புத்தகமே காலத்தின் விதை நெல் – புரட்சிக்கவி பாரதிதாசன்
காலத்தின் விதை நெல்லாம் புத்தகத்தை கொண்டாட இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. 44 வது சென்னை புத்தகக் கண்காட்சி நமக்கான களம்… நமது உழைப்பில் கிடைத்த அறுவடை… நம் அடிப்படை உய்வின் நோக்கம்… நம் எதிர்காலத்தின் மீதான கனவு. ‘நூல்களின் வழியே சிறந்த மனிதர்களோடு வாழ எனக்கு உரிமை இருக்கிறது’ என்று தன் பள்ளியின் நூலக சுவரில் கரிக்கட்டையில் எழுதி வைத்த சிறுவன்தான் பிற்காலத்தில் மகாகவி தாகூராகி நோபல் பரிசு பெற்றார். விடுமுறையில் தன் தந்தையின் புத்தக அலமாரியின் பூட்டை உடைத்த மாணவன்தான் பிறகு சர்.சி.வி.ராமன் எனும் உலக விஞ்ஞானி ஆனான். தனது ஆறாம் வகுப்பு பிராயத்தில் வாசிப்பு சவால் என்று ஒரே இரவில் பிரித்தானியா கலைக் களஞ்சியத்தையே வாசித்து முடித்த ஒரு பையன் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் எனும் வீரத்துறவி ஆனான். ஊரே அடங்கிய பிறகு, இரவில் வீதி விளக்கில் வீதி நாய்களுக்கு அஞ்சாமல் ரகசியமாகப் பல நூல்களை வாசித்த ஒரு சிறுமி, பிற்காலத்தில் இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்திரிபாய் பூலே ஆகி மிளிர்ந்தாள். பள்ளிவிட்டு வீடு வரும் வழியில் பூங்கா பெஞ்சில் அமர்ந்தபடி இருட்டும் வரை நூலக புத்தகங்களை வாசித்த பிறகே வீடு திரும்பிய ஒரு சிறுவன்தான் பிற்காலத்தில் அமர்த்தியாசென் எனும் மகத்தான நோபல் அறிஞரானான். வாசிப்பே நம்மை வெல்ல வைக்கும் என்பதற்கு இதுபோல பல உதாரணங்களை நாம் சொல்லலாம். அத்தகைய புத்தக வாசிப்பு மிகமிகக் குறைந்துவிட்ட இன்றைய சூழலில் அதை மீண்டும் சமூகத்தின் அங்கமாக்கிட… சிறார்களின் அன்றாட வாழ்வில் வாசிப்பை இணைத்திட… புத்தகக் கண்காட்சி எனும் வாய்ப்பை பயன்படுத்துவோம். இந்தியாவிலேயே பொது ஜன வாசிப்பு என்றால் கேரளமும், வங்காளமும்தான் என்ற நிலையை நாம் மாற்ற முடியாதா? தமிழ் வாசிப்பை பரவலாக்கிட ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம், இணைய நூல் வெளியீட்டுத் திட்டங்கள் என பலவற்றை அறிமுகமும் செய்திருக்கிறோம். குறிப்பாக புத்தகம் பேசுது இதழின் சந்தாதாரர் ஆகிட எளிய வழிகள் அறிமுகம் ஆகின்றன. தமிழில் மாதந்தோறும் புத்தகங்களுக்காக மட்டுமே வெளிவரும் சிறந்த இதழாக… ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஐம்பது புத்தகங்களையாவது அறிமுகம் செய்யும் வாசக தோழமை இதழாக ‘புத்தகம் பேசுகிறது’ தனது பயணத்தைத் தொடர்கிறது. தொடர்ந்து இதழை வாங்கி வாசித்து புத்தகங்களுக்கான இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்று வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் நன்றி. – ஆசிரியர் குழு
புத்தகக் கண்காட்சியில் வரலாறு படைப்போம்
புத்தகமே காலத்தின் விதை நெல்