நீல்.டி கிரேஸ். டைசன்: வானியல் பேராசிரியர், ‘ஹடன் கோளரங்கத்தின் (நியூயார்க்) இயக்குநர். தொலைக்காட்சி தொடர் அறிவியல் இயற்பியல் (2017) போன்ற பிரபல நூல்களின் ஆசிரியர் நாஸாவின் விண் நிகழ்ச்சிகளுக்கான மூத்த ஆலோசனைக்குழு நிபுணத்துவ உறுப்பினர். எல்லாவற்றுக்கும் மேலாக ‘விதிகளின் வானியலாளர் என்ற பெயர் பெற்ற மக்கள் விஞ்ஞானி. கருப்பின அறிஞர். சமீபத்திய நேர் காணல் இது. ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இணைய இதழுக்காக அவரைச் சந்தித்து உரையாடியவர் அலிசன் பியர்டு.
சமீபத்தில் உங்களைப் பற்றி பொது ஜனங்களின் அறிவியல் பசிக்கு தீனி போடுபவர் என்று சுயவர் செய்துள்ளீர்கள். எல்லாரும் பல்கலைக்கழக துறை சார்ந்து மூழ்கும் போது ஏன் இந்த விபரீத முடிவு?
நீல் டைசன்: பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் போகும்போது துறை சார்ந்து ஆய்வு சார்ந்து இயங்காமல் இப்படிச் செய்யலாமா என்று யாரும் கேட்பது இல்லை. அது இரு புனிதமான வேலைகளை ஒன்று சேர்ப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதாவது துறை மேம்பட ஆய்வு மற்றும் அடுத்த சந்ததிக்கு துறை சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்துதல். என் விஷயத்தில் சாதாரண ஜனங்களை ஒன்று திரட்டி இயற்பியலை வானியலை அறிமுகம் செய்தால் விமர்சிக்கிறார்கள். எனது திறந்தவெளி அறிவியல் அரங்குகள் வகுப்பறை எனும் இலக்கணத்திற்குள் வராது. அது வெகு ஜன விழிப்புணர்வு வகுப்புகளில் அடங்கும். இதுவும் வகுப்பறைதான். கலீலியோ முதல் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை பல அறிஞர்கள் மக்களிடம்தான் சென்றார்கள். அறிவியல் ஆய்வு என்பதே அதன் தொடர்ச்சியாக ஒரு பரிமாணமாக வந்ததுதான். நான் இன்னமும்கூட அமெரிக்க-இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் வானியல் இயற்பியல் பேராசிரியர்தான்.
கோளரங்கம் மற்றும் ஸ்டார்-டாக் தொலைக்காட்சி ஷோ மற்றும் பல்கலைக்கழக துறை சார்ந்த பணிகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
நீல் டைசன்: சமாளிப்பு என்பது சரியான சொல் அல்ல. உங்கள் வாழ்க்கை எப்போதுமே சிக்கலானதாக இருந்தால் மட்டுமே ஏதோ உருப்படியாக நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதை என் வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே நான் உணர்ந்து கொண்டேன். நான் நியூயார்க் நகரின் ஹைடன் கோளரங்கிற்கு ஒன்பது வயதில் சுற்றிப் பார்க்க வந்தேன். அப்போதே அறிவியல்தான் என் உலகம் என முடிவு செய்தேன். தொடங்கியது சிக்கலான பல சவால்கள். முப்பதாண்டுகள் கழித்து அதே ஹைடன் கோளரங்கின் இயக்குநராகும் வரை பிடிவாதமாக தொடர்ந்த சிக்கலான அன்றாட வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்தது இதைத்தான். எந்த சிக்கலும் இல்லை, எந்த சவாலும் இல்லை எனில் முடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். ஒரு கருப்பின சிறுவனாக ஒன்பது பத்து வயதில் சப்- ரயில்களில் சாலைகளின் நெரிசல்களின் ஊடாக பூங்கா பெஞ்சுகளில்கூட உட்கார்ந்து பள்ளிக்கூட வீட்டுப்பாடம் செய்தவன் நான். மான் ஹாட்டனின் ரிவர்டேல் பகுதி இன்றும் அப்படியேதான் உள்ளது. பள்ளி நாட்களில் ஹைடன் கோளரங்கம் அப்போது நடத்திய மாணவர்களுக்கான வானியல் கருத்தரங்குகளை வீட்டிற்கே தெரியாமல் நான் (பள்ளிக்குப் போகாமல்) அங்கே போய்விடுவேன். பாடங்களை அதிகம் பகிர்ந்தது அங்கேதான். பள்ளி, கோளரங்கம் போன்ற மற்றொரு உலகம் கூடவே அப்போது மல்-யுத்த உள்ளூர் குழுவுக்கு நான் காப்டன். இப்போதும் வாழ்க்கை பெரிதாக மாறிவிடவில்லை. வானியலும், அறிவியல் நிகழ்ச்சிகளும், தொலைக்காட்சி ஷோ… குடும்பம்… இதெல்லாமே நம்மால் இயங்க முடிந்த வெளிகள்தான்.
காரல் சாகனுடனான உங்களது சந்திப்பு பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்… அப்போது உங்களுக்கு என்ன வயது இருக்கும்?
நீல் டைசன்: இது குறித்து விரிவாக நான்
‘த ஸ்கை இஸ் நாட் த லிமிட்’ புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். நான் எனது பதின் பருவத்தில் தீவிரமான வானியல் மாணவராக இருந்தேன். இன்று வரை அதே தீவிரத்தோடுதான் இருக்கிறேன். இரவு வானை காண முடிந்த நேரடியாக பதியும் நான் அடிப்படையான டைரி இன்றும் பேணி வருகிறேன். பதினைந்து வயதில் நான் எட்டு வானியல் உரைகளை நடத்தினேன். கார்னல் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்களை உட்கார வைத்து நான் நட்சத்திர இரவு வான் காணும் நிகழ்வை நடத்திய போது – காரல்சாகன் அங்கிருந்தார். ரொம்ப நேரம் அவர்தான் காரல்சாகன் என்று எனக்குத் தெரியவில்லை. அவரோடு வானியல் பற்றி கடிதப் போக்குவரத்து வைத்திருந்தேன். கூட்டத்திலிருந்து வந்த ஒரு கேள்விக்கு ‘காரல் சாகனிடம் கேட்டு உங்களுக்கு பதில் எழுதுவேன்’ என்று பதில் தந்தேன். ‘நான் தான் காரல் சாகன்’ என்றார் கேள்வி கேட்டவர். எனக்கு எப்படி இருக்கும். அந்த பதினைந்து வயதில் வானியல் இளம் அறிவியல் பட்ட வகுப்பில் மாலை கல்லூரியில் இணைய அவர் சிறப்பான இடம் எனக்குக் கொடுத்தார்.
காரல் சாகன் நடத்திய மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘காஸ்மாஸ்’. அதை இப்போது நீங்கள் நடத்தி வருகிறீர்கள். இது எதேச்சையாக நடந்ததா… அல்லது…
நீல் டைசன்: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் ஐன்ஸ்டீன் முதல் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை கோட்பாடுகளை ஒரு பக்கமும் ஜாஸ், பாஸ்ரூம், பாலே என நடனத்தை மறுபுறமும் நான் என் வாழ்வின் அங்கமாக்கினேன். டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும் வானியல் குறித்த தீவிர பங்களிப்பு குறைவு. முதுகலை பட்ட படிப்பின்போது ஒருமுறை மீண்டும் காரல்சாகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அவரது ‘காஸ்மாஸ்’ நிகழ்ச்சி கொடிகட்டி பறந்தது. ஆனால், நான் அதை தொடர்ச்சியாக பார்க்கவில்லை. கொலம்பியா (பல்கலைக்கழகம்) போன பிறகு அங்கே அன்று நாஸாவுடன் இணைந்த முனைவர் பட்ட ஆய்வின்போது செர்ரோ டொலொரோ சானியல் மையத்தின் தொலைநோக்கி மூலம் முதன் முதலில் லா ரக சூப்பர் நோவா நட்சத்திரம் ஒன்றை படமாக்கினேன். காரல் சாகனின் பெயரை வையுங்கள் என நண்பர்கள் பரிந்துரைத்தனர். அவர் இறந்துவிட்டார் என்பதே எனக்குத் தெரியவில்லை. ‘காஸ்மாஸ்’ எனும் அவரது அறிவியல் தொடர் முழுவதையும் வெறித்தனமாக நான் பார்த்து… உலகிற்கு அவர் எதை சொல்ல வந்தார். எப்படி சொல்ல வந்தார்… என முழுதும் உள் வாங்கினேன். சாதாரண மக்களை அன்றாட வாழ்வில் அறிவியல் பேச வைப்பதே அவரது அஜெண்டா சமூகத்தை அறிவியல் மயமாக்குதலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ‘காஸ்மாஸை’ யாராவது தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு பிறகு வாய்ப்பு கிடைத்தபோது நான் பயன்படுத்திக்கொண்டேன்.
பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும்போதே, ஹைடன் கோளரங்கின் வேலையையும் சேர்த்து பார்த்த அனுபவம்பற்றி சொல்லுங்கள்.
நீல் டைசன்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், மேரிலாந்து பல்கலைக்கழகம், பிறகு நான் ஸ்பைரல் (சுருள்) நட்சத்திர கூட்டங்கள் குறித்த எனது பிரதான கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆண்டுகளிலும் கூட ஒன்பதாவது வயதில் தொடங்கிய எனது ஹைடன் கோளரங்க தொடர்பு தொடரவே செய்தது. அப்படியான என் வாழ்க்கை முழுதுமே ஹைடன் கோளரங்கில் முன்பு பணி செய்த அறிஞர்கள் எனக்காக… அந்த நச்சரிக்கும் கருப்பு சிறுவனுக்காக தங்களது எத்தனையோ வேலைகளை தள்ளி வைத்துவிட்டு என்னை செதுக்கிடவில்லையாயா? எனவே நானும் அந்தப் பணி என்னைத் தேடி வந்தபோது கடமை என்னை அழைப்பதாகவே கருதினேன்.
‘நேச்சுரல் ஹிஸ்டரி’ இதழில் நீங்கள் எழுதிய யுனிவெர்ஸ் தொடர் மிகுந்த கவனத்தை பெற்றது…’ ‘வீதிகளின் வானியலாளர்’ என்ற பெயரும் உங்களை வந்து சேர்ந்தது… அந்த நாட்களைப் பற்றி சொல்லுங்கள்.
நீல் டைசன்: 1995இல் யுனிவர்ஸ்-தொடர் ஆரம்பித்தது. அப்போதும் நேச்சுரல் ஹிஸ்டரி இதழ் அதிகம் பள்ளி மாணவர்கள் படிக்கும் இதழாக இருந்தது. ஆனால், நான் எழுதத் தொடங்கிய ஆறாவது இதழில் முதல்முறையாக மன்ஹாட்டன் வீதிகளில் மாலை சூரியனின் ஒளி ஜாலத்தை அறிவியல் முறைப்படி விளக்கி அதன் மத புனித-நம்பிக்கை வாதத்தை உடைத்து வீதிகளின் செங்குத்து கோண வளைவுகளின் எதிரொளிப்பு அக்கால ஸ்கோன் ஹெஞ்ச் எனும் கற்பாறை வட்டம்-இங்கிலாந்தில் கற்காலத்தில் நேரம்-காலம் அறியும் கருவியாக செயல்பட்டதுபோல-மன்ஹாட்டன் ஹஞ்ச் என்று எழுதினேன். மன்ஹாட்டனில் மட்டுமே அந்த மாதம் இரு முறை மாலைப் பொழுதில் நடக்கும் சூரிய அஸ்தமன வர்ண-நேரடி காட்சி சாத்தியம். ஏனெனில்… செங்கோண திருப்ப நகர-திட்டம் அப்படி. இதுபோன்ற சாதாரண அன்றாட நிகழ்வுகளின் அறிவியல் விளக்கம் கொடுக்க தொடங்கிய போது… இதற்கு கிடைத்த வரவேற்பு என்னை மேலும் அதில் ஈடுபட வைத்தது. 2005ஆம் ஆண்டு வரை புத்தாண்டுகள் ‘யுனிவர்ஸ்’ தொடர் தொடர்ந்தது. இந்த என் அறிவியல் தொடர் மூலம் அமெரிக்க ஆசியக் கம்பெனியை ஒன்றிணைத்து-‘மாபெரும் கற்றல்’(The great courses) எனும் கற்றல் உபகரணங்கள் யாருக்கு வேண்டுமானலும் கிடைக்கும் வண்ணம் மாற்றவும் முடிந்தது.
புளூட்டோ ஒரு கோள் அல்ல என்று முதலில் கணித்தவர் நீங்கள், அதற்காக கடும் வெறுப்பு உங்கள்மீது காட்டப்பட்டது. இது எப்படி நடந்தது?
நீல் டைசன்: ஒன்பது கோள்கள் என்று ஆண்டவர் படைத்தார் என்பது மதவாதத்திற்குப் பெரிய நம்பிக்கை தரும் விதமாக அமைந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஒன்பது பல மதங்களில் மூட-நம்பிக்கையின் விதை. ஆனால், ஏனைய கிரகங்களுக்கும் புளூட்டோவிற்குமான வேறுபாடு சரியான முறையில். வானியல் அடிப்படையில் ஆய்ந்தறியப்பட்டால் அது கோள் அல்ல என்பதை தள்ளிவிட முடியாது. ஹைடன் கோளரங்கம் தன் தொலைநோக்கிகள் வழியே பதிவு செய்தவற்றை – ஹபுள் தொலைநோக்கியின் படங்களோடு ஒப்பிடும்போது புளூட்டோ வெறும்வாயு. அங்கே திடப் பொருள் எதுவும் இல்லை என்பது புலனானது. ஒரு கோளை கண்டுபிடிப்பது எத்தனை முக்கியமோ அதேபோல ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஒரு கோள் கோளல்ல… என்று அறிவிப்பதும் முக்கிய கண்டுபிடிப்புதான். அந்த நாட்களில் பல ஆயிரம் மின்-அஞ்சல்களை எனக்கு எழுதினார்கள். தேவாலயம் முதல் பள்ளி சிறார்கள் வரை நான் வானியல் விஞ்ஞானி அல்ல. கருப்பின பிசாசு என்பது உட்பட அவதூறுகளை கிள்ளி வீசினார்கள். ஆனால், தன்னைவிட அதிக வெறுப்பை எதிர்கொண்ட விஞ்ஞானிகள் வரலாற்றில் இருக்கவில்லையா என்ன? உலகில் எந்த தொலைநோக்கியாலும் புளூட்டோவை பார்த்து பதிய முடியவில்லை. மேலும் 1000 வருடங்கள் அது நமக்குத் தெரியப்போவது இல்லை. அதன் சுற்றுப் பாதையின் ஈர்ப்பு என்பது நமது புவி உட்பட எதன் மீதும் பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதும் இல்லை. புளூட்டோ போன்ற வாயுக்கோளங்களை நாம் தனியே பட்டியலிடுகிறோம். அவை ஒரு போதும் திடக்கோளங்களாக வாய்ப்பில்லை. 2006இல் சர்வதேச வானியல் யூனியன் அமைப்பு என் கண்டுபிடிப்பை ஊர்ஜிதம் செய்தது.
‘நம்பிக்கைக்கு அப்பால்’ என்று 2006இல் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட மதம் கடந்த அறிவியல் எனும் மாநாட்டில் மதம் மனிதனுக்கு தேவையா? எனும் விவாதமாக உங்கள் அமர்வை மாற்றினீர்கள். சமூகம் மதக்கோட்பாடுகளை கைவிட வேண்டும் என்கிறீர்களா?
நீல் டைசன்: என்னைப் பொறுத்தவரை மனதின் ஆன்மீக உணர்வுப் பெருக்கு என்பது என்னை இந்த பிரபஞ்சத்தோடு இணைத்து அதில் ஒரு அங்கமாக உணரும் அறிவியல் மனநிலையோடு சம்பந்தப்பட்டது. அறிவியலின் பரவலாக்கம் நிகழாத ஆண்டுகளில் மதம் தன்னை நிலைநாட்டிட வெறியோடு நடத்திய ரத்த ஆறு ஓட வைத்த யுத்தங்களாக சொல்லப்பட்டவைகளை நினைத்துப் பாருங்கள். மதவெறி அரசியல் இன்று வேறு மாதிரி செயல்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அறிவியல் ஒன்றுதான் வெற்று நம்பிக்கை கடந்த மனித பாதுகாப்பு அரணாக இருக்க முடியும். அறிவியலின் கோட்பாடுகள் மெய்ப்பித்தவைகளைக் கொண்டு நாம் நமது வாழ்க்கை மறு ஆய்வு செய்ய மதங்கள் மனிதர்களை அனுமதிக்க வேண்டும் என்றுதான் நான் வேண்டுகோள் வைத்தேன். இப்போதும் கூட என் கருத்தில் நான் தெளிவாகவே இருக்கிறேன்.
மிகவும் சிக்கலான அறிவியல் கூறுகளைக் கூட மிகவும் எளிமைப்படுத்தி புரிய வைப்பதில் நீங்கள் வல்லவர் என்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?
நீல் டைசன்: முழுமையாக நான் ஏற்க மாட்டேன். சில சமயம் எனக்கும் தடுமாறுகிறது. பல்கலைகழக பேராசிரியர்களான நாங்கள் மக்களை விட்டு விலகி தொலைவில் ஒருவகை கர்வமான கூட்டில் அடைபடுகிறோம். சாதாரண மனிதர்களே அதிகம் அறிவியலை பகிரும் இயல்போடு இருக்கிறார்கள். சென்ற வாரம்-ஒரு அமெரிக்கன் கால் பந்து போட்டியில் 32 அடி நீளத்திற்கு பந்தை வீசி ஒரு வீரர் கோல் போடுவதை காட்சியாக காட்டி பொது மேடையில் விவாதித்தோம். 32 அடி நீளம் பயணித்த பந்து ஏறக்குறையக் குறைய காற்றில் அரைவட்டப் பாதையில் பயணித்து கோல் போஸ்ட்டை அடைந்தது. அந்தப் பாதை ஏன் வளைந்து இருக்க வேண்டும் என்று ஒரு மாணவர் கேட்கிறார். அரங்கத்தில் தேநீர் பரிமாறிய முதியவர் ‘பூமி தன்னைத்தானே சுற்றுவதால்தான்’ என்று சர்வ சாதாரணமாக பதில் சொன்னார். நான் உட்பட பேராசிரியர்கள் இந்த விஷயத்தை இத்தனை எளிதாக அணுகமாட்டோம். சாதாரண மனிதர்களை நாம் அறிவியல் பேச வைக்கவேண்டும். l
previous post