலாளியின் நினைவலைகள் என்கிற கட்டுரை என்னை நெக்குருக வைத்தது. குறிப்பாக தன் தோழன் மார்க்ஸ் இந்தச் செய்தியை விவரிக்கும் அந்த கடிதம். இந்த நூல் ஒரு ஆவணம்.
காராபூந்தி – சிறார் கதைகள் | விழியன் | புக்ஸ் ஃபார் சில்ரன் | பக்.181, | விலை.ரூ.170/-
ஒரு பத்து வயது குழந்தைக்கு 18 கதைகள் கொண்ட புதையல் இந்த புத்தகம். விழியன் காட்டும் சிறார் உலகம் ஒரு கனவுப் பிரதேசம். உப்பங்கழி தீவுக் கடையில் தொடங்கி, கால்நடை மருத்துவமனை, பள்ளி ஆண்டுவிழா, எண்களின் உலகம், காந்தி சமாதி என்று சுற்றி திரிந்து, நாய் குட்டிகளின் பன்விருந்து, கோணங்கள் சந்தைக்கு போன கதை என விரிந்து, அந்த காராபூந்தி கதைக்கு வந்துவிடலாம். காக்காவுக்கு தினமும் காராபூந்தியை வைக்கும் நிவேதாவை திகைக்க வைக்கும் அந்த பள்ளிக் கழிப்பறை, காக்கா நம்மையும் சிலிர்க்க வைக்கிறது. புத்தகங்களின் கடைசி நொடிகள் கதையும், ஏழடி சுவர் கதையும் பேசும் செய்தி வியக்க வைக்கிறது. விழியன் குழந்தைகளின் விருப்பமான கதைசொல்லியானதில் வியப்பில்லை. காராபூந்தியை தன் அழகான ஓவியங்களால் சுவைகூட்டி இருக்கிறார் பிள்ளை. அத்திவரதர் விஷயத்தை, மின்னல்கள் என சிறார் கதை ஆக்கிய விதத்தை வியக்கிறேன்.
தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் | கி.வீரமணி | திராவிடர் கழகம் | பக்.287, | விலை ரூ.180/-
வேறு எந்த தமிழறிஞரையும் விட தமிழுக்கு அதிக பங்களிப்பை செலுத்தியவர் தந்தை பெரியார் என்பதை ஆழமாக நிறுவும் அற்புத படைப்பு இந்த நூல். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ் நாகரீகம் என நாம் இன்று நெஞ்சுயர்த்த அன்று அதற்கு அக்னி விதைகளை தூவியவர் தந்தை பெரியார். பகுத்தறிவாளராக, படைப்பாளராக, கருத்தாளராக, சிந்தனையாளராக, தன்னையும் – சமூகத்தையும் வடிவமைத்த மேதை பெரியார். தமிழ் மொழிக்கு பேச்சுக்கலை, தமிழ் இசை, தமிழ் எழுத்துக்கு பெரியாரின் பங்களிப்பு, இந்தி எதிர்ப்பு, ஆய்வு தமிழும் பெரியாரும், பதிப்பாளர் பெரியார் என விரியும் இந்த நூலின் அத்தியாயங்கள் பத்திரிகையாளர் பெரியார் தமிழுக்கு செய்த அரும் பணிகளையும் விவரிக்க தவறவில்லை. குறிப்பாக தந்தை பெரியாரின் மொழிக் கொள்கை எனும் அத்தியாயத்தை பிரதி எடுத்து நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டு விட்டு | தகாஷி நாகாய் | த: சூ.ம.ஜெயசீலன் | செயின்ட் பால்ஸ் | பக்.204, | விலை.ரூ.190/-
நாகாசாகி அணுகுண்டு கொடூரத்தில் சிக்கிய மருத்துவர் தகாஷி நாகாய். மருத்துவ ஆராய்ச்சியாளர் லுக்கேமியா நோய் வித்தகர். படுத்த படுக்கை ஆகிறார். மனைவியை இழந்தார். குழந்தைகள் இரண்டும் பிழைத்தன. எப்போது வேண்டுமானாலும் இறந்து விடுவார் என்கிற நிலை. தன் குழந்தைகள் வளர வேண்டிய முறை… அவர்களிடம் உரையாடி அவர்களது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசும் புத்தகம். ஆனால் போர் அனாதை ஆக்கிய பல லட்சம் குழந்தைகள் பற்றிய அரசியலையும் கல்வி குறித்த அவசர தேவைகளையும் இந்த நூல் மிக சிறப்பாக விமர்சனங்களையும் முன் வைக்கிறது. கல்வி, குழந்தை வளர்ப்பு, அதில் அரசின் பொறுப்பு என்று எல்லாவற்றையும் கிழிக்கும் கசப்பு மருந்து இந்த நூல். தோழர் சூ.ம.ஜெயசீலன் தனது ஜப்பானிய பயணத்தில் வாங்கி நமக்காக மொழிபெயர்த்துள்ள நூல். குழந்தை பராமரிப்பு இல்லம், தங்கும் விடுதி போன்றவை எப்படி இருக்க வேண்டும் என உணர்த்தும் பக்கங்கள் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவை.
101கேள்விகளும் 100 பதில்களும் | முனைவர் தினகரன் | அறிவியல் வெளியீடு | பக்.102, | விலை.ரூ.80/-
கொசு !ஓ’ வகை ரத்தம் உள்ளவர்களைதான் அதிகம் கடிக்கும். பறவைகளிடம் விவாகரத்து செய்யும் பழக்கம் உள்ளது. இயற்கையாக விட்டால், சேவல்களை விட கோழிகள் அதிக நாள் வாழும். இப்படி பலபல அரிய தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. அதைவிட காலம் காலமாக நிலவும் பல பொய்களை இந்த புத்தகம் உடைக்கிறது. பதில்களின் சுவாரசியங்களை விட சில கேள்விகள் அதிர்ச்சி மின்னல்களாக உள்ளன. பைல்ஸ்சுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது. செத்த பிறகு என் உடல் என்ன ஆகும் என்பதிலிருந்து வௌவால்களால் கொரானா பரவுமா என்பது வரை பல கேள்விகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. மாட்டுசாணம் கதிர்வீச்சை தடுக்குமா, மாட்டு மூத்திர மாத்திரை சத்து மாத்திரையா என்றெல்லாம் கேள்விகள். அதற்கான பதில்களை டாக்டர் தினகரன் சொல்லும் விதம் ஒரு லெமன் டீ குடிப்பது போல சுவையானது. அந்த 101வது கேள்வி டாப் டக்கர்.
நீல மரமும் தங்க இறக்கைகளும் | சரிதா ஜோ | புக்ஸ் ஃபார் சில்ரன் பக்.64 விலை ரூ.75/-
கதை சொல்லி சரிதா ஜோ தீவிர உழைப்பாளி. ஈரோட்டின் நம்பிக்கை ஒளி. அவரது முதல் சிறார் கதை தொகுப்பு இந்த புத்தகம். எட்டு கதைகள். எட்டு ரகம். எட்டு வகை ஆனந்தம். சிறார் இலக்கிய படைப்பாளிகளில் பெண்கள் குறைவு. அதிலும் ஒரு ஆசிரியை.
ஆனால் சிறார் கதை எனும் கதை அளவு 250 சொற்கள் அல்லது உயர்ந்தபட்சம் 500 சொற்கள் எனும் அளவீட்டை எல்லாம் சரிதா தூக்கி எரிகிறார். கதைபோகும் சுவாரசியத்தில் அதன் நீளம் குழந்தைகளுக்கு உறுத்தாது. முதலில் வரும் நிலாவில் வடைசுடும் பாட்டி கதை முதல் வைத்தியர் தாத்தா கதை எனும் வானவில் கதை வரை இயற்கை அறிவியல் அறிவியல் ஃபேண்டசி என விதத்திற்கு ஒன்றாக தன் கதைகளை மிளிர வைத்திருக்கிறார்.
நம்பிக்கை தரும் இதுபோன்ற புதிய படைப்பாளிகளை தேடித்தேடி கண்டுபிடித்து வெளியிடும் புக்ஸ் ஃபார் சில்ரன் பாராட்டப்பட வேண்டிய உழைப்பை நல்கி உள்ளது.
அப்பாவின் நாற்காலி (கவிதைகள்) | வளவ. துரையன் | விருட்சம் | பக்.156,| விலை.ரூ.120/-
வளவ. துரையன் 1967 முதலே இயங்கி வரும் படைப்பாளி. அவரது சுமார் 150 கவிதைகள் கொண்ட தொகுப்பு. விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. பல கவிதைகள் மிகவும் எளியவை. பாதி வயிறுதான் நிரம்பி இருக்கும் / பக்குவமாய் தூங்கக் / கற்றுக் கொண்டது குஞ்சு என்பன போன்ற அழகான அம்சங்கள் பல கவிதைகளில் காணலாம். பொதுவாக தனிமனித அனுபவ சாரலாக கவிதைகள் நம்மை நனைக்கின்றன.கடாவெட்டிக் காதுகுத்தும் முனீஸ்வரனும், பூச்சிக்கொல்லி வயலை பார்த்து முறைக்கும் அய்யனாரும், நமக்கு கவிதை படைக்கிறார்கள். ராமருக்கு கோவில்… எங்க தெருவுக்கே வராத சிவனும் பெருமாளும்… எங்களுக்கு பாவாடைராயனும், பச்சைவிழி அம்மனும், காத்தவராயனும், காளியாத்தாவும் போதும் என்கிறார். நல்ல கனமான முயற்சி.
உரக்கப் பேசு | சுதன்வா தேஷ்பாண்டே |
த: அ.மங்கை | புதிய கோணம் | பக்.359, | விலை.ரூ.340/-
இது மரணத்தின் கதை அல்ல. சப்தர் ஹஷ்மியின் ஒளிமிக்க வாழ்வின் கதை. சுதன்வா தேஷ்பாண்டே ஒரு நடிகர், இயக்குநர், புதுடில்லியில் ஜனநாட்டிய மாஞ்ச் குழுவின் ஒருங்கிணைப்பாளர். கால்நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் தமிழ் நாடக அறிஞர் அ.மங்கை. இருவரும் சப்தர் ஹஷ்மியின் பேராட்ட வாழ்வை நமக்கு முன் நிறுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தின் அரசியலை உரக்கப்பேசும் நவீன வீதி நாடகங்களின் உருவாக்கமும் போராட்டமும் வாசிக்க வாசிக்க நாம் செதுக்கப்படுகிறோம். மக்கள் படைப்பு என்பது படைப்பாளி, பார்வையாளன், இருவரையுமே பங்கேற்பாளனாக்கி விடுகிறது. அந்த வகை நாடகங்களின் நுண்ணிய தகவல்கள் ஆனால் கொடிய அரசியல் கொலையினால் இடைநிறுத்தப்பட்ட சப்தரின் வீதி நாடக எழுச்சியை மீண்டும் எழுந்து தொடர்ந்த மாலாஸ்ரீனம் குழுவினரின் எழுச்சி ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என நம்மை ஆர்பரிக்க வைக்கிறது. இன்றைய பாசிச அரசியல் சூழலில் உரக்கப் பேசப்பட வேண்டிய படைப்பு இது.
l