இலக்கிய வாசலுக்கான சாவியை ஒரு வேதியியல் புத்தகம் வழங்கும் என்று எழுதினால் யார் நம்புவார்கள்?
தியாக பூமி ஏட்டில் கவிதையைப் பார்த்தபின், திரு. சி.கோபாலனை அவர் வசித்து வந்த அறைக்குச் சென்று சந்திக்க தி.நகர் சென்ற போது, கல்லூரிப் படிப்புக்கு அவரிடமிருந்து பெற்றுச் சென்ற வேதியியல் புத்தகம் ஒன்றைத் திருப்பித் தர நின்று கொண்டிருந்த கிறித்துவக் கல்லூரி மாணவரான அவர் என்னிலும் ஐந்து ஆண்டுகள் மூத்தவர். அந்தப் புத்தகத்தை நான் வாங்கிக் கொண்டேன். பின்னர் நான் வீடு திரும்பிய திசையிலேயே அவரது திரும்புதல் நடையும் இருக்க, அன்று வாய்த்த பரஸ்பர பரிச்சயத்தில் அன்றைய நடையை இலக்கிய வெளியில் நடக்க நேர்ந்தது. அதுவரை அறியாத படைப்பாளிகள், சிற்றிதழ்கள் என்று விரியத் தொடங்கியது வாசிப்பு. அந்த மனிதர் சந்திரமௌலி, வேறு யாருமல்ல, பின்னர் நவீன விருட்சம், இதழ் ஆசிரியர் என்று அறியப்பட்ட அழகிய சிங்கர் தான்!
மேற்கு மாம்பலத்தில்தான் அழகியசிங்கர் வீடும். அதனால், மாலை நேரங்களில் அவர் என்னைத் தேடி வந்தாலும், அவரைத் தேடி நான் போனாலும் அந்த இடைப்பட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தைத் திரும்பத் திரும்ப அளந்து பார்த்த நாட்கள் சுவாரசியமானவை. அதிலிருந்துதான் இலக்கிய அமைப்பு உருவாக்கியது, கையெழுத்து பத்திரிகை தொடங்கியது, பின்னர் அச்சிலும் ஓர் இதழைக் கூட்டாகக் கொணர்ந்தது. இலக்கிய சிந்தனை கூட்டங்களில் ஈர்ப்போடு திரிந்தது. தேவநேய பாவாணர் நூலக மேல் தளத்துக் கூட்டங்களில் தலையைக் காட்டியது….. பிரபல பத்திரிகையாளரை அவர் அலுவலகத்திற்குள் நுழைந்து கேள்வி கேட்டுத் துரத்தப்பட்டு வெளியேறிய கதையும் உள்ளடங்கிய காலமது.
ஞாபகம் என்ற சிறுகதை. வண்ணதாசன் அவர்கள் எழுதியது. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் அவசரத்தில் மறந்துபோன டிபன் பாக்ஸ் எடுத்துக் கொண்டு போக மீண்டும் அங்கே செல்கிறார் அந்தப் பெண்மணி. நேரம் கடந்தும் அமர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் இன்னோர் ஊழியரைப் பார்க்கிறார். தனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல், அவருக்கு வீடு திரும்பும் ஞாபகம் எப்போது வரும் என்று கதை முடிந்த நினைவு. விவரிப்புகளில் அவரிடம் ஆழ்ந்த முதல் அனுபவம் அது. டிரம்மில் வைத்திருக்கும் தண்ணீரை அங்கிருக்கும் தம்ளரில் பிடித்து அருந்தும் போது, ‘தம்ளரில் திரித்திரியாகக் கலகலக்கிற தண்ணீர்’ என்பது போல் வரும் வாக்கியம் அப்படி ரசிக்க வைத்தது. அதன் பிறகு நூலகங்களில், குறிப்பாக, பித்தளை டிரம்மிலிருந்து தண்ணீர் எப்போது பிடித்து அருந்தும் போதும் வண்ணதாசன் அருகே இருந்த அதை வருணித்துக் கொண்டே இருப்பதாகப் படும்.
அதுவரை வாசித்த கதைகள் போல் இல்லாத பாணியில் சொல்லப்படும் கதைகளைப் பின்னர் தேட வைத்தது இத்தகைய வாசிப்பு அனுபவங்கள். கூடவே, கல்லூரியில் தமிழ்த் துறை ஆசிரியர்களோடு ஏற்பட்ட நெருக்கமான உறவு நிறைய அனுபவ செல்வம் ஈட்டிக் கொடுத்தது. வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தில் செயல்பட்ட காலத்தில், பாரதி இன்னமும் நெருக்கமான நேரம். அதன் அரசியல் காரணங்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை, ஆனால், பாரதியை இன்னும் அருகே நெருங்க வைக்க கல்லூரிச் சூழலும் சிறப்பான பங்களிப்பு செய்தது.
புகுமுக வகுப்பு சேர்ந்த நேரத்தில் தேசத்தில் அவசர சட்டம் அமலுக்கு வந்திருந்தது. ஜூன் 1975! பள்ளிக்கூட வாழ்க்கையில் பழைய காங்கிரஸ் ஈர்ப்பு. ஆனாலும், இந்திரா காந்தி மீதான மதிப்பு. அவசர சட்டம் குறித்த கேள்விகளை, கல்லூரியில் தற்செயலாக ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் வந்திருந்த கட்டுரை ஒன்று எழுப்பியது. கட்டுரையின் தலைப்பே சர்வாதிகாரி என்பது தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முதல் பக்கங்கள் பெரும்பாலும் குறுக்கே ‘தணிக்கை செய்யப்பட்டது’ என்ற எழுத்துகள் குறுக்கே ஒட்டப்பட்டு வெண்மையாகவே காட்சியளித்தது.
துக்ளக் இதழில், திரை விமர்சனம் (விமர்சனங்கள், போஸ்ட்மார்ட்டம் என்ற தலைப்பில் தொடங்கி முடியும் இடத்தில் கீழே டாக்டர் என்று போட்டு வரும்) பக்கத்தில், வேண்டுமென்றே பழைய திரைப்படமான ‘சர்வாதிகாரி’ எடுத்து வைத்துக்கொண்டு மறைமுகமாக சொல்ல வேண்டிய அரசியல் செய்திகளை வெளியிட்டிருந்தார். வித்யார்த்தி பரிஷத் அமைப்பு, மகாகவி பாரதி முற்றுப்பெறாமல் விட்டுச் சென்றிருந்த (பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர்) வீர சிவாஜி தனது சைனியத்திற்குக் கூறியது என்ற நெடுங்கவிதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க ஒரு போட்டி அறிவித்தது. சென்னை அண்ணா சாலை நூலகத்தில் நடந்த கூட்டத்தில் சீருடையில்லாத சாதாரண உடையில் ரகசிய குறிப்புகள் சேகரிக்கும் காவல் துறை ஆட்கள் வந்து விசாரித்தது புதிய அனுபவம்.
கல்லூரியில் இலக்கிய விழாவிற்கு பாரதி பற்றி உரையாற்றும் ஒருவரை அழைப்போம் என்று துறைத் தலைவர் குருசுப்பிரமணியன் அவர்களிடம் கேட்க, சுராஜ் அவர்களை சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி தமிழ்த்துறை நிகழ்வில் பங்கேற்கக் கண்டதும், கேட்டதும் பேரானந்தம் தந்தது. வெண்ணிற ஆடை வேணுகோபாலன் என்று அறியப்பட்டிருந்த ஆசிரியர் வேணுகோபாலன் (இந்த ஆடையை உங்கள் யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன், இதை வெண்மையாக பராமரித்துப் பயன்படுத்துவது அதிக செலவு வைப்பது என்று சொல்வார்) அவர்கள் பாரதியை மேலும் ஆழமாகக் கற்கத் தூண்டினார்.
அவரோடு விவாதங்கள் வகுப்பறையில் மட்டுமின்றி அதற்கு வெளியேயும் சூடாக நடக்கும். கண்ணதாசனைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய வகுப்பில் அவரோடு மல்லுக்கு நின்றது. பின்னர் வெளியே வந்தபோதும் தொடர்ந்தது. கவிஞர் வாலி இவரோடு ஒரே அறையில் தங்கி இருந்தவர் என்பது ஒரு முறை சொல்லி இருந்தார் என்பதால், வாலி மட்டுமென்ன அவரது பாடல்களிலும் சிக்கலான வரிகளை எடுத்துக் காட்டவா என்று நடக்கும் சண்டைகள். ஆனால், பின்னாளில், பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் மயிலை குளக்கரை அருகே ஓரிடத்தில் வெளியே கரும்பலகையில் வேணுகோபாலன் அவர்களது பெயரைப் பார்த்து உள்ளே சென்றபோது, அவர் உரையில் பாரதியும், சிவ வாக்கியர் உள்ளிட்ட சித்தர்களும் தெறிக்கக் கேட்டது நுட்பமான ஒரு கேள்வி ஞானத்தைப் புகட்டியது. ‘பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டு இருக்குதோ’ என்று அவர் முழங்கியது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
ஒரு பக்கம் வெகு ஜன இதழ்களை வாசிக்கும் வாய்ப்பும் கல்லூரி காலத்தில்தான் இலகுவாக வாய்த்தது. இன்னொரு பக்கம், வெறும் ரசனை சார்ந்த வாசிப்பு என்பது அரசியல் சமூகப் பொருளாதார அம்சங்களின் ரசனை சார்ந்த வாசிப்பாக உள்ளறியாமல் மாறிக் கொண்டிருந்தது.
அலுவலக ஊழியர் கிளப் என்று எழுபதுகளில் புத்தக வாசிப்பு தீவிரமாக இருந்த காலம் ஒன்று இருந்திருக்கிறது. என் சித்தப்பா டி. கிருஷ்ணசாமி அவர்கள் தமது அலுவலக சக பணியாளர்கள் வாசிக்கும் வார இதழ்கள் அனைத்தும் தமது பொறுப்பில் புத்தம் புதிதாக வாங்கி அந்தந்த தினத்தில் அலுவலகத்திற்கு எடுத்துக்கொண்டு போவார். அதற்குமுன் காலை ஆறரை மணிக்குமுன் நானும் என் அண்ணன் தம்பி மூவரும் நேரே சித்தி வீட்டுக்குச் சென்று விடுவோம். கல்கி, குமுதம், விகடன் என எந்தெந்த புத்தகம் எந்தெந்த கிழமையில் வரும் என்பது மனப்பாடம். சுஜாதா தொடர்களை உடனுக்குடன் போட்டிபோட்டு வாசிக்கத் தொடங்கியது அப்போதுதான். மிக எளிதாகக் கதை சொல்லும் நேர்த்தி, எழுத்து நடை, இளைஞர்களைக் கவரும் சில போதையான விவரிப்புகள் என பெரிதும் ஆட்கொண்டிருந்தார். அவரது நாவல்களில், குறுகுறுப்பான உரையாடல் மொழி, அதற்கேற்ற ஜெயராஜ் ஓவியங்கள் எல்லாம் மீறி, அரசியல், சமூக விஷயங்கள் குறித்த தாக்கம் ஆழப் பதியவே செய்தது.
‘நில்லுங்கள் ராஜாவே’ நாவல், சோசலிஸ்ட் நாட்டு அதிபரை அயல் நாட்டு விஜயத்தின் போது அங்கே வைத்துக் கொல்ல, சி.ஐ.ஏ. செய்யும் சதி என்னும் முடிச்சு வைத்து எழுதப்பட்டிருந்தது மிகவும் கவர்ந்த ஒன்று. ராஜா என்ற தொழிலாளி பாத்திரம் அதில் முக்கியமானது, அவரை வைத்து முன்னெடுத்து நகரும் கதையின் மர்ம முடிச்சு சுவாரசியமானது. எங்க வெச்சு பார்த்தேன் என்ற வாக்கியத்தில், அந்த வெச்சு என்பதை வைத்து அவர் நெல்லையைச் சார்ந்தவராக இருப்பார் என்று ஊகம் சொல்வார் துப்பறிவாளர் கணேஷ். உதவியாளர் வசந்த் அசந்து போவார். அதற்குமுன் காரில் செல்லும்போது, வசந்த், ‘நில்லுங்கள் ராஜாவே என்னைக் கொல்லுங்கள் ராஜாவே’ என்று ரைமிங்காகப் பாடுவார். உடனே கணேஷ், கொஞ்சம் நிறுத்துங்கள் ராஜாவே என்பார் என எழுதி இருப்பார் சுஜாதா. சிக்கனமான உரையாடல், காட்சிப்படுத்தலின் வெளிச்சம் அந்த நாவலில் சிறப்பாக அமைந்திருக்கும். மூத்திர சந்து, பலாப்பழ வாசனை என்றதும், பாண்டி பஜாரில் முக்கிய நெரிசல் பகுதியைக் கண்டுபிடித்துப் போய்க் கதவைத் தட்டித் துப்பு துலக்குவார்கள். அவரது ‘நிர்வாண நகரம்’ வேறு சில காரணங்களுக்காக ஈர்த்தது. இதற்கிடையே அவரது சிறுகதைகளிலும் ஈடுபாடு கூடிக் கொண்டிருந்தது. வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள வீட்டிலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்தது. அண்மையில் மறைந்த என் தம்பி சுரேஷ் எனும் ராஜூ, சுஜாதாவின் சில கதைகளை அப்படியே வரிக்கு வரி போட்டி போட்டு சொல்லிக் கொண்டிருப்பான். அப்படி வாசித்த நாட்கள் அவை.
ஆனால், அழகிய சிங்கரோடு ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டு இலக்கிய சிந்தனை கூட்டத்திற்குப் போகத் தொடங்கிய போது, இன்னும் ஆழமான வாசிப்புக்கான விதைகளை, முன் பின் அறிந்திராத பலரும் தூவிக்கொண்டே இருந்தனர். குமுதம் இதழில் வாசித்த நெருப்பு கதையை, அதற்கு அடுத்த மாதக் கூட்டத்தில் உரையாற்றியவர் விவரித்த விதம் நுட்பமான வாசிப்பு குறித்த புதிய திறப்புகளை நோக்க வைத்தது. எப்பேர்பட்ட கதை அது…
ஆர்.சூடாமணி என்னமாக எழுதி இருந்தார் அதை… சமூக அடுக்குகளின் கீழடுக்கில் ஒடுக்கப்பட்டவரின் மூச்சுக்காற்று ஒலித்த கதை… l