இந்திய இலக்கிய தளத்தில் மலையாளப் படைப்புகளின் பங்களிப்பு கணிசமானது. இந்தியப் படைப்பிலக்கியத்தின் மகச்சிறந்த பெரும் கதைகளை மலையாள இலக்கிய கர்த்தாக்கள் உருவாக்கியுள்ளனர். மலையாளக் கதைகளின் தளமும், அதனூடாக இழைந்து வரும் உயிரோட்டமும், அவற்றின் சொல் ஆளுமையும் குறிப்பிடத்தக்கவை. அதுவே போன்று அவற்றின் மையச்சரடாக பிணைந்து வரும் உணர்வேக்கங்களும் முக்கியமானவை. இத்தகைய சிறந்த கூறுகளைக் கொண்ட கதைகளை ‘கடற்கரையில் என்ற இச்சிறுகதைத் தொகுப்பு மலையாள இலக்கிய உலகின் தலைசிறந்த ஆளுமைகளின் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. பொதுவில் மலையாளக் கதைகள் எளிய மக்களின் வாழ்வியலையும், தங்களது வாழிடம் சார்ந்த பதிவுகளையும், அந்த மனிதர்களின் தனிப்பட்ட குணங்களையும் கொண்டிருக்கும். இத்தொகுப்பின் படைப்புகளும் இத்தகைய தன்மைகளை உள்ளடக்கியுள்ளன.
மலையாள இலக்கியம் நீண்ட பாரம்பரியப் பின்னணி கொண்டது. மலையாளப் படைப்பாளிகள் பெரும்பாலானோர் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்களாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிந்தனையோட்டம் அவர்களது படைப்புகளை உழைக்கும் வர்க்கம், அரசியல் விழிப்புணர்வு, சமூகத்தின் பிற்போக்குத்தனத்தினை சாடுவது, அது குறித்த விழிப்புணர்வினை உண்டாக்குவது உள்ளிட்ட கூறுகளை உள்ளடக்கியதாக உருவாக்கியது. இப்படைப்புகள் மண்சார்ந்தும், மாந்தர்கள் குறித்தும் எப்போதும் பேசுபவை. மெல்லிய அழகியல் தன்மை கொண்டவை. மலையாளப் படைப்புகள் மாற்றுச் சிந்தனைகள் குறித்தும், மனிதர்களின் அடிமனவோட்டம், அதன் இயல்புகள் குறித்து குற்றவுணர்வெழாவண்ணம் பேசுபவை. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு. அவர்களது வாழ்புலங்கள் என பன்முகத்தன்மையுடன் வெளிப்படுபவை அவை. எளிய விளிம்புநிலை மாந்தர்களை முன்னிலைப்படுத்துவதில் மலையாளக் கதைகள் தனித்தன்மை கொண்டவை. இக்கூற்றினை எவரும் மறுத்துப்பேச இயலாது. தங்களது சமகால அரசியல் நிகழ்வுகளை தலைமுறை வேறுபாடின்றி அவர்கள் பதிவுசெய்வதும் குறிப்பிடத்தக்கது.
பேப்பூர் சுல்தான் என்று அன்புடன் விளிக்கப்பட்ட வைக்கம் முஹம்மது பஷீரின் உலகப் புகழ் பெற்ற மூக்கு சிறுகதை இத்தொகுப்பின் முதல் கதையாக இடம் பெற்றுள்ளது. தனது மொழியில் விஸ்வ விக்யாதனமாய மூக்கு என்ற தலைப்பிட்டு அவர் உண்டாக்கிய படைப்பாகும். இது ஆழமும், நவீன அரசியல் பகடியினையும் உள்ளடக்கியது. எளிய வாசகனுக்கு அது நகைச்சுவை மிக்க ஒரு கதையாகத் தெரியலாம். இருப்பினும், மூக்கன் படிப்படியான வளர்ச்சியினைப் பெற்று மூக்கராக உருவெடுப்பது அரசியல்வாதிகளின் திடீர் வளர்ச்சியினை ஆழமான பகடிக்குள்ளாக்குகிறது. பட்டங்கள் பெறவும், பாராளுமன்றம் செல்லவும் எத்தகைய தகுதிகளும் அவசியமற்றவை என பேப்பூர் சுல்தானின் படைப்பு பேசுகிறது. இதுவன்றி விசாரணைக் கமிஷன்கள் இதர பிற விஷயங்கள் குறித்தும் அவர் கூறுகிறார். கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு சாமானியனை சமூகமும், அரசும், அரசியல்வாதிகளும், கற்றோரும் எவ்விதம் ஒரு மகத்தான மனிதனாக மாற்றுகின்றனர் என்னும் அவலம் இக்கதையில் பேசு பொருளாகிறது. மக்களுக்கு மற்றெவற்றைக் குறித்தும் அவசியமில்லை. அவர்களுக்கு அன்றையப் பொழுதினை சுவாரசியமிக்கதாக மாற்றிட ஏதோ ஒன்று தேவை என்பது இக்கதையின் வாயிலாக வெளிப்படுகிறது. இக்கதையினைக் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதுமளவிற்கு செறிவுமிக்கதாகிறது. மூக்கன் எவ்வாறு ஸ்ரீமான் மூக்கராகிறார் என்ற மாற்றத்தினை ஆழ்ந்த நகைச்சுவையுடன் பஷீர் விவரித்துச் சொல்கிறார். அரசியல் பிழைப்போரின் அறம் எவ்வாறானது என்பது பஷீரின் அவலம் கலந்த பகடியுடன் இப்படைப்பில் வேதனையுடன் வெளிப்படுகிறது.
கசாக்கின் இதிகாசம் என்ற காவியப் படைப்பினை உருவாக்கிய ஓ.வி.விஜயனின் ‘கடற்கரை என்ற சிறுகதையின் தலைப்பிட்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது மிக்க பொருத்தமுடையதாகிறது. விஜயனின் இச்சிறுகதை கதையின் போக்கினை ஊகித்தறியும் பொறுப்பினை வாசகர்களுக்கு அளிக்கிறது. ஓர் ஏழைத்தந்தையின் போக்கில் கதை செல்கிறது. கண்டுண்ணி என்ன குற்றம் புரிந்தான்? அதற்கான பின்னணி என்ன? எவற்றையும் விஜயன் கூறுவதில்லை. கபடமற்ற அந்தத் தந்தை தன் மகனின் இறுதிக்கணத்தில் அவனைச் சந்திக்கிறார். அளவில் மிகக்குறைந்த அவ்வாக்கியங்களை ஆழ்ந்த அவதானிப்புடன் விஜயன் படைத்துள்ளார். இறுதியில் கண்டுண்ணியின் தாய் தன் மகனுக்கு கொடுத்தனுப்பிய கட்டுச்சோற்றினை யார் உண்டார்கள்? என்ற வினாவிற்கு வாசகர்கள் வாசித்தறிவதற்காக விடை இங்கு கூறப்படவில்லை
முகுந்தனின் டில்லி சிறுகதை நாட்டின் சமகால நடப்பினை, எளிய மக்களின் பாதுகாப்பற்ற இருப்பினை மறைமுகமாக உணர்த்திச் செல்கிறது. இக்கதை முகுந்தனின் சிறந்த படைப்பாகக் கொள்ளமுடியும். பல இதழ்களில் இச்சிறுகதை வெளியாகியுள்ளது. கதை சொல்லும் உத்தியிலும் இது மாறுபட்டதாகிறது. பின்நவீனத்துவமும், அதனை ஊடாடிச் செல்லும் அரசியல் பகடியும் கொண்டது. இரண்டு இளைஞர்களின் காட்சிப் படிமமாக இக்கதை விவரிக்கப்படுகிறது. பிற மனிதனின் சிக்கலை, துயரத்தினை ரசிக்கும் வக்கிரமான மனநிலை, ஒதுங்கிச் செல்லும் பொறுப்பற்ற செயல், உலகமயமாக்கலின் அசுர வளர்ச்சி, வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம், அரசியல்வாதிகளின் வெற்றுப்பேச்சு என பல ஆழமான பக்கங்களை இச்சிறுகதை வாசகனுக்கு காட்டிச் செல்கிறது.
வாழ்வின் ஒரு கட்டத்தில் மனிதனுக்கு யார் மீதான பற்றும், நேசமும் அவசியமற்றதாகிறது. மனிதனுக்கு தன் வாழ்வின் மீதான பற்றும் கூட இதில் அடக்கம்.. வாழ்வினை இரு எதிரெதிர் தளங்களில் தொலைத்து மூப்படைந்துவிட்ட ஒரு வயதான தம்பதி, திருடன், விலைமாது என நான்கு கதை மாந்தர்களை அடக்கிய சிறுகதை, பரிசுத்த வேதாகமும், மனிபெஸ்ட்டோவும் அச்சூழலில் பயனற்றதாகிப் போகும் அவலச்சூழலை அவரவர் பார்வையில் இரண்டாம் தலைமுறைப் படைப்பாளியான அசோகன் சருவில் மிக அற்புதமாகச் சித்தரிக்கிறார். தெருவில் குடித்துவிட்டு ஸ்டார் ஹோட்டலில் விலைமாது ஒருத்தியுடன் இரவைக் கழிக்கும் ஒரு திருடனைக் குறித்த கதை. கதையின் இறுதியில் அவள் கேட்கும் கேள்வி வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும். மேலும், இரண்டு புத்தகங்கள் என்ற தலைப்பிட்டு அவரது ஒரு தொகுப்பினை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பு அசோகன் சருவிலைப் பற்றிய பரந்த பார்வையினை வாசகர்களுக்கு அளிக்கும். இன்றைய தலைமுறையினைச் சேர்ந்த சுகானா அதனை மொழியாக்கம் செய்துள்ளார். ஷாஜியின் முன்னுரை அதில் குறிப்பிடத்தக்கதாகிறது.
காக்கநாடன் தமிழ் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமற்றவர். இந்நூலில் அவரது ‘காலப்பழமை என்னும் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இரு வேறு காலத்தளங்களில் மனிதன் தன் வாழ்வினை பின்னோக்கியும், சமகாலத்தையும் தொகுத்துப் பார்க்கும் கதையாக இது உள்ளது. இக்கதை அவரது முதல் படைப்பென தொகுப்பாசிரியர் ஆனந்தகுமார் குறிப்பிடுகிறார். காக்கநாடனின் யாழ்ப்பாணப் புகையிலை, காக்கநாடன் சிறுகதைகள் என இரு தொகுப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. இதில் ‘யாழ்ப்பாண புகையிலை என்ற தொகுப்பு சாகித்ய அகாதெமி வெளியீடாகும். மாற்றுப் பார்வையினைக் கொண்ட சிறுகதைகள் அவற்றில் இடம் பெற்றுள்ளன.
பிற மலையாள ஆளுமைகளான மாதவிக்குட்டி, சேது, பட்டத்துவிள கருணாகரன் எம்.சுகுமாரன் ஆகியோரின் சிறந்த கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும், டி.ஆரின்
அ.லூக்காசின் பாதையும், சுகுமாரனின் தூக்குமரங்கள் எங்களுக்கு சிறுகதையும் முற்றிலும் மாறுபட்ட உத்தியில் சொல்லப்படுகிற கதைகளாகின்றன. பின்நவீனத்துவ உத்தியில், எளிய மனிதனின் வாழ்வு இப்படைப்புகளில் காட்சிப்படுத்தப்படுதல் குறிப்பிடத்தக்கது. முதல் வாசிப்பில் இவை வாசகனுக்கு எளிதில் வசப்படுதல் சாத்தியமற்றதாகலாம். இருப்பினும் அவையும் ஆகச்சிறந்த படைப்புகளாகின்றன.
சுதந்திரம் எவற்றையெல்லாம் சாமானியனுக்கும், சுதந்தரப் போரில் பங்கு கொண்ட எண்ணற்ற தியாகிகளுக்கும் பரிசாக அளித்திருக்கிறது என்பதனை உணர்வுபூர்வமாக கழிவிரக்கத்துடனும் விரித்துச் சொல்லும் கதைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன. அவை மலையாள இலக்கிய உலகின் மும்மூர்த்திகளுள் இருவரான கேசவதேவ் மற்றும் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கதைகளாகும். தனது வாழ்வினையே நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் தொலைத்த ஒரு முதியவரின் பார்வையில் விடுதலை என்னும் கேசவதேவின் படைப்பு சொல்கிறது. இரு பிச்சைக்காரர்களின் மதம், இனம், மொழி கடந்த நட்புப் பிணைப்பினை கராச்சியிலிருந்து என்ற கதையில் தகழி விவரிக்கிறார்.
பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்டதாக இப்புத்தகம் உள்ளது. பேராசிரியர். பா.ஆனந்தகுமார் தனது பங்களிப்பினை சிறப்புடன் வெளிக் கொணர்ந்திருக்கிறார். மொழியாக்கம் வெகு இயல்பாக வெளிப்பட்டுள்ளது. படைப்புகளுக்கு வெகுஅருகாமையில் வாசகனைக் கொண்டு செல்கிறது. பிற மொழிக் கதைகளை விரும்பும் வாசகர்களுக்கு இத்தொகுப்பு உறுதியாக ஒரு மாறுபட்ட அனுபவத்தினை அளிக்கும். மலையாளப் படைப்புகளின் மீதான அவரது ஆழ்ந்த ஈடுபாட்டினையும் இது உணர்த்துகிறது. மேலும், தொகுப்பிலுள்ள படைப்பாளிகள் குறித்த குறிப்புகளை, அவர்களது புகைப்படத்துடன் அவர் அளித்துள்ளார். கதாசிரியர்களின் சிறந்த படைப்புகள், அவரது தனித்தன்மைகள், அவர்கள் பெற்ற விருதுகள் என ஒரு பக்க அளவில் அவை இடம் பெற்றுள்ளன. அவை மலையாள இலக்கியத்தினை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஈடுபாடுடைய வாசகனுக்கு பல தரவுகளை அளிக்கின்றன. இக்குறிப்புகளுக்காகவே ஆனந்தகுமாரைப் பாராட்டவேண்டும்.
காட்சி ஊடகங்களின் அசுரவளர்ச்சி, கவர்ச்சி, நூல் வாசிக்கும் பழக்கத்தினை வெகுவாகக் கேள்விக்குரியதாக்கியுள்ளது. தாய் மொழிப் படைப்புகளையே வாசிக்கும் வாசகர்கள் குறைந்து வருவதும் நிதர்சனம். இச்சூழலில் பிற மொழிப் படைப்புகளின் வணிக சாத்தியங்கள் எவ்வாறிருக்கும் என்பதனை நாம் எளிதில் ஊகித்தறியலாம். இருப்பினும், தமிழினி இதனைப் பதிப்பித்து வாசகர்களுக்கு வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது.
l
previous post