தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பத்து கி.மீ.தொலைவில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. நாற்பது வயதுக்கு மேல் பேனா பிடித்து எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப்பிடித்தவர். 99 வயதாகும் எழுத்தாளர் கி.ரா. வருகைதரு பேராசிரியராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அழைப்பு வந்தவுடன் இடம் பெயர்த்தவர். அப்போதுமுதல் புதுச்சேரிவாசம். கோவில்பட்டியில் இருந்த காலங்களில், அவரோடு வாரம் ஒரு முறையாவது சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு கனாக்காலம் தான். தலைமுறை இடைவெளி இல்லாமல் பேசும் எழுத்தாளர்
கி.ரா. அவர்களோடு ஒரு நேர்காணல் :
ராஜநாராயணீயத்திற்குள் நுழைய வேண்டுமானால், “கதவு” திறந்து தான் போக வேண்டும். “கதவு” சிறுகதை கடிதமாக எழுதப்பட்ட ஒரு செய்தி என்று கேள்விப்பட்டுள்ளோம். அந்தக் கதை பிறந்த வரலாற்றை கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஹா.ஹா..ஹா. அது நெறைய இருக்கப்பா..நான் எப்பவுமே நீண்ட கடிதங்கள் எழுதுவதுண்டு. அப்படித்தான் தீப.நடராஜனுக்கு ஒரு கடிதம் எழுதறப்ப இந்த விஷயத்தை எழுதினேன். கடிதத்தில் இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஒடனே ஒரு நகல் எடுத்து வச்சுக்கிட்டேன். அந்த நேரம் “தாமரை” இதழ் ஆரம்பிக்கணும்னு பேச்சு வந்தது. அதுக்கு ரகுநாதனை ஆசிரியராக போடணும்னு ஒரு முடிவு. இது பத்தி பேசணும்னு ஜீவானந்தம் சொல்றாரு. எங்கே.. இடைச்செவல்ல வச்சு.. தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தவரு எங்க ஊருக்கு வாராரு.. நேரங்கெட்ட நேரமாச்சு அப்போ. நேரமாச்சு இனிமேல் என்னத்த பேச.. அப்படின்னு சொன்னதும் சரின்னுட்டு போயிட்டார். அப்போ புது வீட்ல இருந்தேன்.. தனி வீடு ஒண்ணு இருக்குல்லா.. அங்கே.. அப்போ வீட்டுக்கு வந்த ரகுநாதன் அலமாரில ஏதாச்சும் புஸ்தகம் இருக்கான்னு பார்க்கையிலே ஒரு புஸ்தகத்தில் இருந்து ஒரு கவரு கிடைக்குது.. அதுல ஒரு கதை..கதவு கதை இல்ல.. மாயமான்னு ஒரு கதை..அதை எடுத்துப் பார்த்தவரு “யோவ்.. நீரு கத எல்லாம் எழுதுவீரா” ன்னு கேட்டாரு. என்னத்தையோ எழுதியிருப்பேன்னு சொன்னேன். அந்தானைக்கு அந்த கதையை எடுத்து வச்சுக்கிட்டு, இதை நான் கொண்டு போறேன்..தாமரை இதழ் ஆரம்பிச்சா, அதுல முதல் சிறுகதையா இது வரும்ன்னு சொல்லிட்டு போனாரு. ஆனால், அது இல்லாம ஆயிருச்சு. என்ன பண்ணுனார்னா, அதை “சரஸ்வதி” க்கு அனுப்பிச்சிட்டாரு.
“சரஸ்வதி” க்கும் இவங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. சரஸ்வதிக்கு எதிரா தாமரை இதழ் கொண்டு வரணும்னு ஆரம்பிச்சாங்க. சரஸ்வதி இதழில் வந்த என்னோட கதையை ஜீவானந்தம் படிச்சிருக்காரு. படிச்சுட்டு என்கிட்ட பேசினார்..” உங்களோட மாயமான் கதையைப் படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்தது. தாமரைக்கு ஒரு கதை எழுதி தரணும்னு கேட்டார். இதுக்கு மத்தியில என்ன நடந்ததுன்னு கேட்டா, ஆனந்த விகடன் ஒரு பெரிய சிறுகதைப் போட்டி நடத்துதாம்..அதைப்படிச்சுட்டு, வீட்ல கணபதி,
“நீங்க இதுக்கு ஒரு கதை எழுதுங்களேன்னு” சொல்றாங்க..நான் கதையே எழுதுறது இல்ல..எனக்கெல்லாம் கெடைக்காதும்மான்னேன்.அனுப்பி வைக்கறதுல என்ன இருக்குன்னு சொன்னாங்க..உடனே, கதவு கதையை நகல் எடுத்து ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைச்சேன்.முடிவு வந்துச்சு. மொத பரிசு இல்ல.. ரெண்டாம் பரிசு இல்ல.. மூணாவது பரிசும் இல்ல.. அடுத்து பதினஞ்சு இதழ்களுக்கு கதை வெளியிடுவான்ல..அதுலேயும் இல்ல.. அப்ப இவன் குப்பை தொட்டியில் போட்டுட்டான்னு நினைச்சுக்கிட்டேன்.. அப்படியாகிப்போச்சு. இதை தாமரைக்கு அனுப்பினேன். தாமரை பொங்கல் மலரில் இது வருது. பாருங்க.. இந்தக் கதவு கதைக்கு ரெட்டைக்கதவை படமா போட்டிருக்கான்..(சிரிக்கிறார்) எல்லோரும் சிரிச்சாங்க.. அதற்கப்புறம் இந்தக் கதையை போடுறவங்க அத்தனை பேருமே ரெட்டைக்கதவு போடுறாங்க..அவங்க யாரும் ஒத்தைக்கதவை ஜென்மத்திலேயும் பாத்ததே இல்ல போலிருக்கு. ஒத்தைக்கதவுல தான் குழந்தைங்க விளையாடும்..அது தான் வசதி.. சுந்தர ராமசாமிட்ட இருந்து ஒரு லெட்டர் வருது. அப்போ அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. கதை ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. தமிழ்ச்சூழலில் இப்படி ஒரு கதை வந்ததே கிடையாது. மற்ற கதைகள்ல இருந்து வேறுபடுது. சொல் வேறுபடுது..விஷயங்கள் வேறுபடுது. வடிவங்கள் வேறுபடுது. எல்லோரும் இதை கவனத்தில் கொள்றாங்கன்னு சொல்றாரு. இது” செகாவிய பாணி எழுத்து” என்று சொல்லலாம் அப்டிங்கறாரு..சொல் அப்படி இருக்கு..
அப்புறம் கிருஷ்ணன் நம்பி ஒரு கடிதம் எழுதுறாரு. கதை ரொம்ப நல்லா இருக்குன்னு.
உங்களோட “கோபல்ல கிராமம்” நாவல் வந்த புதிதில் அது நாவல் வகையில் சேர்ந்தது இல்லை என்று பலரும் சொன்னாங்களாமே?
இப்ப இந்த “கதவு” வந்தாச்சா..அடுத்தால “கோபல்ல கிராமம்” வருது. கோபல்ல கிராமத்தின் கருவோட மூளை என்னன்னு கேட்டால்..நான் எங்க ஊருல ஒரு கவுண்டர் கல்யாண நிச்சயதார்த்தத்துக்குப் போனேன்.. கன்னட கவுடான்னு சொல்லுவாங்க. என்னையும் அழைச்சுருந்தாங்க..நானும் போயிருந்தேன். அந்த நிச்சயதார்த்த நேரம் வந்தவுடனே ஒருத்தர் என்ன பண்ணார்னா ..ஒரு உலக்கையை எடுத்துக்கிட்டு வாசல் பக்கம் போய் நின்னுக்கிட்டார். என்ன பண்ணார்னா பிரகடனப்படுத்தின மாதிரி சொன்னார் “துலுக்கன் வர்றான்..துலுக்கன் வர்றான்..” ன்னு மூணு தடவ சொன்னார். அப்புறம் தட்டை மாத்திக்கிட்டாங்க..நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு. அவர்கிட்டே போயி கேட்டேன். இப்போ என்னமோ சொன்னீங்களே..அது ஏன்னு. “அது என்னமோ அந்தக்காலத்துல நடந்ததுன்னு சொல்றாங்க..துலுக்க ராஜா கல்யாணம் ஆகாத பொண்ணை தூக்கிட்டு போயிருவாராம்..கல்யாணம் பண்ணியாச்சுன்னா தூக்க மாட்டார். அதனால்தான்..” அப்படின்னாரு. நான் வீட்டுக்கு வந்து என்னோட பாட்டிட்டே சொன்னேன் “பாட்டி..எனக்கு வேடிக்கையா இருக்கு” பாட்டி சொன்னாள்: “வேடிக்கை இல்லப்பா..நாம வந்ததும் இப்படித்தான். நாம இங்க ஆந்திராவில் இருந்து ஏன் வந்தோம்னா இதுக்காகத்தான். நம்ம பொண்ணை அவரு இந்த மாதிரி பண்ணிடுவாரோன்னு தான் ஓடி வந்தோம்..”
எனக்கு இதுக்கு முன்னாலேயே சில விஷயங்கள் தெரியும். ஏன் வளமாய் இருந்த காவிரிக்கரையை எல்லாம் விட்டுப்போட்டு இந்த கள்ளிக்காட்டு பகுதிக்கு வந்து வீடு கட்டணும்ன்னு நினைச்சேன். பாட்டிதான் சொன்னாள்.. சென்னாதேவி காவிரிக்கரையிலேயே செத்துப்போனாள்..அங்கேயே ஏகப்பட்ட நிலங்கள் சும்மா கெடந்ததாம்.. இப்படி இங்கன வந்துட்டாங்களேன்னு பாட்டி சொன்னது மனசுல இருந்துட்டே இருந்தது. சரி, இத எழுதுவோம்னு எழுத ஆரம்பிச்சேன். எழுதுவேன். பொறவு திருத்துவேன்..நண்பர்கள் சிலர் வந்து சில பக்கங்களை படிச்சு பார்த்துட்டு “அடேங்கப்பா..பிரமாதமா இருக்கேன்னு” சொன்னாங்க. அது என் மடியிலேயே கெடக்குது. படிப்பேன்..கொஞ்சம் திருத்துவேன்..தொடராக பண்ணனும்னு நண்பர்கள் ஆசைப்பட்டாங்க.. குமுதம் இதழில் கேப்போமேன்னு கேட்டேன். அவங்க முதல் அத்தியாயத்தை மாத்திரம் அனுப்புங்கோன்னு சொன்னாங்க. முதல் அத்தியாயம் வெறும் வர்ணனை..அதனால ரெண்டாவது அத்தியாயத்தையும் சேர்த்து அனுப்பினேன். பதிலே வரல. கொஞ்ச நாலு கழிச்சு சொன்னாங்க..ரொம்ப நல்லா இருக்கு. ஆனால், குமுதத்துல தொடரா கொண்டு வர ஏலாதுன்னு சொல்லிட்டாங்க..ஆனந்தவிகடன்ல கேப்போம்னு கேட்டேன். அவங்களும் அதேமாதிரி சொன்னாங்க.. எழுந்து என் மடியில் கெடக்கு. எட்டு வருசமா கெடக்குது.. நாவல் எழுதவே ஏழு ஆண்டு ஆயிருச்சு.. லட்சுமி கிருஷ்ணமூர்த்தின்னு ஒரு அம்மா ஒரு அறிவிப்பு சொல்றாங்க..
எந்த இதழிலும் வராத கையெழுத்து பிரதியாய் நாவல் இருந்தா ..அத படிச்சு பார்த்துட்டு நூலாய் போடலாம்னு இருக்கேன்ன்னு. உடனே..இந்தா பிடி..ன்னு இதை அனுப்பிட்டேன். வரணும்லா..வரல..அவங்களுக்கு எதோ ஒன்னு உறுத்துது..இந்த மாதிரி ஆளுக கிளம்பி வந்துரக்கூடாதேன்னு..இதுல கெட்ட வார்த்தை ரொம்ப இருக்கு..அதை எல்லாம் நீக்கணும்னார். நான் நீக்க முடியாதுன்னு சொன்னேன். இதை இப்படியே போட முடியாதேன்னார். அப்போ திருப்பி அனுப்புங்கோன்னு சொல்லிட்டேன். அவங்க என்ன செஞ்சாங்கன்னா..ஒரு எழுத்தாளர் அவங்களை பார்க்க வந்தாரு.அவருட்ட வாசிக்க கொடுத்துருக்காங்க..அவரு சொன்னாராம்..நீங்க சொல்ற கெட்ட வார்த்தையை எங்க அப்பா ஒரு நாளைக்கு நூறு மட்டம் சொல்வாரு..இது ரொம்ப சகஜம்..கிராமத்தை நீங்க அறியாதவங்க..அங்க அப்படிதான் பேசுவாங்க..என்றாராம். அதுக்குப்பிறகு தான் அந்த அம்மா சம்மதிச்சு புத்தகமா போட்டாங்க..புத்தகம் வந்தபிறகு ரொம்ப பரபரப்பாய் இருந்துச்சு. எழுத்தாளர் சுந்தரராமசாமி “காகங்கள்” கூட்டத்துல இதைப்பற்றி பேசப்போறோம்..நீங்க கட்டாயம் வரணும் ” ன்னு கடிதம் போட்டிருந்தார். நானும் தேவதச்சனும் போயிருந்தோம். நாலு பேரு பேப்பர்ல எழுதி வாசிச்சாங்க..நல்லா அலசி ஆராய்ந்து இது நாவல் இல்ல.நாவல்னு யாரும் மயங்க வேண்டாம்..னு சொல்லிட்டாங்க. அப்புறம் கடைசியா சுந்தரராமசாமி நாவல்ன்னா இப்படி எல்லாம் இருக்கணும்..இதுல அப்படி எதுவும் இல்லை பிறகு எப்படி நாவல்னு ஒத்துக்கிடுவதுன்னு சொல்லிட்டார்..
என்கிட்ட நீங்க நாலு வார்த்தை பேசுங்க என்று சொன்னாங்க. நான் ஒண்ணும் சொல்லலை. கூட்டம் முடிஞ்சு கீழே வரும்போது, சு.ரா.கேட்டாரு..நாங்க எல்லோரும் நாவலே இல்லேன்னு சொல்றோம்.நீங்க ஒண்ணுமே சொல்லலியே..குடிக்க தண்ணி கூட கேக்கலியே..அப்படின்னாரு. நான் இதை நாவல்னு எழுதல..லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நாவல்னு போட்டாரு..இப்ப நீங்க இதை நாவல் இல்லேன்னு சொல்றீங்க..இனிமேல் பேசி பிரயோசனம் இல்லை..இனி நான் என்னத்தை சொல்றது. நானோ எழுதி முடிச்சிட்டேன்..என்றேன். கணையாழியில் கோபல்ல கிராமம் பற்றி பகீரதன்னு ஒருத்தர் விமர்சிக்கிறார். இந்த நாவல் பிரமாதம்..நோபல் பரிசு கூட கிடைக்கலாம்..அப்படின்னு புகழ்கிறார்..இப்படியாய் கோபல்ல கிராமம் உருவானது..
கோபல்ல கிராமம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கலாம் என எப்போதாவது நினைத்ததுண்டா?
உண்டு.. உண்டு. ஏன்னா நாவல் வரிசையில் அதுதான் தலை. அதனால தலைக்கு கிடைக்கிறது பொருத்தம்னு நெனச்சேன்.
கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் அளவிற்கு அந்தமான் நாயக்கர் என்ற நாவல் பேசப்படவில்லையே ஏன்?
அந்தமான் நாயக்கர் எதுக்காக எழுதப்பட்டதுன்னா..சினிமாவிற்காக எழுதினது.. சினிமா டைரக்டர் பாலச்சந்தர் அவர்களின் மகன் கைலாசம் என்னிடம் கதை கேட்டார். அவர் அமெரிக்காவில் போயி சினிமா துறையில் சில பயிற்சிகள் பெற்றவர்ன்னு சொன்னார். இயக்குநர் பாலசந்தர் தனது பையனை அனுப்பிச்சாரு ஒரு கதை வேணும்னு. நான் சொன்னேன் அப்படியெல்லாம் உடனே எழுத முடியாது அப்படின்னு. அவர் மகனும் மருமகளும் பாண்டிச்சேரி வந்து ஹோட்டல்ல ரூம் போட்டு மூணு நாலு தங்கி இருந்தாங்க. அப்பமும் என்னால எழுத முடியல. அப்புறம் அவர் வந்து நீங்க எழுதி எனக்கு அனுப்புங்க என்று சொல்லி கிளம்பி போயிட்டாரு. அப்புறம் ரொம்பநாளைக்கு அப்புறம் டைரக்டர் பாலசந்தர் ஒரு கடிதம் போட்டாரு. கூடவே ஒரு தொகையும் அனுப்பி இதை அட்வான்ஸ் மாதிரி எடுத்துக்கிட்டாலும் சரி..நேரம் கிடைக்கும்போது கதை எழுதி அனுப்புங்க என்று எழுதியிருந்தார். அந்த நேரம் தினமணியில் எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருந்தார். அவர் பாண்டிச்சேரி வந்தபோது என்னை பார்த்து ஏதாச்சும் எழுதுங்களேன் என்று சொன்னார். நான் கேட்டேன் ஒரு கட்டுரைக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு. எவ்வளவுனாலும் கொடுக்கலாம் எழுதுங்க என்றார். ஐநூறு தர முடியுமான்னு கேட்டேன். சரின்னுட்டார். அப்போது அது நல்ல தொகைதான். அப்படி தொடராக எழுதினது அது. சினிமாவை மனதில் வைத்து எழுதினது. கொஞ்சம் வித்தியாசமாய்தான் இருக்கும். அந்தமான் நாயக்கர் என்ற தலைப்பு கூட சினிமாவிற்காக கொடுத்த பெயர் தான். அந்த தலைப்பு மாதிரியே பின்னாடி வேறொரு சினிமா கூட வந்தது..ஆக, அந்த நாவல் பிறந்த கதை இது தான்.
கவிதைக்கான காலம் முடிந்து விட்டது. இனி உரைநடைக்கான காலம். பேச்சுமொழிக்கான காலம் என்று நீங்கள் சொன்னதாக…
அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் வந்து கவிதைக்கு எதிரி இல்லை. கவிதையை ரசிப்பவன். ஆரம்ப காலத்தில் நானும் கவிதைகள் எழுதியவன். பேச்சுமொழியை பற்றி ஏன் சொன்னேன்னா.. பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சி. தமிழில் முதல் நாவல் எழுதினார் இல்லையா..மாயூரம் வேதநாயகம் பிள்ளை.. அவரோட நினைவு நூற்றாண்டு விழா நடந்தப்ப, என்னையும் கலந்துக்க சொல்லி அழைச்சாங்க..அவரோட மருமகனே வந்து அழைச்சது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. கூட்டம் துவங்கும் நேரத்திற்கு முன்னதாகவே போய்விடுவது என்னோட கெட்ட வழக்கம். அப்படிப்போன இடத்தில ஆங்கில பேராசிரியர் ஒருத்தர் ஆங்கில நாவல் முதன்முதலில் எப்படி பிறந்தது என்பதை பற்றி சுவாரசியமாக சொன்னார். முதன்முதலில் ஆங்கிலத்தில் நாவல் எழுதினார் இல்லையா..அவரோட தொழில் டைப் ரைட்டர்ல டைப் அடிச்சு தருவது. அப்போது இங்கிலாந்தில் பெண்கள் படிக்காத காலம். கணவன்மார்கள் மிலிட்டரியில் இருக்காங்க. கணவர்களுக்கு மனைவிகள் கடிதம் எழுதிப்போடணும். அப்படி ஒரு பொண்ணு இவரிடம் வந்து தனது கணவருக்கு கடிதம் டைப் பண்ண சொல்றாள். உணர்ச்சிகரமாக சொல்கிறாள். இவரும் அவள் சொல்ல சொல்ல டைப் பண்ணுறார். சொல்லி முடிச்சபிறகு டைப் அடிச்சதை வாசித்து காண்பிக்கிறார் இவர்.
அந்தப்பொண்ணு சொல்லுறாள், நான் சொன்னபடி நீங்க எழுதலியே..ன்னு.அப்படிதானேம்மா அடிச்சுருக்கேன்..அதுதானேம்மா என்னோட தொழில்..என்றார் இவர். அவளோ, நீங்க டைப் அடிச்சது சரியில்லேன்னு சொல்லிட்டா. அவரு யோசிச்சாரு. என்ன சொல்றா இவள் என்று. நான் சொன்னதுமாதிரி இருந்தா தான் பணம் தருவேன்..இல்லாட்டி தரமாட்டேன்னு அவ சொல்றா.
அவள் தனது கணவனிடம் பேசுவது போன்ற பேச்சுமொழியில் சொல்றாள். இவரோ சுத்தமான ஆங்கிலத்தில் டைப் பண்ணுறார். பிறகு அதை அவர் புரிஞ்சுகிட்டு அவள் சொன்னதுபோலவே, பேச்சுமொழி ஆங்கிலத்தில் டைப் பண்ணி வாசிச்சு காட்டுறார். இதுதான் சரி என்று அப்புறம் சொல்கிறாள் அவள். டைப் அடித்த அந்த மனிதர் தனது வீட்டிற்கு மதியம் சாப்பிடப்போகும்போது தன்னோட அன்புமகள்ட்ட இதை சொல்றார். தனது ஆபீஸ்ல என்ன நடந்தாலும் மகளிடம் சொல்வார் போல. அன்றும் இதை மகளிடம் சொல்ல, அவள் சொன்னாள் ” இதை நீ எழுதணும் அப்பா..மக்களின் பேச்சுமொழியில் ஒரு உரையாடலை எழுதும்போது அது ஒரு உணர்ச்சிகரமான கதை போல மாறி விடுகிறது..நீ இதை எழுது..” என்றாள். அப்படி எழுதினதுதான் முதல் ஆங்கில நாவல். பேச்சுமொழியின் முக்கியத்துவம் இலக்கியத்திற்கு எப்படி அவசியம்னு சொல்ல இதை நான் சொல்வேன்.
உங்களுக்கு இலக்கிய முன்னோடி என்று யாரை சொல்வீர்கள்?
என் எழுத்துக்கு முன்னோடி என்று யாரும் இல்லை.நானாகத்தான் எழுதினேன். அப்படி யாரும் இருந்தாங்கன்னு சொன்னால், அது பொய் சொன்னமாதிரி ஆகிவிடும்.
அவுரிச்செடி பற்றி சிறுகதை எழுதியுள்ளீர்கள். வட இந்தியாவில் அவுரிப்பயிர் செய்யச்சொல்லி வெள்ளைக்காரன் கட்டாயப்படுத்தியதாகவும், அதை எதிர்த்து அங்கே போராட்டம் நடந்ததாகவும் வரலாற்றுச் செய்திகள் உண்டு. கரிசல்காட்டில் அவுரியை ஒரு பணப்பயிர் போல எழுதி உள்ளீர்கள். இதுபற்றி சொல்லுங்க..
அவுரியை பயிரிடும்போது மானாவாரியில் தான் கலப்படமாய் போடுவோம். மகசூல் எடுத்தப்புறமும் அவுரி இருக்கும். இதிலே என்ன விசேஷம்னா அவுரியை ஆடு திங்காது..மாடு திங்காது..ஆரம்பத்திலே அவுரிக்கு நல்ல விலை கொடுத்தாங்க. அடுத்த வருஷமே ரொம்ப குறைச்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..இதனால விவசாயிகளுக்கு ரொம்ப கோபம். இந்த அவுரியை நாம பயிரிட வேண்டியதில்லைன்னு முடிவு செஞ்சாங்க..வடக்கே வேண்டுமானால் போராட்டம் நடந்திருக்கலாம்..இங்கே யாரும் போராடலை…ஆனால், இந்த அவுரியை வாங்கி விற்கும் வியாபாரிகள் புதுசு புதுசாக காரில் பவனி வருவதை நானும் பார்த்திருக்கேன்..
இசைத்துறையில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. விளாத்திக்குளம் சுவாமிகள் இசை குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசியிருக்கீங்க..நாதஸ்வரம் கூட கொஞ்சம் கற்றுக்கொண்டீர்கள்..அந்தத்துறையில் போக முடியவில்லை என்ற ஆதங்கம் இன்னும் உள்ளதா?
இன்னும் உள்ளதுன்னு சொல்ல முடியாது. ஆனால் ஒரு ஏக்கம். ஒரு பெண்ணை காதலிச்சு, அவள் இன்னொருத்தனை கட்டிட்டுப் போயிட்டான்னு வைங்க..நமக்கு கிடைக்கலியேன்னு ஏக்கம் இருக்கும் இல்லையா..சங்கீதத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஏக்கம் உண்டு.
எழுத்தாளர் புதுமைப்பித்தனை நீங்கள் சந்தித்ததுண்டா?
இல்லை. சந்தித்தது இல்லை. சிதம்பர ரகுநாதன் வீட்டுக்கு திருநெல்வேலி போறப்ப எல்லாம் போவேன். ராத்திரி முழுக்க பேசிட்டு இருப்போம். அப்படி ஒருநாள் பேசிட்டு இருக்கும்போது, “இன்னைக்கு புதுமைப்பித்தன் வர்றாரு..தெரியுமா..”ன்னாரு. அப்படியா பார்ப்போமேன்னேன். ரெண்டு பேரும் அவருக்கு ரொம்ப பிடிச்ச திருநெல்வேலி அல்வாவை வாங்கிட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் போனோம். கடைசில பார்த்தா, அந்த ரயிலில் அவரு வரலைன்னு சொல்லிட்டார். அப்படி பார்க்காமலே போய்ட்டு.
எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனோடு இருந்த அனுபவங்கள்…
ரகுநாதன் அடிக்கடி இடைச்செவல் வருவாரு. அப்போது நான் புதுவீட்டுல இருந்தேன்..திருநெல்வேலிக்கு போற வழியிலே இறங்கி என்னை பார்த்துட்டுதான் போவாரு..அதெல்லாம் அருமையான நாட்கள்..அவரைப் பத்தி நிறைய சொல்லலாம்…
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு உங்களை வருகைதரு பேராசிரியராக நியமனம் செய்றப்ப என்ன மாதிரியான மனநிலை உங்களுக்கு இருந்தது…
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் எனக்குக் கடிதம் போட்டிருந்தார்..இன்னமாதிரி..உங்களை நாங்க வருகைதரு பேராசிரியராக நியமித்திருக்கிறோம்..வந்து உடனே ஜாயிண்ட் பண்ணுங்கன்னு. எனக்கு கடிதத்தை பார்த்தவுடன் ரொம்ப தயக்கம். பேசாமல் இருந்தேன்..மறுபடியும் ஒரு கடிதம் வந்தது, ஏன் வரலைன்னு.நான் பதில் கடிதம் போட்டேன்..எனக்கு உடனே வரமுடியாத சூழல். எனக்கு டயாபடீஸ் நோய் இருக்கு..அப்படி இப்படின்னு எழுதி அனுப்பினேன். அவரு சொன்னாரு..நீங்க சொல்ற நோயெல்லாம் எனக்கும் இருக்கு..நீங்க இங்கே வந்தீகன்னா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த நோயை எதிர்த்துப் போராடலாம்..உடனே புறப்பட்டு வாங்கன்னு சொல்றாரு. அதுக்கப்புறமும் எனக்கு தயக்கம். இந்த நேரத்துல எனக்கு சொந்தக்காரரு ஒருத்தர் வீட்டுக்கு வந்தாரு.அவரு சொன்னாரு..மாமா, ஒடனே நீங்க புறப்பட்டுப் போகணும். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நீங்க வேணும்னா ஒண்ணு செய்யுங்க.. தேதி போடாத ஒரு ராஜினாமா கடிதம் எழுதி உங்க சட்டை பையிலேயே வச்சுக்கோங்க..பிடிக்கலேன்னா அந்தக் கடிதத்தை கொடுத்துட்டு உடனே வந்துருங்க..போய்த்தான் பாருங்களேன்..அப்படின்னாரு. எனக்கும் இந்த யோசனை நல்லாதப்பட்டது. ஒரு ராஜினாமா கடிதம் எழுதி வச்சுக்கிட்டு உடனே கிளம்பினேன். கூடவே கோவில்பட்டி மாரிஸ் வந்தாரு. அவரு எனக்கு இன்னொரு கை மாதிரி. ரெண்டு பேரும் போனோம். அங்கே அ.ராமசாமி போன்றவங்கள்லாம் இருந்தாங்க.. இப்படியாய் போய்ச் சேர்ந்தேன்..
போகும்போது ஏற்பட்ட ரயில் பயண அனுபவத்தையும் இந்த நேரம் சொல்லணும். ஒரு பெரிய பெட்டியில் என்னோட ஆடைகள், கொஞ்சம் புத்தகங்கள் வச்சிருந்தேன். ரயிலு விழுப்புரம் வந்தவுடன் ஒரு டி.டி.ஆரு எங்க பெட்டியில் ஏறினார். என் அருகில் வந்தவர், “உங்க பெட்டியிலே என்னென்ன பொருட்கள் வச்சிருக்கீங்கன்னு திறந்து காட்டுங்க என்றார்.” எனக்கு முதலில் புரியவில்லை. “பாண்டிச்சேரி வேற நிர்வாகம்..நீங்க என்னென்ன கொண்டு வறீங்கன்னு பார்க்கணும். அதே மாதிரி பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு போகும்போது பாட்டில் எதுவும் கொண்டு போறீங்களான்னு பாப்போம்” என்றார். நான் சொன்னேன் “நீங்க பாண்டிச்சேரியில் இறங்கிருவீங்கள்ள அப்ப என்னோட பெட்டியை திறந்து காண்பிக்கிறேன். பிளாட்பாரத்தில் வைத்து நீங்க நல்லா பார்த்துக்கிடலாம்” அவரும் சரின்னுட்டு போயிட்டார். பாண்டிச்சேரி ரயில் நிலையத்துல தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க..ரொம்ப பேரு வந்திருந்தாங்க. அதைப்பார்த்த அவரு “இவரு யாரோ போல..நாம கேட்டது தப்பா போச்சோ” என்று நினைத்தாரோ என்னவோ சொல்லாம கொள்ளாம மாயமா மறைஞ்சு போயிட்டாரு.. (சிரிக்கிறார்)
கோவில்பட்டியில் ஸ்டேட் பேங்க் மேலாளராக பணிபுரிந்த பாவாடை ராமமூர்த்தி..அவர் ஒரு எழுத்தாளரும்கூட. அவரை நினைவில் இருக்கா?
பாவாடை ராமமூர்த்தி பற்றி சொல்லணும்னா ஒரு புஸ்தகமே போடலாம். அவ்வளவு இருக்கு. “நண்பர்களும் நானும்” அப்படின்னு ஒரு புஸ்தகம் எழுதியிருக்கேன். அதில் அவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கேன். அதை எல்லோரும் படிச்சு பார்க்கணும்.
இடைச்செவலில் இருந்த காலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்றுள்ளீர்கள். விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளராகக் கூட இருந்துள்ளீர்கள். அந்த சிறை அனுபவங்களை எழுதி உள்ளீர்களா?
சிறை அனுபவங்கள் குறித்து கொஞ்சம்தான் எழுதியுள்ளேன். அந்த அனுபவங்களை, கஷ்டங்களை, அதில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் எழுதணும்னு ஆசைதான்..இனிமேல் எழுத முடியுமான்னு தெரியல..
உங்கள் நெடிய வாழ்க்கைப்பயணத்தில் கணபதி அம்மாள் ஒரு பெரும் உந்துசக்தி. அவங்களைப்பத்தி…
அதைப்பற்றி சொல்ற நிலையில் நான் இல்ல..சொல்லும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்..வேண்டாம்..(கண்கள் கலங்குகின்றன அவருக்கு)
உங்கள் மகன் பிரபாகரன் என்ற பிரபி கதைகள் எழுத ஆரம்பித்துள்ளார். ஒரு வாசகனாய் அவரது எழுத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அவன் என்னைப் பின்பற்றி எழுதுவதாக சொல்லி, அதே பேச்சுவழக்கு மொழியை கையாள்கிறான். அதைப்பற்றி வாசகர்களும், விமர்சகர்களும் தான் சொல்ல வேண்டும். எல்லா பெற்றோர்களும் சொல்ற மாதிரி, நானும் “நல்லாத்தான் எழுதுறான்” என்றே சொல்வேன். மற்ற விஷயங்கள் பற்றி வாசகர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.
இடைச்செவல் ஊருக்குப் போயி நாளாகி விட்டது. ஊரை உங்களுக்கும் தேடும் இல்லையா..பழைய நண்பர்கள் யாரும் அங்கே இருக்காங்களா?
கி.ரா. யாரும் இல்லை..எனக்கு இப்ப யாரும் இல்லை. எனக்கு பிரியமான ஆண், பெண் அனைவருமே போயிட்டாங்க..நான் மட்டும் இப்ப தனியாக இருக்கேன்..
நோபல் பரிசு பெற்ற நாவல்கள் படித்த அனுபவம் உண்டா?
எனக்கு தமிழ் தவிர வேற மொழிகள் தெரியாது. அந்தக் காலத்துல விமர்சகர் க.நா.சு.மொழிபெயர்த்த நோபல் பரிசு பெற்ற நூல்களை வாசிச்சுருக்கேன்.. அவ்வளவுதான்.
சமீபத்தில் “அண்டரெண்ட பட்சி” என்ற குறுநாவலை எழுதி முடித்துள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றதா ?
அடேங்கப்பா..ரொம்பவே வரவேற்பு. இந்த நாவலை நான் 250 பக்கங்களில் எழுதினேன். அப்புறம் வாசிச்சு பார்க்கும்போது, அதுல வேண்டாத அரசியல்லாம் இருந்தது. எல்லாம் தள்ளிட்டு அதை நாற்பது பக்கமாய் குறைச்சேன். இந்த நாவல் எழுதுனதுக்கே காரணம் இளவேனில் தான். அவனை நான் பாபுன்னு தான் கூப்பிடுவேன். இவன் தான் ஏதாச்சும் எழுதிக்கொடுங்க..எழுதிக்கொடுங்கன்னு சொல்வான். அவன் சொன்னதுக்காகத்தான் இதை எழுதினேன். அப்புறம் படிச்சப்ப, இது ஒரு மாதிரி இருக்குப்பா..செக்ஸா தெரியுது. இதைப்படிச்சுட்டு போலீஸ் நடவடிக்கை ஏதும் வருமான்னு தெரியல. அந்தக்காலத்துல, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் “முதலிரவு” ன்னு ஒரு கதை எழுதினார். அதுக்காக அவரை ஒரு மாசம் ஜெயில்ல போட்டுட்டாங்க..எழுத்துக்காக ஜெயில்ல போன ஒரே தமிழ் எழுத்தாளன் அவராகவே இருக்கட்டும்..நாம் இந்த வயசுல போயி சங்கடப்பட வேண்டாம்..என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ராஜேந்திரன்
ஐ.ஏ எஸ். அவருக்கு இதன் ஒரு பிரதியை அனுப்பி படிச்சு பார்த்துட்டு அபிப்பிராயம் சொல்லுங்கோ..உங்களுக்கு தெரிஞ்ச லாயர் யாரேனும் இருந்தாலும் ஆலோசனை பண்ணி சொல்லுங்கோ..பிரச்னை ஏதும் வருமா என்று கேட்டிருந்தேன். அவரும் படிச்சு பார்த்துட்டு “எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு. ஆபாசமாக எதுவும் இல்லை..அற்புதமாய் நிறைய விஷயங்கள் நிறைய சொல்றீங்க..அதெப்படி இதாகும்?..ஆனாலும் யோசிச்சுக்கிடுங்க..” என்றார். அதனால், நானும், இளவேனிலும் இதை இப்படியே கைப்பிரதியாய் இருக்கட்டும் என்று முடிவு பண்ணினோம்.
இதற்கு முன்னோடியாக ஆங்கில கவிஞன் பைரன் இருக்கிறார். அவரது சில படைப்புகள் கையெழுத்து பிரதியாகவே உலகம் முழுவதும் சுற்றி பிரபலம் ஆனது. அதைப் போல, இதுவும் கையெழுத்து பிரதியாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்து விட்டோம். பெண்கள்லாம் கூட வரவேற்றாங்க..அந்த அளவில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லணும்.
தமிழின் இளைய படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கிறீர்களா ?
கொஞ்ச காலம் முன்பு வரைகூட வாசிச்சேன்..பெயர்கள் சட்டென்று இப்போ சொல்ல முடியல..தற்போது கண்கள் ஒத்துழைக்க மாட்டேங்குது. வாசிக்க முடியலை. மனுஷாளை பார்க்க முடியுது. பத்திரிக்கையில் உள்ள பெரிய எழுத்துகளை வாசிக்க முடியுது. நிறைய வாசிக்க ஆசைதான். ஆனால் என்னால் முடியல..
கோவில்பட்டியில் ஒரே சமயத்தில் பூமணி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ.தர்மன், கோணங்கி, கௌரிஷங்கர், அப்பாஸ், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, அப்பணசாமி, திடவை பொன்னுச்சாமி, வித்யாஷங்கர் என்று பெரிய எழுத்தாளர்கள் உருவானதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதை ஒரு அதிசயம்னு தான் சொல்லணும். இதை திட்டமிட்டு யாரும் செய்ய முடியாது. தானாக நடந்தது. எங்களால் முடிந்தது, “கரிசல் கதைகள்” என்ற ஒரு ஆங்கில தொகுப்பு கொண்டு வந்தது. இப்போ நினைச்சால்கூட ஆச்சரியமா இருக்கு. அதுல, இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் கதைகள் எழுதி இருக்காங்க..
கோவில்பட்டியில் இடதுசாரி அமைப்பை சேர்ந்த பால்யகாலத்தோழர்கள் பால்வண்ணம், கோபாலசாமி, ஜவகர், ஆர்.எஸ்.மணி, தேவப்பிரகாஷ் போன்றோர் உங்களோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்கள். எழுபதுகளின் துவக்கத்தில் பாம்பு கடித்து கோவில்பட்டி மருத்துவமனையில் நீங்கள் அனுமதிக்கப்பட்டபோது கூடவே இருந்து கவனித்துக்கொண்டவர்கள். வீடுகளில் இலக்கிய கூட்டங்களை நடத்தி தாமரை, செம்மலர், கண்ணதாசன், கணையாழி போன்ற இதழ்களில் வரும் கதைகள், கட்டுரைகளை விமர்சித்து கூட்டங்கள் நடத்தியதையும் அவற்றில் நீங்கள் பங்கேற்று பேசியதையும் இப்போதும் நினைவு கூறுவார்கள். அந்த தோழர்களை நினைவு கூற முடிகிறதா?
அதெல்லாம் பொன்னான நாட்கள்..இலக்கிய விவாதங்களில் பெரிய சர்ச்சை எல்லாம்கூட வரும்..கரண்ட் கதை பற்றியும் பேசியிருக்காங்க..தோழர்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு..பால்வண்ணம் மட்டும் நினைவில் இருக்கார். மற்றவர்கள் பெயர்கள் சட்டென்று நினைவில் வரலை..ஆர்.எஸ்.மணி..அவர் கொஞ்ச காலம் முன்பு பாண்டிச்சேரி வந்து என்னை பார்த்தார்..பழைய விஷயங்களை சொன்னபிறகு கண்டுபிடிக்க முடிந்தது..(நாறும்பூவின் அண்ணன் என்று சொன்னார்.)
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த அனுபவங்கள் உங்களுக்கு உண்டு. இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்லுங்கள்..
இடதுசாரிகள் பற்றி சொல்ல நிறையவே இருக்கு. அவர்களுக்கு என்று ஒரு தத்துவம் இருக்கு. அவர்களுக்கு என்று ஒரு நடைமுறை இருக்கு. அவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வார்கள். ஆனால், கேட்டு நடக்க மாட்டார்கள் என்ற வருத்தம் ரொம்பவே உண்டு.அந்த அனுபவத்தை இங்கே பகிர வேண்டாம் என்றே நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் சாத்தூர் டீ ஸ்டால் ரொம்ப பிரபலம். அங்கு தான் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தோழர் அழகர்சாமி, தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன், தோழர் ரெங்கசாமி போன்றோர் கூடுவர். அக்காலத்தில் இன்டெர்மீடியட் தேர்ச்சி பெற்ற தோழர் ரெங்கசாமி ஆங்கில இதழான நியூ ஏஜ் பத்திரிகையை அங்கே வாசித்துக் காட்டுவார் என்று சொல்வார்கள்.
உங்கள் கதையில் வரும் தோழன் ரெங்கசாமி, இவரை மனதில் கொண்டு எழுதியதா?
சாத்தூர் டீ ஸ்டால் வரும் தோழர் ரெங்கசாமிக்கும், எனது கதாபாத்திரம் தோழன் ரெங்கசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில விஷயங்களை அவரிடம் இருந்து எடுத்துக்கிட்டேன். அவருடைய தோற்றம் மற்ற விஷயங்கள்..அவர் நல்லா ஆங்கிலம் பேசுவார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த சொத்து..அவரை நாம் இழந்துட்டோம்..எல்லாவற்றையும் இழந்துட்டோம். இது பெரிய துரதிர்ஷ்டம்..கட்சிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்..(கண் கலங்குகிறார்)இழப்புக்கு கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது. வேறு என்ன செய்ய என்றும் அவர்களுக்கு தெரியல..கம்யூனிஸ்ட்கள் நல்ல எதிர்க்கட்சிகாரங்க..மக்கள் பிரச்னைகளை ஆழமாய் பேசுவாங்க.. கேரளாவில் ஆளும்கட்சியாய் வந்தபோது கூட நிறைய நல்ல விஷயங்கள் பண்ணினாங்க..அதனால் இப்பவும் அங்குள்ள மக்கள் மாறி மாறி வாய்ப்பு கொடுத்திட்டே இருக்காங்க..
முப்பது ஆண்டு புதுச்சேரிவாசம் எப்படி உணர்கிறீர்கள்?
எனது வாழ்நாள் சரிதம் எழுதியபோது இதைப்பற்றி எழுதி இருக்கேன். வேதபுரத்தார்க்கு..என்ற நூல் எழுதியிருக்கேன். புதுச்சேரி ரொம்ப பிடிச்சுருக்கு. எனக்கு ரொம்ப திருப்தியாக இருப்பதால்தான் இங்கேயே இருக்கேன். எனக்கு இங்கே நல்ல நண்பர்கள் உண்டு. ஆரம்பத்தில் பணக்கஷ்டம் இருக்கத்தான் செய்தது. அதை நான் பல்வேறு வகைகளில் சமாளிச்சேன். பல இலக்கிய அன்பர்கள் மூலம் உதவி கிடைத்தது. இப்போ நான் நல்லா இருக்கேன்..நோயாளி கஷ்டம் தான்..அதோட சேர்ந்து தானே வாழணும்…
புதுச்சேரி இலக்கியவாதிகள், நண்பர்கள் பற்றி சொல்லுங்க..
புதுச்சேரி இலக்கியவாதிகள் சற்று வித்தியாசமானவர்கள் என்றே சொல்லணும். ஏன்னா..அவர்களுக்கு என்று சில விஷயங்கள் வச்சிருக்காங்க..அது தப்புன்னு சொல்ல மாட்டேன். அது அவர்கள் இயல்பு. நல்ல இலக்கியவாதிகள் கிடைச்சதும் இங்கேதான்..சரியான இலக்கியவாதிகள் கிடைச்சதும் இங்கேதான்.பஞ்சாங்கம், வெங்கட சுப்புராய நாயகர், சிலம்பு நா.செல்வராசு, பி.என்.எஸ்.பாண்டியன் …இன்னும் நிறைய நண்பர்கள் இருக்காங்க..இந்த ஊருக்கு வந்ததில் இருந்து நல்லா கவனிச்சுக்கிட்டாங்க..பக்தவச்சல பாரதி எனக்கு கிடைச்ச நல்ல நண்பர்களில் ஒருவர். அப்புறம், இளவேனில்..இவனை நான் பாபு.. பாபு என்று தான் கூப்பிடுவேன். இளவேனில் எனக்கு கிடைச்சது ஒரு அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும். உண்மையான அதிர்ஷ்டம்.. அதுக்கு மேல் புகழ்ந்தால் அது மிகையாகி விடும்… (ஆனந்தமாய் ஒரு சிரிப்பை உதிர்க்கிறார்) l