இந்நூலினை எழுதியவர் “மார்க்சிஸ்ட்” தமிழ் மாத இதழின் ஆசிரியர் தோழர். என். குணசேகரன் ஆவார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சி. பி. ஐ,(எம்) மின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர். ஜி. இராமகிருஷ்ணன் கூறும் போது “புரட்சிக்கு முந்தைய கட்சிக்கட்டுமானம், புரட்சிக்குப்பிறகான ரஷ்யாவில் சோசலிசக்கட்டுமானத்திற்கு லெனின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதாரக்கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. நூலாசிரியர் லெனின் பற்றியும், ரஷ்யப்புரட்சி பற்றியும் எழுதுகிறபோது, தற்கால உதாரணங்களை ஒப்பிட்டு எளிமையாக குறிப்பிடப்பட்டிருப்பது லெனினின் பங்களிப்பையும், ரஷ்யப்புரட்சியையும் வாசகர்கள் உள்வாங்கிக்கொள்ள இந்நூல் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.”
இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு தலைப்பின் கீழும் கூறியுள்ள கருத்துகளில் முக்கியமானது மட்டும் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு தனிமனிதருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் தேவை என்பதுபோல, ஒரு சமூகம் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருக்க வேண்டுமென்றால் முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு சமூகம் தேவை. அதுவே சோசலிஸ சமூகம். அதை அடைவதற்கான வழியைக்காட்டுவதே லெனினியமாகும்.
முதலாளித்துவமானது மக்களைவிட மூலதனத்தை பாதுகாப்பதிலும், வலுப்படுத்துவதிலும்தான் கவனம் செலுத்தும். இன்றைக்கும் மூலதனப்பேரரசுகளாக உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், உலகளாவிய உழைக்கும் மக்களுக்கும் நீடித்துக்கொண்டிருக்கும் பகைமையை சரியாகப்புரிந்துகொள்ள லெனினது எழுத்துகள் வழிகாட்டுகின்றன.
லெனின் மார்க்சியச் சிந்தனையை சுவீகரித்துக்கொண்டது அவரது வாழ்வில் முக்கியத் திருப்பமாகும். விளாதிமிர் இலியச் 1870 ஆம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள சிம்பிர்ஸ்க்கில் பிறந்தார். இவர் மார்க்சியத்தை வாசிக்கத் துவங்கி, மூலதனம் நூலையும் உள்வாங்கி, தனது 19 வயதில் மார்க்சிய மேதையாக உருவெடுத்தார். லெனின் தனது 20 வயதினை எட்டுவதற்கு முன்னதாகவே மார்க்ஸ், எங்கெல்ஸ், நூல்களை மட்டுமல்ல, அவற்றினை சமகால பிரச்சினைகளோடு பொருத்திப்பார்க்கும் அறிவையும் பெற்றிருந்தார். மார்க்சிய நூல்கள் எதையும் நாட்டிற்குள் அனுமதிக்காத கடும் அடக்குமுறை சூழலிலும்கூட, இந்நூல்களை ரகசியமாகப்பெற்று தனது சிந்தனையை வளப்படுத்திக்கொண்டார். அதுவும் பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகள் லெனினுக்கு தெரியுமாதலால் பல நூல்களை மூல மொழிகளிலே கற்றறிந்தார்.
காரல்மார்க்சும், எங்கெல்சும் முதலாளித்துவம் இயங்குகிற தன்மையையும், அதன் சுரண்டலையும் வெட்ட வெளிச்சமாக்கி அம்பலப்படுத்தினர். அத்துடன், பாட்டாளி வர்க்க உலகப்புரட்சி, கம்யூனிச லட்சியங்கள் குறித்தான பொதுவான கோட்பாடுகளை உருவாக்கினர். இவை அனைத்தையும் லெனின் உள்வாங்கிக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கில் குறிப்புகள் எடுத்தார். இவரது வாசிப்பு உழைக்கும் வர்க்க விடுதலைக்கான தேடலை பிரதானமாகக்கொண்டது. லெனின் வாழ்ந்த 54 ஆண்டுகால வாழ்க்கையில், அவரது வாழ்க்கையின் முதல் பகுதி, புரட்சி இலட்சியத்தை வடிவமைத்த காலம் அல்லது சோசலிஸப்புரட்சியை கருக்கொண்ட காலமாகும். இதற்கு அடுத்தது, அவரது வாழ்நாள் கட்டம், அதாவது புரட்சிகர இலட்சியத்தை நடைமுறைப் படுத்துவதற்கான பெருவாழ்வாக அமைந்தது. அவரது இறுதிக்காலம் ஒரு சோசலிஸ முன்மாதிரி அரசைக் கட்டமைத்த காலமாக அமைந்தது. ரஷ்யாவில் ஆளும் வர்க்கங்களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு லெனின் பல உத்திகளை உருவாக்கினார். ஒரு புரட்சிகர போர் வியூகமாக முன்வைக்கப்பட்ட அந்த உத்தி, தொழிலாளர்-விவசாயி வர்க்கக் கூட்டணி என்பதாகும். அது, அன்றைய புரட்சிகர போரில் வெற்றி பெறுவதற்கான சரியான உத்தியாக அமைந்தது.
லெனினுக்கு 17 வயதிருக்கும்போது, அவரது சகோதரர் அலெக்ஸாண்டர் அன்றைய மன்னனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவமானது லெனினிடம் பெரும் தாக்கத்தை எற்படுத்தியது. உழைக்கும் மக்களை கொடுங்கோன்மை ஆட்சியின் அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கு போராடவேண்டும் என்கிற வேட்கையை லெனின் மட்டுமல்லாது பல இளைஞர்களிடமும் இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்தது.
அன்றைய ரஷ்யாவில் கிராமப்புற அமைப்பு வலுவாக இருந்தது. நிலங்களில் கம்யூன் எனப்படும் கூட்டான உடைமை பரவலாக இருந்தது. இதனை முன்வைத்து இந்த கூட்டான உடைமையை அப்படியே முன்கொண்டு சென்று பொதுவுடைமையாக மாற்றிவிடலாம் என்ற கருத்தினை நரோத்தினிக்’ இளைஞர்கள் கொண்டிருந்தனர். அதாவது, ஜார் மன்னனை வீழ்த்தி முதலாளித்துவம் உருவாகி, அதன்பிறகு சோசலிஸப்பயணத்தை தொடர்வதைவிட நேரடியாக விவசாயிகளை மட்டும் முன்கொண்டு சென்று சோசலிஸ இலக்கை அடைந்துவிடலாம் என நம்பிக்கை கொண்டிருந்தனர். இச்சூழலில், ரஷ்ய புரட்சி இலக்கினை அடைய அன்று செல்வாக்கு செலுத்திய சித்தாந்தங்களுக்கு எதிராக கருத்தியல் தளத்தில் போர் நடத்த வேண்டியிருப்பதை லெனின் உணர்ந்தார். நரோத்தினிக்குகள் எனப்படுபவர்களின் செயல்பாடுகள் உண்மையில் ஜார்அரசின் கைகளை வலுப்படுத்தவும், கிராமப்புறங்களில் குலக்குகள் எனப்படும் நிலப்பிரபுத்துவத்தின் பிடியினை வலுப்படுத்தவும்தான் பயன்படும் என்று “மக்களின் நண்பர்கள் யார்?” எனும் தனது நூலில் விமர்சித்தார். இதற்கிடையே 1892-ல் லெனின் தான் சட்டம் பயின்று வந்த கஸன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார், இருந்தபோதிலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு சென்று தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார். பின்னர் அத்தேர்வில் லெனின் வெற்றிபெற்று வழக்கறிஞராகி புரட்சிகர அரசியலுக்கு பலம் சேர்க்கிறார். 1898-ல் மார்க்சிய அறிவுத்திறனும், உழைக்கும் மக்கள் விடுதலைக்கான இலட்சியப்பிடிப்பு கொண்டவருமான நடேஷா குரூப்ஸ்கயாவினை மணந்துகொண்டார். அப்போது உழைக்கும் மக்கள் விடுதலைக்குழு’ என்ற அமைப்பு இயங்கி வந்தது. பிளக்கனாவ் உள்ளிட்டவர்கள் அதனை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். இந்த அமைப்பு வெளிநாட்டிலிருந்து இயங்கி வந்தாலும், மார்க்சியநூல்கள் மொழிபெயர்ப்புப்பணி; அவற்றை ரஷ்யாவிற்குள் கொண்டு செல்லும் கடினமான பணி; நரோத்தினிய தத்துவத்தை எதிர்த்து போராடும் பணி; ஆகியவற்றை இடைவிடாது செய்து வந்தது. இந்தப்பின்னணியில்தான், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த மார்க்சிஸ்ட் குழுக்களை இணைக்கும் பணியில் லெனின் ஈடுபட்டு வந்தார். அவற்றை இணைத்து “தொழிலாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக்குழு” அமைக்கப்பட்டது. அதன் சார்பில் “உழைப்பாளர் லட்சியம்” என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது.
ரஷ்ய சமூகம், எத்தகைய வர்க்கங்களையும், வர்க்க முரண்பாடுகளையும் கொண்டு இயங்கி வருகிறது என்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகள் மார்க்சியத்தின் வழியாக அறிந்துகொள்ள முயன்றனர். இந்தச் சூழலில் ஜனநாயகத்தை முதலில் கொண்டு வருவதற்கான எண்ணங்களும் போராட்டங்களும் எழுந்தன. கம்யூனிஸ்டுகள் அவற்றை முன்வைத்ததோடு, சோசலிஸ இலட்சியத்தை ரஷ்ய பிரச்சினைக்கான தீர்வாக முன்வைத்தனர். மார்க்சியத்தின் போப்பாண்டவர்’ என்று வர்ணிக்கப்பட்ட ஜெர்மானிய சமூக ஜனநாயக்கட்சியின் மூத்தத்தலைவரான காவுத்ஸ்கி, சோசலிஸத்திட்டம் ரஷ்யாவின் அன்றைய சூழலுக்கு பொருந்தாது என்றார். லெனினிய சிந்தனைகள் தற்கால மனித வாழ்க்கையின் பல கூறுகளை ஆய்வு செய்துள்ளது. தத்துவம், பொருளாதாரம், சமூகம், அரசியல் என பல துறைகளில் புதிய சிந்தனைகளை பதித்திருக்கிறது. லெனினியம் இன்றைய உலகின் பிரச்சினைகள் அனைத்திற்கும் உடனடி தீர்வினைச் சொல்லவில்லை. ஆனால், மனித சமூகத்தின் உண்மையான விடுதலையை, அதனை சாதிக்கும் அணுகுமுறையை வழங்குகிறது.
லெனினுடைய போராட்டங்கள் இதுவரை யாரும் கண்டிராதவையாக இருந்தன.
• உறுதியான புரட்சிகர இலக்கை நிணயிப்பதில் பெரும் போராட்டம்-
• அந்த இலக்குடன் முரண்படுகிற பலரோடும், பல சிந்தனைகளோடும் போராட்டம்-
• உறுதியான புரட்சிக்கட்சியை நிராகரிக்கிற எண்ணம் கொண்டோரை எதிர்த்துப்போராட்டம்-
இவ்வாறு பன்முகப் போராட்டங்களை ஏக காலத்தில் நடத்தினார்.
லெனின் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்து வந்தாலும், ரஷ்யக் காவல்துறையின் கண்காணிப்பிலேயேதான் இருந்தார். எனினும் இயக்கத்தோழர்களை சந்திப்பது, ரஷ்யப்பொருளாதாரம், விவசாயம், உலக நிலை குறித்த ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். நிலப்பிரபுக்களும் அரசாங்கமும் விவசாயிகளை அடிமைத்தனத்தில் வைத்திருப்பது, ரஷ்யா எட்டியுள்ள முதலாளித்துவ வளர்ச்சி போன்றவற்றில் தனது பார்வையை வெளியிட்டார். இயக்கத்தின் அன்றைய கடமைகளையும் அவர் வரையறுத்தார். தொழிலாளர் வர்க்கக்கட்சியின் உடனடிக்கடமையானது, கொடுங்கோன்மை ஆட்சியை வீழ்த்துவதும் அரசியல் சுதந்திரத்தை சாதிப்பதும்தான் என்று வலியுறுத்தினார்.
லெனினுடைய அரசியல் சிந்தனை – அரசியல் செயல்பாடுகளானது புரட்சிகர இயக்கம் அடுத்து எங்கே, எவ்வாறு செல்ல வேண்டும் எனும் கேள்வி எழுந்தது. அதுவே என்ன செய்ய வேண்டும்? நூலாக வெளிவந்தது. பின்னாளில் ஸ்டாலின் இந்த நூலைப்பற்றிக் கூறுகையில், மார்க்சியத்தின் அடிப்படைக்கோட்பாட்டை அழுத்தமாக வலியுறுத்துகிறது என்கிறார்.
1898ஆம் ஆண்டு கட்சி துவங்கப்பட்டு அதனையொட்டி மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் கட்சிக்கு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி என பெயரிடப்பட்டது. கட்சியின் உறுப்பினர் என்பவர் கட்சியின் அமைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டார். ஆனால், மார்ட்டாவ் போன்றவர்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் இருந்தால் போதும் எனும் கருத்தில் இருந்தார். அப்போது நடைபெற்ற தேர்தலில் லெனினுடைய கருத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை பிரதிநிதிகள் வாக்களித்ததினால் அவர்கள் போல்ஷ்விக்குகள்’ எனவும், தேர்தலில் எதிர்த்து நின்றவர்கள் குறைவான வாக்குகளைப் பெற்றதால் மென்ஷ்விக்குகள்’ எனவும் பெயர் ஏற்பட்டது. ஆளும் வர்க்கத்தினரின் ஆட்சியை வீழ்த்தி, உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இருக்கிற ஒரே ஆயுதம் கட்சிதான். உழைக்கும் மக்கள் அரசை ரஷ்யாவில் அமைப்பதுதான் லெனினது முதன்மைக்குறிக்கோள். உழைக்கும் மக்கள் முதலாளித்துவ பிடியிலிருந்து விடுதலை கண்டு, பாட்டாளிகளின் உலகளாவிய அதிகாரம் உதயமாக வேண்டும்; உலகம் முழுவதும் சமத்துவ சமூகம் அமைய வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். மக்கள் எல்லாக் காலங்களிலும் அடக்குமுறைகளையும் கொடுங்கோன்மையையும் சகித்துக்கொள்வதில்லை. ரஷ்யாவில் 1900-1993 ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி, நிலப்பிரப்புக்கள், முதலாளிகளின் பொருளாதார ஆதிக்கம் அனைத்தும் தொழிலாளர்கள் – விவசாயிகளை கடுமையாக பாதித்தன . அதுவே 1905 ஜனவரி 9-இல், எட்டு மணிநேர வேலை; விவசாயிகளுக்கு நிலம்; அரசியல் உரிமைகள்; முன்னிறுத்தி புரட்சி வெடித்தது.
1905 தோல்வியிலிருந்து, அடுத்து இயக்கத்தை முன்னெடுக்க புதிய யுக்திகளை லெனின் உருவாக்கினார். சோசலிசத்தை நோக்கிச்செல்ல வேண்டுமென்றால், தற்போதைக்கு முழுமையான அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், ஒரு ஜனநாயகக்குடியரசை அமைத்திடவும் வேண்டும். ரஷ்யாவில் ஜாராட்சியை வீழ்த்திட முதலாளிகளும் விரும்புவார்கள். முதலாளிகள் பங்காற்றும் புரட்சிதான் ரஷ்யாவில் சாத்தியம். முதலாளிகள் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. முதலாளிகள் மீதான எச்சரிக்கையுடன் உழைக்கும் வர்க்கங்களும் சேர்ந்து ஜனநாயகக்குடியரசை உருவாக்க வேண்டும். ஜாராட்சியை வீழ்த்த விரும்பும் அனைத்து சக்திகளையும் திரட்டி ஜனநாயகப்புரட்சியை நிகழ்த்திட வேண்டும். பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் முதலாளித்துவ புரட்சியில் பங்கேற்று, அதன் தலைமையை தானே மேற்கொண்டு, புரட்சியை கொண்டு வரவேண்டும் என்கிறார் லெனின்.
1905 புரட்சிக்குப் பிறகு, அரசானது மக்களுக்கு பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்பு ஏற்படுத்தும் உரிமை இவற்றோடு வாக்குரிமையையும் அளித்து ‘டூமா’ எனப்படும் பாராளுமன்றத்தையும் கொண்டுவந்தது. பெயரளவில் அறிவிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளைப்பயன்படுத்தி மக்களிடையே புரட்சிகர உணர்வை ஏற்படுத்துவதற்கு போல்ஷ்விக்குகள் முனைந்தனர்.பாராளுமன்றச் செயல்பாட்டை புரட்சிகர எழுச்சி செயல்பாடுகளோடு இணைத்து மேற்கொள்கிற ஒரு கொள்கையை லெனின் அப்போது உருவாக்கினார். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் கிளர்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால், இரண்டாவது பாராளுமன்றத்தில் கட்சி பங்கேற்க முடிவு எடுக்கப்பட்டது.
லெனினது நண்பர்களாக பழகிய பலர் தத்துவத்தில் தடுமாற்றம் கொள்கிற நிலை ஏற்பட்டது. அதாவது, சமூகப் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நம்பும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது. எதார்த்த உலகு கடவுளால் படைக்கப்பட்டது. மனிதர்களால் எதையும் மாற்ற முடியாது என்பதில் துவங்கி, முதலாளித்துவம் நிரந்தரமானது என்ற முடிவுக்கு இட்டுச்செல்வது கருத்துமுதல்வாதம் எனும் தத்துவக்கண்ணோட்டமாகும். உண்மையை சரியாக புரிந்துகொண்டு, மாற்றத்திற்கு இட்டுச்செல்வதே பொருள்முதல்வாதமாகும் என்கிறார் லெனின். லெனினும் அவரது மனைவியும், போலந்தில் வாழ்ந்த போது, உலக நாடுகளுக்கிடையே போரின் பதட்டம் தீவிரமானது. லெனினுக்கு முன்னால், இரண்டு கேள்விகள் முக்கியமாக இருந்தன. உலக முரண்பாடுகள் தீவிரமாக ஏற்படும் சூழலில், ரஷ்யாவில் புரட்சிகர இயக்கம் என்ன நிலை எடுத்து, எவ்வாறு செயல்படுவது? உலக நடப்பு பற்றிய மதிப்பீடானது பாட்டாளி வர்க்கப்புரட்சியோடு இணைந்தது எனக் கருதினார் லெனின்.
1912 இல் பிராக்’ நகரில் நடந்த கட்சியின் ஆறாவது மாநாடு, கட்சியின் பன்முகத்தன்மை கொண்ட செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டது.
• உலகப்பாட்டாளி வர்க்கப்புரட்சி, உலகளாவிய சோசலிஸம் என்கிற குறிக்கோள் முக்கியமானது என்றபோதும் மக்களை திரட்டுவதற்கான முழக்கங்களை கட்சி முன்வைத்தது-
• எட்டு மணி நேர வேலை, கிராமங்களில் நிலவுடமையை தகர்த்து, நிலத்தை மீட்டெடுப்பது, உழுவோர்க்கு நிலம் –
• ரஷ்யாவில் மன்னராட்சியை வீழ்த்தி, ஒரு ஜனநாயகக்குடியரசை நிறுவுதல்-
உலகம் முழுவதும் மூலதனம் சந்தைகளைத்தேடி பாய்ச்சல் வேகத்தில் இயங்கும் என்றார் மார்க்ஸ். “உலகம் தழுவியதாக மாறிய மூலதனம், சில குழுக்களிடம் பிரமாண்டமாக குவிந்து ஏகபோக முதலாளித்துவமாக மாறியது. மூலதனம் மையப்படுத்தப்பட்ட நிலை வேகமாக நடைபெற்று, அது தனது உச்சகட்டத்திற்கு வருகிறது. தொழில்மூலதனம், வங்கிமூலதனம், பெரிய நிதிமூலதனக்குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு வருகிறது. அது பெரும் நிதிமூலதனமாக உருவெடுத்து போட்டியாளர்களை ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெளியேற்றி ஏகபோக முதலாளித்துவமாக உருவெடுக்கிறது. ஏகாதிபத்தியத்தை வீழ்த்த உலகளாவிய பாட்டாளிவர்க்க புரட்சிதான் தீர்வு” என்ற முடிவுக்கு லெனின் வருகின்றார்.
1917 ஏப்ரலில், சோசலிஸத்திற்கு செல்வதற்கான காலம் கனியும் வரை, முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று சிலர் கூறியதை லெனின் கடுமையாக எதிர்த்தார். சோசலிஸப்புரட்சியின் முதல் கட்டம் நிறைவேறியது. அடுத்து, சோசலிஸக்கட்டத்திற்கு செல்ல வேண்டும்; அதைத் தவிர்த்து முதலாளிகளின் அரசாங்கத்தை ஆதரித்தால், அது தொழிலாளி வர்க்கத்திற்கு செய்யும் துரோகம் என்றார் லெனின். அடுத்துவரும் சோசலிஸப்புரட்சிக்கு நாடுமுழுதும் இயங்கிவரும் உழைக்கும் வர்க்கங்களின் அமைப்புக்களான சோவியத்துக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அறைகூவலிட்டார்.
பல தேசிய இனங்கள் கொண்ட நாடு ரஷ்யா. ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, ரஷ்ய இனத்தின் மேலாதிக்கம் ஜாராட்சியில் இருந்தது. தேசிய இனங்களின் கூடாரமாக இருந்த ரஷ்யாவை, லெனின் மிகத்திறமையாகக்கையாண்டு, தேசிய இனங்களின் பண்பாட்டு வளர்ச்சி, பாதுகாப்பிற்கான திட்டத்தை லெனின் முன்வைத்தார்.
புதிய உலகமானது, மூலதனப்பேரரசுகள் தலைமை தாங்குவதாக அமையக்கூடாது. அதற்குப் பதிலாக, உலகப் பாட்டாளி வர்க்க அதிகாரம் என்கிற கடமையை லெனின் துவக்கி வைத்தார். இன்னும் முற்றுப்பெறாத கடமையை நோக்கி நாம் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. l
previous post